Pages

Jul 13, 2015

புளூட்டோவை நெருங்கியது அமெரிக்க விண்கலம்


புளூட்டோ. இது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்  சுமார்
40 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது எடுத்த படம்.
மனிதகுல வரலாற்றில் நாளை - ஜூலை 14 ஆம் தேதி ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது.. மனிதன் உருவாக்கி அனுப்பிய ஒரு விண்கலம் சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ள புளூட்டோ கிரகத்தை நெருங்கி அதைப் படம் பிடிக்கப் போகிறது.

அமெரிக்காவின் நாஸா அனுப்பிய நியூ ஹொரைசன்ஸ்(New Horizons) என்னும் அந்த விண்கலம் புளூட்டோவை (Pluto) அடைவதற்குப் பயணம் செய்த தூரம் சுமார் 482 கோடி கிலோ மீட்டர். 2006 ஆம் ஆண்டில் பூமியிலிருந்து கிளம்பிய அந்த விண்கலம் புளூட்டோவை அடைய ஒன்பதரை ஆண்டுகள் பிடித்தன.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சென்ற பாதை
இதற்கு முன்னர் நாஸா அனுப்பிய விண்கலங்கள் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கிப் படம்  பிடித்ததுடன் அவை பற்றிப் பல புதிய தகவல்களை சேகரித்து அனுப்பின. சூரிய மண்டலத்தில் புளூட்டோ ஒன்று தான் பாக்கியாக இருந்தது. நாஸாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இப்போது புளூட்டோவை  ஆராய்ந்து புதிய தகவல்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்
புளூட்டோவுடன் ஒப்பிட்டால் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வடிவில் பெரியவை. அவற்றை ராட்சஸ கிரகங்கள்  என்று  வருணிக்கலாம். இவற்றுடன் ஒப்பிட்டால் புளூட்டோ ஒரு "சுண்டைக்காய்".

வியாழன், சனி முதலானவை பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். ஆனால் புளூட்டோ கிரகம் பூமியைப் போல பாறைகளால் ஆனது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புளூட்டோ  கிரகமானது பூமி, செவ்வாய் ஆகியவை இருக்கின்ற வட்டாரத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தூக்கி எறியப்பட்டு  இப்போதுள்ள இடத்துக்குப் போயிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
புளூட்டோவின் குட்டி சந்திரன்கள்
சூரியனிலிருந்து புளூட்டோ சுமார் 590 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. (பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கிலோ மீட்டர்) அது  சூரிய மண்டலத்தின்   "கடைசி தெருவில் "அமைந்துள்ளது. புளூட்டோவிலிருந்து பார்த்தால் சூரியன் ஒரு நட்சத்திரம் போலத் தெரியும். மிகத் தொலைவில் உள்ள காரணத்தால் பூமியிலிருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் போய்ச் சேர அல்லது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சிக்னல் வடிவில் அனுப்பும் தகவல்கள் வந்து சேர நாலரை மணி நேரம் பிடிக்கும்.

இரவு வானில் நீங்கள் வியாழன், சனி போன்றவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும். புளூட்டோவைப் பார்க்க முடியாது.  புளூட்டோ மிகத் தொலைவில் இருப்பதால் சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் மங்கலான புள்ளியாகத்தான் தெரியும். புளூட்டோ சைஸில் சிறியது என்பதும் அதற்குக் காரணம். புளூட்டோ (குறுக்களவு (2368 கி.மீ) சந்திரனை  (குறுக்களவு சுமார் 3474 கி.மீ) விடவும் சிறியது .சூரியனை புளூட்டோ ஒரு தடவை சுற்று முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.
கைப்பர் வட்டாரத்தைக் காட்டும் படம்
புளூட்டோ 1930 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.  நீண்டகாலம் புளூட்டோ ஒரு புதிராகவே இருந்து வந்துள்ளது. புளூட்டோவுக்கு ஐந்து சந்திரன்கள் உள்ளன.  புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட போது அது சூரியனை சுற்றுகின்ற ஒன்பதாவது கிரகமாகக் கருதப்பட்டது.

ஆனால் 2006 ஆம் ஆண்டில் சர்வதேச வானவியல் விஞ்ஞானிகள் சங்க மாநாடு நடந்த போது புளூட்டோ கிரக அந்தஸ்திலிருந்து அகற்றப்பட்டது. புளூட்டோ தனது வட்டாரத்தில் உள்ள குட்டி சந்திரங்களை  ஏப்பம் விட்டு தனது ஆதிக்கத்தை நிலை நாட்டாத காரணத்தால் அது கிரகம் அல்ல என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.  அவர்கள் புளூட்டோவை குட்டிக் கிரகம்  என்ற நிலைக்கு கீழே இறக்கினர்.

ஆனால் இப்படியான முடிவு எடுக்கப்பட்டதற்கு முன்னரே நாஸா புளூட்டோவுக்கு நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பி விட்டது. அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகமாகவே கருதுகின்றனர். புளூட்டோ அமெரிக்கர் ஒருவர் கண்டுபிடித்த ஒரே கிரகம் என்பது ஒரு காரணம்.

