வானத்து
நட்சத்திரங்களைக்
காண நீங்கள் மெனக்கெடத் தேவையில்லை.
அவை நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றன. இரவு வானில் நிலவு அல்லது மேகம் இல்லாத நாட்களாக இருந்தால் போதும்.
அமாவாசை
இரவாக இருந்தால் கருமையான வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்களைப் போல நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன.
எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவிலான பிரகாசம் கொண்டவை என்று சொல்ல முடியாது. சில நட்சத்திரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரகாசம் கொண்டவையாக உள்ளன.
வானத்து
நட்சத்திரங்களிலேயே
எது அதிகப் பிரகாசம் கொண்டது என்று கேட்கலாம். நீங்கள்
இருட்டியதிலிருந்து
இரவு விடிய விடியக் கண் விழித்து வானத்து நட்சத்திரங்கள் அனைத்தையும் கவனித்து வந்தால் எது மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்று கண்டுபிடித்து விடலாம்.
என்றாலும் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் வானத்தை ஆராய்வதையே தொழிலாகக் கொண்ட நிபுணர்கள் ஏற்கெனவே இதைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர். ஆகவே நீங்கள் சிரமப்படத் தேவையில்லை.
நட்சத்திரங்களிலேயே மிகப்
பிரகாசமான அந்த நட்சத்திரத்தின் பெயர் சிரியஸ் (Sirius). இது இப்போது உலக அளவில் பயன்படுத்துகின்ற பெயர். இந்த நட்சத்திரத்துக்கு ஆல்பா கானிஸ் மேஜொரிஸ் (Alpha Canis Majoris) என்ற அறிவியல் பெயரும் உண்டு. பெரு நாய் நட்சத்திர மண்டலத்தின் முதன்மை நட்சத்திரம் என்பது இதன் பொருள்.
சிரியஸ் நட்சத்திரம் ஒரு நாட்டில் தான் தெரியும் என்பதில்லை. உலகில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய நட்சத்திரம். அறிவியல் யுகம் தோன்றியதற்கு முன்னர் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் இந்த நட்சத்திரத்துக்குத் தங்கள் கருத்துப்படி வெவ்வேறு பெயர்களை வைத்தனர்.
ஆதியில் இந்தியாவில் வானவியலார் இந்த நட்சத்திரத்துக்கு மிருகவத்யா என்று பெயரிட்டனர். லுப்தகம் என்ற பெயரும் உண்டு. எகிப்து, கிரேக்கம், சீனா ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. பசிபிக் கடல் தீவுவாசிகள் இதனை வானத்து ராணி என்று அழைத்தனர். அது மிகவும் பொருத்தமானதே.
சிரியஸ்
நட்சத்திரம் அலாதியான நீல நிறத்துடன் ஜொலிப்பதாகும். ஒரு முறை அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால் அதை மறுபடி பார்க்க வேண்டும் என்று தோன்றும். அது அவ்வளவு அழகு கொண்டது. நீங்கள் அந்த நட்சத்திரத்தைக் காண வேண்டுமென்றால் ஏப்ரல் மாத மத்தியில் இரவு சுமார் எட்டு மணிக்கு மேற்கு வானை நோக்கினால் போதும். மிக எடுப்பாகத் தெரிகின்ற நட்சத்திரம் தான் சிரியஸ் நட்சத்திரம்.
இது கோடைக் காலத் தொடக்கம். அனேகமாக வானில் மேகங்கள் இராது. கிராமப்புறமாக அதுவும் விளம்பர விளக்குகள், தெரு விளக்குகள், கடை விளக்குகள் இல்லாமல் நல்ல இருட்டாக இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால் சிரியஸ் அற்புதமாகக் காட்சி அளிக்கும். இது தான் சிரியஸ் நட்சத்திரம் என்று அடையாளம்
காட்டுவதற்கு உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
ஏனெனில் நான் தான் வானத்து ராஜா என்று கூறிக் கொள்வது போல இது மற்ற நட்சத்திரங்ளைக் காட்டிலும் பிரகாசமாக ஜொலிக்கும். உண்மையில் வானத்து நட்சத்திரங்களில் சிரியஸ் தான் சூப்பர் ஸ்டார்.
