Jun 4, 2015

நூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு

Share Subscribe
பிரபல நிறுவனம்  ஒன்று தயாரிக்கும் நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (Lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.

 நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா
இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.

உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.

அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 சினிமாத் துறை, விளையாட்டுத் துறை பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்கள் பற்றி ஒரு வார்த்தை. இவ்வித விளம்பரங்கள் பற்றி ஒரு தமிழ் டிவி சேனலில் விவாதம் நடந்தது. மாடல் அழகி ஒருவர் கலந்து கொண்டார். பிரபலங்கள் இவ்விதம் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வி எழுந்தது. அந்த மாடல் அழகி உடனே பத்திரிகைகளில் வருகின்ற பல விளம்பரங்களைக் குறிப்பிட்டு, பத்திரிகைகள் அந்த விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூற முடியுமா என்று பதிலுக்கு கேட்டார். நியாயமான கேள்வி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வித விள்ம்பரங்களில் தோன்றுகின்ற பிரபலங்கள் விளம்பரத்தில் தோன்றித்தான்  சம்பாதித்தாக வேண்டும் என்ற அவசியமில்லாத கோடீஸ்வரர்கள்.

மறுபடி நூடுஸ்ஸுக்கு வருவோம்.  நூடுல்ஸ் மாதிரி எவ்வளவோ உணவு சமாச்சாரங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மளிகைக் கடை வாசலில் தோரணங்கள் போல பாக்கெட்டுகள் தொங்கும். இவை அனைத்தும் கொரிப்பதற்கான உணவு வகைகள். இவை எல்லாம் எவ்விதக் கலப்படமும் இல்லாத தரமான தயாரிப்புகளா?

நூடுல்ஸ் போன்றவற்றைப் பலகாரமாக்கக் குறைந்தபட்சம் வெந்நீர் தயாரிக்க அடுப்பை மூட்டியாக வேண்டும். அப்படியின்றி கடையில் வாங்கியவுடன் சாப்பிடக்கூடிய கேக், ஐஸ் கிரீம் போன்று  பல வகைகள் உள்ளன. இவை அல்லாமல் ஓட்டல் பலகாரங்கள். இவற்றின் தரம் என்ன?

இவை எதுவும் வேண்டாம் என வீட்டிலேயே பலகாரம் பண்ணலாம் தான். அதற்கென மளிகைக் கடையில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி என பல பொருட்களை வாங்க வேண்டும். இவற்றின் தரம் என்ன? இவற்றில் கலப்படமே இல்லையா?

இந்தியாவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதற்கான பொருட்களைத் தயாரித்து அளிப்பதே பெரிய தொழிலாக மாறியுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது.

மொத்தத்தில் பிரச்சினை நூடுல்ஸோடு மட்டும் நிற்பதல்ல. பிரச்சினை நூடுல்ஸை விட அதிக சிக்கல் கொண்டது.

38 comments:

Rathakrishnan said...

miga nandri ungal kadduraikku

science terminal said...

தெளிவான ஓர் ஆய்வு

Mi said...

அருமையான அலசல்!! அரசாங்கமும், மக்களும் பின்பற்ற வேண்டும்!!

மாணிக்கராஜ் said...

அய்யா, lead எதற்காக சேர்க்கப்படுகிறது? அதன் தேவை என்ன?

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
கார்களில் உள்ள எஞ்சின் சிறப்பாகச் செயல்படும் நோக்கில் திரவ வடிவிலான காரீயம் பெட்ரோலுடன் சேர்க்கப்பட்டது. அப்படிச் சேர்க்கும் முறை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட போதே காரீயத்தால் ஏற்படும் தீங்கு பற்றித் தெரியும். தெரிந்தே அதைச் சேர்த்து வந்தனர். 1996 ல் தான் இது அமெரிக்காவில் அடியோடு தடை செய்யப்பட்டது.
காரீயம் உடலில் சேர்ந்த காரணத்தால் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 5000 பேர் இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்து வந்தனர் என 1985 வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்தது.

Anonymous said...

