சென்னைக்கு
அருகே உள்ள கல்பாக்கத்தில் அணுசக்தித் துறையிலே விரைவில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட இருக்கிறது. உலகிலேயே புதிய மாதிரி அணு மின்சார நிலையம் இங்கு இயங்கப் போகிறது. இது 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
கல்பாக்கத்தில் இப்போது நிறுவப்பட்டுள்ளது அணுமின்சார நிலையமே என்றாலும் இதில் இடம் பெற்றுள்ள அணு உலையை வைத்து இது ஈனுலை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பாஸ்ட் பிரீடர் ரியாக்டர் (Fast Breeder Reactor) என்று சொல்வார்கள். இது முன்மாதிரித் திட்டம் என்பதால் PFBR (Prototype Fast Breeder Reactor) என்ற பெயரும் உண்டு.
இந்தியாவில்
நாமே சொந்தமாக வடிவமைத்து நிறுவிய பல அணுமின்சார நிலையங்கள் இப்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இடம் பெற்றுள்ள அணு உலைகள் ஒரே மாதிரியானவை. ஈனுலை என்பது இவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.
அடிப்படையில்
பார்த்தால் அணு உலை என்பது அடுப்பு மாதிரி. சுள்ளிகளை வைத்து எரிக்கும் அடுப்பு, விறகு அடுப்பு, கெரசின் அடுப்பு அதாவது கெரசின் ஸ்டவ், காஸ் அடுப்பு என பல வகை அடுப்புகளும் வெப்பத்தை அளிப்பவை. அணு உலையும் அப்படித்தான். ஆனால் அணு உலையில் யுரேனியம் என்ற பொருள் வெப்பத்தை அளிக்கிறது.
சரியாகச்
சொல்வதானால் சந்தன வில்லை போன்றுள்ள யுரேனிய வில்லைகளை
நீண்ட குழல்களில் அடைத்து அந்த குழல்களை அடுக்கடுக்காகக் கட்டி பக்கம் பக்கமாக வைத்தால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டாம். யுரேனிய வில்லை அடங்கிய குழல்களிலிருந்து தானாக வெப்பம் வெளியாகும். உண்மையில் இது அதிசய அடுப்பு தான்.
யுரேனியம்
இயல்பாக கதிர்வீச்சுத் தன்மை கொண்டது. குறிப்பிட்ட வகை யுரேனிய அணுவை நியூட்ரான் என்னும் துகள் தாக்கினால் அந்த அணு பிளவு பட்டு மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவை மேலும் பல அணுக்களை பிளவுபடச் செய்யும். இப்படி தொடர்ச்சியாக கோடானு கோடி யுரேனிய அணுக்கள் பிளவுபடும் போது தான் வெப்பம் வெளிப்படுகிறது.
அணுமின்சார
நிலையங்களில் இந்த வெப்பதைக் கொண்டு தண்ணீரை சூடேற்றி நீராவியை உண்டாக்கி அந்த
நீராவி மூலம் டர்பைன்கள் எனப்படும் யந்திரங்களை இயக்குகிறார்கள்.. டர்பைன்கள் மின்சார ஜெனரேட்டர்களை சுழல வைக்கும் போது மின்சாரம் உற்பத்தியாகிறது.
உலகெங்கிலும்
இப்போது சுமார் 435 அணுமின்சார நிலையங்கள் உள்ளன. புதிதாக 71 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் உள்ள அணு உலைகளில் சாதாரண யுரேனியம் அல்லது ஓரளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா
சொந்த முயற்சியில் நிறுவியுள்ள 16 அணுமின் நிலையங்களிலும் சாதாரண யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அணு உலைகளில் அவ்வப்போது யுரேனியக்
குழல்களை வெளியே எடுத்து அவற்றிலிருந்து புளூட்டோனியம் என்ற பொருளை பிரித்தெடுக்கிறார்கள்.
