ரிஷப ராசியில் உள்ள இளம் நட்சத்திரம். |
மேலே உள்ள படத்தை இன்னொரு முறை கவனியுங்கள். படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.
பல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கிரகங்களாக வடிவெடுக்கும்.
கிரகங்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.
தென் அமெரிக்காவில் சிலி (Chile) நாட்டில் ALMA என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் வான் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இது வானில் ரிஷப (Taurus) என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது. மேலே காணப்படுவது அந்தப் படம் தான்.
படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம ஆண்டுகள். இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள் என்றும் கூறலாம் - மட்டுமே உள்ளன. இன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கிரகங்கள் உருவாகி விடும்.
ALMA வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.
மைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும் நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.
இந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ்கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டுவதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.
பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண்டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டென்னாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து பிரும்மாண்டமான ஓர் ஆண்டென்னாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டென்னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான “படம்” கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும்.
ALMA வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டென்னாக்கள் |
ஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண்டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டென்னாக்கள் உள்ளன.
ஒரே ஆண்டென்னா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் இஷ்டப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.
இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமைக் கேந்திரம் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.
இந்தியாவிலும் லடாக் பகுதியில் சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
இத்தனை லட்சம் அல்லது கோடி ஆண்டுகள் என்று எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ? நாளை வேறு ஒரு ஆராய்ச்சியில் வேறு ஒரு முடிவும் வரக்கூடுமல்லவா ?
ReplyDeleteNAGARAJAN
ReplyDeleteபூமியின் வயதைக் கண்டுபிடிக்க ஆரம்பத்தில் மிகவும் கஷ்டபட்டார்கள். பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த பேட்டர்சன் கதிரியக்க அணுக்களை அடிப்படையாக வைத்து பூமியின் உத்தேச வயதைக் கண்டுபிடித்தார்.
அருமையான அறிவியல் பதிவு.
ReplyDeleteஐயா வணக்கம்
ReplyDeleteசிறிய ஐயம் நாம் தற்போது இணையதளங்களிலும் புத்தகங்களிலும் பார்க்கும் பால்வீதி மண்டலத்தின் படம் உண்மையான படம் அல்ல கற்பனையானது தான் என்று கூறப்படுகிறதே அது உண்மை தானே, பால்வீதி மண்டலத்தின் படம் கற்பனையானது தான் என்றால் அது இப்படித்தான் இருக்கும் என்பதில் எத்தனை சதவிகிதம் நம்பகத்தன்மை இருக்கும், உண்மையாகவே நம் பால்வீதி மண்டலத்தைக் கடந்து நம்மால் செயற்கைக்கோள்களைப் அனுப்பி பால்வீதி மண்டலத்தை படம் பிடிக்க இயலுமா
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteபால்வீதி மண்டலம் என்பது ஆங்கிலப் பெயரின்(MilkyWay) என்பதன் தமிழாக்கம். ஆகாய கங்கை என்பதே இந்தியப் பெயர். அதன் படம் கற்பனையானது அல்ல. உண்மையானதே.
நம்மால் ஆகாய கங்கைக்கு வெளியே சென்று படம் பிடிக்க முடியாது. பல நூறு ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்றால் தான் அது சாத்தியம். அவ்வளவு தூரம் எந்த செயற்கைக்கோளினாலும் செல்ல இயலாது.
பூமியானது அதாவது சூரிய மண்டலம் இந்த ஆகாய கங்கையில் சற்றே ஓரத்தில் அமைந்துள்ள்து.
ஆகாய கங்கைக்கு வெளியே இருந்து பார்த்தால் ஆகாய கங்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் பிற அண்டங்களைப் படம் எடுத்துள்ளனர். அந்த வகை அண்டத்தின் படத்தைப் பார்த்தால் நமது ஆகாய கங்கை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
In Ooty, there is a similar tower system. See the link: http://en.wikipedia.org/wiki/Ooty_Radio_Telescope
ReplyDelete-Suseendran.
How are you sir? Long time no post...
ReplyDeleteMars க்கு ஆள் அனுப்பபோகும் NASAவின் orion spacecraft பற்றி???