Jan 6, 2016

ராக்கெட் துறையில் புதிய உலக சாதனை

Share Subscribe
செயற்கைக்கோளை சுமந்தபடி ஒரு ராக்கெட் பெரும் நெருப்பைக் கக்கிக் கொண்டு மேலே கிளம்புகிறது. சில நிமிஷங்கள் கழித்து அந்த செயற்கைக்கோளானது பூமியைச் சுற்றும் வகையில் செலுத்தப்படுகிறது. ராக்கெட்டைச் செலுத்துவதில் வெற்றி.

ஆனால் செயற்கைக்கோளை செலுத்தி முடிக்கும் போது ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. அனேகமாக ராக்கெட்டின் சிறு பகுதி கூட மிஞ்சாது.

 செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஒவ்வொரு முயற்சியிலும் ராக்கெட் அழிகிறது. மறுபடி ஒரு செயற்கைக்கோளை செலுத்துவதானால் பெரும் செலவில் முற்றிலும் புதிதாக ஒரு ராக்கெட்டை உருவாக்கியாக வேண்டும்

பல ஆண்டுக்காலமாக இவ்விதம் தான் நடந்து வருகிறது.
ஆனால் இப்போது முதல் தடவையாக ஒரு ராக்கெட்டானது உயரே சென்று விட்டு அழியாமல் முழுதாகத் தரையில் வந்து இறங்கியுள்ளது. ராக்கெட் துறையில் இது மிகப் பெரிய சாதனையாகும்.

அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் உயரே செலுத்திய பால்கன் 9 என்னும் ராக்கெட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. உயரே கிளம்புகையில் எவ்விதம் நெருப்பைக் கிளப்பியபடி மேலே சென்றதோ அதே போல நெருப்பைக் கக்கியபடி செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கி மெல்லத் தரையில் வந்து உட்கார்ந்து கொண்டது.
பால்கன் ராக்கெட்டின் அடிப்புறப் பகுதி திட்டமிட்டபடி  உயரே சென்று விட்டு
பின்னர் கீழே மெல்லத் தரை இறங்கியது

இந்த ராக்கெட்டைப் புதுப்பித்து மறுபடி உயரே செலுத்த முடியும். தாங்கள் உருவாக்கியுள்ள புதிய தொழில் நுட்பத்தின்படி ஒரே ராக்கெட்டை நாற்பது தடவை பயன்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியன் ( இப்போதைய ரஷியா) 1957 ஆம் ஆண்டில் உலகிலேயே முதல் தடவையாக ஒரு ராக்கெட்டை உயரே செலுத்தி ஸ்புட்னிக் என்னும் செயற்கைக்கோளைப் பறக்க விட்டது. அதன் பின்னர்  பல நாடுகள் செயற்கைக்கோள்களை உயரே செலுத்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி வருகின்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

ராக்கெட் யுகம் தோன்றியதிலிருந்தே இருந்து வருகின்ற அடிப்படைப் பிரச்சினை ஒன்று உண்டு. அதாவது ஒரு தடவை பயன்படுத்திய ராக்கெட்டை மறுபடி பயன்படுத்துகின்ற வாய்ப்பு இல்லாமல் அது முற்றிலும் அழிந்து விடுகிறது
பொதுவில்  பல அடுக்கு ராக்கெட் எவ்விதம் உயரே செல்கிறது
என்பதை விளக்கும் படம். நன்றி: நாஸா
 .ராக்கெட் ஏவு தளத்தில் ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டானது செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஒரு பென்சில் போலக் காட்சி அளிக்கிறது. பார்வைக்கு அது ஒரே ஒரு ராக்கெட் போலத் தோன்றினாலும் உண்மையில் அது ஒன்றின் மீது ஒன்றாகப் பொருத்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று ராக்கெட்டுகள் ஆகும். இவற்றை அடிப்புற ராக்கெட், நடுப்பகுதி ராக்கெட், நுனிப்புற ராக்கெட் என்று வருணிக்கலாம்.
ராக்கெட் உயரே கிளம்பிய சில நிமிஷங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து முடிந்து தனியே கழன்று கீழ் நோக்கி விழும். நடுப்பகுதி ராக்கெட்டும் அவ்விதமே எரிந்து முடிந்த பின்னர் கழன்று கொள்ளும். நுனிப்புற ராக்கெட் கடைசியில் மிக அதிக வேகத்தில் சுமார் 250 அல்லது  300 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் போது செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு விடுகிறது.

ராக்கெட்டை இவ்விதம் மூன்று அடுக்குகளாக வடிவமைத்துச் செலுத்துவதில் ஆதாயம் இருக்கிறது. அடிப்புற அடுக்கு எரிந்து முடிந்து கழன்று கொள்ளும் போது மொத்த ராக்கெட்டின் எடை குறைகிறது. எனவே அதிக வேகத்தைப் பெற முடிகிறது. இரண்டாவது அடுக்கும் இவ்விதம் கழன்று கொள்ளும் போது மேலும் வேகம் கிடைக்கிறது.

எரிந்து தீர்ந்து கீழ் நோக்கி விழும் இரண்டு அடுக்குகளும் காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறித் தீப்பற்றி அழிந்து விடுகின்றன. மூன்றாவதான நுனிப்புற அடுக்குக்கும் அதே கதிதான். எனவே ஒரு ராக்கெட்டை உருவாக்குவது என்பது பெரும் செலவு பிடிக்கின்ற விஷயமாகவே இருந்து வந்துள்ளது.