சார் அப்ப tin என்பது தகரம் இல்லையா? சாதாரணமாக தகர டப்பா என்கிறோம். பத்தாம் வகுப்பில் 'பாங்காக்கில் தகரம் உருக்கும் ஆலை உள்ளது' என்று படித்திருக்கிறேன்! ஈயம் உருக்கும் ஆலை என்று இருந்திருக்க வேண்டுமோ?

உணவு தயாரிப்பு கம்பெனிகள், இந்தியாவில் கிடைக்கிற எல்லா தானியம், காய்கறி, தண்ணீர் என எல்லாவற்றிலும் காரீயம் உள்ளது, நாங்கள் என்னதான் செய்வது என்கிறார்கள். இப்படிச் சொல்லி அவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்றாலும் அரசு இதையும் கவனிக்க வேண்டும். நூடுல்ஸைத் தடை செய்துவிட்டு அதைவிட அதிகம் காரீயம் இருக்கும் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி போட்டு சாம்பார் வைத்து இட்லி சாப்பிடுவதால் எந்த பயனும் இல்லை.

சரவணன்

srinivasansubramanian said...

எல்லா நாடுகளிலும் விற்கப்படும் மேகி நூடுல்ஸில் இந்த காரியம் கலக்கப்படுகிறதா? அல்லது இளிச்சவாய் இந்தியாவில் மட்டும் இந்த நிலையா?

A.SESHAGIRI said...

ஐயா,
தங்களின் 'காரீயத்தை'பற்றிய கட்டுரை நாங்கள் இதுவரை அறியாத பல தகவலை தந்தது.சிலரின் தவறான விளக்கங்களால் இதுவரை எங்கள் வீட்டு பெரியவர்கள் பயன் படுத்திய ஈய பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தோம்.தங்கள் கட்டுரை தெளிவை தந்தது.இன்னும் சில கேள்விகள் காரீயம்,ஈயம் இவை இரண்டுமே இயற்கையில் தனித் தனியாக கிடைப்பவையா? காரீயத்தை என்ன காரணத்திற்காக 'நூடுல்ஸ்' போன்ற உணவு பொருள்களில் சேர்க்கிறார்கள்?

A.SESHAGIRI said...

'தினமணி' போன்ற பொறுப்பான நாளிதழ்கள் கூட ஈயத்திற்கும்,காரீயத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்தி வெளியிட்டு இருப்பதை கீழ் கண்ட சுட்டியில் பாருங்கள்.
'தினமணி' போன்ற பொறுப்பான நாளிதழ்கள் கூட ஈயத்திற்கும்,காரீயத்திற்கும் வேறுபாடு தெரியாமல் செய்தி வெளியிட்டு இருப்பதை கீழ் கண்ட சுட்டியில் பாருங்கள்.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/06/04/ஈயம்-கலந்த-உணவுப்-பொருள்கள்-/article2848497.ece

Unknown said...

Excellent.

Unknown said...

Thank u sir. Very good information

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
ஈயத்துக்கு தகரம் என்ற பெயரும் உண்டு. இரும்பு ஆலைகளில் மிக மெல்லிய உருக்குத் தகடுகளைத் தயாரிப்பர், இந்த மெல்லிய தகடுகள் கொதிக்கும் ஈயத்தில் முக்கி எடுக்கப்படும். இன்னொரு முறையில் மெல்லிய உருக்குத் தகடுகள் மீது ஈயப் பூச்சு கொடுப்பார்கள். இவ்விதம் ஈயப் பூச்சு கொடுக்கப்பட்ட தகடுகளைக் கொண்டு டப்பாக்களைத் தயாரிப்பார்கள். இதுவே தகர டப்பா.
ஈயப் பூச்சி மிக மெல்லியதாக இருந்தால் நாளடைவில் பூச்சு அகன்று தகர டப்பா துருப்பிடித்துப் போய் விடும்
எல்லா காய் கறிகளிலும் காரீயம் இருப்பது கிடையாது. ஒவ்வொரு காயும் பழமும் குறிப்பிட்ட தனிமத்தை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
.

என்.ராமதுரை / N.Ramadurai said...

மாணிக்கராஜ்
மெனக்கெட்டு காரீயத்தை சேர்ப்பதாகத் தோன்றவில்லை.

என்.ராமதுரை / N.Ramadurai said...

