Pages

Dec 20, 2014

பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது?

வால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பனிக்கட்டி உருண்டைகள். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு காலத்தில் பூமியை எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் தாக்கின. அவற்றின் மூலம் தான் பூமியின் கடல்களில் இந்த அளவுக்கு நிறையத் தண்ணீர் இருக்கிறது. இப்படித்தான் விஞ்ஞானிகள் நீண்டகாலமாகக் கருதி வந்தனர்.

ஆனால் பூமியின் கடல்களில் உள்ள தண்ணீர் வால் நட்சத்திரங்கள் மூலம் வந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்கும் வகையில்  இப்போது புதிய தகவல் கிடைத்துள்ளது.

பூமியில் உள்ள தண்ணீர் ஒரு விதமாகவும் வால் நட்சத்திரங்களில் (பனிக்கட்டி வடிவில் உள்ள) தண்ணீர் வேறு விதமாகவும் உள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரோசட்டா  விண்கலம்  67 P  என்னும் வால் நட்சத்திரத்தை  அண்மையில் துரத்திப் பிடித்தது. அந்த விண்கலத்திலிருந்து  நவம்பர் மாத மத்தியில் பிலே என்னும் ஆய்வுக் கலம் அந்த வால் நட்சத்திரத்தில் இறங்கியது.  பிலே ஆய்வுக் கலத்தில் வைக்கப்பட்ட பல நுட்பமான கருவிகளில் ஒன்று  மேற்படி வால் நட்சத்திரத்தின் பனிக்கட்டிகளிலிருந்து வெளிப்பட்ட ஆவி வடிவிலான நீரை ஆராய்ந்தது.

 ஆவி வடிவிலான தண்ணீர் ஆராயப்பட்ட போது வால் நட்சத்திரத்தில் அடங்கிய பனிக்கட்டியும் தண்ணீரும் ஆராயப்பட்டதாகவும் சொல்லலாம். அவ்விதம் ஆராய்ந்தபோது வால் நட்சத்திரத்தின் தண்ணீர் வேறுபட்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

 எந்த வகையில் வேறுபட்டது?
ஹைட்ரஜன் அணுவின் மையக் கருவில் ஒரு நியூட்ரானும் இருந்தால்
அதுவே டியூட்ரியம் ஆகும்
தண்ணீரை வேதியியல் நிபுணர்கள் H2O  என்று வருணிப்பார்கள். இரு பங்கு ஹைட்ரஜன்  வாயு, ஒரு பங்கு ஆக்சிஜன் வாயு ஆகிய இரண்டும் வேதியியல் முறையில் பிணைந்ததால் உண்டானதே தண்ணீர்.

இதில் ஹைட்ரஜன் அணுவைக் கவனிப்போம். பொதுவில் ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் ஒரே ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். மிக அபூர்வமாக ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்து இருக்கும். இவ்வித ஹைட்ரஜன் அணுவுக்கு டியூட்ரியம் (Deuterium) என்று பெயர்.  (மிக மிக அபூர்வமாக ஹைட்ரஜன் அணுவின் மையத்தில் இரு நியூட்ரான்கள் இருப்பது உண்டு.)

டியூட்ரியமும் ஆக்சிஜன் அணுக்களுடன் சேர முடியும். ஆகவே தண்ணீர் மூலக்கூறுகளை (Molecules)  நுட்பமாக ஆராய்ந்தால் அவற்றில் டியூட்ரியமும் ஆக்சிஜனும் சேர்ந்த நீர் மூலக்கூறுகளும் இருக்க முடியும். சாதாரண                    ( நியூட்ரான் இல்லாத) ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்த தண்ணீர் சாதாரணத் தண்ணீர். டியூட்ரியமும் ஆக்சிஜனும் சேர்ந்தது கன நீர் (Heavy water),

நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மிக அற்ப அளவுக்கு கன நீரும் கலந்துள்ளது. பூமியில் உள்ள தண்ணீரை ஆராய்ந்ததில் பத்தாயிரம் நீர் மூலக்கூறுகளில் மூன்று மட்டுமே கன நீராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பிலே ஆராய்ந்த வால் நட்சத்திரத்தில் இது மூன்று மடங்காக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஆகவே பூமியில் உள்ள தண்ணீரில் பெரும் பகுதி வால் நட்சத்திரங்களிலிருந்து  கிடைத்திருக்கலாம் என்ற கொள்கை அடிபட்டுப் போகிறது.

வால் நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்ட் (Asteroid) எனப்படும் பறக்கும் விண்கற்களிலும் ஓரளவு பனிக்கட்டிகள் உண்டு. அஸ்டிராய்டுகளில் உள்ள பனிக்கட்டிகளில் ( தண்ணீரில்)  அடங்கிய கன நீரின் அளவு  பூமியில் உள்ள தண்ணீரில் அடங்கிய கன நீருடன் ஒத்திருக்கிறது.

 எனவே ஏதோ ஒரு காலத்தில் எண்ணற்ற அஸ்டிராய்டுகள் பூமியின் மீது வந்து விழுந்ததன் விளைவாக பூமியில் இந்த அளவுக்கு ஏராளமான தண்ணீர் உள்ளதாகக் கருத இடமிருக்கிறது.

 எனினும் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய கருத்துகள் எல்லாமே வெறும் ஊகத்தின் அடிப்படையில் தான் உள்ளன.


3 comments:

  1. அரிய அறிவியல் தகவல்கள் அய்யா!
    பல விடயங்களை எளிய முறையில் எம் போன்ற பாமரர்க்கும் அறியத் தருகின்ற தங்களின் முயற்சி பாராட் டிற்குரியது.
    தங்களைத் தொடர்கிறேன்.
    த ம 1
    நன்றி

    ReplyDelete
  2. பூமியில் உள்ள தண்ணீரில் பெரும் பகுதி வால் நட்சத்திரங்களிலிருந்து கிடைத்திருக்கலாம் என்ற கொள்கை அடிபட்டுப் போகிறது.

    ReplyDelete
  3. விளக்கம்:
    இக்கட்டுரையில் “ தண்ணீரை வேதியியல் “ என்று தொடங்கும் பாராவில் ” இரு பங்கு ஹைட்ரஜன் வாயு, ஒரு பங்கு ஹைட்ரஜன் வாயு ஆகிய இரண்டும் வேதியியல் முறையில் பிணைந்ததால் உண்டானதே தண்ணீர்.” என்று கைப்பிசகாக தவறாக எழுதியிருந்தேன். அது அப்படியே பிரசுரமாகி விட்டது. ஓர் அன்பர் சுட்டிக்காட்டியதன் பேரில் அது திருத்தப்பட்டு விட்டது.
    ராமதுரை

    ReplyDelete