Pages

Dec 27, 2015

நியூட்ரான் நட்சத்திரம் என்பது என்ன?


இரவு வானில் நட்சத்திரங்கள்
நிலவற்ற நாளில் இரவில் வானத்தைப் பார்த்தால் ஏராளமான நட்சத்திரங்கள் தெரிகின்றன. எல்லாமே ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. உற்றுக் கவனித்தால் சில நட்சத்திரங்கள் நல்ல நீல நிறத்தில் இருக்கின்றன. வெண்மையான நட்சத்திரங்களும் உண்டு. இங்குமங்குமாக சிவந்த நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு அவற்றின் நிறத்தை வைத்தும் அதன் பருமனை வைத்தும் விதவிதமான பெயர்களை வைத்திருக்கிறார்கள்.
செம்பூதம். இது ஒரு வகை நட்சத்திரத்தின் பெயர். சிவப்பாக இருக்கும். வடிவில் மிகவும் பெரியது.   திருவாதிரை(Beteguese)  நட்சத்திரம் மற்றும் கேட்டை(Antares) நட்சத்திரம் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த இரண்டுமே சூரியனை விடப் பல மடங்கு பெரியவை

வெள்ளைக் குள்ளன்(White Dwarf). இது வேறு வகை நட்சத்திரத்தின் பெயர். வெண்மையாக இருக்கும்.வடிவில் சிறியது. சிவப்புக் குள்ளன்(Red Dwarf) என்ற பெயரைத் தாங்கிய நட்சத்திரங்களும் உண்டு. நியூட்ரான்(Neutron Star) நட்சத்திரம் இவற்றிலிருந்து வேறுபட்டது. அதற்கு நிறம் கிடையாது. சொல்லப்போனால் அதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. அது அருவ நட்சத்திரம்.

சாதாரண நட்சத்திரத்துக்கும் நியூட்ரான் நட்சத்திரத்துக்கும் என்ன வித்தியாசம்.? சாதாரண நட்சத்திரம் பஞ்சு மிட்டாய் என்றால் நியூட்ரான் நட்சத்திரம் கமார்கட் போன்றது. சாதாரண நட்சத்திரத்தை பசக் என்று அமுக்க முடிந்தால் அது நியூட்ரான் நட்சத்திரமாகி விடலாம்.

இது பற்றி  மேலும் விளக்குவதற்கு முன்னால் நாம் பழைய கதைக்குப் போக வேண்டும். இங்கிலாந்தில் 1897 ஆம் ஆண்டில் தாம்சன் என்ற ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் என்னும் நுண்ணிய துகள் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். இதற்காக அவருக்குப் பின்னர் நோபல் பரிசு வ்ழங்கப்பட்டது. உலகில் இன்று கம்ப்யூட்டர் உட்பட நூறாயிரம் எலக்ட்ரானிக் க்ருவிகள் அதாவது மின்னணுக் கருவிகள் இருக்கின்றன. இவற்றுக்கு எலக்ட்ரான்களே அடிப்படை.

தாம்சன் தமது கண்டுபிடிப்பைச் செய்த அதே காலகட்டத்தில் நியூசீலந்து நாட்டிலிருந்து ரூதர்போர்ட் என்ற இளைஞர் மேல் படிப்புக்காக  இங்கிலாந்து வந்து சேர்ந்தார். அவர் தாம்சனிடம் சிஷ்யனாகச் சேர்ந்தார். அணுவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுமாறு ரூதர்போர்டிடம் தாம்சன் கூறினார்.

அணுவைப் பற்றி அனேகமாக எதுவுமே அறியப்படாத காலம் அது. ரூதர்போர்ட் தமது ஆராய்ச்சியில் அணுவின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தார். அதற்கு அவர் பயன்படுத்திய சிறிய கருவிகளை சின்ன அட்டைப் பெட்டியில் போட்டு மூடி விடலாம்.
 அணுவின் மையத்தில் அணுவை விடச் சிறியதான புரோட்டான் என்ற துகள் இருப்பதாக 1911 ஆம் ஆண்டில் ரூதர்போர்ட் கண்டுபிடித்தார்

பின்னர் 1932 ஆம் ஆண்டில் சாட்விக் என்ற விஞ்ஞானி அணுவுக்குள் புரோட்டானுடன் நியூட்ரான் என்ற துகளும் இருப்பதாகக் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அணு என்பது உடைக்க முடியாத நுண்ணிய உருண்டை அல்ல என்பது தெளிவாகியது. அதாவது அணுவின் நடு மையத்தில் புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்து இருக்கின்றன என்பதும் இவற்றை எலக்ட்ரான்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன என்பதும் தெரியவந்தது. ரூதர்போர்ட், சாட்விக் இரண்டு பேருமே பின்னர் நோபல் பரிசு பெற்றனர்.

