Dec 31, 2014

ஜனவரி 4 ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு சக்தி குறையுமா?

Share Subscribe
2015 ஜனவரி 4 ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சுமார் ஐந்து நிமிஷம் பூமி முழுவதிலும் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படுமாம். அப்போது உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி, உயரே எம்பிக் குதித்தால் சற்று நேரம் அந்தரத்தில் மிதக்கின்ற உணர்வு இருக்குமாம். இப்படியான கட்டுக்கதை இப்போது உலகெங்கிலும் உலவி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அது எந்த நேரம் என்று அறிந்து கொள்ளப் பலரும் விரும்புவர். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற மேற்குக் கரைப் பகுதியிலான நேரப்படி காலை சரியாக 9-47 மணிக்கு இவ்வித எடையற்ற நிலை அதாவது அந்தரத்தில் மிதக்கும் நிலை இருக்குமாம். அது இந்திய நேரப்படி ஜனவரி 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11-15 மணி ஆகும். வதந்தியைக் கிளப்பியவர்களின் கூற்றுப்படி இந்தியாவில் அந்த நேரத்தில் இவ்விதமான நிலை இருக்க வேண்டும்.

இது நிஜம் தானா? அல்லது பொய் தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ள  இந்தியாவில் உள்ளவர்கள் விரும்பினால் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து குதித்துப் பார்க்கலாம். நீங்கள் வசிப்பது மாடியாக இருந்தால் கீழ் தளத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொண்டு ’யார் இந்தப் பைத்தியம், நடு ராத்திரியில் இப்படிக் குதிக்கிறது ’ என்று திட்டுவார்கள். சரி, கீழே இறங்கி வந்து வீட்டருகே குதித்தால் நடு ராத்திரியில்  ஏதோ சுவர் ஏறிக் குதிக்கிற திருடனோ என்று சந்தேகித்து  போலீசார் மடக்கலாம்.

யாரும் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பூமியின் ஈர்ப்பு சக்தி அன்றைய தினம் அன்றைய சமயத்தில் சிறிதும் மாறாது.

இது ஒரு புறம் இருக்க,பூமியின் மேற்புறத்தில் ஈர்ப்பு சக்தி அளவு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லைதான். இடத்துக்கு இடம் சிறு அளவில் வித்தியாசப்படுகிறது.  உலகிலேயே கன்னியாகுமரி  மற்றும் அதற்குத் தெற்கே உள்ள கடல் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இலங்கையில் உள்ள கண்டி நகரில் தான் இது உலகிலேயே மிகக் குறைவான அளவில் உள்ளது.

கீழே உள்ள படங்களில் நீல நிறமானது ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ள இடங்களையும், சிவப்பு நிறமானது ஈர்ப்பு சக்தி ஒப்பு நோக்குகையில் அதிகமாக உள்ள இடங்களையும் குறிக்கிறது.

இதே போல கனடாவின் ஹட்சன் வளைகுடாப் பகுதியிலும் ஈர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. எனவே ஒருவரின் எடை அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஒரு விதமாகவும் ( மில்லிகிராம் சுத்தமாகக் கணக்கிட்டால்) ஹட்சன் வளைகுடாவில் ஒருவிதமாகவும் இருக்கும். அதே போல ஒருவரின் எடை டில்லியில் ஒருவிதமாகவும் கன்னியாகுமரியில் வேறு விதமாகவும் இருக்கும். ஆகவே ஒருவரைப் பார்த்து டில்லியில் உங்கள் எடை என்ன என்று கேட்டால் அது அசட்டுத்தனமான கேள்வியாக இராது.

பூமியில் வெவ்வேறு இடங்களிலும் உள்ள ஈர்ப்பு சக்தியை அளவிட்டறிவதற்காக அமெரிக்காவின் நாஸாவும் ஜெர்மன் விண்வெளி அமைப்பும் சேர்ந்து GRACE  என்னும் பெயர் கொண்ட இரு செயற்கைக்கோள்களை  உயரே செலுத்தியது. அவை பல தகவல்களை அனுப்பின..
செயற்கைக்கோள் அளித்த தகவலின்படியான உலகப் படம்.
இந்தோனேசியா பகுதியில் ஈர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதைக் கவனிக்கவும்.
பின்னர் இதே நோக்கத்தில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு 2009 ஆம் ஆண்டில் GOCE  என்னும் பெயர் கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த செயற்கைக்கோளும் ஏராளமான தகவல்களை அனுப்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தி இடத்துக்கு இடம் மாறுபடுவதானது மேலே பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற  செயற்கைக்கோள்களைப் பாதிக்கிறது .

பூமி  ஈர்ப்பு சக்தி விஷயத்தில் பூமியின் மேற்புறத்தில் உள்ள வேறுபாடுகளை வைத்து பூமிக்கு நாமாக ஒரு உருவம் கொடுப்பதென்றால் பூமியானது கீழே உள்ளது மாதிரியில் இருக்கும்


இது ஒரு புறம் இருக்க மேலே சொல்லபட்ட கட்டுகதைக்கு மறுபடி வருவோம். பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு போதும் ஒரேயடியாகக் குறைவது கிடையாது.