இப்போது
வேக ஈனுலைக்கு வருவோம். இந்த அணு உலையில் புளூட்டோனியத்தையும் சாதாரண யுரேனியத்தையும் சேர்த்து எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். புளூட்டோனியத்தைப் பயன்படுத்துவதால் ஓரளவுக்கு சாதாரண யுரேனியத்தை மிச்சப்படுத்த முடிகிறது. ஈனுலையில் இது சாதக அம்சமாகும். வேறு சாதகங்களும் உள்ளன.
விறகு
அடுப்பு ஆகட்டும் காஸ் அடுப்பு ஆகட்டும் எரிபொருள் தீர்ந்தால் அந்த எரிபொருள் அதோடு அவ்வளவு தான். ஆனால் ஈனுலையானது
வெப்பத்தை அளிக்கும் அதே நேரத்தில் நமக்குப் புதிதாக எரிபொருளையும் அளிக்கக்கூடியது. விறகு அடுப்பைச் சுற்றி வைக்கப்படுகிற இலைகள் விறகாக மாறினால் எப்படி? அந்த மாதிரியில் ஈனுலை செயல்படும்.
ஈனுலையைச் சுற்றி வெளிப்புறத்தில் சாதாரண யுரேனியத்தை வைத்தால் அது நாளடைவில் புளூட்டோனியமாக மாறி விடும். அதை நாம் அடுத்த ஈனுலைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்திய நிபுணர்களின் திட்டம் அத்தோடு நிற்கவில்லை.
உள்ளபடி
இந்தியாவில் யுரேனியம் அதிக அளவில் கிடைப்பதில்லை. ஆகவே தான் யுரேனியத்தைப் பெற ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வெளி நாடுகளின் கையை எதிர்பார்த்திருப்பது நல்லதல்ல.
இந்தியாவில்
யுரேனியம் அதிகம் கிடைக்கா விட்டாலும் தோரியம் ,மிக ஏராளமான அளவில் கிடைக்கிறது. ஈனுலையின் வெளிப்புறத்தில் தோரியத்தை அடுக்கி வைத்தால் அது அணு உலையில் பயன்படுத்தத் தக்க யுரேனியம்-233 என்னும் எரிபொருளாக மாறி விடும். அதை புதிதாக அமைக்கும் அணுமின்சார நிலையத்தில் பயன்படுத்தலாம்.
இது ஏதோ கனவுத் திட்டம் அல்ல. கல்பாக்கத்தில் ஏற்கெனவே காமினி என்ற பெயரில் சிறிய அணு உலை இவ்வித யுரேனியத்தைப் பயன்படுத்தி 1996 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் மேலும்
மேலும் ஈனுலைகள் அமைக்கப்படும் போது இவ்விதம் தோரியத்தை அணுசக்தி எரிபொருளாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்படும். ஈனுலை என்னும் அடுப்பு எரியும் போதே அடுத்த ஈனுலைக்கான எரிபொருளையும் ஈனுகிறது என்பதால் தான் இந்த வகை அணு உலைக்கு ஈனுலை என்று பெயர் வைத்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்ட ஈனுலை FBTR படம்: Igcar |
கல்பாக்கத்தில் இப்போது
தான் முதல் முறையாக ஈனுலை அமைக்கப்படுவதாகச் சொல்ல முடியாது. 1985 ஆம் ஆண்டில் கல்பாக்கத்தில் சோதனை அடிப்படையில் சிறிய அளவில் இப்படியான ஈனுலை FBTR (Fast Breeder
Test Reactor) ஒன்று அமைக்கப்பட்டு அது இன்னமும் செயல்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையிலானது என்பதால் அதில் 14 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது.