A.SESHAGIRI
ஈயம் என்பது ஒருதனிமம்(Element) அதே போல காரீயம் ஒரு தனிமம்.
அந்த நாட்களில் முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரம் ஒன்று அனேகமாக எல்லா வீடுகளிலும் இருக்கும். ரசம் தயாரிக்க அந்த ஈயச் சொம்பைத் தான் பயன்படுத்துவார்கள். ஈயச் சொம்பை அடுப்பில் காலியாக வைத்தால் அந்த சொம்பு விரைவில் உருகி விடும். புளித் தண்ணியை ஈயச் சொம்பில் ஊற்றி அதன் பிறகே அடுப்பில் வைப்பார்கள். ஈயச் சொம்பில் செய்த ரசம் தனி ருசியாக இருக்கும் என்று சொல்வார்கள்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

srinivasansubramanian
வெளிநாடுகளில் உள்ள நிலைமை தெரியவில்லை. நீங்கள் சொன்ன மாதிரியிலும் இருக்கலாம். இந்தியா ஊழல் பிடித்த நாடு என்பது பலருக்கும் நன்கு தெரிந்த விஷயம்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
மஞ்சள் பொடி விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சோம்பல் படாமல் மாவு மெஷினுக்கு மஞ்சளை எடுத்துச் சென்று மஞ்சள் பொடி செய்து கொள்வது தான் நல்லது.

Anonymous said...

நன்றி சார். பென்சிலில் இருக்கும் கிராஃபைட்டை லெட் என்கிறோம். ஆரம்பத்தில் காரீயத்தில் செய்தார்களா?

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் கிராபைட் படிவுகள் ( ஒரு வகை கார்பன்) கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கிராபைட் கரிய நிறத்தில் இருந்தது. ஆரம்பத்தில் இதை ஒரு வகை காரீயம் என்று தவறாகக் கருதினர். பென்சில்களைத் தயாரிக்கப் பின்னர் இந்த கிராபைட் பயன்படுத்தப்படலாயிற்று. ஆனால் ஆரம்பத்தில் வைத்த Lead என்ற பெய்ர் மாறவில்லை. பென்சில்களில் இருப்பது கிராபைட். காரீயம் அல்ல.

Unknown said...

Unavu porulgalil lead kalapathatku, appadi enna vanthathu avasiyam....kaaranam.....?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sakthi kumar
உணவுப் பொருட்களில் யாரும் தனியாக காரீயத்தைக் கலப்பது கிடையாது. ருசியை அதிகரிக்கவும், பாரவைக்கு கவர்ச்சியாக நல்ல நிறத்துடன் தோற்றமளிக்கவும் பல வேதியல் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அப்படியான ஒரு பொருளில் காரீயம் அடங்கியிருக்கலாம். அவ்விதமாகத்தான் உணவுப் பொருளில் காரீயம் இடம் பெறுகிறது

Anonymous said...

சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி - http://www.tamilvu.org/library/dicIndex.htm ஈயம் என்பது காரீயம், வெள்ளீயம் இரண்டையும் குறிக்கும் என்கிறது. தினமணி போன்ற நாளேடுகளின் வார்த்தைப் பிரயோகம் முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது; என்றாலும் 'ஈயம்' என்ற பொதுச்சொல்லுக்குப் பதிலாக tin = வெள்ளீயம், lead = காரீயம் என்று தனித்தனியே குறிப்பிடுவது நல்லது.

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
பாத்திரக் கடைகளுக்குச் சென்று ஈயச் சொம்பு வேண்டும் என்று கேட்டால் ஈயத்தால் (Tin) ஆன சொம்பைத் தான் எடுத்துக் கொடுப்பார்கள். அந்த நாட்களில் ஈயம் பூசும் வேலையில் ஈடுபட்டவர்கள் கூட ஈயம் பூசலையா என்று தான் கூவிச் சென்றார்கள். ஆகவே ஈயம் என்பது எது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஈயத்துக்குத் தகரம் என்றும் பெயர் உண்டு. சில அகராதிகளில் tin என்பதற்கு ஈயம், மற்றும் தகரம் என்று பொருள் கொடுத்திருக்கிறார்கள்.
ஈயம் ஒரு தனிமம் element. அதன் அணு எண் 50. Lead வேறு தனிமம். அதன் அணு எண் 82. ஈயம் என்பது காரீயத்துக்கும் பொருந்தும் என்று சொல்வது அறிவியல் ரீதியில் தவறானது.

