அமெரிக்கா 1969 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு தடவை சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய போது அவர்கள் தங்களது விண்கலத்தில் தான் தங்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தடவையிலும் இரண்டு பேர் மட்டுமே சென்றதால் இப்படி விண்கலத்தில் தங்குவது சாத்தியமாக இருந்தது.
தவிர, அவர்கள் சந்திரனில் அதிக காலம் தங்கவில்லை. 1972 ஆம் ஆண்டில் அப்போலோ 17 விண்கலத்தில் சென்றவர்கள் தான் சந்திரனில் அதிகபட்சமாக 75 மணி நேரம் தங்கினர்.
எதிர்காலத்தில் அடுத்தடுத்து பல விண்வெளி வீர்ர்கள் அனுப்பப்படும் போது சந்திரனில் நிறைய நாட்கள் தங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் தான் தங்க வேண்டியிருக்கும். அப்படியான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையில் தங்கலாம்.
சந்திரனின் நிலப்பரப்பில் அதாவது திறந்த வெளியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்வது என்பது அநேகமாக இயலாது. சந்திரனில் உள்ள நிலைமைகளே இதற்குக் காரணம்.
சந்திரனில் பகல் என்பது பூமிக் கணக்குப்படி 14 நாட்கள். இரவு என்பது இதே போல 14 நாட்கள். சந்திரனில் பகல் நேரத்தில் உச்சி வேளையில் வெயில் சுமார் 106 டிகிரி (செல்சியஸ்) ஆகும். இரவில் குளிர் மைனஸ் 173 டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு இருக்கும். சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.
சந்திரனில் பல நாட்கள் தங்குவதானால் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். அல்லது சந்திரனின் துருவப் பகுதிகளில் போய் இறங்க வேண்டும் என்பது தான் ஏற்கெனவே உள்ள நிலைமையாகும்.
இப்படியான பின்னணியில் தான் ஜப்பானிய விண்கலம் சந்திரனில் குகையைக் கண்டுபிடித்துள்ளது.
சந்திரனில் கருப்பாகத் தெரியும் பகுதிகளைக் கவனிக்கவும் |
பூமியில் எரிமலைக் குழம்பு கெட்டியானது.
பூமியில் வாய் வழியே வெளிப்படும் நெருப்புக் குழம்பு மேலும் மேலும் கெட்டிப்பட்டு எரிமலை கொஞ்சம் கொஞ்சமாக கூம்பு வடிவில் உயர்ந்து கொண்டே போகும். சந்திரனில் அப்படியில்லை. சந்திரனில் நெருப்புக் குழம்பு பெரிதும் நீர்த்து இருக்கும். எனவே அதிக பரப்பளவில் பரவி நிற்கும்.
இரவில் முழு நிலவைப் பார்த்தால் பல பகுதிகள் கருப்பாகத் தெரியும். ஆரம்ப காலத்தில் தொலைநோக்கி மூலம் சந்திரனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் கருப்பாகத் தெரிகின்ற பகுதிகளைக் கடல்கள் என்றே கருதினர்.
பின்னர் தான் அவை எரிமலைக் குழம்பு பாய்ந்து ஓடிய பகுதிகள் என்பது தெரிய வந்த்து. நீங்கள் பௌர்ணமி தினத்தன்று முழு நிலவை உற்றுக் கவனித்தால் நிலவின் மேற்குப் பகுதி, வட பகுதி ஆகியவை கருமையாக இருப்பது தெரிய வரும்
சந்திரனின் எரிமலைக் குழம்பில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எரிமலைக் குழம்பு பரவிய பகுதிகள் இவ்விதம் கருப்பாகத் தெரிவதாகக் கருதப்படுகிறது
தொடர்ந்து பல பௌர்ணமி நிலவைக் கவனித்து வந்தால் சந்திரன் ஒரே மாதிரியாகத் தான் தென்படும். சந்திரன் எப்போதும் நமக்கு தனது ஒரு பாதியை மட்டுமே காட்டி வருவதால் இப்படியான நிலை உள்ளது.
சந்திரனில் பெருக்கெடுத்து ஓடிய நெருப்புக் குழம்பு என்பது உருகிய பாறைக் குழம்பே ஆகும். பாறைக் குழம்பு ஆறிய பிறகு அதன் மேற்புறம் கெட்டிப்பட்டு விட்டது. உள்ளே நெருப்புக் குழம்பு ஓடிய இடம் காலியாகிய பிறகு அது சுரங்கப் பாதை போலாகியது. இதை Lava Tube என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். சந்திரனில் இப்படி எரிமலைக் குழம்பு ஓடிய சுரங்கப் பாதைகள் பல உள்ளன என்பது முன்னரே தெரியும்.