எதிர்காலத்தில் ஈனுலைகளைக் கொண்ட அணுமின்சார நிலையங்கள் பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் சென்னை வானொலி நிலையத்தில் ஈனுலை பற்றி நான் ஆற்றிய உரையானது இங்கே கட்டுரையாக அளிக்கப்பட்டுள்ளது)
சூரிய சக்தியில் விலை வெகு வேகமாக வீ.ழ்ச்சியடைந்து வருகிறது. ஆகவேதான் பல மேலை நாடுகள் + ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாக அணுவுலைகளைக் கைவிடுவிது என்ற முடிவுக்கு வந்துவிட்டன. நாம் நேர் எதிர் திசையில் பயணிப்பது சரியே அல்ல. மேலும் அந்த நாடுகளின் காலாவதியான ரியாக்டர்களையும், யுரேனியத்தையும் தருமாறு கெஞ்சிக்கொண்டும் இருக்கிறோம். (சமீபத்திய ஒபாமா ஒருகையை ஒட்டி அமெரிக்காவிடம் விபத்து காப்பீடு தொடர்பான ஷரத்துகளை அவர்களுக்கு சாதகமாக மாற்றுவது குறித்துப் பேச்சு வார்த்தை நடந்தது, நல்ல வேளையாக முடிவு எட்டப்படவில்லை.) அமெரிக்காவைப் பொருத்தவரை 1973-க்குப் பிறகு அவர்களே உலை கட்டவில்லை. இப்போது ஷேல் வாயு, சூரிய சக்தி, ஃப்யூவல் செல்ஸ் என்றுதான் மும்முரமாக இருக்கிறார்கள். அப்படி இருக்க அவர்களது உலையை விற்காவிட்டால் போகட்டுமே. யாருக்கு வேண்டும் அவை?
ReplyDeleteமேலும் அப்படியே அணுவுலைகளைக் கட்டுவது என்றால் நம்மிடம் உண்மையில் டெக்னாலஜி இருக்கிறது என்றால் எதற்கு பிரான்ஸ், ரஷ்யா, இப்போது அமெரிக்கா என்று ஓடி ஓடி அவற்றை வாங்க வேண்டும்? அவர்களும் எங்கும் போணியாகாத உலைகளை ஒப்புக்குக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொள்வது போல நடித்துவிட்டு நம்மிடம் தள்ளுகிறார்கள்.
சரவணன்
சரவணன்
ReplyDeleteஜப்பானில் மறுபடியும் அணு மின்சார நிலையங்களை இயக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அது தான் உண்மை நிலை.
சூரிய சக்தி மின்சாரத்துக்கு நிறைய முதலீடு தேவை. தவிர, இது அவரவர் சொந்த முயற்சியில் நிறுவப்பட வேண்டிய ஒன்றாகும். தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு அமைப்புகள் பொது வினியோகத்துக்காக சூரிய மின் நிலையங்களை அமைப்பது கிடையாது. தனியார் நிறுவனங்கள் சொந்த உபயோகத்துக்காக சூரிய மின் நிலையங்களை அமைப்பது உண்டு.
நமது தமிழ் நாடு மின்சார வாரியம் சூரிய மின்சார நிலையத்தை அமைப்பதாக வைத்துக் கொண்டால் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை இப்போது உள்ளதை விடப் பல மடங்கு இருக்கும். அடிப்படையில் சூரிய மின்சாரத்தின் விலை அதிகம்.
அணு மின்சார நிலையங்களை அமைக்க வெளி நாடுகளை ஏன் கெஞ்ச வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். நியாயமான கேள்வி. சொல்லப் போனால் அவர்களது அணு மின் நிலையங்களே நமக்குத் தேவையில்லை.
சில சந்தர்ப்ப சூழ் நிலைகளால் வெளி நாடுகளின் அணுமின் நிலையங்களை வாங்க நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியா சொந்தமாக வடிவமைத்த அணுமின் நிலையங்கள் பொதுவில் பாதுகாப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் நாமாக அமைத்த 16 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றின் திறன் குறைவு. இப்போது தான் நாம் 700 மெகா வாட் அணு மின் நிலையத்தை அமைக்கும் திறனைப் பெற்றிருக்கிறோம்.
நமது மின்சாரத் தேவையை அணு மின் நிலையங்கள் மூலம் ஓரளவு தீர்ப்பதானால் அதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.
வெளி நாட்டு அணு மின் நிலைய யூனிட் ஒவ்வொன்றும் 1000 முதல் 1600 மெகா வாட் திறன் கொண்டவை.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் என பல நாடுகளின் தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கு அணு மின் நிலையங்களை அமைக்குமானால் சுமார் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க முடியும். வெளி நாடுகளை அனுமதிப்பதில் உள்ள ஒரே சாதகம் அது ஒன்றுதான்.