சிரியஸ் நட்சத்திரத்தின் உண்மையான பொலிவைக் காண நகர்ப்புறங்கள் பொருத்தமானவை அல்ல. . நகர்ப்புறப் பகுதிகளில் விளம்பரப் பலகைகளின் வெளிச்சம், தெரு விளக்குகளின் வெளிச்சம் என வெளிச்சம் அதிகம். தவிர, நகரத்துக்கு மேல் உள்ள வான் பகுதியில் நுண்ணிய தூசும் அதிகம். கீழே இருந்து வருகின்ற வெளிச்சத்தை வானில் உள்ள தூசு சிதறடிக்கும் போது நட்சத்திரங்களும் கிரகங்களும் தெளிவாகத் தெரியாது. சில நட்சத்திரங்களே தெரியும்.
வானில்
சிரியஸ் நட்சத்திரம் மிகப் பிரகாசமாகத் தெரிவதை வைத்து அதுதான் மிகப் பெரிய நட்சத்திரமா என்று கேட்டால் நிச்சயமாக
இல்லை. இது சற்று குழப்பமூட்டுவதாக இருக்கலாம்.
வானத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. எல்லாமே ஒரே சைஸில் இல்லை என்று ஏற்கெனவே கூறினோம். பெரிய நட்சத்திரங்கள் உண்டு. சிறிய நட்சத்திரங்கள் உண்டு. சில நட்சத்திரங்கள் ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் உள்ளன. பல நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் உள்ளன. சிரியஸ் மிகப் பெரிய நட்சத்திரம் அல்ல என்றாலும் அது ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் உள்ளதால் நம் பார்வையில் அது மற்ற நட்சத்திரங்களை விட மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.
இதை
சற்று விளக்கியாக வேண்டும். இருட்டான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். திடீரென ஒருவர் உங்கள் முகத்தருகே டார்ச் லைட் அடிக்கிறார். டார்ச் லைட் பிரகாசத்தில் உங்கள் கண்கள் கூசுகின்றன. அதே சமயம் சற்று தூரத்தில் ஒரு டீக் கடை வாசலில் பெட்ரோமாக்ஸ் லைட் தொங்குகிறது. டார்ச் லைட் வெளிச்சத்தை விட பெட்ரோமாக்ஸ் லைட் அதிக வெளிச்சத்தை அளிப்பதாகும். ஆனால் அது நம் கண்களைக் கூச வைப்பது இல்லை.
டார்ச் லைட்டை விட பெட்ரோமாக்ஸ் லைட் அதிகப் பிரகாசமானது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் அது தொலைவில் இருக்கிறது. டார்ச் லைட் கண் அருகே இருப்பதால் அது அதிக பிரகாசம் கொண்டதாக கண்ணைக் கூச வைக்கிறது.
வானத்து
நட்சத்திரங்களின்
கதையும் அப்படித்தான். வான வெளியில் சிரியஸ் நட்சத்திரத்தை விட மேலும் பிரகாசமான, மேலும் பெரியதான நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை மிகவும் தொலைவில் உள்ளன. ஆகவே ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகே உள்ள சிரியஸ் நட்சத்திரம் மிகப் பிரகாசமாக உள்ளது.
வானவியல்
நிபுணர்கள் நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளவிட்டு அந்த அடிப்படையில் அவற்றுக்கு எண்களை அளித்துள்ளனர். அந்த அளவீட்டின்படி சிரியஸ் நட்சத்திரத்தின் பிரகாச எண் மைனஸ் 1.44. அதென்ன மைனஸ் என்று கேட்கலாம். சில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு நட்சத்திரத்துக்கு எண் ஒன்று என நிர்ணயித்து விட்டனர். அதை விடப் பிரகாசம் குறைந்த நட்சத்திரங்களுக்கு இரண்டு, மூன்று, நான்கு ஐந்து என வரிசையாக எண்களை அளித்து விட்டனர்.
