Oct 28, 2014

மாடுகளே தேவையில்லை: வருகுது செயற்கைப் பால்

Share Subscribe
மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர் அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பெருமாள் காந்தி
ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரையான் பாண்டியா
செயறகைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷா தத்தார்
செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் நுட்பப் படிப்பு படித்தவர்களே.

இவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO. பெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை கல்ச்சர் அதிகாரி.

இவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


4 comments:

Anonymous said...

Science Speaks.எப்படி இருக்கும் என்ற ஆவல் வருகிறது.

krishnamoorthy s p said...

இனி கோதானம் இராது.

ABUBAKKAR K M said...

Sir ,
very glad to know this , especially at present critical situations
in Tamil nadu .
Good news , of course , for both human beings and cattle .
<> abubakkar km
kallidaikurichi - 627416

Unknown said...

ஏற்கனவே மரபு மற்றம் செய்யப்பட்ட கோழி கறி மற்றும் காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற உணவு வகைகளினால் நமக்கு உண்டாகும் எதிர் விளைவுகள் தான் இன்று குழந்தை முதல் முதியவர் வரை அனுபவிக்கும் சர்க்கரை நோய் மற்றும் பிற இனம் காணா வியாதிகள் மேலும் பல புது வியாதிகள் மனிதனை தொடரும் ஏனென்றால் பின்விளைவுகள் பற்றி நாம் எப்போதும் யோசிபதில்லை.

Post a Comment