Pages

Dec 9, 2017

37 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்ற விண்கலம்

பல ஆண்டுக்காலம் ஓட்டாமல் வைத்திருந்த ஒரு காரை திடீரென ஒரு நாள் ஓட்ட முயன்றால் அது ஓடுமா என்பது சந்தேகமே. ஆனால் எங்கோ அண்டவெளியில் உள்ள ஒரு விண்கலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செயல்பட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த விண்கலத்தின் பெயர் வாயேஜர் - 1 என்பதாகும்.

அமெரிக்கா 1977 ஆம் ஆண்டில் செலுத்திய வாயேஜர் – 1 விண்கலம் இப்போது சுமார் 1880 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடி அது தகவல்களை அனுப்பி வருகிறது. பூமியுடன் தொடர்பு கொள்வதற்கென அந்த விண்கலத்தில் ஆண்டெனா உள்ளது. அந்த ஆண்டெனா மிகத் துல்லியமாக பூமியைப் பார்த்தபடி இருந்தாக வேண்டும்..

பூமிக்குத் தகவல்கள் நன்கு கிடைக்கும் பொருட்டு அமெரிக்காவில் நிபுணர்கள் அந்த ஆண்டென்னாவை சற்று லேசாகத் திருப்ப விரும்பினர். இதற்கென பூமியிலிருந்து நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் இந்த ஆணைகள் வாயேஜர் விண்கலத்துக்குப் போய்ச் சேர சுமார் 19 மணி நேரம் பிடித்த்து.

வாயேஜர் விண்கலம்
இந்த ஆணைகள் கிடைத்ததும் வாயேஜரில் உள்ள நான்கு பீச்சு கருவிகள் செயல்பட்டன. இந்த பீச்சு கருவிகள் 37 வருட காலம் (தேவை ஏற்படாத காரணத்தால்) செயல்படாமல் இருந்தவை. இவை `10 மில்லி செகண்ட் செயல்பட்ட பின்னர் ஆண்டெனா தகுந்தபடி திருப்பப்பட்டது.

அநேகமாக எல்லா விண்கலங்களிலும் இவ்விதம் சிறிய பீச்சு கருவிகள் இருக்கும். இவற்றின் வழியே ஹைட்ரசீன் என்னும் திரவம் பீச்சிடும். விண்கலத்தின் பல மூலைகளிலும் இவை இடம் பெற்றிருக்கும். வலது புறம் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் இடது புறம் திரும்பும். மேல் பகுதியில் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் கீழ்ப்புறமாகத் திரும்பும். பீச்சு கருவிகளை தக்கபடி செயல்படுத்துவதன் மூலம் விண்கலம் எந்தத் திசையை நோக்கி எந்தக் கோணத்தில் இருக்க வேண்டுமோ அந்தக் கோணத்தில் திருப்பலாம்.

வாயேஜர் விண்கலத்தின் ஆண்டெனாவை இவ்விதம் தக்கபடி திருப்பியதானது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இயக்கப்படாமல் இருந்த பீச்சுகருவிகள் உயிர் பெற்றுக் கோளாறு இன்றி செயல்பட்டன. பீச்சுக் கருவிகள் செயல்படுவதற்கு உதவிய ஹைட்ரசீன் எரிபொருள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்கலம் தயாரிக்கப்பட்ட போது நிரப்பப்பட்ட்தாகும். அந்த எரிபொருள் இத்தனை காலமும் கெட்டுப் போகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பீச்சுக் கருவிகள் நன்கு செயல்பட்டதும் அமெரிக்காவில் தலைமைக் கேந்திரத்தில் விஞ்ஞானிகளும் எஞ்சினியர்களும் மிக்க மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இப்போது இயக்கப்பட்டவை வாயேஜர் விண்கலத்தில் இடம் பெற்றுள்ள துணைப் பீச்சுக் கருவிகளே. பிரதான பீச்சுக்கருவிகள் ஜனவரியில் இயக்கப்பட்டு சோதிக்கப்படும். விண்கலத்தில் பிரதான பீச்சுக் கருவிகள் ஒரு வேளை செயல்படாமல் போனால் இருக்கட்டும் என்பதற்காக துணைப் பீச்சுக் கருவிகள் வைக்கப்படுவது வழக்கம்.

சூரிய மண்டலத்தில் மிகத் தொலைவில் உள்ள வியாழன், சனி கிரகங்களை ஆராய்வதற்காக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் அமெரிக்காவின் நாஸா அமைப்பினால் 1977 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டன.

இதன்படி இந்த இரு விண்கலங்களும் வியாழன் சனி கிரகங்களை நெருங்கி அவற்றைப் படம் பிடித்தன. பல தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பின.

கடந்த 1980 ஆம் ஆண்டு வாக்கில் இப்பணியை முடித்துக் கொண்ட பின்னர் வாயேஜர் 1 தொடர்ந்து பயணித்தது. அது 2012 ஆகஸ்ட் வாக்கில் சூரிய மண்டலத்தை விட்டே வெளியேறியது.