எல்லா அணுக்களிலும் புரோட்டான் எண்ணிக்கை அல்லது நியூட்ரான் எண்ணிக்கை ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஹைட்ரஜன் அணுவின் உள்ளே பெரும்பாலும் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். அபூர்வமாக சில ஹைட்ரஜன் அணுக்களில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் இருக்கும்.

அணுக்களிலேயே மிக சிம்பிளான அணு ஹைட்ரஜன் அணுவே. இத்துடன் ஒப்பிட்டால் கார்பன் அணுவின் உள்ளே ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் இருக்கும். அவற்றை ஆறு எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.
கார்பன் அணு
இத்துடன் ஒப்பிட்டால் தங்க அணு ஒன்றில் 79 புரோட்டான்களும் 118 நியூட்ரான்களும் இருக்கும். 79 எலக்ட்ரான்களும் இருக்கும். இரும்பு அணு, நிக்கல் அணு, தாமிர அணு போன்ற வேறு வகை அணுக்களில் இவற்றின் எண்ணிக்கை வேறு விதமாக இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அணுவாக இருந்தாலும் அதில் நிறைய காலியிடம் உண்டு. ரூதர்போர்ட் ஆரம்பத்தில் நடத்திய பரிசோதனைகளிலேயே இது தெரிய வந்தது.

உதாரணமாக கார்பன் அணு ஒன்று பெரிய கால்பந்து ஸ்டேடியம் அளவுக்குப் பெரிதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். அந்த ஸ்டேடியத்தின் நடுமையத்தில் ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் நெருக்கியடித்துக் கொண்டு நட்ட நடுவே இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்து கால்பந்து சைஸில் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஆறு எலக்ட்ரான்களும் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும்.

நடுவே வைக்கப்பட்ட கால்பந்துக்கும் ஸ்டேடியத்தின் பவுண்டரிக்கும் நிறைய காலியிடம் இருக்கிற மாதிரியில் கார்பன் அணுவில் நிறையக் காலியிடம் இருக்கும். எல்லா அணுக்களிலும் இப்படிக் காலியிடம் உண்டு.

இப்போது நாம் மறுபடி வானத்து நட்சத்திரத்துக்கு வருவோம். அண்டவெளியில் பல  கோடி கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒரு மொத்தை போல அல்லது மேகக் கூட்டம் போல பரவி அமைந்திருக்கும். அந்த மேகக்கூட்டத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் ஹைட்ரஜன் வாயு இருக்கும். எங்கோ ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்தது என்றால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை அண்டவெளியில் பரவும்.

அந்த அதிர்ச்சி அலையின் விளைவாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய மேகக் கூட்டம் மெல்லச் சுழல் ஆரம்பிக்கும். பிறகு அது சற்றே வேகமாகச் சுழலும். இவ்விதம் சுழலச் சுழல அது உருண்டை வடிவம் பெறும். அதன் வடிவம் சுருங்க ஆரம்பிக்கும். அவ்விதம் சுருங்கச் சுருங்க சுழற்சி வேகம் அதிகரிக்கும். அடர்த்தி அதிகரிக்கும்.

அடர்த்தி அதிகரிக்கும் போது வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமுக்கம் அதிகரிக்கும். இதன் விளைவாக அந்த ஹைட்ரஜன் வாயு உருண்டையின் மையத்தில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் பல மிலியன் டிகிரியை எட்டும் போது ஹைட்ரஜன் அணுக்களின் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டு பறக்கும். அந்த நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் புரோட்டான்கள் மட்டும் தனியே அலைபாயும். ஒரு கட்டத்தில் இந்த புரோட்டான்கள் ஒன்றோடு ஒன்று சேரும். இதுவே அணுச்சேர்க்கை ஆகும். (Nuclear fusion)

இந்த அணுச்சேர்க்கையின் பலனாக ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் என்ற வேறு அணுக்களாக மாறும். பல மிலியன் டிகிரி வெப்பம், அமுக்கம் இருக்கும் போது தான் அணுச்சேர்க்கை நிகழும். அப்போது பெரும் ஆற்றல் வெளிப்படும். வெப்பமும் ஒளியும் தோன்றும். ஒரு நட்சத்திரம் இப்படியாகத் தான் உண்டாகிறது.

ஆரம்பத்தில் இருந்த வாயு மொத்தை எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைப் பொருத்து நட்சத்திரம் பெரியதாக அல்லது சிறியதாக அமையும்.