ராக்கெட்டுகள் இவ்விதம் அழியும் பிரச்சினையைத் தவிர்க்கும் நோக்கில் தான்  விண்வெளி ஓடம் எனப்படும் ஸ்பேஸ் ஷட்டில் என்னும் வாகனத்தை அமெரிக்காவின் நாஸா 1980களில் உருவாக்கியது

அது செயற்கைக்கோள்களை மட்டுமன்றி விண்வெளி வீர்ர்களையும் ஏற்றிச் செல்வதாக இருந்தது. அமெரிக்கா தயாரித்த விண்வெளி ஓடம் செங்குத்தாகக் கிளம்பி உயரே சென்று விட்டு பணிகளை முடித்துக் கொண்டு கிளைடர் விமானம் போல கீழே வந்து இறங்கியது. இதனை செப்பனிட்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடிந்தது.
அமெரிக்க ஷட்டில் வாகனம் விண்வெளிக்குச் சென்று விட்டு
விமானம் போல தரை இறங்கும் காட்சி
ஆனால் விண்வெளி ஓடங்களில் சில டிசைன் பிரச்சினைகள் இருந்தன. தவிர, இவற்றை இயக்க நிறைய செலவு ஆகியது. விபத்து வாய்ப்பும் இருந்தது. எனவே வயதாகி விட்ட நிலையில் விண்வெளி ஓடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் மியூசியத்துக்கு அனுப்பப்பட்டு விட்டன. ரஷியாவும் இதே போல ஒரு விண்வெளி ஓடத்தைத் தயாரித்தது. ஆனால் அது ஒரே ஒரு தடவை பறந்ததோடு சரி.

அமெரிக்கா, ரஷியா உட்பட பல நாடுகளிலும் அரசு சார்ந்த விண்வெளி அமைப்புகள் மட்டுமே ராக்கெட்டுகளை செலுத்தி வந்த நிலைமை கடந்த பல ஆண்டுகளில் மாறி விட்டது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. ராக்கெட்டை மீண்டும் பூமிக்குத் திரும்பச் செய்வதில் இந்த நிறுவனங்களில் சில ஈடுபட்டன. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் இப்போது அதில் வெற்றி கண்டுள்ளது.

டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்  பால்கன் 9 ராக்கெட்டானது 11  சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் பிரபல கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இரண்டு அடுக்கு ராக்கெட் ஆகும். சில நிமிஷங்களில் அடிப்புற ராக்கெட் எரிந்து தீர்ந்தது. பின்னர் அது வட்டமடித்து அடிப்புறப் பகுதி  கீழ் நோக்கி அமைந்தபடி மெதுவாக இறங்க ஆரம்பித்தது.  

கீழே இறங்கும் ராக்கெட்டின் வேகம் குறைக்கப்படாவிட்டால் அது மிகவும் சூடேறி தீப்பற்றி விடும். எனவே ராக்கெட்டின் அடிப்பகுதி வழியே நெருப்பு பீச்சிட்டது. இதற்கென முன்கூட்டித் திட்டமிட்டு அந்த ராக்கெட்டில் கூடுதல் எரிபொருள் வைக்கப்பட்டிருந்ததுஇது  அந்த ராக்கெட் கீழே இறங்கும் வேகத்தைக் குறைத்தது. பின்னர் அது மெல்லத் தரையைத் தொட்டது.

கீழே இறங்கும் போது சாய்ந்து விழுந்து விடாமல் இருப்பதற்காக 15 மாடிக் கட்டடம் அளவுக்கு உயரம் கொண்ட அந்த ராக்கெட்டின் அடிப்புறத்தில் நான்கு கால்கள் பொருத்தப்பட்டிருந்தன.
கேப் கெனவரல் தளத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இதற்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அந்த ராக்கெட் தரை இறங்கியது. இதற்கு முன்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்த முயற்சிகள் தோல்வி கண்டன. இப்போதைய முயற்சியில் வெற்றி கிட்டியது.
பூமிக்குப் பத்திரமாகத் திரும்பிய பின்னர் பால்கன் 9 ராக்கெட். இந்த ராக்கெட்டில்
எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Credit: Space X
 அடிப்புறப் பகுதி இவ்விதம் இறங்கிய போது பால்கன் ராக்கெட்டின் இரண்டாவது கட்ட ராக்கெட் தொடர்ந்து உயரே சென்று 11 செயற்கைக்கோள்களையும் செலுத்தி வெற்றி கண்டது.அந்த இரண்டாவது கட்ட ராக்கெட் அதன் பிறகு கீழ் நோக்கி இறங்கி காற்று மண்டலத்தில் நுழைந்த போது தீப்பற்றி அழிந்தது.

பால்கன் ராக்கெட்டின் இரண்டாவது அடுக்கையும் இதே போல மீட்பது எதிர்காலத் திட்டமாகும் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமும் வெற்றி கண்டால் ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கு ஆகும் செலவும் பெருமளவுக்குக் குறைந்து விடும்.


பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்களையும் செலுத்தித் தருவது என்பது உலகில் இப்போது நல்ல பணம் கொழிக்கும் தொழிலாகும். உலகில் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் மற்றவர்களுக்குக் கடும் போட்டியை அளிக்க வாய்ப்புள்ளது.

(நான் எழுதிய இக்கட்டுரை தமிழ் ஹிந்து பத்திரிகையின் ஜனவரி 5 ஆம் தேதி இதழில் வெளியானதாகும்.)