இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டத்துக்கு EGS-zs-8-1 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றி வருகின்ற ஹப்புள் டெலஸ்கோப் மூலம் இந்த அண்டம் படமாக்கப்பட்டுள்ளது.( கீழே படம் காண்க) மிகத் தொலைவில் உள்ள காரணத்தால் இந்த அளவுக்கு மேல் தெளிவாகத் தெரியாது.
மங்கலான நீல நிற உருண்டையாகத் தெரிந்தாலும் இதில் கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.
ஓர் அண்டம் என்பது நமது சூரியன் மாதிரி கோடானு கோடி நட்சத்திரங்கள் அடங்கியதாகும். (சூரியன் ஒரு நட்சத்திரமே) நமது சூரியனும் பூமி உட்பட கிரகங்களும் ஆகாய கங்கை (Milky Way) எனப்படும் அண்டத்தில் உள்ளன. நமது அண்டத்தில் சுமார் 40 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நமது அண்டமாக இருந்தாலும் சரி, வேறு அண்டமாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்கள் அடை போல அருகருகே இருப்பது கிடையாது. ஒரு நட்சத்திரத்துக்கும் இன்னொரு நட்சத்திரத்துக்கும் நடுவே பெரும் இடைவெளி உண்டு. நமது சூரியனுக்கு 'மிக அருகில்' என்று சொல்லத்தக்க நட்சத்திரம் சுமார் 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் பெயர் பிராக்சிமா செண்டாரி.(Proxima Centauri).
செவ்வாய் கிரகத்துக்கு செல்வதே கேள்விக்குறியாக இருக்கின்ற பின்னணியில் 40 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிராக்சிமா செண்டாரி நட்சத்திரம் உள்ள வட்டாரத்துக்குச் செல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.
இது ஒரு புறம் இருக்க, நமது ஆகாய கங்கை தனியாக இல்லை. ஆகாய கங்கை இருக்கும் வட்டாரத்தில் 54 அண்டங்கள் உள்ளன. இவற்றில் ஆகாய கங்கையும் ஆண்ட்ரோமீடா( Andromeda) எனப்படும் அண்டமும் தான் பெரியவை. மற்றவை சிறியவை.
நீங்கள் நிலவற்ற நாளில் இரவு வானைக் காணும் போது தெரிகின்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் நமது ஆகாய கங்கை அண்டத்தைச் சேர்ந்தவையே. பிற அண்டங்கள் மிகவும் தொலைவில் இருப்பதால் அவற்றில் உள்ள நட்சத்திரங்கள் தனித்தனியாகத் தெரியாது. சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் பிற அண்டங்கள் வெறும் ஒளி மொத்தையாகத் தான் தெரியும்.
அண்டங்களில் எதுவும் நிலையாக இருப்பதில்லை. எல்லாமே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய அண்டமாக உருவாவது உண்டு. சில அண்டங்கள் அருகே உள்ள அண்டங்களை விழுங்குவதும் உண்டு. நமது ஆகாய கங்கையானது அருகே இருந்த ஓர் அண்டத்தைக் கவர்ந்து விழுங்கி விட்டதாகக் கருதப்படுகிறது.
இது NGC 6744 எனப்படும் அண்டத்தின் படம். பல கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து பார்த்தால் நமது ஆகாய கங்கை அண்டம் இது போன்று தெரியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் |
அண்டவெளி சமாச்சாரம் எல்லாமே தலை சுற்ற வைக்கின்ற அளவுக்கு மிகப் பிரும்மாண்டமானவை.
ஒளியாண்டு தொலைவு விளக்கம்: ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. இந்த அடிப்படையில் ஒளி ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும். ஒரு நாளில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் என்று கணக்கிடலாம். ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும். இந்த எண்ணை 1300 ஆல் பெருக்கினால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அண்டம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை அறியலாம்.
16 comments:
இந்த அண்டங்கள் பற்றி படிப்பதே பிரமாண்டமாக இருக்கிறது.இதில் அவைகளின் தூரம் ஒளியாண்டு தலையை சுற்ற வைக்கிறது.ஆமாம் இதில் நமது கடவுளர்கள் எந்த அண்டத்தில் எந்த இடத்தில் இருந்து பிரபஞ்சத்தை கட்டி மேய்க்கிறார்கள்?
I read it in wiki that this galaxy is 13.04 billion light years from Earth.
Andromeda is not 23 lakh light year distance...Believe it is a typing error...sorry if I am wrong...
srinivasansubramanian
உலகில் இந்து புராணங்கள், சீன புராணங்கள், கிரேக்க புராணங்கள் என பல புராணங்கள் உள்ளன. அறிவியல் நிபுணர்கள் புராணங்களையும் அறிவியலையும் போட்டு குழப்பிக் கொள்வதில்லை. இது வேறு அது வேறு.