எல்லா நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, வளர்ச்சிக் கட்டம்,முதுமை மடிவு என எல்லாம் உண்டு. அந்த அளவில் ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் பல கோடி ஆண்டுகளாகும். ஆனால் எல்லா நட்சத்திரங்களின் ஆயுளும் ஒரே மாதிரியானது அல்ல.முடிவும் ஒரே மாதிரியிலானது அல்ல.
நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சூரியன் நமக்கு ஒப்புநோக்குகையில் அருகாமையில் உள்ளதால் சூரியனாகத் தெரிகிறது. இதே சூரியன் இப்போதுள்ளதைப் போல பல நூறு மடங்கு தொலைவில் இருந்தால் நட்சத்திரமாகத்தான் தெரியும்.

நிலவற்ற நாளில் இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் மிக மிகத் தொலைவில் இருக்கின்ற காரணத்தால் தான் அவை வெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. சூரியன் அந்த தொலைவுக்கு நகர்ந்து சென்று விட்டால் சூரியனும் ஒரு நட்சத்திரமாகத் தெரிய ஆரம்பிக்கும்.
நம்து சூரியன் பூமியைப் போல பல நூறு மடங்கு பெரியது என்றாலும் மற்ற பல நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன் நடுத்தர சைஸ் கொண்டதே.

நமது சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றன. அது இன்னமும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருந்து வரும். ஆக சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள்.

ஆனால் சூரியனை விட பல மடங்கு பெரியதாக ஒரு நட்சத்திரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் ஆயுள் சூரியனின் ஆயுளை விடக் குறைவாகத்தான் இருக்கும். சூரியனை விட வடிவில் மிகப் பெரியதான திருவாதிரை நட்சத்திரத்தின் மொத்த ஆயுளே ஒரு கோடி ஆண்டுகள் தான். அதற்குக் காரணம் உண்டு.

ஒரு நட்சத்திரத்தில் அணுச்சேர்க்கை நிகழும் போது ஐன்ஸ்டைன் கூறிய தத்துவப்படி பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அதாவது பொருள் எரிந்து தீரும் போது தவிர்க்க முடியாதபடி பொருள் குறைந்து கொண்டே போகும். நமது சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் அணுச்சேர்க்கை வடிவில் எரிந்து தீர்ந்து கொண்டிருக்கிறது.
சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது இதை விட வேகமாக எரிந்து தீர்ந்து கொண்டிருக்கும்.

நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சிறிய குடும்பமாக இருந்தால் சமையல் காஸ் சிலிண்டர் அதிக நாள் வரும். பத்து பதினைந்து பேர் இருக்கிற பெரிய குடும்பமாக இருந்தால் காஸ் சிலிண்டர் வேகமாகத் தீர்ந்து போகும்.

அது மாதிரியில் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது பயங்கர வேகத்தில் தீர்ந்து கொண்டிருக்கும். எனவே தான் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரத்தின் ஆயுள், சூரியனின் ஆயுளை விடக் குறைவாகவே இருக்கும்.

ஒரு நட்சத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். நட்சத்திரத்தின் வெளிப்புறப் பொருள் உள் நோக்கி அமுக்கும். அதே நேரத்தில் உட்புறத்தில் நிகழும் அணுச்சேர்க்கையால் ஏற்படும் ஆற்றல் வெளியே வரப் பார்க்கும். இந்த இரண்டும் சரிசமமாக இருக்கின்ற வரையில் நட்சத்திரம் காலம் தள்ளிக் கொண்டிருக்கும்.

 ஒரு நட்சத்திரத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி அமுக்கும் சக்தியின் அளவு பெருமளவு குறையும் போது அந்த நட்சத்திரம் வெடித்து விடும். இப்படி வெடிக்கின்ற நட்சத்திரத்துக்கு சூப்பர்நோவா என்று பெயர். நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே பல லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எப்போதாவது இப்படி நட்சத்திரம் வெடிப்பது உண்டு.  இதை ஒரு நட்சத்திரத்தின் சாவுக் கட்டம் என்றும் சொல்லலாம்.