நாஸாவின் அந்த விண்கலம் புளூட்டோவை நெருங்கிக் கடந்த பின்னர் புளூட்டோவுக்கும் அப்பால் உள்ள கைப்பர் பெல்ட் (Kuiper Belt) என்னும்  பிராந்தியத்தை  நோக்கிச் செல்லும். சொல்லப்போனால் புளூட்டோவும் கைப்பர் வட்டாரத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போவின்
அஸ்தி அடங்கிய டப்பி
கைப்பர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிக் கிரகங்கள் உள்ளன. இவற்றைப் பனி உருண்டைகள் என்றும் சொல்லலாம். இவற்றில் ஒன்றுக்கு வருணா (வருணன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் தொடர்ந்து சென்று கைப்பர் வட்டாரத்தையும் ஆராய இருக்கிறது.

அவ்வப்போது தலைகாட்டும் சிறிய வால் நட்சத்திரங்கள்  கைப்பர் வட்டாரத்திலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது,
புளூட்டோவைக் கண்டுபிடித்த கிளைட் டாம்போ
சூரிய மண்டலம் தோன்றிய போது மிஞ்சிய துண்டு துக்கடாக்களே  கைப்பர் வட்டாரத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க விஞ்ஞானி ஜெரார்ட் கைப்பர் நினைவாக இந்த வட்டாரத்துக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புளூட்டோவை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் கிளைட் டாம்போ. அவரது அஸ்தியின் சிறு பகுதி நியூ ஹொரைசன்ஸ விண்கலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

12 comments:

  1. 9 years how satellite is working no need power? Please explain me

    ReplyDelete
  2. radha
    நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் அணுசக்தி பாட்டரி (Radioisotope Thermoelectric Generator ) வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக RTG எனப்படும் இந்த பாட்டரியில் 11 கிலோ அளவுக்கு புளூட்டோனியம்- 238 எனப்படும் அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. அணுசக்திப் பொருள் என்பதால் இதிலிருந்து தொடர்ந்து வெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டு நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள தகவல் தொடர்புக் கருவிகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை அளிக்கும்.
    1969 ல் அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பிய காலத்திலிருந்தே நாஸா அணுசக்தி பாட்டரிகளைப் பயன்படுத்தி வருகிறது.
    செவ்வாய் கிரகம் வரை சோலார் பாட்டரிகள் செயல்பட இயலும். மிக்த் தொலவில் உள்ள கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்பும் போது அவ்வளவு தூரத்தில் சோலார் பாட்டரிகளால் பயனில்லை. எனவே தான் அணுசக்தி பாட்டரிகள்.
    நியூ ஹொரைசனில் வைக்கப்பட்டுள்ள பாட்டரிகள் இன்னும் 15 வருஷ காலத்துக்கு பிரச்சினையின்றி மின்சாரத்தை அளித்து வரும்.

    ReplyDelete
  3. மனிதனின் சாதனையை கொண்டாட தயாராவோம்.

    ReplyDelete
  4. எவ்வளவு பெரிய சாதனை நன்றி நாசா

    ReplyDelete
  5. Thanks you very much. Use full answer.

    ReplyDelete
  6. Sir,

    Voyager1&2 already crossed solar system ,went to interstellar space and sending signals to earth. So whats special in new horizons reaching pluto

    Thanks
    Leslie

    ReplyDelete
  7. Leslie Samuel
    வாயேஜர் 2 விண்கலம் 1989 ஆம் ஆண்டு வாக்கில் நெப்டியூன் கிரகத்தை மிக அருகாமையில் கடந்து சென்றது என்பது வாஸ்தவமே. ஆனால் புளூட்டோ கிரகம் நெப்டியூனுக்கும் அப்பால் உள்ளது. இதுவரை புளூட்டோ பற்றி அதிகம் தெரியவில்லை. ஒரு விண்கலம் நெப்டியூனுக்கும் அப்பால் சென்று இதுவரை ஆராயப்படாத புளூட்டோவையும் ஆராய்ந்துள்ளது என்பது ஒரு சாதனையே. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் உள்ள அத்தனை கிரகங்களும் ஆராயப்பட்டு விட்டன.
    வாயேஜர் 2 விண்கலத்தைப் பொருத்தவரையில் அது சனி கிரகத்தை ஆராய்ந்து முடித்த பின்னர் தான் கொசுறு போல யுரேனஸையும் நெப்டியூனையும் ஆராய வாயேஜர் திட்டம் நீடிக்கப்பட்டது.
    புளூட்டோவைப் பொருத்தவரையில் அதை ஆராய்வதற்கென்றே நியூ ஹொரைசன்ஸ் செலுத்தப்ப்ட்டது. 500 கோடி கிலோ மீட்டர் தொலைவு சென்று திட்டமிட்ட வகையில் பணியை செவ்வனே செய்துள்ளது என்பது நிச்சயம் ஒரு சாதனையே. நியூ ஹொரைசன்ஸ் கொசுறு போல கைப்பர் பிராந்தியத்தையும் ஆராய உள்ளது

    ReplyDelete
  8. அடைந்து இன்றையிலிருந்து படங்களை அனுப்பத் தொடங்கியாயிற்று ஸார்... http://www.bbc.co.uk/news/science-environment-33543383

    சிவா கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  9. பிரமாதம்!
    தொடரட்டும் விண்வெளி பயணம்!
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    ராஜா.

    ReplyDelete
  10. தொடரட்டும் விண்வெளி பயணம்!

    ReplyDelete