இந்தியாவின் சந்திரயான் உட்பட சந்திரனை ஆராய்ந்த பல விண்கலங்கள் சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளை ஆராய்ந்து தகவல் தெரிவித்துள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் சில இடங்களில் 300 மீட்டர் அகலத்துக்கு உள்ளன. சுரங்கப்பாதைக்குள் மைனஸ் 20 டிகிரி அளவுக்கு குளிர் உண்டு. சந்திரனில் திறந்த வெளியில் இருக்கக்கூடிய கடும் வெப்பம் அல்லது கடும் குளிருடன் ஒப்பிட்டால் இது எவ்வளவோ பரவாயில்லை.
இந்த சுரங்கத்துக்க்குள் தங்கிக் கொண்டால் காஸ்மிக் கதிர்வீச்சு, சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள், சிறியதும் பெரியதுமான விண்கற்கள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளின் நுழைவு வாயில் போல ஆங்காங்கு வட்டவடிவப் குழிகள் உள்ளன. இந்தக் குழிகளுக்குள் இறங்கினால் சுரங்கப்பாதையில் போய்க்கொண்டே இருக்கலாம்.
சந்திரனைச் சுற்றிச் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ந்த ஜப்பானின் காகுயா விண்கலம் கண்டுபிடித்துள்ள புது விஷயம் இந்த சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு பெரிய குகை உள்ளது என்பதாகும்.
அந்த குகை 100 மீட்டர் அகலமும் 50 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. அந்தக் குகையில் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சந்திரனில் உள்ள சுரங்கப்பாதைகள் குறித்து ஜப்பானிய விண்கலம் நிறையத் தகவல்களை அளித்துள்ளது.
ஜப்பானிய விண்கலம் 2007 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அது இரண்டு ஆண்டுக்காலம் சந்திரனை விரிவாக ஆராய்ந்தது. காகுயா அனுப்பிய தகவல்கள் ஆராயப்பட்டு இப்போது தான் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
இவை ஒரு புறம் இருக்க சந்திரனில் மட்டுமன்றி பூமியிலும் இவ்வித எரிமலை சுரங்கப்பாதைகள் உள்ளன. அமெரிக்காவில் இடாஹோ மாகாணத்திலும் ஆரிகன் மாகாணத்திலும் இவை உள்ளன. தென் கொரியா, ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள், போர்ச்சுகல், கென்யா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் எரிமலை சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதை 65 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
செவ்வாய் கிரகத்திலும் எரிமலை சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
(தமிழ் ஹிந்து பத்திரிகையில் வெளியான எனது இக்கட்டுரை சற்று சுருக்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டுள்ளது)
(ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் கட்டுரைகளை வழங்க முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)
(ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் கட்டுரைகளை வழங்க முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)
Welcome back Sir. Nice article. Please keep writing.
ReplyDeleteThanks,
Sasikumar
வணக்கம்
ReplyDeleteதங்களின் பதிவுகளின் மூலம் பல அரிய தகவல்களை அறியக் கூடியதாக உள்ளது.நீண்ட இடை வெளிக்கு பின் தங்களின் இப் பதிவு மகிழ்ச்சியளிக்கின்றது.தொடர்ந்தும் தங்களின் ஆக்கங்களை ஆர்வத்துடன் எதிர் பார்க்கின்றேன்.நன்றி வணக்கம்.
Thankyou for the article .
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteவெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் கட்டுரையை படித்தேன்.எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தான் எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும்படி அறிவியல் கட்டுரைகளை வழங்கி வருகிறீர்கள்.தொடர்ந்து எழுதும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Welcome back Sir
ReplyDeleteஏன் அய்யா உடல் நலம் சரியில்லையா? இவ்வளவு பெரிய இடைவெளி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி, சந்திரனில் எரிமலைகள் இருந்தது என்றால் ஆக்சிஜனும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா?
ReplyDeleteநன்றி
சுதாகர் சண்முகம்
Nice to see your article back!!! Is there any difference if we attempt to look for the place in moon where the dark side and lighted side meet up area. Just trying to understand is there any temperature difference going to be in that particular boundary and we can make use of it?
ReplyDeleteThanks,
Manick
மாணிக்கராஜ்
ReplyDeleteகேள்வி புரியவில்லை.சந்திரனில் நடுக்கோட்டுப் பகுதியில் தான் (பகலில்) வெப்பம் கடுமையாக இருக்கும். வடக்கே அல்லது தெற்கே போகப் போக வெப்பம் குறையும்.
மற்றப்டி சந்திரனில் கருமையாகத் தெரிகின்ற பகுதிக்கும் வெண்மையாகத் தெரியும் பகுதிக்கும் இடையே வெப்ப மாறுபாடு இராது.
Thank you for writing after long time. Please keep on posting articles. I have recommended your blog to school and college students. They really appreciated your articles
ReplyDelete