அப்படி சூப்பர் நோவா தோன்றும் போது இரவு வானில் அது பிரகாசமாகத் தெரியும். கி.பி 1054 ஆம் ஆண்டில் இப்படி ஒரு சூப்பர் நோவா தென்பட்டது. வானில் சூப்பர் நோவா காட்சி பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். இரவில் பல நாட்களுக்கு சூப்பர் நோவா நட்சத்திரம் தெரிந்து கொண்டிருக்கும். ஆனால் சூப்பர் நோவா வெடிப்பின் போது மிக ஆபத்தான கதிர்கள் தோன்றும். இவை பூமியைத் தாக்கினால் உயிரினத்துக்கு ஆபத்து. பூமியிலிருந்து சுமார் 50 ஒளியாண்டு தொலைவுக்கு அப்பால் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் 50 ஒளியாண்டுக்குக் குறைவான தூரத்தில் சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் மனித இனத்துக்கே ஆபத்து.

வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்து போன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.

சூரியனைப் போல   எட்டு முதல் 15  மடங்கு பெரியதான நட்சத்திரங்களே   அவற்றின் இறுதிக் கட்டத்தில் இவ்விதம் வெடித்து நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதற்கு ஏன் நியூட்ரான் நட்சத்திரம் என்று பெயர் வந்தது? நாம் பழையப்டி அணு சமாச்சாரத்துக்கு வருவோம். அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருக்கும் என்று சொன்னோம். நியூட்ரான் நட்சத்திரத்தில் நியூட்ரான்கள் மட்டுமே இருக்கும்

அந்த நட்சத்திரத்தில் அதுவரை இருந்த புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றும் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி  நியூட்ரான்களாகி விடும். அதாவது ஒரு புரோட்டானுடன் ஒரு எலக்ட்ரான் சேர்ந்து கொண்டால் அது நியூட்ரான் ஆகிவிடும்

அந்த நட்சத்திரத்தில் அதுவரை அடங்கியிருந்த அணுக்கள் அனைத்திலும் புரோட்டான்களிலிருந்து எலக்ட்ரான்கள் விலகி இருந்தன. அதாவது அந்த அணுக்களில் நிறையக் காலியிடம் இருந்தது. புரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் ஐக்கியமான பிறகு அதுவரை இருந்த காலியிடம் மறைந்து போய்விட்டிருக்கும்.

எனவே அந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாகி விடுகிறது.  பஞ்சு மிட்டாயை பசக் என்று அமுக்கினால் அது சிறிய உருண்டையாக மாறி விடுவது போல அது வரை வடிவில் பெரியதாக் இருந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக உருவெடுக்கிறது..

எனவே ஒரு நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பொருளை எடுத்து எடை போட்டால் அது ஒரு மலையின் எடைக்குச் சமமாக இருக்கும்.

ஒரு பஞ்சு மூட்டையை ஒருவரால் எளிதில் தூக்க முடியும். அதே கோணியில் பஞ்சுக்குப் பதில் புளியை அடைத்தால் அந்த மூட்டையை எளிதில் தூக்க முடியாது. அதே கோணியில் சிமெண்டை அடைத்தால் அந்த மூட்டையை கையால் நகர்த்துவதே கஷ்டம். நியூட்ரான் நட்சத்திரம் என்பது புளி அடைத்த கோணிப்பை போன்றது. அதுவும் கூட சரியில்லை. ஒரு மூட்டை புளியை ஒரு ஹாண்ட் பேக்கில் அடைக்க முடிந்தால்  எப்படியோ அது மாதிரியில் நியூட்ரான் நட்சத்திரம் உள்ளது

ஆரம்பத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருந்த அந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமான பிறகு அதன் குறுக்களவு 20 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.

ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காண முடியாது. பெரும்பாலான நியூட்ரான் நட்சத்திரங்கள் பல்சார் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்குகின்றன. அதாவது ஒரு நியூட்ரான் நட்சத்திரம் ரேடியோ அலைகள் வடிவில் துடிப்புகளை வெளிவிடுவதாக இருந்தால் அது பல்சார் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை pulsating star என்பார்கள். அதுவே சுருக்கமாக பல்சார் எனப்படுகிறது.

எல்லா நட்சத்திரங்களும் தமது அச்சில் சுழலும். நமது சூரியனும் தனது அச்சில் சுழல்கிறது. அது ஒரு முறை சுழன்று முடிக்க சுமார் 30 நாட்கள் ஆகின்றன. பல்சார் நட்சத்திரங்கள் வடிவில் மிகச் சிறியது என்பதால் அசுர வேகத்தில் சுழலும். ஒரு வினாடியில் 20 முறை சுழல்கின்ற பல்சார் நட்சத்திரங்கள் உண்டு. அபூர்வமாக ஒரு பல்சார் வினாடிக்கு 1122 முறை சுழ்ல்கிறது. நமது ஆகாய கங்கை அண்டத்தில் இதுவரை ஆயிரம் பல்சார் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல்சார் நட்சத்திரங்கள் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. எனவே ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் பல்சார்கள் இருக்குமிடங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.
  அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் இருக்க வேண்டும் என 1930 களிலேயே கொள்கை அளவில் விஞ்ஞானிகள் கூறினர். ஆனால் 1967 ஆம் ஆண்டில் தான் முதல் நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தில் ஜோசிலின் பெல் என்னும் கல்லூரி மாணவி தான் அந்த நியூட்ரான் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்


