Mar 17, 2015

சூரிய கிரகணத்தால் ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சினை

Share Subscribe
வருகிற மார்ச் 20 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. (இந்தியாவில் இது தெரியாது). ஐரோப்பாவில் நார்வே நாட்டின் வட பகுதியில் இது பூரண கிரகணமாகத் தெரியும். பிரிட்டனிலும்  ஜெர்மனி உட்பட மற்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் சூரியன் முக்கால் வாசி அளவுக்கு மறைக்கப்படும். சூரிய கிரகணம் என்றால் மக்கள் ஆர்வமுடன் காண்பர்.
நார்வேயின் வடக்குப் பகுதியில் பூரண சூரிய கிரகணம் இவ்விதமாகத் தெரியும்.
ஆனால் ஜெர்மனியில் இந்த சூரிய கிரகணமானது மின்சாரத் துறையினருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்குவதாக உள்ளது.

ஜெர்மனியில் சூரிய மின் பலகைகள் (Solar cells)  மூலம் 38 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள சூரிய ஒளியைப் பயன்படுத்துவதில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.

மின் உற்பத்திக்கு சூரியனைப் பயன்படுத்திக் கொள்வதில் இயல்பான பிரச்சினைகள் உண்டு. காலையில் சூரிய ஒளி அவ்வளவாக இராது. நடுப்பகலில் நல்ல வெயில் இருக்கும். அதன் பிறகு சூரிய ஒளி கிடைப்பது படிப்படியாகக் குறையும். சூரிய ஒளி மூலமான மின் உற்பத்தியும்  அந்த அளவில் மாறுபடும்.

இதல்லாமல் மேக மூட்டம் இருந்தால் அந்த அளவுக்கு சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். ஜெர்மன் எஞ்சினியர்களுக்கு இதெல்லாம்  வழக்கமான பிரச்சினைகள்.
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும்  சூரிய மின்பலகைகள்
ஆனால் சூரிய கிரகணத்தின் போது சூரியனிலிருந்து கிடைக்கும் ஒளியின் அளவு வேகமாக ஒரேயடியாகக் குறையும். பின்னர் கிரகணம் விடும் போது ஒரேயடியாக அதிகரிக்கும். இது கூடப் பிரச்சினையில்லை.

மின்சப்ளையில் உள்ள அடிப்படைப் பிரச்சினை வோல்டேஜ் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே.வோல்டேஜ் சற்றே ஏறி இறங்கினால் பிரச்சினை இல்லை. வோல்டேஜ் ஒரேயடியாக ஏறி இறங்கினால் பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே சூரிய கிரகணத்தின் போது  பிரச்சினையில்லாமல் சீரான மின்சப்ளை  இருக்கும்படி எப்படிப் பார்த்துக் கொள்வது என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். ஜெர்மனியில் சுமார் காலை எட்டரை மணி அளவில் சூரிய கிரகணம் தொடங்கும். சுமார் 11 மணி அளவில் கிரகணம் நீங்கும்.

எனவே சுமார் இரண்டரை மணி நேரம் மின் உற்பத்தியில் இறக்கமும் ஏற்றமும் இருக்கும். இது ஒரே சமயத்தில் 19 மின்சார நிலையங்களை  மின்உற்பத்தியில் ஈடுபடச் செய்து  பின்னர் 12 மின்சார நிலையங்களில் உற்பத்தியை நிறுத்துவதற்கு ஒப்பானது என்று நிபுணர்கள் வருணித்துள்ளனர்.

ஜெர்மனியில் மட்டுமன்றி ஐரோப்பாவில் வேறு சில நாடுகளும் சூரிய மின்சாரத்தை ஓரளவுக்கு நம்பி நிற்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 87 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி சூரியனை நம்பி உள்ளது,

ஐரோப்பாவில் பல்வேறு  நாடுகளின்  மின் வினியோக அமைப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு உள்ளது. சூரிய கிரகணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினையைச் சமாளிக்க பல மாத காலமாக திட்டம் வகுத்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அப்படியும் கூட சில பகுதிகளில் மின் துண்டிப்பு  நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் பூரண சூரிய கிரகணம் அல்லது முக்கால் வாசி சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இப்படியான் பிரச்சினைகள் ஏற்பட்டது கிடையாது. சமீப ஆண்டுகளாக சூரியன் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதால் தான் இப்போது பிரச்சினை.

ஜெர்மனி சூரிய ஒளி மூலமான மின்சார உற்பத்தியை 2030 ஆம் ஆண்டு வாக்கில் 66 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அப்போது தினமுமே காலையிலிருந்து மாலைக்குள்ளாக மின் உற்பத்தி அளவு பெரும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகும்.   சூரிய கிரகணம் மூலம்  ஜெர்மனி இப்போது பெறும்  அனுபவமானது எதிர்காலப் பிரச்சினையை சமாளிக்க உதவியாக இருக்கும்.

Update:- சூரிய கிரகணத்தின் போது மின் உற்பத்தியில் ஏற்பட்ட இறக்கங்களையும் ஏற்றங்களையும் ஜெர்மனி பிரச்சினை இன்றி சமாளித்ததாகப் பின்னர் வந்த செய்திகள் தெரிவித்தன.

