Dec 9, 2017

37 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர் பெற்ற விண்கலம்

Share Subscribe
பல ஆண்டுக்காலம் ஓட்டாமல் வைத்திருந்த ஒரு காரை திடீரென ஒரு நாள் ஓட்ட முயன்றால் அது ஓடுமா என்பது சந்தேகமே. ஆனால் எங்கோ அண்டவெளியில் உள்ள ஒரு விண்கலம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது செயல்பட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த விண்கலத்தின் பெயர் வாயேஜர் - 1 என்பதாகும்.

அமெரிக்கா 1977 ஆம் ஆண்டில் செலுத்திய வாயேஜர் – 1 விண்கலம் இப்போது சுமார் 1880 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்தபடி அது தகவல்களை அனுப்பி வருகிறது. பூமியுடன் தொடர்பு கொள்வதற்கென அந்த விண்கலத்தில் ஆண்டெனா உள்ளது. அந்த ஆண்டெனா மிகத் துல்லியமாக பூமியைப் பார்த்தபடி இருந்தாக வேண்டும்..

பூமிக்குத் தகவல்கள் நன்கு கிடைக்கும் பொருட்டு அமெரிக்காவில் நிபுணர்கள் அந்த ஆண்டென்னாவை சற்று லேசாகத் திருப்ப விரும்பினர். இதற்கென பூமியிலிருந்து நவம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் இந்த ஆணைகள் வாயேஜர் விண்கலத்துக்குப் போய்ச் சேர சுமார் 19 மணி நேரம் பிடித்த்து.

வாயேஜர் விண்கலம்
இந்த ஆணைகள் கிடைத்ததும் வாயேஜரில் உள்ள நான்கு பீச்சு கருவிகள் செயல்பட்டன. இந்த பீச்சு கருவிகள் 37 வருட காலம் (தேவை ஏற்படாத காரணத்தால்) செயல்படாமல் இருந்தவை. இவை `10 மில்லி செகண்ட் செயல்பட்ட பின்னர் ஆண்டெனா தகுந்தபடி திருப்பப்பட்டது.

அநேகமாக எல்லா விண்கலங்களிலும் இவ்விதம் சிறிய பீச்சு கருவிகள் இருக்கும். இவற்றின் வழியே ஹைட்ரசீன் என்னும் திரவம் பீச்சிடும். விண்கலத்தின் பல மூலைகளிலும் இவை இடம் பெற்றிருக்கும். வலது புறம் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் இடது புறம் திரும்பும். மேல் பகுதியில் உள்ள பீச்சு கருவி செயல்பட்டால் விண்கலம் கீழ்ப்புறமாகத் திரும்பும். பீச்சு கருவிகளை தக்கபடி செயல்படுத்துவதன் மூலம் விண்கலம் எந்தத் திசையை நோக்கி எந்தக் கோணத்தில் இருக்க வேண்டுமோ அந்தக் கோணத்தில் திருப்பலாம்.

வாயேஜர் விண்கலத்தின் ஆண்டெனாவை இவ்விதம் தக்கபடி திருப்பியதானது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீண்ட காலம் இயக்கப்படாமல் இருந்த பீச்சுகருவிகள் உயிர் பெற்றுக் கோளாறு இன்றி செயல்பட்டன. பீச்சுக் கருவிகள் செயல்படுவதற்கு உதவிய ஹைட்ரசீன் எரிபொருள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்கலம் தயாரிக்கப்பட்ட போது நிரப்பப்பட்ட்தாகும். அந்த எரிபொருள் இத்தனை காலமும் கெட்டுப் போகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பீச்சுக் கருவிகள் நன்கு செயல்பட்டதும் அமெரிக்காவில் தலைமைக் கேந்திரத்தில் விஞ்ஞானிகளும் எஞ்சினியர்களும் மிக்க மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இப்போது இயக்கப்பட்டவை வாயேஜர் விண்கலத்தில் இடம் பெற்றுள்ள துணைப் பீச்சுக் கருவிகளே. பிரதான பீச்சுக்கருவிகள் ஜனவரியில் இயக்கப்பட்டு சோதிக்கப்படும். விண்கலத்தில் பிரதான பீச்சுக் கருவிகள் ஒரு வேளை செயல்படாமல் போனால் இருக்கட்டும் என்பதற்காக துணைப் பீச்சுக் கருவிகள் வைக்கப்படுவது வழக்கம்.

சூரிய மண்டலத்தில் மிகத் தொலைவில் உள்ள வியாழன், சனி கிரகங்களை ஆராய்வதற்காக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் அமெரிக்காவின் நாஸா அமைப்பினால் 1977 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டன.