Anonymous said...

விளக்கத்துக்கு நன்றி ராமதுரை சார். பல்கலை அகராதி திருத்தப்பட வேண்டும். அது சரி, black lead, white lead என்பவை காரீயத்தின் இரு வகைகளா?

சரவணன்

என்.ராமதுரை / N.Ramadurai said...

சரவணன்
ஒயிட் லெட் ஹார்ட்வேர் கடைகளில் கிடைக்கும். அது காரீயத்தின் ஒரு வகை.அது பவுடர் வடிவில் உண்டு. ஆயிலுடன் சேர்த்து களிம்பு (பசை)போன்று விறபார்கள். குழாய்க்ளில் சிறு ஒழுக்குகளை அடைக்கப் பயன்படுத்துவர். பிளாக் லெட் என்பது கிராபைட். அது காரீயத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல.

Anonymous said...

/// பிளாக் லெட் என்பது கிராபைட். அது காரீயத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. ///
அப்படியா! அதைப்போய் ஈயம் என்பதற்கு அர்த்தமாகக் கொடுத்திருக்கிறார்கள்! Tin-ஐ lead-ஆக்கி, அதையும் graphite-ஆக்கிவிட்டார்களே.

சரவணன்

A.SESHAGIRI said...

"உணவுப் பொருட்களில் யாரும் தனியாக காரீயத்தைக் கலப்பது கிடையாது. ருசியை அதிகரிக்கவும், பாரவைக்கு கவர்ச்சியாக நல்ல நிறத்துடன் தோற்றமளிக்கவும் பல வேதியல் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அப்படியான ஒரு பொருளில் காரீயம் அடங்கியிருக்கலாம். அவ்விதமாகத்தான் உணவுப் பொருளில் காரீயம் இடம் பெறுகிறது"

மோனோ சோடியம் குளூட்டமேட்(எம்.எஸ்.ஜி.) என்ற வேதிப்பொருளும்(அஜினோமோட்டோ),காரீயமும் ஒன்றா? இது சம்பந்தமாக 'ஹிந்து' தமிழ் நாளிதழில் இன்று வந்துள்ள கட்டுரையின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

"http://tamil.thehindu.com/general/health/மேகி-மட்டும்தான்-குற்றவாளியா-மருத்துவர்-கு-சிவராமன்/article7289099.ece?homepage=true&ref=ட்ன்வ்ன்"

முடிந்தால் மேற்கொண்டு விளக்கம் தர அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

A.SESHAGIRI
மோனோ சோடியம் குளூட்டமேட்(எம்.எஸ்.ஜி.) என்ற வேதிப்பொருளும் அஜினோமோட்டோ இரண்டுமே ஒன்று தான். சில வீடுகளிலும் சமையலின் போது அஜினோமோட்டோவை சேர்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் காரீயம் என்பது வேறு. குறிப்பிட்ட நூடுல்ஸில் காரீயம் எப்படிச் சேர நேர்ந்தது என்பது சோதனைக்குட ஆராய்ச்சிக்குப் பிறகு தெரிய வரலாம்.

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம்.
பதிவரின் கட்டுரைமீது வாசகர்கள் கேட்கும் கேள்விகளையும் அதற்கான விளக்கத்தையும் படிக்கும் போதே பிரச்சனையின் தாக்கத்தை புரிந்து கொள்ளமுடிகிறது.
மனோரமா இயர்புக் ( தமிழ் பதீப்பு - 1990களீல் வெளிவந்தது)ல் படித்த ஞாபகம் ; அஜினமோட்டோ பயன்படுத்துவதால் எந்த தீங்கும் கிடையாது.
ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வியாபாரப் பூசலினால் , அமெரிக்காவின் சதிப் பிரச்சாரத்தினாலேயே இத்தகைய கருத்து பரப்பிவீட்டதாகும்._____ இது பற்றியும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன். சரியaன தருணத்தில் வந்த பதிவுக்கு நன்றி , வாழ்த்துக்கள்.
<> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி - 627416

என்.ராமதுரை / N.Ramadurai said...