சூரிய கிரகணம் : பூமியை சந்திரன் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப் பாதையானது சம தளமாக இல்லை. எனினும் அபூர்வமாக சந்திரனின் சுற்றுப்பாதை சம தளத்தில் அமையும் போது அது பூமிக்கும் சூரியனுக்கும் (அமாவாசையன்று) இடையே நேர் குறுக்கே வந்து நிற்கிறது. இதனால்   சூரிய ஒளி வட்டத்தை சந்திரன் மறைக்கிறது. இதன் விளைவாகவே சூரிய கிரகணம் நிகழ்கிறது.

6 comments:

Unknown said...

வணக்கம்.
மார்ச் 20ம் தேதி 2015 அன்று சூரிய கிரகணம் வந்தது, அன்று ஜெர்மனியில் மின்சாரப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறினீர்கள், அவ்வாறன பிரச்சனை ஏற்பட்டதா? அவற்றை எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை தெரிவிக்கவும். தங்களின் மேலான அறிவியல் தகவல்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம்.
ராஜா.


என்.ராமதுரை / N.Ramadurai said...

Jean Pierre
ஜெர்மன் எஞ்சினியர்கள் வெற்றிகரமாக அப்பிரச்சினையை சமாளித்தனர்.சூரிய கிரகணம் தொடங்கியதும் புனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள், நீரேற்று மின் நிலையங்களை முடுக்கி விட்டு மின் சப்ளையை அதிகரித்தனர்.இவற்றை விரைவில் செயலுக்கு கொண்டுவர இயலும். அதே போல சூரிய கிரகணம் முடிந்ததும் இவை செயல்படுவது நிறுத்தப்பட்டன. விரிவாக முன்கூட்டித் திட்டமிட்டிருந்ததால் இது சாத்தியமாகியது.

Unknown said...

வணக்கம்,
நாம் நமது கண்ணால் பார்ப்பது வானம் அல்ல. ஆனால், பாட புத்தகத்திலும் வேத புத்தகத்திலும் வானம் என்று எழுத்தப் பட்டு அதை நாம் வாசிப்பது சரியா? தவறா?
தங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
ராஜா.




என்.ராமதுரை / N.Ramadurai said...

ராஜா.
வானத்தைக் கூரை மாதிரி கருதுவது உண்டு. ஓயாது மழை பெய்தால் வானமே பொத்துக் கொண்டு விட்டதாகக் கூறுவார்கள்.பூமியைச் சுற்றி உள்ள் இடம் வெறும் விண்வெளி. நமது சௌகரியத்துக்காகவும் எளிதில் புரியும்படி இருப்பதற்காகவும் வானம் என்று வைத்துக் கொண்டுள்ளோம். மனிதன் ஒரு விண்கலத்தில் ஏறிக்கொண்டு 40 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு சுற்றிலும் இருளாக இருக்கும். விண்வெளி என்பது இருள் நிறைந்ததே. நடைமுறை சௌகரியத்துக்காக வானம் என்று வைத்துக்கொண்டுள்ளதில் தவறு எதுவுமில்லை

Unknown said...

ஐயா

காலை வணக்கம்

இந்த கிரகணங்களால் மனிதர்களுக்கு எந்தவகையிலாவது பதிப்பு உண்டா தெளிவு படுத்தவும்.வீடுகளை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் கிரகண நேரத்தில் சாப்பிட கூடாது என்றும் சொல்கிறார்கள் இது எல்லாம் உண்மையா அல்லது பொய்யா?

உங்கள் பதிலை எதிர்நோக்கி

என்.ராமதுரை / N.Ramadurai said...

Siva Ram
கிரகண நேரத்தில் வெளியே செல்வது கூடாது என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சூரிய கிரகணத்தின் போதும் சரி வெளியே நடமாடினால் எந்த பாதிப்பும் இராது. இதெல்லாம் மூட நம்பிக்கையே. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது சென்னையின் தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. மவுண்ட் ரோடில் மாடுகள் உட்கார்ந்து கொண்டிருந்தன. பத்திரிகைகள் கிளப்பி விட்ட பீதியே அதற்குக் காரணம்.
கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்பது வேறு விஷயம். நான் இளைஞனாக இருந்த போது சூரிய கிரகணத்தின் போது வேண்டுமென்றே உணவு சாப்பிட்டேன்.இன்னொரு தடவையும் சூரிய கிரகணத்தின் போது இப்படி சாப்பிட்டேன். ஆனால் உணவு சரியாக் செரிமானம் ஆகவில்லை என்பது போலத் தோன்றியது. சூரிய கிரகணத்தின் போது வெப்ப நிலை ஒரேயடியாகக் குறைகிறது. அப்படி ஏற்படும் போது செரிமானத்திறன் குறையலாமோ என்று தோன்றியது. ஒரு வேளை மனப்பிரமையாகவும் இருக்கலாம். இந்த செரிமான சமாச்சாரம் பற்றி விரிவாக ஆராய்ச்சி நடந்தால் தான் இது பற்றித் தெரிய வரும்.

Post a Comment