இது ஆளில்லாத விமானம். ஆனால் அதில் “ஆராய்ச்சிக்கான” நுட்பமான கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2012 டிசம்பர் 11 ஆம் தேதி உயரே செலுத்தப்பட்ட இந்த விமானம் இம்மாதம் 17ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது.
பூமியை சுற்றிச் சுற்றி வந்தது என்ற முறையில் இதனை செயற்கைக்கோள் என்று தான் கூற வேண்டும். ஆனால் வடிவமைப்பில் இது விமானம் போன்று இருப்பதால்,அத்துடன் விண்வெளியில் இயங்கியதால் இதனை விண்வெளி விமானம் எனலாம்.
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் |
பூமியை நோக்கி காற்று மண்டலம் வழியே எது இறங்கினாலும் அது பயங்கரமான அளவுக்கு சூடேறி தீப்பற்றும். விண்வெளி விமானம் தீப்பற்றி அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதன் வெளிப்புறத்தில் கடும் வெப்பத்தைத் தாங்கி நிற்கும் ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் நாஸா 1983 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய ஷட்டில் (Space Shuttle) எனப்படும் ( விமானம் போல் வடிவமைப்பு கொண்டது) வாகனங்களிலும் இதே போல வெப்பத் தடுப்பு ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஷட்டில்: ஷட்டில் வாகனம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். இது உண்மையில் பிரும்மாண்டமான வாகனம். ஷட்டில் செங்குத்தாக உயரே கிளம்பியது. இதன் இரு புறங்களிலும் இரு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ஷட்டில் வாகனமே ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டதாக இருந்தது. இந்த எஞ்சினுக்கு திரவ ஆக்சிஜனையும் திரவ ஹைட்ரஜனையும் அளிப்பதற்காக ஷட்டிலுடன் ராட்சத எரிபொருள் டாங்கி பொருத்தப்பட்டிருந்தது.
செலவு அதிகம். நினைத்த நேரத்தில் தயார்படுத்த முடியாத நிலை. எரிபொருள் டாங்கியின் மீது பூசப்பட்ட நுரை பொருள் பிய்த்துக் கொண்டு ஷ்ட்டிலைத் தாக்கி அதன் விளைவாக ஷட்டிலின் காப்பு ஓடுகள் பெயர்ந்து போனதால் ஏற்பட்ட பிரச்சினை. இப்படியான காரணங்களால் ஷட்டில் போன்ற வாகனத்தை மறுபடி தயாரிப்பதில்லை என நாஸா முடிவு செய்தது.
நாஸா பயன்படுத்திய ஷட்டில் வாகனம். பழுப்பு நிறத்தில் காணப்படுவது எரிபொருள் டாங்கி |
இங்கே சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் சீகாகஸ் என்னுமிடத்தில் சில நாட்களுக்கு முன்னர் வானிலிருந்து அதிசயப் பொருள் ஒன்று அதி வேகத்தில் கீழே வந்து விழுந்தது.
அது ஐந்து அங்குல நீள அகலம் கொண்டதாக தடிமனாக இருந்தது. அது ஒரு வித ஓடு என்பது தெரிந்தது. அந்த ஓடு மூன்று அடுக்கு கொண்டதாக இருந்தது.
அடிப்புறத்தில் ரப்பர் மாதிரியிலான பொருள். நடு அடுக்கு உலோகத்தால் ஆனது. மேற்புற அடுக்கு மண் போன்ற பொருளால் ஆனது.
நாஸா விளக்கமளிக்கையில் இது என்றோ ஓய்வு பெற்றுவிட்ட ஷட்டில் வாகனத்தின் ஓடு அல்ல என்று கூறி விட்டது. அனேகமாக இது அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானத்தில் பொருத்தப்பட்டு பின்னர் தனியே கழன்று வானிலிருந்து விழுந்த ஓடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவத்தின் விண்வெளி விமானம் ஒரு புறம் இருக்க, இந்தியாவும் ஒரு வகை விண்வெளி விமானத்தைத் தயாரிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளது. இதன் சுருக்கமான பெயர் அவதார்(Avatar).இப்பெயரானது Aerobic Vehicle for hypersonic Aerospace Transportation என்பதன் சுருக்கமாகும்.
விண்வெளி விமானம் என்று சொல்லத்தக்க அவதார் வாகனம் விமானம் போன்று விமான நிலைய ஓடுபாதையிலிருந்து உயரே கிளம்பும். இந்த விமானத்தில் ஹைட்ரஜன் திரவ எரிபொருள் இருக்கும். அவதார் உயரே கிளம்பியதும் காற்றுமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சும். அக்காற்றிலிருந்து ஆக்சிஜன் வாயுவைத் தனியே பிரித்து அந்த வாயுவை திரவ ஆக்சிஜனாக மாற்றிக் கொள்ளும்.
