Dec 22, 2014

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயுக் கசிவு

Share Subscribe
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிலிருந்து திடீர் திடீரென மீத்தேன் வாயு கசிவதாக அமெரிக்காவின் கியூரியாசிடி நடமாடும் ஆராய்ச்சிக்கூடம் கண்டறிந்துள்ளது. ஆளில்லாத இந்த ஆராய்ச்சிக்கூடம் தானாக இயங்கி ஆங்காங்கு ஆராய்ந்து வருகிறது.

ஒரு வேன் சைஸிலான கியூரியாசிடி 2012 ஆகஸ்டில் போய் இறங்கியதிலிருந்து  செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.
அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி ஆராய்ச்சிக்கூடம்
செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து  திடீர் திடீரென மீத்தேன் வாயு வெளிப்படுவதை கியூரியாசிடி கண்டுபிடித்து பூமிக்குத் தகவல் அனுப்பியுள்ளது. இது முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

ஏனெனில்  உயிரினத்துக்கும் மீதேன் வாயுவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பூமியில் உயிரினம் காரணமாக நிறையவே மீத்தேன் வாயு வெளிப்படுகிறது.கால்நடைகளின் வயிற்றிலிருந்து மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. நெல் வயல்களிலிருந்து கணிசமான அளவில் மீத்தேன் வெளிப்படுகிறது. சதுப்பு நிலங்களிலும் இயற்கையாக மீதேன் வாயு உற்பத்தியாகிறது. மீத்தேன் தீப்பற்றும் தன்மை கொண்டது.

சதுப்பு நிலங்களில் வெளிப்படும் மீத்தேன்  இரவு நேரங்களில் சில சமயங்களில் தற்செயலாகத் தீப்பிடிப்பது உண்டு.  ஒரு காலத்தில் இதைக் கண்டவர்கள் கொள்ளி வாய்ப் பிசாசு என்றும் கருதினர். உண்மையில் இது கொள்ளி வாயு  அதாவது மீத்தேன் வாயு என்பது பின்னர் தான் கண்டறியப்பட்டது.

 ஓரிடத்தில் நீண்ட நாள் குப்பையைப் போட்டு வைத்தால் இயல்பாக அதில் மீத்தேன் உற்பத்தியாகும். சில நாடுகளில் பெரிய அளவிலான குப்பை மேடுகளிலிருந்து மீத்தேன் வாயுவை சேகரித்துப் பயன்படுத்துகின்றனர். சாண வாயு என்பதும் பெரிதும் மீத்தேன் வாயு தான். கரையான்கள் மூலமும் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.

கடல் பகுதியிலும் நிலப் பகுதியிலும் மிக ஆழத்திலிருந்து எரிவாயு எடுக்கப்படுவது பற்றி அறிந்திருக்கலாம். எரிவாயுவில் பெரும் பகுதி மீத்தேன் வாயு ஆகும். ஏதோ ஒரு காலத்தில் இருந்த தாவரங்களும் விலங்குகளும் மிக ஆழத்தில் புதையுண்டு கடும் வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளான போது தோன்றியதே எரிவாயு ஆகும். பூமியில் உள்ள மீதேனில் 95 சதவிகிதம் நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்படுவதாகும்.ஆனால் புவியியல் காரணங்களாலும் மீத்தேன் வாயு தோன்றுவது உண்டு. அதாவது சில வகைப் பாறைகளும் நீரும் சேரும்போது மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

 கியூரியாசிடி செவ்வாயில் இறங்கி காற்று மண்டலத்தை ஆராய்ந்த போது மீத்தேன் வாயு 0.7 ppbv ( parts per billion by volume) அளவுக்கே   இருப்பதாகக் கண்டறிந்தது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியின் காற்று மண்டலத்தில் இந்த வாயு 1800 ppbv  அளவுக்கு உள்ளது.

எனினும் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நான்கு தடவைகளில் கியூரியாசிடியின் கருவிகளில் வழக்கத்தை விட பத்து மடங்கு மீத்தேன் வாயு பதிவாகியது. இவ்விதம் திடீர் திடீரென மீத்தேன் வாயு அளவு அதிகரிப்பதற்கு அந்த வாயு செவ்வாயின் நிலத்துக்குள்ளிருந்து   கசிவதே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் செவ்வாயில் காணப்படும் மீத்தேன் வாயு இப்போது அல்லது கடந்த காலத்தில் இருந்திருக்கக்கூடிய நுண்ணுயிர்களால் தோற்றுவிக்கப்பட்டதா அல்லது புவியியல் காரணங்களால் தோற்றுவிக்கப்பட்டதா என்பதை கியூரியாசியினால் கண்டறிய இயலவில்லை. செவ்வாயின் மீத்தேன் நுண்ணுயிர்கள் காரணமாகத் தோன்றுவதே என்று தெரிய வந்தால் அக்கிரகத்தில் இப்போது அல்லது கடந்த காலத்தில் நுண்ணுயிர்கள் இருந்தன என்று சொல்ல முடியும்.