கல்பாக்கம் ஈனுலைத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டால் அதே மாதிரியில் பல ஈனுலை மின்சார நிலையங்களை அமைக்க முடியும்.சொல்லப் போனால் வெளி நாடுகளின் தயவு நமக்குத் தேவையே இல்லை.இதை அணுசக்திக் கமிஷனின் முன்னாள் தலைவர் ஒருவரே கூறியிருக்கிறார்.
கடைசியாக ஒன்று. புகுஷிமாவில் ஏற்பட்ட விபத்து முட்டாள்தனமான விபத்து. கடலில் சுவர் கட்டினால் சுனாமி அலைகளத் தடுத்து நிறுத்த முடியும் என்று கருதினர். விஞ்ஞானிகள் பலரும் இது சாத்தியமில்லை என்று கூறியும் கடல் சுவர்களை நம்பி நின்றனர்.
தவிர, அமெரிக்காவில் அணுமின்சார நிலையங்கள மேற்பார்வையிட சக்தி மிக்க வலுவான அமைப்பு உள்ளது. அது போன்ற ஒன்று ஜப்பானில் இல்லை என்பதும் விபத்துக்கான காரணமாகும்.
தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. சூரிய சக்தி தற்போது விலை அதிகம் என்பது உண்மையே. ஆனால் அதன் விலை மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதும், பல நாடுகளில் ஏற்கனவே 'கிரிட் பாரிட்டி' என்ற நிலையை எட்டி விட்டதும் உண்மை. இன்னும் 20 ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து இவை வெள்ளை யானைகளாக, ஏன்டா கட்டினோம் என்று நினைக்க வைக்க அதிக சாத்தியம் இருக்கிறது.
ReplyDeleteஎப்படியும், நாம் வெளிநாடுகளில் அணுவுலைகளை வாங்க வேண்டிய அத்தியாவசியம் இல்லை, அதற்கு டெக்னாலஜி தாண்டிய (அரசியல், வியாபார, வெளிவுறவு?) காரணங்கள் இருக்கின்றன (அத்துடன் விரைவில் நிறைய அமைக்க முடியும் என்பதும்) என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
அணுவுலைகள் தேவையா என்கிற விவாதம் ஒரு பதிவில் முடியப்போவதில்லை. மீண்டும் வருங்காலங்களில் இதே கேள்விக்கு உங்கள் பதில் கூட மாறுபடலாம்! பார்க்கலாம்.
சரவணன்
சரவணன்
ReplyDeleteஅமெரிக்காவில் சில இடங்களில் கிரிட் பாரிடி எட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்தியாவில் இப்போதைக்கு கிரிட் பாரிடி ஏற்படாது.
இந்தியாவில் அரசியல் காரணங்களால் மின் கட்டணங்கள் குறைவான நிலையில் வைக்கப்ப்ட்டுள்ளன.(வறுமையும் ஒரு காரணம்).இந்தியாவின் மின்சார நிலையங்கள் சரிவர நிர்வகிக்கப்படுவதில்லை. மின் விரயம், திருட்டு ஆகியனவும் உண்டு.
வெளினாட்டு அணு உலைகளை வாங்க ஒப்புக்கொள்வதற்கு ஒரு கால கட்டத்தில் கட்டாயம்( இந்தியா -அமெரிக்கா அணுசகதி ஒப்பந்தம் கையெழுத்தான போது) இருந்தது. இப்போது உள்ளதாகச் சொல்ல முடியாது.
வெளி நாட்டு அணு உலைகளை வாங்குவதை நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைத்தால் தவறு.
ஒன்று. நமது நாட்டில் மின் உற்பத்தியைப் பெருக்க ஏதாவது செய்தாக வேண்டும். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் நாம் இருக்கின்றோம்.
நடுத்தர வர்க்கத்தினரும் மிக வசதி படைத்தவர்களும், பெரிய ஆலைகளும் தாங்களாக சூரிய மின் சக்திக்கு மாறும்படி செய்தால் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
கடைசியாக ஒரு வார்த்தை. அணு உலைகள் தவிர்க்க முடியாத தேவை. அந்த அளவில் தான அவற்றைப் பார்க்க வேண்டும்.
