Jul 7, 2015

பூமியிலிருந்து மிகத் தொலைவில் சூரியன்

Share Subscribe
கடந்த (ஜூலை) 6 ஆம் தேதி சென்னையில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. அன்றைய தினம் வெயில் 40.7 டிகிரி செல்சியஸ்.கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக அதிகபட்சம் என்று சொல்லப்படுகிறது.  திருச்சியிலும் தமிழகத்தின் வேறு நகரங்களிலும் வெயில் கடுமையாக இருந்தது.

ஆனால் வேடிக்கையான வகையில் இந்த ஆண்டில் ஜூலை 6 ஆம் தேதியன்று - மிகச் சரியாகச் சொல்வதானால் அன்றைய தினம் நள்ளிரவு சூரியன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருந்தது. அன்றைய தினம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருந்த தூரம் 15, 20,93,480   கிலோ மீட்டர். எளிதுபடுத்திச் சொல்வதானால் 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி அதாவது நல்ல குளிர் வீசிக் கொண்டிருந்த போது சூரியன் பூமிக்கு வழக்கத்தை விட சற்று அருகே இருந்தது. அன்றைய தினம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே இருந்த தூரம் 14,70,96,204 கிலோ மீட்டர்.

ஜனவரி மாதம் 4 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் ஜூலை 6 ஆம் தேதி இருந்த தூரத்துக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 49 லட்சம் கிலோ மீட்டர். இதையே வேறுவிதமாகச் சொல்வதானால் சூரியன் ஜனவரியில் இருந்ததை விட இப்போது 49 லட்சம் கிலோ மீட்டர் தள்ளிி இருக்கிறது

முதல் கேள்வி: பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசப்படுவது ஏன்?  சூரியனை பூமி சுற்று வருகின்ற பாதை வட்ட வடிவமாக இல்லாமல் சற்றே அதுங்கிய வட்டமாக உள்ளது. எனவே தான் தூரம் வித்தியாசப்படுகிறது.

 அடுத்த கேள்வி:.சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் போது அதிக வெயிலாகவும் தொலைவில் இருக்கும் போது குளிராகவும் இல்லாமல் நேர் எதிராக இருப்பது ஏன்?   பூமி சுமார் 23 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையில் இருந்தபடி சூரியனை சுற்றுவதே இதற்குக் காரணம்.

பூமியின் இந்த சாய்மானம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி சூரியனின் கதிர்கள் இந்தியா உட்பட பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் செங்குத்தாக விழுகின்றன.  ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கோடைக்காலமாக உள்ளது.
பூமியின்  நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதியில் சூரியனின் கதிர்கள்
செங்குத்தாக விழுகின்றன
அதே காலகட்டத்தில் சூரியன் கதிர்கள் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில்  சாய்வாக விழுகின்றன. ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே கோடையாக இருக்கின்ற காலத்தில் அக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக உள்ளது.

பிற்சேர்க்கை:
வாசக அன்பர் ஒருவர் பூமியானது எப்போதும் ஒரே பக்கமாக சாய்ந்து இருக்குமா என்று கேட்டிருந்தார். அது நல்ல கேள்வி.  பூமி ஒரே பக்கமாகத்தான்  சாய்ந்திருக்கிறது. அதன் விளைவாகத் தான் கோடையும் குளிர் காலமும் மாறி மாறி வருகின்றன.
மேலே உள்ள படம் பூமி ஜூன் மாத வாக்கில் உள்ள நிலையை ( இடது புறம்) காட்டுகிறது. அப்போது சூரியனின் கதிர்கள் வட கோளார்த்தத்தில்  செங்குத்தாக விழும்..வலது புறத்தில் பூமி டிசம்பரில் உள்ள நிலையைக் காட்டுகிறது. அப்போது  வட கோளார்த்தத்தில் சூரிய கதிர்கள் சாய்வாக விழும். எனவே வட கோளார்த்தத்தில் குளிர் காலமாக இருக்கும்.
  
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியனின் கதிர்கள் தென் கோளார்த்தத்தில் உள்ள நாடுகளில் செங்குத்தாக விழும். ஆகவே அந்த நாடுகளில் அப்போது கோடைக் காலமாக இருக்கும்.

மேலே உள்ள படமானது தென் கோளார்த்தத்தில் எவ்விதம் கோடைக்காலம் நிகழ்கிறது என்பதை விளக்குகிறது.

ஆனால் இன்னும் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் சாய்மானம் நேர் எதிராக அமையும். அப்போது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியா உட்பட வட கோளார்த்த நாடுகளில் கோடைக்குப் பதில் குளிர் காலம் ஏற்படும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் கோடைக்காலம் நிலவும். அதாவது பருவங்கள் தலைகீழாக மாறிவிடும். பூமியின் சாய்மான மாற்றம் அதற்கு காரணமாக இருக்கும். இவ்விதம் ஏற்படும் என மிலுடின் மிலன்கோவிச் (1879--1958) என்ற நிபுணர் கண்டுபிடித்துக் கூறினார். இது தனி சமாச்சாரம்.

15 comments:

Mukunth said...

nice article. can you also please explain length of day & night and changes in seasons too.

Anonymous said...

மிக அருமையான விளக்கம்.

RAM said...

Earth's 23degree inclination is always towards sun?wont it change?
If it is constant we should always be in summer right?
Then how we are getting winter also?
Please clarify

என்.ராமதுரை / N.Ramadurai said...