இதன்படி இந்த இரு விண்கலங்களும் வியாழன் சனி கிரகங்களை நெருங்கி அவற்றைப் படம் பிடித்தன. பல தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பின.

கடந்த 1980 ஆம் ஆண்டு வாக்கில் இப்பணியை முடித்துக் கொண்ட பின்னர் வாயேஜர் 1 தொடர்ந்து பயணித்தது. அது 2012 ஆகஸ்ட் வாக்கில் சூரிய மண்டலத்தை விட்டே வெளியேறியது.

சூரிய மண்டலத்தில் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 சென்ற பாதைகள்
அண்டவெளியில் தொடர்ந்து மணிக்கு 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாயேஜர் 1 விண்கலம் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட நட்சத்திரத்தை நெருங்கும். ஆனால் அந்த நட்சத்திரம் பற்றிய தகவல்களை வாயேஜர் அனுப்பும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் 2025 ஆம் ஆண்டு வாக்கில் வாயேஜரில் உள்ள கருவிகள் செயல்படுவது அடியோடு நின்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜர் 2 விண்கலம் வியாழன், சனி ஆகிய கிரகங்களை ஆராய்ந்த பிறகு அதன் பாதை திருப்பபட்டது. இதன் பலனாக அது சூரிய மண்டல் எல்லையில் அமைந்த யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நோக்கிச் சென்று அவற்றைப் படம் பிடித்ததுடன், அக்கிரகங்கள் பற்றிய பல தகவல்களையும் சேகரித்து அளித்தது. இப்போது மணிக்கு 55 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அது பிராக்சிமா செண்டாரி என்னும் நட்சத்திரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அது 1746 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

(என்னுடைய இக்கட்டுரை தமிழ் ஹிந்து இதழின் மாயா பஜார் பகுதியில் வெளியானதாகும்)

5 comments:

மாணிக்கராஜ் said...

ஐயா, நிறைய நாள் கழித்து உங்கள் கட்டுரை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி...

You meant?, from the current position voyojer requires another 1764crore km to reach proxima centari... Right?

எப்படி அவ்வளவு தொலைவில் இருந்து பூமியின் சரியான கோணத்தை கணக்கிடுகிறார்கள்? பூமியில் இருந்து செல்லும் சிக்னல் இல் இருந்தா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
அல்ல.வாயேஜர 2 விண்கலம் தற்போது பூமியிலிருந்து 1746 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.சிக்னல்கள் கிடைப்பதற்கு ஆகும் நேரத்தை வைத்து தூரத்தைக் கணக்கிடுகிறார்கள்.சிக்னல்கள் நல்ல வலுவான நிலையில் கிடைக்கின்றன என்றால் அதுவே சரியான கோண்ம்.
ராமதுரை

devraj said...

HI Sir,

How does it can travel 61k thousand kilometer /hr . How the nitrogen fuel they used is till not completed. if we use 1 litre petrol ,our car gives just 20 km. so just a comparision

என்.ராமதுரை / N.Ramadurai said...

தேவ்ராஜ்
விண்வெளிப் பயணம் என்பது அலாதியானது.பூமியின் பிடியிலிருந்து விடுபட ஒரு விண்கலத்தை சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தள்ளி விட்டால் போதும். அது தொடர்ந்து சென்று கொண்டிருக்க எரிபொருள் தேவையில்லை. பூமியின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் அந்த விண்கலம் ஆற்றில் தள்ளி விடப்பட்ட படகு மிதந்து செல்வது போல செல்லத் தொடங்கியது. வாயேஜரின் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் வியாழன் மூலம் கிடைத்ததாகும்.வியாழன் கிரகம் தனது ஈர்ப்பு சக்தி மூலம் வாயேஜர் விண்கலத்தை இழுத்து மறுபுறம் தள்ளி விட்டது. வாயேஜர் அதே வேகத்தில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது, சூரியனை பூமி கோடானு கோடி ஆண்டுகளாக்ச் சுற்றி வருகிறது. இவ்விதம் சுற்றி வருவதற்கு பூமியில் எந்த எஞ்சினும் இல்லை. அதை இயக்க எரிபொருளும் இல்லை.
எனினும் ஒரு விண்கலத்தின் வேகத்தைக் கணிசமாகக் குறைக்க அல்லது அதிகப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கென விண்கலத்தில் எரிபொருளும் எஞ்சினும் இருக்கும். அதை சிறிது நேரம் இயக்கினால் போதும். மிக நுட்பமான மாறுதல்களைச் செய்வதற்கு சிறிய பீச்சு கருவிகளே போதும். அவைதான் தற்போது இயக்கப்பட்டன.
ராமதுரை

Unknown said...

Nice to see you after long time sir i was missing your articles

i ma Karthik

Post a Comment