ஜெர்மனி சிறிய நாடு. அதன் மின் தேவையில் பெரும் பகுதியை அண்டை நாடுகளிடமிருந்து பெறுகிறது. அவர்களால் அணு உலைகளை மூட முடியும். வட ஆப்பிரிக்காவிலிருந்து பெரிய அளவில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை இறக்குமதி செய்ய நீண்ட காலத் திட்டத்தையும் அது பெற்றுள்ளது.
நமக்கும் அண்டை நாடுகளிடமிருந்து நிறைய மின்சாரம் வாங்குகின்ற வசதி இருந்தால் எல்ல அணு உலைகளையும் மூடி விடலாம்.
/// வெளி நாட்டு அணு உலைகளை வாங்குவதை நான் ஆதரிப்பதாக நீங்கள் நினைத்தால் தவறு. ///
ReplyDeleteஅப்படி நான் நினைக்கவே இல்லை. உங்கள் ஆதங்கம் (நம் அரசியல்வாதிகள் இன்னும் கொஞ்சம் பொறுமை காட்டலாமே, நம் விஞ்ஞானிகளிடம் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாமே என்ற) எனக்கு நன்றாகப் புரிந்தது.
நன்றி சார்.
சரவணன்
சரவணன்
ReplyDeleteலாட்டரி டிக்கெட்டில் பெரிய பரிசு விழுவது போல இந்தியாவின் மேற்கு கிழக்கு கடலோரப் பகுதிகளில் மிக ஏராளமான அளவுக்கு எரிவாயு ஊற்றுகள் கண்டுபிடிக்கப்படுமேயானால் நம்முடைய பிரச்சினையில் பெரும் பகுதி தீர்ந்து விடும்.
ரஷியாவிடமிருந்து எரிவாயு வாங்கலாம் என்றால் இமயமலை குறுக்கே நிற்கிறது. அண்மையில் ரஷியாவிடமிருந்து நிறைய எரிவாயு வாங்குவதற்கு சீனா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்தியாவில் அத்துடன் சுற்றியுள்ள கடல் பகுதியில் கிடைக்கும் எரிவாயு மிகவும் குறைவு.
வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் குரூட் எண்ணெயை நம்பித்தான் நமதுபொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது சொந்த வளங்களை எவ்விதம் பயன்படுத்த முடியும் என்பது குறித்துப் போதிய கவனம் செலுத்தப்படவில்லை
வணக்கம் ஐயா
ReplyDeleteஅணு உலைகளைப் பற்றி தாங்கள் எடுத்துரைக்கும் செய்திகள் மிகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது அதிலும் வாசகர்களின் கருத்துக்களோடு கூடிய விவாதம் மேலும் பயனுள்ளதாக இருக்கின்றது, ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பற்றி தாங்கள் கூறிய பதிவின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்கிறோம் உண்மையாகவே அப்பதிவை படிக்கும் முன்பு அணு உலைகளைப் பற்றி நிறைய ஐயம் இருந்தது அப்பதிவை படித்த பிறகு எல்லாம் தீர்ந்தது, சூரிய ஒளி ,காற்றாலை , நீர் மின்சாரம் இவையனைத்தும் சேர்ந்தாலும் நம்முடைய எதிர்கால மின்தேவைக்கு போதாது ஏனென்றால் நம்முடைய மின்சாரத் தேவை அதைவிட அதிகம் அணுமின்சாரம் தான் இதற்கெல்லாம் பெரிய தீர்வாக இருக்கும்
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteமிக்க நன்றி
இந்தியாவைச் சுற்றி உள்ள கடல் பகுதிகளில் நமது செயல்பாட்டுக்குள்ள பகுதியிலும் அந்தமான் அருகே உள்ள கடல்களிலும் மிக ஆழத்தில் உறைந்த நிலையில் Methane hydrates எனப்படும் எரிவாயுக் கட்டிகள் மிக ஏராளமான அளவுக்கு உள்ளன.அவை பற்றி இந்திய அரசு விரிவாக ஆய்வு நடத்தியுள்ளது. இவற்றைப் பக்குவமாக வெளியே எடுப்பதற்கு இன்னும் தகுந்த தொழில் நுட்பம் உருவாக்கப்படவில்லை. இவற்றை எடுக்க முடிந்தால் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள் வேண்டாம். அணு மின்சார நிலையங்கள் வேண்டாம். வெளி நாட்டிலிருந்து குரூட் எண்ணெய் இறக்குமதியைக்கூட குறைத்துக் கொள்ள முடியும்.