ABUBAKKAR K M
அஜினோமோட்டோ நிறுவனம் நீண்டகாலமாகப் பல நாடுகளிலும் செயல்பட்டு வருவதாகும். உடலில் அஜினோமோட்டோ அளவுக்கு மீறி சேர்ந்தால் கெடுதல் என்று சொல்லப்படுகிறது. அது பற்றித் தான் இப்போது சர்ச்சைம் தடை, வழக்கு எல்லாம்.
கடந்த காலத்தில் பல நாடுகளிலும் வெவ்வேறு காரணங்களால் அஜினோமோட்டோ பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது

VarahaMihira Gopu said...

கொஞ்சம் கோணலான திசையில்---

“ஆசிவக வலேஸன்” வலைப்பதிவை நான் எழுததொடங்கிய காலத்தில் எனக்கு தமிழில் பீரியாடிக் டேபிள் வகுக்க ஆர்வம் வந்தது. அப்பொழுது ஈயம் காரீயம் துத்தநாகம் பெயர்களும் அர்த்தங்களும் தெரியவந்தது.

அதைவிட முக்கியமாக, தமிழில் ஒரு பீரியாடிக் டேபிள் (தனிம வரிசை? தனிம மேசை? ;-) தனிமக் கோலம்?) செய்வது வீணான முயற்சி என்றே தோன்றியது. ஏனெனில் டிமிட்ரீ மெண்டலீஃபால் வகுக்கப்பட்ட பீரியாடிக் டேபிளில் பெரும்பாலான தனிமங்களின் பெயர்கள் அவரது தாய்மொழி ருஷியத்திலோ, உலகின் அறிவியல் மொழியாய் இன்று திகழும் ஆங்கிலத்திலோ இல்லை. 16-17-18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியாவில் இணைமொழியக இருந்த லத்தீனத்தில் உள்ளன. இதற்கு ஒரு எளிமையான காரணம் உண்டு : அந்த மூன்று நூற்றாண்டுகளில் தான் பஞ்சபூதங்களுக்கு அப்பால், இல்லை எப்பொருளுக்கும் மூலப்பொருட்களாய் அணுக்கள் இருப்பதென ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்தனர், பெயர்சூட்டினர்.

தமிழிலோ ஆயிரமாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் இணைமொழியாக நிலவிய சமஸ்கிருததிலோ, இஸ்லாமிய நாடுகளின் இணைமொழியாகிய அரபிலோ பாரசீகமொழியிலோ பீரியாடிக் டேபிள் வகுத்தால் கூட பெரும்பான்மையான தனிமங்களின் பெயர்கள் லத்தீனத்தில் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து.

என்.ராமதுரை / N.Ramadurai said...

VarahaMihira Gopu
தாங்கள் கூறுவதன்படி இவை லத்தினத்தில் இருப்பதே சரி.நான் பள்ளியில் படித்த காலத்தில் அப்போது தான் தமிழ் மீடியம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்த சயன்ஸ் புத்தகத்தில் 'அப்ஜஹரிதகிகா அமிலம்' என்ற சொல் இருந்தது.ஆனால் எங்கள் ஆசிரியர் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியே பாடம் சொல்லிக் கொடுத்தார்.
இப்போதும் அவரவர் இஷ்டத்துக்கு தனிமங்களுக்கு (Elements) பெயர் வைக்கின்றனர்.பள்ளிகளில் ஆங்கிலத்திலான பெயர்களே பயன்படுத்தப்படுகின்றன.
முன்பு ஒரு கட்டுரையாளர் ஒருவர் கூறியது போல எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க முயன்றால் ஆயுள் பூராவுக்கும் அதைத்தான் செய்து கொண்டிருப்போம். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் முதலியவை அதே பெயர்களில் இருப்பது தான் சரி

Anonymous said...