சூரிய மண்டலத்தில் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 சென்ற பாதைகள்
அண்டவெளியில் தொடர்ந்து மணிக்கு 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாயேஜர் 1 விண்கலம் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நட்சத்திரத்தை நெருங்கும். ஆனால் அந்த நட்சத்திரம் பற்றிய தகவல்களை வாயேஜர் அனுப்பும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் 2025 ஆம் ஆண்டு வாக்கில் வாயேஜரில் உள்ள கருவிகள் செயல்படுவது அடியோடு நின்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜர் 2 விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை ஆராய்ந்த பிறகு அதன் பாதை திருப்பபட்டது. இதன் பலனாக அது சூரிய மண்டல் எல்லையில் அமைந்த யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நோக்கிச் சென்று அவற்றைப் படம் பிடித்ததுடன், அக்கிரகங்கள் பற்றிய பல தகவல்களையும் சேகரித்து அளித்தது. இப்போது மணிக்கு 55 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அது பிராக்சிமா செண்டாரி என்னும் நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அது 1746 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

(என்னுடைய இக்கட்டுரை தமிழ் ஹிந்து இதழின் மாயா பஜார் பகுதியில் வெளியானதாகும்)

Dec 5, 2017

சந்திரனில் பெரிய குகை கண்டுபிடிப்பு

சந்திரனில் பெரிய குகை இருப்பதாக சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம் கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனுக்குச் செல்கின்ற விண்வெளி வீர்ர்கள் இந்த குகையில் தங்க முடியலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்கா 1969 ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு தடவை சந்திரனுக்கு விண்வெளி வீர்ர்களை அனுப்பிய போது அவர்கள் தங்களது விண்கலத்தில் தான் தங்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தடவையிலும் இரண்டு பேர் மட்டுமே சென்றதால் இப்படி விண்கலத்தில் தங்குவது சாத்தியமாக இருந்தது.

தவிர, அவர்கள் சந்திரனில் அதிக காலம் தங்கவில்லை. 1972 ஆம் ஆண்டில் அப்போலோ 17 விண்கலத்தில் சென்றவர்கள் தான் சந்திரனில் அதிகபட்சமாக 75 மணி நேரம் தங்கினர்.

எதிர்காலத்தில் அடுத்தடுத்து பல விண்வெளி வீர்ர்கள் அனுப்பப்படும் போது சந்திரனில் நிறைய நாட்கள் தங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதில் தான் தங்க வேண்டியிருக்கும். அப்படியான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வரை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையில் தங்கலாம்.

சந்திரனின் நிலப்பரப்பில் அதாவது திறந்த வெளியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்வது என்பது அநேகமாக இயலாது. சந்திரனில் உள்ள நிலைமைகளே இதற்குக் காரணம்.

சந்திரனில் பகல் என்பது பூமிக் கணக்குப்படி 14 நாட்கள். இரவு என்பது இதே போல 14 நாட்கள். சந்திரனில் பகல் நேரத்தில் உச்சி வேளையில் வெயில் சுமார் 106 டிகிரி (செல்சியஸ்) ஆகும். இரவில் குளிர் மைனஸ் 173 டிகிரி (செல்சியஸ்) அளவுக்கு இருக்கும். சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதே இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

சந்திரனில் பல நாட்கள் தங்குவதானால் நிலத்துக்கு அடியில் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். அல்லது சந்திரனின் துருவப் பகுதிகளில் போய் இறங்க வேண்டும் என்பது தான் ஏற்கெனவே உள்ள நிலைமையாகும்.

இப்படியான பின்னணியில் தான் ஜப்பானிய விண்கலம் சந்திரனில் குகையைக் கண்டுபிடித்துள்ளது.

சந்திரனில் கருப்பாகத் தெரியும் பகுதிகளைக் கவனிக்கவும் 
சந்திரனில் குகை இயற்கையாக ஏற்பட்டுள்ளதாகும். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனில் எரிமலைகள் செயல்பட்டன. பூமியில் இப்போதும் எரிமலைகள் நெருப்பைக் குழம்பைக் க்க்குகின்றன. ஆனால் சந்திரனில் எப்போதோ எரிமலைகள் அவிந்து போய்விட்டன.

பூமியில் எரிமலைக் குழம்பு கெட்டியானது.

பூமியில் வாய் வழியே வெளிப்படும் நெருப்புக் குழம்பு மேலும் மேலும் கெட்டிப்பட்டு எரிமலை கொஞ்சம் கொஞ்சமாக கூம்பு வடிவில் உயர்ந்து கொண்டே போகும். சந்திரனில் அப்படியில்லை. சந்திரனில் நெருப்புக் குழம்பு பெரிதும் நீர்த்து இருக்கும். எனவே அதிக பரப்பளவில் பரவி நிற்கும்.