Velmurugan K
அண்ட்ரோமீடா அண்டம் சுமார் 25 லட்சம் ஒளியாண்டு தொலைவில் உள்ளதாகவும் ஒரு மதிப்பீடு உண்டு.
Rajasekar
The distance to the Andromeda Galaxy is 2.54 million light-years, or 778 kiloparsecs.according to Universetoday. The Earthsky says it is 2.3 million light-years.
Dear sir, can you tell me actually what is the use of finding these far away galaxies. I agree it is fascinating but in what way will this be useful? Thank you.
Anonymous
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது சரி தான். மனிதன் செவ்வாய்க்குச் செல்ல முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது வியாழன், சனி, புளூட்டோ பற்றித் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது என்றும் கேட்கலாம்.
நாம் இந்த பிரபஞ்சத்தில் தான் இருக்கிறோம். பிரபஞ்சம் என ஒன்று இருப்பதால் அதைப் பற்றி அறிந்து கொண்டாக வேண்டும் என்ப்து தான் விஞ்ஞானிகளின் பதில். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது, ரேடியோ கண்டுபிடிக்கப்பட்ட போது டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்ட போது அதனால் பெரிய பலன் இருக்குமென யாரும் கருதவில்லை.
அறிவியல் ஆராய்ச்சி என்பது பலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்படுவது அல்ல.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்துக்கு முன் நமது எல்லாப் பிரச்சினைகளும் தீர்வுகளும் வெற்றிகளும் தோல்விகளும் பிரிவினைகளும் அரசியல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள் எல்லாமுமே மகா அற்பமாகத் தோன்றுகின்றன.
அண்டங்கள் ஒன்றோடொன்று இணைவது பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அப்போது ஏற்படும் அழிவு, அதில் வெளிப்படும் அல்லது செலவாகும் சக்தி எப்படியிருக்கும்? அணுச்சேர்க்கை/பிரிவு போன்றவற்றின் சக்தி வெளிப்பாட்டுடன் ஒப்பிடுகிற மாதிரி இருக்குமா?
poornam
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. பிரும்மாண்டமான பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் பூமியில் உள்ள மக்கள் எறும்புக் கூட்டத்தை விட -- நுண்ணிய கிருமிகளை விடவும் சிறியவர்கள். உலக நாடுகளை ஆள்கின்ற தலைவரகள் விண்வெளிக்குச் சென்று வருவார்களேயானால் எல்லா சச்சரவுகளும் மிக அற்பம் என்று உணர்வர்.
அண்டங்கள் மோதும் போது ஏற்படும் போது உண்டாகும் சக்தி அளவிடமுடியாதது
13000 கோடி ஆண்டுகள் தூரம் என்று இருக்கவேண்டும்.
Kv.ravichandran
""13,000 ஆண்டுகள் தூரம் என்பது சரியல்ல. தவிர வெறுமனே இவ்வளவு ஆண்டுகள் தூரம் என்று கூறுவதில் அர்த்தமில்ல. ஆண்டுகள் என்பது தூரத்தைக் குறிப்பதல்ல. ஆனால் ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும்
அண்டவெளியை படிப்பதால் என்ன பலன் என்ற கேள்விக்கு, நீங்கள் வேறொரு கேள்விக்கு சொன்ன பதிலைப் போல //பிரும்மாண்டமான பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் பூமியில் உள்ள மக்கள் எறும்புக் கூட்டத்தை விட -- நுண்ணிய கிருமிகளை விடவும் சிறியவர்கள். உலக நாடுகளை ஆள்கின்ற தலைவரகள் விண்வெளிக்குச் சென்று வருவார்களேயானால் எல்லா சச்சரவுகளும் மிக அற்பம் என்று உணர்வர்.// இதைப் படித்த பொழுது எனக்கேற்பட்ட எண்ணமும் அதுவே அதுவும் அதன் ஒரு பலன் என்று நினைக்கிறேன். நாளைய மனிதகுலத்திற்கு அதன் survival சம்பந்தபட்ட பிரச்சினையாக இத்துறை மாறலாம். தங்களுக்கு நன்றி
ஆகாயகங்கை என்பதைவிட பால்வழி என்றே சொல்லலாமே. ஆகாயகங்கை என்றவார்த்தை இந்து மதத்துடன் தொடர்புடையது.
Murugan
ஆகாய கங்கை என்பது இந்து மதத்துடன் தொடர்புடையாகக் கூறுவது புதிய கற்பனையாக இருக்கிறது. தமிழகத்தில் ஓடும் காவிரி என்ற பெயரும் இந்து மதத்துடன் தொடர்பு கொண்டதா? Milkyway என்பது வெள்ளைக்காரன் உருவாக்கிய சொல். அதை மொழிபெயர்த்துப் பயன்படுத்துவது சரியா? அப்படிப்பார்த்தால் தூத்துக்குடி என்று சொலலக்கூடாது. டுடுகொரின் என்று தான் சொல்ல வேண்டும்
மிக்க நன்றி ஐயா...
தாங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...
Post a Comment