மிகவும் உபயோகமான கட்டுரை . நிறைய குழப்பங்கள் கட்டுரை மூலமாகவும் பின் வரும் கேள்வி பதில்கள் மூலமாகவும் தீர்ந்தன . நன்றி ஐயா . ஒரே ஒருவிஷயத்தில் சந்தேகம் . white lead என்கிற காரீய வகையைத்தான் வெள்ளீயம் என்கிறோமா அல்லது வெள்ளீயம் என்பது tin என்கிற ஈயத்தைக் குறிக்கிறதா ?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
Tin என்பது தான் ஈயம். வெள்ளீயம் என்று தனியே எதுவும் கிடையாது.அறிவியலின்படி ஈயம் உள்ளது. வெள்ளீயம் என்பது சிலர் ஈயத்துக்கு வைத்துள்ள பெயர்.
white lead என்பது முற்றிலும் வேறானது. அது காரீயத்தின் ஒரு வடிவம்.

krish said...

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் தரமணியில் எல்நெட் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது உடன் வேலை செய்யும் சகோதரிகள் இருவர் உட்பட அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததால் பரிதாபமாக இறந்துவிட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கேட்டு நாங்கள் பார்க்க போயிருந்தோம். அது மிகவும் கோரமையான காட்சி. அப்பொழுது கேள்விபட்டது. அவர்கள் சமையல் பாத்திரத்திற்கு ஈயம் பூசியிருக்கிறார்கள் ஆனால் பூசப்பட்டது ஈயத்திற்கு பதில் காரீயம். அந்த பாத்திரத்தில் சமைத்ததால் உணவு விஷமாகி இறந்துவிட்டார்கள் என்று. எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.

என்.ராமதுரை / N.Ramadurai said...

krish
தாங்கள் கூறியது மாதிரியில் தவறு ஏற்பட வாய்ப்பில்லை. ஈயம் பூசுபவர்கள் என தனி வகைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். இப்போதும் ஒரு வேளை இருக்கலாம். அவர்கள் தொழில் தெரிந்தவர்கள். ஈயத்துக்குப் ப்திலாக காரீயம் பூசியிருக்க மாட்டார்கள்.விஷயம் தெரியாமல் ஒருவர் தாங்களாகவே ஈயம் பூசுவதில் ஈடுபட்டிருக்க அனேகமாக வாய்ப்பில்லை. ஆனால் காரீயம் விஷம். ஆனால் உடனே கொல்கின்ற விஷம் அல்ல.

கீதா சுதர்சனம் said...

தங்களது இக்கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் அவற்றுக்குத் தாங்கள் அளித்த விளக்கங்களும் என் குழப்பங்களுக்குத் தீர்வாக அமைந்தன . இவற்றின் சாராம்சத்தை என் நண்பர்களுக்கு உதவும் என்று face book இல் பதிவு செய்திருந்தேன் . அதில் நான் ஈயத்துக்கும் காரீயத்துக்கும் உள்ள வேறுபாட்டை எளிய கலிவிருத்தமாக எழுதி இருந்தேன்.அதனைத் தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

---------------------
ஈயத்திற்கும் காரீயத்திற்கும் உள்ள வேறுபாடு கலிவிருத்தமாக , நேர் நிரை நேர் நேர் என்னும் வாய்பாட்டிலே !
------

அணுவெண் ணைம்பதா மட்டின் னீயம்
உணுதற் கருஞ்சுவை யூட்டுஞ் சாற்றில்!
அணுவெண் ணெண்பது மிரண்டுஞ் சேரூன்
அணுவைப் பிணித்தழி காரீ யலெட்டே!

-----------

அட்டின் =சமைத்தால் , அந்த டின்
சேரூன் =சேர் +ஊன் (உடல் ,தசை )

அணு எண் ஐம்பது உடைய டின் என்னும் ஈயம் சமைத்தால் உண்ணுவதற்கு அருஞ்சுவை ரசத்தில் ஊட்டும் . அணு எண் எண்பத்து இரண்டு உள்ள காரீயம் என்னும் லெட் உடல் தசைகளை வலுவிழக்கச் செய்து நோயால் அழிக்கும் . :)

ABUBAKKAR K M said...

புலவர் கீதா சுதர்சனம் , வணக்கம் .
கலிவிருத்தப்பாவினில் பொருளடக்கத்தை உள்ளடக்கிய தங்களுக்கு
பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 927416

gangadharan said...

அப்படியானால், அலுமினியம் என்பது எனன?

Post a Comment