இரவில் முழு நிலவைப் பார்த்தால் பல பகுதிகள் கருப்பாகத் தெரியும். ஆரம்ப காலத்தில் தொலைநோக்கி மூலம் சந்திரனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் கருப்பாகத் தெரிகின்ற பகுதிகளைக் கடல்கள் என்றே கருதினர்.

பின்னர் தான் அவை எரிமலைக் குழம்பு பாய்ந்து ஓடிய பகுதிகள் என்பது தெரிய வந்த்து. நீங்கள் பௌர்ணமி தினத்தன்று முழு நிலவை உற்றுக் கவனித்தால் நிலவின் மேற்குப் பகுதி, வட பகுதி ஆகியவை கருமையாக இருப்பது தெரிய வரும்

சந்திரனின் எரிமலைக் குழம்பில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எரிமலைக் குழம்பு பரவிய பகுதிகள் இவ்விதம் கருப்பாகத் தெரிவதாகக் கருதப்படுகிறது

தொடர்ந்து பல பௌர்ணமி நிலவைக் கவனித்து வந்தால் சந்திரன் ஒரே மாதிரியாகத் தான் தென்படும். சந்திரன் எப்போதும் நமக்கு தனது ஒரு பாதியை மட்டுமே காட்டி வருவதால் இப்படியான நிலை உள்ளது.

சந்திரனில் பெருக்கெடுத்து ஓடிய நெருப்புக் குழம்பு என்பது உருகிய பாறைக் குழம்பே ஆகும். பாறைக் குழம்பு ஆறிய பிறகு அதன் மேற்புறம் கெட்டிப்பட்டு விட்டது. உள்ளே நெருப்புக் குழம்பு ஓடிய இடம் காலியாகிய பிறகு அது சுரங்கப் பாதை போலாகியது. இதை Lava Tube என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். சந்திரனில் இப்படி எரிமலைக் குழம்பு ஓடிய சுரங்கப் பாதைகள் பல உள்ளன என்பது முன்னரே தெரியும்.

இந்தியாவின் சந்திரயான் உட்பட சந்திரனை ஆராய்ந்த பல விண்கலங்கள் சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளை ஆராய்ந்து தகவல் தெரிவித்துள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் சில இடங்களில் 300 மீட்டர் அகலத்துக்கு உள்ளன. சுரங்கப்பாதைக்குள் மைனஸ் 20 டிகிரி அளவுக்கு குளிர் உண்டு. சந்திரனில் திறந்த வெளியில் இருக்கக்கூடிய கடும் வெப்பம் அல்லது கடும் குளிருடன் ஒப்பிட்டால் இது எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சுரங்கத்துக்க்குள் தங்கிக் கொண்டால் காஸ்மிக் கதிர்வீச்சு, சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள், சிறியதும் பெரியதுமான விண்கற்கள் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சந்திரனில் உள்ள எரிமலை சுரங்கப்பாதைகளின் நுழைவு வாயில் போல ஆங்காங்கு வட்டவடிவப் குழிகள் உள்ளன. இந்தக் குழிகளுக்குள் இறங்கினால் சுரங்கப்பாதையில் போய்க்கொண்டே இருக்கலாம்.

சந்திரனைச் சுற்றிச் சுற்றி வந்து சந்திரனை ஆராய்ந்த ஜப்பானின் காகுயா விண்கலம் கண்டுபிடித்துள்ள புது விஷயம் இந்த சுரங்கப்பாதை ஒன்றில் ஒரு பெரிய குகை உள்ளது என்பதாகும்.

அந்த குகை 100 மீட்டர் அகலமும் 50 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாக உள்ளது. அந்தக் குகையில் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சந்திரனில் உள்ள சுரங்கப்பாதைகள் குறித்து ஜப்பானிய விண்கலம் நிறையத் தகவல்களை அளித்துள்ளது.

ஜப்பானிய விண்கலம் 2007 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. அது இரண்டு ஆண்டுக்காலம் சந்திரனை விரிவாக ஆராய்ந்தது. காகுயா அனுப்பிய தகவல்கள் ஆராயப்பட்டு இப்போது தான் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

இவை ஒரு புறம் இருக்க சந்திரனில் மட்டுமன்றி பூமியிலும் இவ்வித எரிமலை சுரங்கப்பாதைகள் உள்ளன. அமெரிக்காவில் இடாஹோ மாகாணத்திலும் ஆரிகன் மாகாணத்திலும் இவை உள்ளன. தென் கொரியா, ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள், போர்ச்சுகல், கென்யா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளிலும் எரிமலை சுரங்கப் பாதைகள் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் உள்ள எரிமலை சுரங்கப்பாதை 65 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

செவ்வாய் கிரகத்திலும் எரிமலை சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(தமிழ் ஹிந்து பத்திரிகையில் வெளியான எனது இக்கட்டுரை சற்று சுருக்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

(ஓராண்டுக்கும் மேலாக இப்பகுதியில் கட்டுரைகளை வழங்க முடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்)