அப்படியில்லாத நிலையில் செவ்வாயில்  மீத்தேன் வாயு அவ்வப்போது வெளிப்படுவதை வைத்து எதையும் உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி அமைப்பு மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியது நினைவிருக்கலாம். 2014  ஆம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து செவ்வாயைச் சுற்றி வர ஆரம்பித்த மங்கள்யான் அங்கிருந்து படங்களை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை மங்கள்யான் கண்டறியும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் செவ்வாயில் மங்கள்யான் எதையாவது கண்டுபிடித்ததா என்பது பற்றி கடந்த சில மாதங்களில் இஸ்ரோவிடமிருந்து எந்த செய்தியும் கசியவில்லை.

7 comments:

Natarajan said...

நன்றி.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்குமேயானால், பாறைகளுக்கு அடியில் கசியும் நீர் போல, தண்ணீர் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கும் அல்லவா? அப்படியானால் நுண்ணுயிர்கள் இருக்குமல்லவா?
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மூலக்கூறுகளும், ஆறு இருந்ததிற்கான ஆதாரமும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று ஊடகங்களில் வந்த செய்தி உண்மையா ?
விளக்கவும்....

நடராஜன்
ஓமலூர்.

Salahudeen said...

நன்றி ஐயா எங்கள் மாவட்டத்தில் (திருவாரூர்) மீதேன் எடுப்பதற்காக ஒரு நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.அதை இங்குள்ள பொதுமக்கள் எதிர்க்கிறார்கள்.ஏனன்றால் நிலம் எல்லாம் பாலைவனமாகும் பல பின் விளைவுகள ஏற்படும் என்று இது உண்மையா?நமது மங்கல்யானுக்கும் அமெரிக்காவின் கியூரியாசிடிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

என்.ராமதுரை / N.Ramadurai said...

நடராஜன்
தாங்கள் கேட்டது சரியான கேள்வி. ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. புகைப்படங்கள் தான் இவ்வித தடயங்களாக இருந்து வந்தன. செவ்வாய்க்கு அண்மையில் போய்ச் சேர்ந்த நாஸாவின் மாவென் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான புதிய ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளது.செவ்வாயின் துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் உள்ளதாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாயில் நிலத்துக்கு அடையில் தண்ணீர் உள்ளதா என்பது பற்றித் தெரியவில்லை. குறிப்பிட்ட வகைப் பாறை தண்ணீர், வெப்பம், அழுத்தம் இவை அனைத்தும் சேர்ந்தால் மீதேன் தோன்றும். இது serpentinization எனப்படுகிறது.இதுவே புவியியல் முறையில் மீதேன் உற்பத்தியாகும்.
சுருங்கச் சொன்னால் செவ்வாயில் இப்போது கண்டறியப்பட்ட மீத்தேன் கசிவு எப்படித் தோன்றியது என்பது புதிராக உள்ளது. செவ்வாயைப் பற்றிய பல விஷயங்கள் இன்னும் புதிராகவே உள்ளன.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Salahudeen
எரிவாயுவில் பெரும்பகுதி மீத்தேன் வாயு ஆகும். எரிவாயுவை பல காரியங்களுக்கும் பயன்படுத்த முடியும். குறிப்பாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஓரிடத்தில் நிறைய எரிவாயு கிடைக்க ஆரம்பித்தால் இயல்பாக பல தொழிற்சாலைகள் தோன்றும். இதனால் வழக்கமான விவசாயம் பாதிக்கப்படலாம். நிலம் பாலைவனமாகி விடாது
கியூரியாசிடி சுமார் ஒரு டன் எடை கொண்டது. அது செவ்வாயின் நிலப்பரப்பில் தானாக இயங்கி பல பரிசோதனைகளை நடத்துகிறது. இதற்கென இதில் பல நுட்பமான கருவிகள் உள்ளன.
மங்கள்யான் செவ்வாயில் இறங்காமல் செவ்வாய் கிரகத்தை உயரே இருந்தபடி சுற்றிச் சுற்றி வருகிறது. அதில் உள்ள ஆராய்ச்சிக் கருவிகளின் எடை 15 கிலோ

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மீத்தேன் வாயு எப்படி உருவாகிறது என்பது பொதுவானவர்களுக்கு ஆழமாக் சொல்லும் பகுதி

Anonymous said...

Dear Sir, pls confirm that, oxygen there in Mars?

என்.ராமதுரை / N.Ramadurai said...

அன்புடையீர்,
செவ்வாய் கிரகத்தில் மிக அற்ப அளவுக்குத் தான் ஆக்சிஜன் உள்ளது. எனினும் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

Post a Comment