அந்த வரிசையில் எண் ஆறு என்றால் அது மிக மிக மங்கலான நட்சத்திரம். இவ்விதமான நிலையில் சிரியஸ் நட்சத்திரத்துக்கு மைனஸ் குறி அளிக்க வேண்டியதாயிற்று. ஏழு, எட்டு என்ற எண்களைக் கொண்ட நட்சத்திரங்களை நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
இந்த முறையின்படி ஒரு நட்சத்திரத்துக்கு அளிக்கப்படுகிற எண்ணுக்குத் தோற்றப் பிரகாச எண் என்று பெயர். நம் பார்வையில் காணப்படுகிற பிரகாசத்தை வைத்து அளிக்கப்படுகின்ற எண் என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதை apparent magnitude என்று
கூறுவர்.
.
சிரியஸ்
நட்சத்திரம் ஒப்பு நோக்குகையில் நமக்கு அருகில் இருப்பதால் அது மிகப் பிரகாசமாகத் தெரிகிறது என்று கூறினோம். அதாவது சிரியஸை விடப் பிரகாசமான நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை அதிகத் தொலைவில் உள்ளதால் சிரியஸை விடப் பிரகாசம் குறைந்தவையாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால் அந்த நட்சத்திரங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
வானவியல்
நிபுணர்கள் எல்லாம் முறையாக இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள். எனவே அவர்கள் இன்னொரு அளவீட்டு முறையையும் உருவாக்கினர். வானத்து நட்சத்திரங்கள் அனைத்தையும் பூமியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தி வைக்க முடிவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது எது உண்மையில் பிரகாசமானது என்பது தெரிந்து விடும். அப்படிப்பட்ட நிலையில் நட்சத்திரங்களின் பிரகாசத்தை வைத்து அளவீட்டு எண்களை அளிக்கலாம். இது அசல் பிரகாச எண் என்று குறிப்பிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் absolute magnitude என்று கூறுவார்கள்.
அசல் பிரகாச எண் பட்டியலில்
சிரியஸ் முதலிடம் பெறவில்லை. ஏனெனில் அப்போது அகஸ்திய (Canopus), திருவாதிரை (Betelguese), கேட்டை(Antares) சித்திரை(Spica), ரைஜெல்(Rigel) ஆகிய நட்சத்திரங்கள் சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசமானவையாக விளங்கும்.
இதைப்
புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைக் கூறலாம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டின் வாசலில் 60 வாட் பல்பு எரிகிறது. அது நல்ல வெளிச்சத்தை அளிக்கிறது. அந்த வெளிச்சத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கலாம். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு பலகாரக் கடை வாசலில் 100 வாட் பல்பு தொங்குகிறது. அதன் வெளிச்சம் அந்த வீட்டு வாசல் வரை வராது. மேலும் தொலைவில் ஒரு பாக்டரி வாசலில் 200 வாட் பல்பு எரிகிறது. ஆனால் தொலைவில் உள்ளதால் அது வெறும் ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது
. இந்த மூன்றையும் ஐந்து மீட்டர் தொலைவில் அருகருகே வைத்தால் 200 வாட் பல்புதான் பிரகாசமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அந்த அளவில் தான் அகஸ்திய, திருவாதிரை, கேட்டை முதலான நட்சத்திரங்கள் சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசமானவை.
மேற்கத்திய வானவியலின்படி சிரியஸ் நட்சத்திரமானது பெரு நாய் எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் உள்ளது. ஆகவே சிரியஸ் நட்சத்திரத்துக்கு Dog Star என்ற பெயர் உண்டு. ஏதோ காரணத்தால் சிரியஸ் நட்சத்திரம் கோடைக் காலத்துடன் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. எனவே கடும் கோடைக்காலம் dog days என்று
வருணிக்கப்படுகிறது.
இந்தியப்
புராணங்களில் சிரியஸ் நட்சத்திரமானது வானுலக வேட்டை நாய் என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.. நட்சத்திரங்களுக்கெல்லாம் நட்சத்திரம் என்றும் வருணிக்கப்பட்டுள்ளது. கிரேக்க புராணம் உட்பட பிற புராணங்களிலும் என்ன காரணத்தாலோ சிரியஸ் நட்சத்திரமானது நாயாக வருணிக்கப்பட்டுள்ளது.