பூமிக்கு அதாவது நமது சூரியனுக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திரம் எதுவும் இல்லை. நமக்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் நியூட்ரான் நட்சத்திரம் 500 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகே உள்ளது. இதற்கு ஆங்கில சினிமா ஒன்றில் வரும் வில்லனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் கிரேட் ஸ்டார், டாப் ஸ்டார் என்றெல்லாம் பட்டம் சூட்டுகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த நியூட்ரான் நட்சத்திரத்துக்கு ஹாலிவுட் சினிமா ஹீரோவின் பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி வில்லனின் பெயர் வைத்தார்கள் என்பது புரியவில்லை.

( இது நான்  அகில இந்திய வானொலி சென்னை நிலையம் மூலம்  டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 8-45 மணிக்கு நிகழ்த்திய உரையாகும். நன்றி: சென்னை வானொலி நிலையம்)

11 comments:

  1. Excellent Sir, simple and clearly understandable, Thank you

    ReplyDelete
  2. Very super information. Thank you

    ReplyDelete
  3. கொஞ்சம் புரிகிறது. மீண்டும் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா

    அணுவிற்குள் எப்படி நிறைய காலி இடம் இருக்கிறது என்று குறிப்பிட்டிர்களோ அதைப்போலவே எங்களைப் போன்றவர்களின் மூளைக்குள்ளும் நிறைய இடம் காலியாக உள்ளது அதை இதைப் போன்ற அறிவு சார்ந்த அற்புதமான கட்டுரைகளால் நிரப்புங்கள் ஐயா

    வெங்கடேஷ்

    ReplyDelete
  5. நிய்ட்ரான் நட்சத்திரம் பற்றி தெரிந்து கொண்டோம்.சிறப்பான,எளிய முறையில் விளக்கியமைக்கு நன்றி.நியுட்ரான் நட்சத்திரத்தின் பெயரை கடைசி வரை சொல்லவில்லையே.சினிமா வில்லன் என்பதாலா?

    ReplyDelete
  6. நீண்ட இடைவெளிக்கு பின் எழுதியிருக்கிறீர்கள் ஐயா.நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
    இன்னும் குறுகிய கால இடைவெளியில் நிறைய எழுத வேண்டுமென்பது விருப்பம்.

    ReplyDelete
  7. Sir thanks for your article, I have searched on Web about star's. In that there is a Orion's belt, there are three stars alnitak alnilam and mistake, tell me more about these stars in tamil briefly, thank you sir

    ReplyDelete
  8. Chella Durai
    இந்த் வாரத்தில் இரவு சுமார் எட்டு மணி அளவில் கிழக்கு நோக்கிப் பார்த்தால் மூன்று நட்சத்திரங்கள் ஒரு வரிசையில் தெரியூம். அவை நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று நட்சத்திரங்களே ஆகும். அந்த மூன்றின் இடது புறத்தில் சற்று சிவந்த நட்சத்திரம் தெரியும். அதுவே திருவாதிரை நட்சத்திரம். ஆங்கிலத்தில் அதற்கு Betelguese என்று பெயர். மூன்று நட்சத்திரங்களையும் மேலிருந்து கீழாக இணைத்து கோடு போட்டால் அது கீழே உள்ள மிகப் பிரகாசமான நட்சத்திரத்தில் போய் முடியும். அந்த பிரகாசமான நட்சத்திரத்தின் பெயர சிரியஸ். வானில் தெரிகின்ற அனைத்து நட்சத்திரங்களிலும் அதுவே மிகப் பிரகாசமானது.

    ReplyDelete
  9. Sir intha pathippugala booka pubish panniruntha thayavu senju antha book namea mention pannuinga...naa padikkq aarvama irukkaen. Ungaloda anu book padichaen..rempa pudichathu..arvamum athigam aachu...thelivana yelimayana vilakkaingaluku remp nandri!

    ReplyDelete
  10. Sir....rempa thelivagavum...yelimayagavum irunthathu ungal pathippu...ungaludaya அணு book padichurukaen rempa arumaiya irunthathu...ungaloda other books namelam mention panna request pandraen...athalam padikka aarvama irukkaen. Nandri!

    ReplyDelete