இந்த உறைந்த வாயுக்கட்டிகள் உலகில் பல இடங்களிலும் கடலில் மிக ஆழத்தில் உள்ளன.
இதை தக்கபடி வெளியே எடுக்க ஜப்பானியர் புது உத்தியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமதுரை சார், இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? செயற்கையாக ஃபோட்டோசின்தெசிஸ் செய்வதில் பெரிய முன்னேற்றம்.
ReplyDeletehttp://energy.anu.edu.au/news-events/research-breakthrough-artificial-photosynthesis
இது மட்டும் முழுமை பெற்றால் வெறும் சூரிய ஒளி, கடல் நீர் இவற்றிலிருந்து காலாகாலத்துக்கும் வேண்டிய ஆற்றல் கிடைத்துக்கொண்டே இருக்கும் எப்பது சரியா? முடிந்தால் தனிப் பதிவாகவே எழுதுங்களேன்.
சரவணன்
சரவணன்
ReplyDeleteஇம்மாதிரியான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில பிரச்சினைகள் உண்டு 1. ஆராய்ச்சிக்கூட அளவில் நன்கு செயல்படும். பெரிய அளவில் செயல்படுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கும். 2. செலவு கட்டுபடியாகுமா என்பது இன்னொரு பிரச்சினை.3.ஆராய்ச்சியில் சம்பந்தப்படுகின்ற பொருட்கள் விலை அதிகமில்லாதவையாக இருக்க வேண்டும்.4.வேறு பலரும் செய்து பார்க்கும் போது அதே பலன்கள் கிடைக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க அணுச்சேர்க்கை (Fusion) மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து பிரான்சில் கடராஷே என்னுமிடத்தில் பெரிய ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.சூரியனில் நிகழ்வது போன்று ஹைட்ரஜன்களை இணையச் செய்வது நோக்கம். இந்த ஆராய்ச்சிக்கூடம் செயல்படவே இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகும் போல இருக்கிறது. இதில் கதிரியக்க ஆபத்து கிடையாது.
பதிலுக்கு நன்றி ராமதுரை அவர்களே. நானே ப்யூஷன் பற்றிக் குறிப்பிட நினைத்தேன். ஆராய்ச்சிக்கூடம் அமைக்கவே 15 வருடம் என்றால், அதில் ஆய்வுகள் நடந்து பலன் தந்து, வணிகரீதியில் மின் உற்பத்தி தொடங்க அடுத்த நூற்றாண்டு ஆகிவிடலாம்.
ReplyDeleteதமிழ்நாட்டில் பலர் எரிபொருள் இல்லாமல் இயங்கும் ஜெனரேட்டரை தயாரித்துவிட்டதாகச் சொல்வது தொடர்கதையாக இருக்கிறது (இதுபோல உலகெங்கும் நடப்பதும் உண்மையே). அறிவியல் அடிப்படையில் சாத்தியம் இல்லை என்றாலும் புதிதாக இப்படி யாராவது கிளம்புவது நின்றபாடில்லை. சமீப ஒருசில ஆண்டுகளில் மட்டும் இவை-
http://www.dinamani.com/tamilnadu/article769578.ece?service=print
https://engb.facebook.com/InruOruTakavalTodayAMessage/posts/565784750122597
http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/12/27/எரிபொருள்-இல்லாமல்-இயங்கும/article2590784.ece
http://www.viduthalai.in/page-5/61649.html
http://vgaengine.blogspot.in/2013/11/blog-post.html
http://tamil.thehindu.com/tamilnadu/தானியங்கி-ஆற்றல் இயந்திரம்-போடி-இளைஞரின்-புதிய-கண்டுபிடிப்பு முயற்சி/article6912697.ece
http://articles.timesofindia.indiatimes.com/2012-10-09/madurai/34341850_1_generator-batteries-power-crisis
சரவணன்
மதிப்பிற்க்குறிய ஐயா,
ReplyDeleteமீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழகத்தில் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஏற்படுத்திய எதிர்ப்பலைகளைக் கண்டோம்.
