ஆனால் இப்போது எந்த எரிபொருளும் இன்றி சூரிய ஒளியை மட்டும் நம்பி இயங்குகின்ற சோலார் இம்பல்ஸ் என்ற விமானம் சீனாவின் நாஞ்சிங் நகரிலிருந்து கிளம்பியுள்ளது. இது இந்திய நேரப்படி சனிக்கிழமை (மே 30 ஆம் தேதி) புறப்பட்டது. ஐந்து நாட்கள் கழித்து இது ஹவாய் தீவுகளில் போய் இறங்கும். இந்த ஐந்து நாட்களும் இரவு பகலாக பசிபிக் கடல் மீதாகப் பறந்தாக வேண்டும். வழியில் எங்கும் இறங்க இயலாது. சீனாவின் நாஞ்சிங் விமான நிலையத்திலிருந்து ஹவாய் தீவுகளுக்கு உள்ள தூரம் சுமார் 8200 கிலோ மீட்டர்.
சோலார் இம்பல்ஸ் விமானம் சீனாவிலிருந்து கிளம்புகிறது courtesy Feature China/Bancroft media |
சோலார் இம்பல்ஸ் விமானத்தின் மிக நீளமான இறக்கைகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் 17 ஆயிரம் சோலார் செல்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் பாட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி விமானத்தின் புரோப்பல்லர்கள் எனப்படும் சுழலிகள் செயல்படும்.
.
சூரிய விமானத்தில் அந்த விமானத்தை ஓட்டுகின்ற விமானி ஒருவர் மட்டும் தான் இருப்பார். அவர் பெயர் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ( வயது 62). பகல் இரவு என ஐந்து நாட்களும் அவரே விமானத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்.
விமானம் தானாகவே இயங்கும் ஏற்பாடு இருந்தாலும் அதை நீண்ட நேரம் நம்ப முடியாது. நடுநடுவே சிறிது நேரம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள் இயலும்.மற்றபடி அவர் தான் விமானத்தைக் கவனித்து வர வேண்டும். காலைக் கடன் மாலைக் கடன் எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ள வேண்டும்.
போர்ஷ்பெர்க் courtesy Feature China/Bancroft medea |
இப்படித் தூங்குவது போதுமானது என்று சொல்ல முடியாது. நிதானம் தவறாமல் கவனச் சிதைவு ஏற்படாமல் இருக்க அவர் அவ்வப்போது யோகாசனத்தில் ஈடுபடுவார். இதில் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு.
நடுவழியில் விமானம் மக்கர் செய்தால் என்ன ஆவது? விமானத்தைக் கடலில் இறக்குவது உசிதமல்ல. விமானத்தில் தயாராக மிதவை ஒன்று இருக்கிறது. அவர் அத்துடன் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கடலில் குதித்து அந்த மிதவைப் படகில் அமர்ந்தபடி உதவிக்காகக் காத்திருப்பார்.
சோலார் இம்பல்ஸ் சூரிய விமானம் செல்லும் பாதை |
பிரச்சினை எதுவும் இல்லை என்றால் ஐந்து நாட்கள் கழித்து அவரது விமானம் ஹவாய் தீவில் உள்ள விமான நிலையத்தில் போய் இறங்கும்.
எந்த எரிபொருளும் இல்லாமல் சூரிய ஒளியை மட்டுமே இயங்கும் விமான மூலம் உலகைச் சுற்றி வந்து சாதனை படைக்கும் முயற்சியில் சோலார் இம்பல்ஸ் விமானம் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் மார்ச் 9 ஆம் தேதி அபு தாபியிலிருந்து கிளம்பியது. அங்கிருந்து இந்தியா வந்தது. பின்னர் மியான்மார் (பர்மா) வழியே ஏப்ரல் 21 ஆம் தேதி சீனாவின் நாஞ்சிங் நகருக்குப் போய்ச் சேர்ந்தது.
மேக மூட்டம் இல்லாமல் நல்ல வெயில் அடிக்கின்ற வானிலை இருக்க வேண்டும் என்பதற்காக இத்தனை நாள் காத்திருந்தது. நல்ல வெயில் பட்டால் நிறைய மின்சாரம் கிடைக்கும் என்பதால் சோலார் இம்பல்ஸ் விமானம் பகல் நேரங்களில் சுமார் 28 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். மின்சாரத்தை மிச்சப்படுத்த இரவு நேரங்களில் சுமார் 3000 அடி உயரத்தில் பறக்கும்.
ஹவாய் போய்ச் சேர்ந்த பிறகு அமெரிக்கா செல்லும். பிறகு அமெரிக்காவைக் கடந்த பின்னர் மறுபடி இன்னொரு சோதனை. அதாவது அட்லாண்டிக் கடலைக் கடந்தாக வேண்டும். இறுதியில் அது மறுபடி அபு தாபிக்கே வந்து சேரும்.
இப்போது சீனாவிலிருந்து கிளம்பியுள்ள போர்ஷ்பெர்க்கிடமிருந்து மொனாகோவுக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன.
போர்ஷ்பெர்க் வழியில் பிரச்சினை எதுமின்றி ஹவாய்க்கு பத்திரமாக வந்து சேர வேண்டும் என்பதே உலகில் அனைவரின் பிரார்த்தனையாகும்.
----------------------
Update: சோலார் இம்பல்ஸ் விமானம் எதிர்பாராத காரணங்களால் ஜூன் முதல் தேதியன்று ஜப்பானின் நகோயா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. காற்றின் போக்கு சாதகமாக இல்லாததாலும் மோசமான வானிலை காரணமாகவும் அது இவ்விதம் ஜப்பானில் இறங்கியது. சீனாவிலிருந்து கிளம்பிய சுமார் 40 மணி நேரத்துக்குப் பிறகு இவ்விதம் எதிர்பாராத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து எப்போது கிளம்பும் என்பது தெரியவில்லை.
தைரியமான முயற்சி.
ReplyDelete