RAM
பூமி 23 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இதே மாதிரி நீடிக்கும். பூமி சூரியன் பக்கமாகச் சாய்ந்து நின்றாலும் வட கோளார்த்தத்தில் எப்படி குளிர் கால்ம் ஏற்படுகிறது என்பதை கட்டுரையின் பிற்சேர்க்கைப் பகுதி விளக்குகிறது.

Anonymous said...

அய்யா தங்கள் விளக்கம் அருமை

Anonymous said...

சார், ராக்கெட் ஏவும்போது வானிலை சரியில்லை என்றால் ஒத்திப்போட்டு விடுகிறார்கள். எப்படியும் அவர்கள் டிராக் பண்ணப்போவது ராடாரில்தான்... அப்படி இருக்க வானிலை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
ராக்கெட்டானது சில நிமிஷங்களில் மேகங்களைத் தாண்டி உயரே சென்று விடுகிறது. வானிலைப் பிரச்சினை எல்லாம் இந்த மேகங்கள் இருக்கின்ற உயரம் வரை தான். வானிலை பற்றி ராக்கெட் நிபுணர்கள் அச்சப்படுவது மின்னல் தாக்கும் ஆபத்து அம்சம் தான். ராக்கெட்டை ஏவுதளத்தில் நிறுத்தி வைத்திருக்கும் வரையில் மின்னலிலிருந்து பாதுகாப்பு உள்ளது. அதாவது இடிதாங்கி இருக்கிறது. ஆனால் கடைசி நிமிஷங்களில் ராக்கெட்டானது பிற இணைப்புகளிலிருந்து கழற்றி விடப்படுகிறது. அந்த சில நிமிஷங்களில் ராக்கெட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது.அந்த நேரம் பார்த்து மின்னல் தாக்கினால் பேராபத்து தான். ஆகவே தான் வானில் மின்னல் மேகங்கள் இல்லாத நேரமாகப் பார்த்து ராக்கெட் உயரே செலுத்தப்படுகிறது. நான் ஒரு சமயம் அமெரிக்காவில் கேப் கெனவரல் சென்றிருந்த போது காரிலிருந்து வெளியே இறங்கக்கூடாது (இறங்கி நிற்கக்கூடாது) என்று தடுத்து விட்டார்கள். அப்போது வானில் மின்னல் மேகங்கள் இருந்ததே காரணம்.
கேப் கெனவரலுக்கு மின்னல் நகரம் என்ற பெயர் உண்டு. கேப் கெனவரலிலும் வானிலை தெளிவாக இருக்கும் போது தான் ராக்கெட்டைச் செலுத்துகிறார்கள். உலகில் எல்லா ராக்கெட் ஏவுதளங்களிலும் அப்படித்தான்.

Anonymous said...

எல்லா ராக்கெட் ஏவுதளங்களிலும் அப்படித்தான் - என்பது தெரியும். அதனால்தான் கேட்டேன். மின்னல் அவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! நன்றி.

சரவணன்

Thirtha said...

ஐய்யா,வணக்கம்.என்னிடம் 2 கேள்விகள்.
1.கடல்கள் எப்படி பூமியில் உருவானது?
2.உண்மையில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிக்கு சென்றது பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன,உண்மையில் அப்போது என்ன நடந்தது,நாசா எதை மறைக்க முயல்கிறது,அங்கு அவர்கள் பார்தது என்ன ,அங்கிருந்து என்ன கொண்டு வந்தார்கள் ,விளக்குங்கள் ப்ளீஸ் ?

என்.ராமதுரை / N.Ramadurai said...

R.Thirtha malai
பூமியில் கடல்கள் தோன்றியது குறித்து பல கொள்கைகள் உள்ளன. நெருப்பு உருண்டையாக இருந்த பூமி குளிர்ந்த பின்னர் பூமியைச் சூழ்ந்திருந்த மேகங்கள் ஆண்டுக் கணக்கில் மழையாகப் பொழிந்தன என்பது ஒரு கருத்து.பூமியில் ஒரு கால கட்டத்தில் எண்ண்ற்ற வால் நட்சத்திரங்கள் ( அவை பனிக்கட்டிஉருண்டைகள்) வந்து மோதிய போது பூமிக்கு ஏராளமான தண்ணீர் கிடைத்தது. கடல்கள் தோன்ற இதுவும் காரணமாகக் கூறப்படுகிறது.
நீல் ஆம்ஸ்டிராங் சந்திரனில் இறங்கியது நிஜமே. அதுபற்றிய புருடாக்களை நம்ப வேண்டாம். அவர்கள் சந்திரனிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்தனர்.

Thirtha said...

Thanks sir....

Unknown said...

hello sir, i have one doubt can you pls clear it.
1.why earth is 23 degrees inclined?
2.is this inclination for all planets in our solar system?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Parthiban CB
பூமி ஏன் 23 டிகிரி அளவுக்கு சாய்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் கண்டுபிடிக்கப்ப்ட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த சாய்மான அளவு நிரந்தரமானது அல்ல. பூமி ஒரு சமயம் 21.1 டிகிரி சாய்ந்திருக்கும்.42 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 24.5 டிகிரி சாய்ந்திருக்கும். நாம் இப்போது இடைப்பட்ட காலத்தில் இருக்கிறோம்.
பிற கிரகங்களின் சாய்மானம் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. உதாரணமாக செவ்வாய்:25.2 டிகிரி வியாழன் 3.13 டிகிரி சனி- 26.13 டிகிரி யுரேனஸ் 97.8 டிகிரி அதாவது யுரேனஸ் படுத்த நிலையில் உள்ளது.

Unknown said...

thank you sir

Venkatakrishnan.R said...

Excellent prediction

Post a Comment