வருகிற
நாட்களில் நீங்கள் மேற்கு வானில் சிரியஸ் நட்சத்திரத்தைக் கண்ணுற்றால் அதற்கு சற்று கீழே இட்து புறத்தில் மற்றொரு பிரகாசமான நட்சத்திரத்தைக் காணலாம். அதுவே அகஸ்திய நட்சத்திரமாகும். ஆங்கிலத்தில் அதற்கு கனோபஸ் என்று பெயர். இரவு வானில் சிரியஸ் நட்சத்திரத்துக்கு அடுத்தபடியாக அதுவே மிகப் பிரகாசமான நட்சத்திரமாகும். சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பிரகாசம் குறைந்த ஆனால் அதே நேரத்தில் வானில் எடுப்பாகக் காட்சி அளிக்கின்ற நட்சத்திரங்களின் பட்டியலில் சுவாதி, சித்திரை, ரோகிணி, மகம் முதலான நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன..
சிரியஸ்
நட்சத்திரமானது
பூமியிலிருந்து
சுமார் 8.6 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அதாவது சிரியஸ் நட்சத்திரத்திலிருந்து சுமார் எட்டரை ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பிய ஒளியைத் தான் நீங்கள் இப்போது காண்கிறீர்கள்.
ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஒளியானது
ஓராண்டில் பயணம் செய்கின்ற தூரமே ஒளியாண்டு ஆகும். அதாவது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர். அகஸ்திய நட்சத்திரமோ சிரியஸ் நட்சத்திரத்தைப் போல 40 மடங்கு தொலைவில் இருப்பதாகும். திருவாதிரை நட்சத்திரமோ 80 மடங்கு தொலைவில் உள்ளதாகும். அந்த நட்சத்திரத்தை அருகே சிரியஸ் நட்சத்திரத்தைக்கொண்டு வந்து வைத்தால் திருவாதிரை பூதாகாரமாகத் தெரியும்.
சிரியஸ்
நட்சத்திரம் என்பது ஏதோ ஒரு நட்சத்திரம் என்பது போல இதுவரை பேசி வந்தோம். உண்மையில் சிரியஸ் இரட்டை நட்சத்திரமாகும். அதாவது சிரியஸ் நட்சத்திரத்தின் அருகே இன்னொரு நட்சத்திரம் உள்ளது. இந்த இரண்டும் ஒரு பொது மையத்தைச் சுற்றி வருகின்றன. இந்த இரண்டில் ஒன்று பெரியது. மற்றொன்று சிரியது. பெரிய நட்சத்திரத்தை சிரியஸ் ஏ என்றும் சிறிய நட்சத்திரத்தை சிரியஸ் பி என்றும் வருணிக்கின்றனர். சிரியஸ் நட்சத்திரத்தை செல்லமாக dog star என்று
குறிப்பிடுவதால்
சிரியஸ் பி நட்சத்திரத்தை Puppy star என்று அழைக்கின்றனர்
சிரியஸ் A இடது புறம், சிரியஸ் B வலது புறம். படம் Celestira |
. எனினும் நாம் இரவு வானில் வெறும் கண்ணால் பார்க்கும் போது சிரியஸ் ஏ நட்சத்திரத்தைத் தான் காண்கிறோம். சிரியஸ் பி நட்சத்திரம் மிகவும் மங்கலானது என்பதால் வெறும் கண்ணால் பார்த்தால் தெரியாது. .
சிரியஸ்
நட்சத்திரங்கள்
இப்போது சூரிய மண்டலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு இது நீடிக்கும். இதன் விளைவாக அதன் பிரகாசம் சற்றே அதிகரிக்கும். பின்னர் அவை சூரிய மண்டலத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பிக்கும். எனினும் இன்னும் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு சிரியஸ் தான் வானில் மிகப் பிரகாசமான நட்சத்திரமாக இருந்து வரும்.
இது 2016 ஏப்ரல் 6 ஆம் தேதியன்று இரவு சென்னை ஏ வானொலியில் நான் நிகழ்த்திய உரையின் சுருக்கமாகும். நன்றி AIR.