அவதார் விண்வெளி விமானத்தின் மாடல் |
இந்த வேலை முடிந்ததும் அது கீழ் நோக்கி இறங்கி விமான நிலையத்தில் விமானம் போன்று இறங்கும். செயற்கைகோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தைத் திரும்பத் திரும்ப 100 தடவை செலுத்த இயலும் என்று கருதப்படுகிறது. அவதார் விண்வெளி விமானத்தின் வெளிப்புறத்திலும் வெப்பத் தடுப்பு ஓடுகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
அவதார் விண்வெளி விமானம் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை 25 டன் அளவில் இருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உயரே கிளம்பும் கட்டத்தில் அதன் எடை சுமார் 300 டன்.
செயற்கைக்கோள் ஒன்றை உயரே செலுத்துவதற்கு ராக்கெட்டைப் பயன்படுத்தும் போது அந்த ராக்கெட் முற்றிலுமாக அழிந்து விடுகிறது. ஒவ்வொரு தடவையும் பெரும் செலவில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது. ஆகவே செயற்கைக்கோளைச் செலுத்துவதற்கு நிறைய செலவாகிறது.
ஆனால் செயற்கைக்கோள்களைச் செலுத்த அவதார் வாகனத்தை திரும்பத் திரும்பப் பயன்படுத்த முடியும் என்பதால் செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்கு ஆகும் செலவு கணிசமாகக் குறையும். எனினும் அவதார் உருவாக்கப்பட்டு பயனுக்கு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.
8 comments:
can you explain pls about space shuttle and when they make it
அமெரிக்கா விண்ணில் செலுத்திய பல்வேறு செயற்கைக் கொள்கைகளின் மூலம் பல நாடுகளையும் கண்காணிக்கிறது என்று கூறுகிறார்கள். அது போல், இந்தியா செளித்திய செயற்கைக் கோள்களால், பிற தேசங்களைக் கண் காணிக்க முடியுமா ?
THANGAL MENMELUM NIDUZHI VAZHA IRAIVANIDAM PRATHIKIREN.IDHU POL EZHUTHUVATHARKU ATKAL ILLAI.ELLORUM , ( NAN UTPADA) PESA THAYAR.ANAL, EZHUTHURUVIL EZHUDHA ( ADHUVUM SCIENCE, IN TAMIL ) , THANAGALAI VANGUGIREN.
AVATHAR
ஷ்ட்டில் வாகனம் பற்றி கூடுதலாக சில தகவல்களும் அத்துடன் படமும் சேர்க்கப்பட்டுள்ளன. அதைப் படித்துக் கொள்ளவும்.
NAGARAJAN,
செயற்கைக்கோளைத் தயாரித்து அடிக்கடி அவற்றை உயரே செலுத்தும் திறன் உலகில் சில நாடுகளுக்கே உள்ளது. அவ்விதத் திறன் கொண்ட எல்லா நாடுகளுக்குமே நீங்கள் அமெரிக்காவுக்கு உள்ளதாகக் கூறும் திறன்கள் உண்டு. ஆனால் எந்த நாடும் அடுத்த நாட்டை வேவு பார்ப்பதாக ஒப்புக்கொள்வ்தில்லை.
Anonymous
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ஐயா வணக்கம்
விமானம் என்றால் நிறைய எரிபொருள் செலவாகும் அதுவும் 22 மாத காலம் பூமியைச் சுற்றுவது என்றால் நிறைய எரிபொருள் தேவைப்படுமே அவ்வளவு எரிபொருள் தேவையை எப்படி சாத்தியப்படுத்தி இருப்பார்கள். அப்படிஎன்றால் அது எவ்வளவு உயரத்தில் பறந்திருக்கும் அது செயற்கைக்கோள்களைப் போல பூமியை சுற்றி வந்ததா இல்லை என்றால் விமானங்களைப் போல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போவதுபோல் சுற்றி வந்ததா அமெரிக்காவின் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் இரகசியம் தான் அதிலே இதுவும் ஒன்றுபோல் அவர்களுடைய area 51 இரகசியங்கள் இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறதே ஐயா அதைப்பற்றி ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்துவதற்கு மட்டுமே (ராக்கெட்டுக்கு) எரிபொருள் தேவை. பூமியை சுற்ற ஆரம்பித்த பின்னர் அந்த செயற்கைக்கோளுக்கு எரிபொருளே தேவையில்லை.
சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை சந்திரன் சுற்றுகிறது. எந்த எரிபொருளும் இல்லாமல் இயற்கை நியதிகளின்படி இவை சுற்றுகின்றன. எல்லா செயற்கைகோள்களும் இவ்விதம் தான் இயற்கை நியதிப்படி சுற்றுகின்றன.
சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் செய்ய அவசியம் என்றால் அதற்கென செயற்கைக்கோளில் சிறு ராக்கெட்டுகள் இருக்கும். அந்த சிறிய ராக்கெட்டுகளும் சில வினாடி அல்லது சில நிமிஷம் செயல்பட்டால் போதும்.
எனவே அமெரிக்க விண்வெளி விமானம் அவ்விதமாகத்தான் 22 மாதம் பூமியைச் சுற்றியது. பெயர் தான் விண்வெளி விமானமே தவிர அது செயற்கைகோளாகத் தான் பூமியைச் சுற்றியது.
சாதாரண ஜெட் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது. விமானத்தில் உள்ள எரிபொருள் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. விண்வெளியில் ஆக்சிஜன் கிடையாது.
Post a Comment