விவசாயிகளின் தரப்பு முன்வைக்கும் வாதங்களையும், அவர்களின் அச்சங்களையும் விரிவாக அரசியல் அல்லாத அறிவியல் கண்ணோட்டத்துடன் எடுத்துரைக்கவும்.
இவ்வாறு எதிர்ப்பு இருக்கும் போதும் மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை முன்னெடுத்துச்ச்செல்ல முனைப்பு காட்ட காரணம் என்ன ? விவரிக்கவும்.
மிக்க நன்றி
இரண்டாவதாக, நீங்கள் கூறுவது போல அணு மின்சாரம் அறவே இல்லாத மின் உற்பத்தி இன்னும் நிதர்சனமானதல்ல என்ற போதிலும், சில அய்யப்பாடுகள் அகன்ற பாடில்லை, அவை,
அ) America, France, Russia, South Korea, Canada போன்ற நாடுகள் சொந்த உபயோகத்திற்க்காக அணு உலைகளை தவிர்த்துக்கொண்டு வளரும் நாடுகளுக்கு அணு உலைகளை ஏற்றுமதி செய்வதயே வரும் கால business model ஆக மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றன. Nuclear Liability ஐ இவர்கள் எதிர்த்து வருகிறார்கள் என்ற பின்புலத்துடன் பார்த்தால் இதனால் இவர்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் கொள்வது நியாயம் தானே ?
ஆ) ஏற்கனவே areva, westinghouse போன்ற அணு உலை உற்பத்தி நிறுவனங்களிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மின்சார unit price fix பண்ணும் பிரச்சனைகளால் இன்றும் சிறிதுகூட செயல்படுத்தப்படாமல் பல ஆண்டுகள் ஏட்டளவிலே உள்ளதற்க்கு வேறு உண்மைக்காரணங்கள் ஏதேனும் உள்ளனவா ?
அவர்களிடம் நாம் அணு உலை மட்டும் தானே பல million கள் கொடுத்து வாங்குகிறோம். அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையை ஏன் நாமே அவர்களின் ஒப்புதலோ தலையீடோ இல்லாமல் நிர்ணயிக்க முடியாதா ?
இ) இப்படி அணு உலைகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை, நிலக்கரி வழியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைவிட விலை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம் என்பதால் அரசு அணு உலை மின்சாரத்துக்கு unit ஒன்றிற்க்கு 4 ரூபாய்க்கு மேல் மானியம் வழங்க நேரிடும் என்றும் சில இடங்களில் படித்தேன். இப்படிப்பட்ட மானியமானது நம் நாட்டின் macroeconomic situation அயும் TANGEDCO போன்ற DISCOMS இன் financial health அயும் long term இல் பாதிக்கும் என்ற கூற்று சரி தானா ?
மேலும், கடந்த 5 / 10 ஆண்டுகளில் பார்த்தோமேயானால், அணு உலையில் தயாரிக்கப்படும் மின்சாரமானது தொடர்ந்து costly ஆகிக்கொண்டே போகின்றது எனவும், அதே நிலையில், சூரிய வெப்பத்திலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. உண்மை தானா ?