ஆகவே யாரோ கிளப்பி விட்ட கதையை நம்புவது அசட்டுத்தனம். சிலர் வேண்டுமென்றே இப்படியான வதந்திகள் அவ்வப்போது கிளப்பி விடுகின்றனர்.

பூமியின் ஈர்ப்பு சக்தி குறிப்பிட்ட ஐந்து நிமிஷ நேரம் ஒரேயடியாகக் குறைந்து விடும் என்ற வதந்தியானது ஒரு வகையில் சர் ஐசக் நியூட்டனை அவமதிப்பதாகும். பூமியின் ஈர்ப்பு சக்தி பற்றிய கொள்கையை அவர் தான் எடுத்துரைத்தார்.  நியூட்டனின் பிறந்த நாள் ஜனவரி 4 ஆம் தேதியாகும் (ஆண்டு 1643)

சூரியனுக்கு அருகே பூமி

ஜனவரி 4 ஆம் தேதி இன்னொரு வகையில் குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் தான் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது  அன்று சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 14 கோடியே 70 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜூலை 6 ஆம் தேதியன்று இந்த தூரம் மிக அதிகபட்சமாக 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டராக இருக்கும்.

ஜனவரி 4 ஆம் தேதி பூமியானது ஒப்புனோக்குகையில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்று கூறுகிறீர்களே, கடும் குளிர் வீசுகிறதே, அது எப்படி என்று கேட்கலாம். ( பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் தான் குளிர். நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள தென் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இப்போது நல்ல கோடைக்காலம்)

பூமியில் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுவதற்கும் சூரியன் - பூமி இடையிலான தூரத்துக்கும் தொடர்பு கிடையாது. பூமி தனது அச்சில் சுமார் 23 டிகிரி சாய்வாக இருப்பதால் தான் குளிர்காலமும் கோடைக்காலமும் ஏற்படுகின்றன.

9 comments:

காரிகன் said...

அறிவார்நத கருத்துகளை மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய தேதிக்கு நமக்கு தேவைப்படுவது உங்களைப் போன்றவர்களின் அறிவியல் பார்வைதான். உங்களிடம் இருக்கும் இந்த "சக்தி" (அறிவியலை நான் ஒரு சக்தியாகவே பார்க்கிறேன்) பலரிடம் இல்லை. வாழ்த்துக்கள் ராமதுரை சார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்படில்லாம் வதந்தி நிலவுகிறதா ?
நல்ல விளக்கம் ஐயா புரிந்து கொண்டேன்

எம்.ஞானசேகரன் said...

பலரும் அறிந்து கொள்ளவேண்டிய அரிய தகவல்கள்.

kavignar said...

superb sir. thanks vanakkam.

ABUBAKKAR K M said...

அய்யா வணக்கம் .
பதிவுக்கு மிக்க நன்றி.

நமது பதிவுதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும்
அனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும்
வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புரளி கிளப்பும் சர்வதேச "மன நோயாளிகள் /குற்றவாளிகளின் " 2014வருடத்திய 2ஆவது
புரளி இதுவாகும்.
விஞ்ஞானம் எவ்வளவு வளர்கிறதோ அதற்கு
இணையாக வீண் வதந்திகளை பரப்புவர்களின்
செயல்படுகளும் அதிகமே. இதில் குறிப்பாக
ஜனவரி 4-ஐ ( சர் ஐஸக் நூட்டனின் பிறந்த நாள்)
தெரிவு செய்ததுதான் கொடுமையிலிம் வின்தையானது.

கோ.மீ.அபுபக்கர்
கல்லிடக்குறிச்சி - 627416

Unknown said...

Sir thanks , sir bermuda triangel pattri vilakkam vendum

Anonymous said...

ஐயா வணக்கம்

பூமியின் ஈர்ப்பு சக்தி என்பது ஒரு பொருளின் எடையை வைத்து தீர்மானிக்கப் படுகிறதா உதாரணமாக கனமான ஒரு பொருளை மேலே தூக்கிப் போட்டால் வேகமாக கீழே விழுகிறது அதுவே லேசான ரு பொருளை மேலே தூக்கிப் போட்டால் மெதுவாக கீழே விழுகிறது இதற்கு காரணம் அப்பொருளின் எடைத் தன்மை தானே, மேலும் ஒரு ஐயம் பூமியின் ஈர்ப்பு சக்தி என்பது மேலேயிருந்து அழுத்தும் காற்றின் அழுத்தத்தோடு சம்மந்தப்பட்டதா

வெங்கடேஷ்

Yuvaraj said...

Thankyou sir ,its very useful sir

ANGOOR said...

Please explain how is summer & winter in Earth happened? I wonder from your post there is no connection between distance between Earth & Sun!!!!
Please Describe in a special post..Thanks In Advance
Dharma
Germany

Post a Comment