ஈ) அணு உலைகளை தவிர்க்க முடியவில்லை. சரி. இருந்தாலும் short term இல் நிலவுகின்ற மின் பற்றாக்குறையை தீர்க்க அனு உலைகள் உதவ முடியுமா ? கூடங்குளம் அனு மின் நிலையம் திட்டம் வகுக்கப்பட்டதிலிர்ந்து செயல்படத் தொடங்க (1987-2014) இத்தனை ஆண்டுகள் பிடிக்கிறதைப் பார்க்கிறோம். இன்று bureaucratic clearances நேரம் போக மற்றும் போது மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் இல்லாமல் எத்தனை விரைவில் ஒரு அனு உலையை நம்மால் திட்டம் வகுத்து, கட்டமைத்து, வெற்றிகரமாக செயல்படுத்த இயலும் ? 1 அல்லது 2 ஆண்டுகளில் சாத்தியம்தானா ?
நன்றி,
சிவா
சிவா
ReplyDeleteநிறையக் கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். மீதேன் திட்டம் விவசாயத்தைப் பாதிக்கக்கூடியதே.
முன்னேறிய நாடுகள் அணு உலைகளை வளரும் நாடுகளின் தலையில் கட்டுவதாகச் சொல்ல முடியாது. பிரிட்டனில் இரு அணு மின் நிலையங்களை சீனா அமைக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அரபு வளைகுடா நாடுகளில் தென் கொரியா அணு மின் நிலையங்களை அமைத்துத் தருகிறது. நாம் விரும்பினால் ஆப்பிரிக்க நாடுகளில் அணு மின் நிலையங்களை அமைத்துத் தர முடியும்.
அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையை நாம் தான் நிர்ணயிப்போம். வெளிநாட்டு கம்பெனிகள் அல்ல.
வெளிநாடடுக் கம்பெனிகள் இந்தியாவில் அமைக்கும் அணு மின் நிலையங்களில்15 ஆண்டுகளுக்குப் பிறகு விபத்து ஏற்பட்டாலும் அந்த கம்பெனிகள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை அபத்தமானது. சில நிர்ப்பந்த சூழ்நிலைகளில் அந்த ஷரத்து சேர்க்கப்பட்டது.
உள்ளபடி உலகில் நீர் மின்சாரத் திட்டங்களில்(hydro- electric projects) உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை தான் மிகக் குறைவானது. அணுமின் நிலையங்கள் அடுத்த இடம் வகிக்கின்றன.அனல் மின் நிலையங்கள் மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.
சூரிய மின் விசை விலை அதிகம். உற்பத்திச் செல்வு ஒரு யூனிட்டுக்கு ரூ 15 வரை இருக்கலாம். எனவே தான் மின் வாரியங்கள் சூரிய மின் நிலையங்களை நிறுவ முன்வருவதில்லை. சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான பொருட்களின் விலை முன்பு இருந்ததை விடக் குறைவு என்றாலும் அனல் மின் நிலைய யூனிட்டுக்கு ஆவதை விட இன்னமும் பல மடங்கு அளவில் உள்ளது.
கூடங்குள்ம் திட்டம் தாமதமானதற்கு சோவியத் யூனியன் வீழ்ச்சி ஒரு காரணம். அமெரிக்காவின் ஆட்சேபமும் ஒரு காரணம். இந்திய அணுமின் நிலையக் கட்டுமான கார்ப்பரேஷன் அஸ்திவாரம் போட்டதிலிருன்து 5 ஆண்டுகளில் ஒரு அணுமின் நிலையத்தைக் கட்டி முடிக்கும் திறன் கொண்டது.
What ever be the good reasons ,once an accident happenes the devastation will be unbearable in India than other countries due to high population density. Not only that the impacts in future due to radiation will be huge. It is better to invest in research to avoid the devastation than to think of compensation.
ReplyDeletechinna
ReplyDeleteஅணுமின்சார நிலையம் என்றாலே விபத்து நடக்கும் என்று நினைப்பது சரியல்ல.உலகில் 300 க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதிலும் ஓராண்டில் சாலை விபத்துகளில் 13 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று ஒரு தகவல் கூறுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 3280 பேர் சாகிறார்கள். இத்துடன் ஒப்பிட்டால் உலகில் அணு உலைகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
மக்களுக்கு எந்த பாதிப்பு வாரத அணுஉலை மற்றும் இணுஉலை அமைக்களம்
ReplyDelete