சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம். அதை சுற்றிப் புள்ளிகளாகக் காணப்படுபவை நட்சத்திரங்கள் |
இந்த வால் நட்சத்திரத்தின் பெயர் சைடிங் ஸ்பிரிங் என்பதாகும். ஆஸ்திரேலியாவில் சைடிங் ஸ்பிரிங் என்னுமிடத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடம் கடந்த ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்ததால் அதற்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சூரிய மண்டல எல்லையில் அதாவது சூரியனிலிருந்து சுமார் 15 லட்சம் கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் சூரிய மண்டலத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊர்ட் முகில் ( Oort Cloud) என்ற பகுதி உள்ளது. அங்கு எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் உள்ளன. இப்போதைய வால் நட்சத்திரம் அந்த ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஊர்ட் முகில் கூட்டத்திலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று வருவது மிக அபூர்வமானதாகும். சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அங்கிருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கிளம்பியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் அதன் வேகம் மிகக் குறைவாக இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரிக்கும்.
அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி இப்போது வந்து கொண்டிருக்கிறது. அது வருகின்ற பாதையில் செவ்வாய் கிரகம் இருக்க நேரிட்டதால் அது செவ்வாயைக் கடக்கிறது. அது செவ்வாய் கிரகத்தைக் கடக்கும் போது செவ்வாய் கிரகத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் இடையே ஒரு லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.
அம்புக் குறி கொண்டது தான் வால் நட்சத்திரத்தின் பாதை ஆரஞ்சு நிறத்தில் உள்ள புள்ளி தான் செவ்வாய் கிரகம். |
இந்த வால் நட்சத்திரத்தின் வருகை காரணமாக மங்கள்யான் உட்பட செவ்வாயை சுற்றும் ஐந்து விண்கலங்களும் பத்திரமாக “ஒண்டிக் கொண்டுள்ளன”. வால் நட்சத்திரம் இவற்றின் மீது நேரடியாக மோதுகின்ற வாய்ப்பே இல்லை.
ஆனால் சாலையில் ஒரு குப்பை லாரி வேகமாகச் சென்றால் பெரும் புழுதி கிளம்புவது போல ஒரு வால் நட்சத்திரம் சென்றால் அதிலிருந்து நுண்ணிய துகள்களும் தூசும் வெளிப்படும். இதுவே வால் நட்சத்திரத்தின் வால் ஆகும்.
வால் நட்சத்திரம் பயங்கர வேகத்தில் செல்வதால் நுண்ணிய துகள்களும் கிட்டத்தட்ட அதே வேகத்தைப் பெற்றிருக்கும். எனவே இவை தாக்கினால் விண்கலங்களில் உள்ள நுட்பமான கருவிகள் சேதமடைய வாய்ப்பு உண்டு.
வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து செல்லும் போது சுமார் 20 நிமிஷ நேரத்துக்கு மட்டுமே விண்கலங்களுக்கு ஆபத்து வாய்ப்பு உண்டு. ஆகவே அந்த 20 நிமிஷ நேரம் இந்த விண்கலங்கள் செவ்வாயின் மறுபுறத்தில்-- துகள்கள் தாக்கும் வாய்ப்பு இராது என்பதால்-- இருக்கும்படி மூன்று விண்கலங்களுக்குப் பொறுப்பான நாஸா, நான்காவது விண்கலத்துக்குப் பொறுப்பான ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஐந்தாவதான மங்கள்யானுக்குப் பொறுப்பான இஸ்ரோ ஆகியவை தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
அதே நேரத்தில் பாதுகாப்பான தூரத்தில் இருந்தபடி இந்த விண்கலங்கள் சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும்.
இந்த வால் நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே திரும்பிச் செல்லும்.
விஞ்ஞானிகள் வால் நட்சத்திரத்தை ஆராய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம் உண்டு. சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டல்ம் தோன்றிய போது தான் பூமி உட்பட கிரகங்கள் தோன்றின. அப்போது மிச்ச மீதியான பொருட்கள் ஓரத்தில் ஒதுங்கின. அவை தான் வால் நட்சத்திரங்கள்.
கடந்த பல கோடி ஆண்டுகளில் வால் நட்சத்திரங்கள் பெரும் மாறுதலுக்கு உட்படாதவை. ஆகவே அவற்றை ஆராய்ந்தால் சூரிய மண்டலத் தோற்றம் பற்றிப் புதிதாகப் பல தகவல்களை அறிந்து கொள்ள் இயலும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சைடிங் ஸ்பிரிங் வால் நட்சத்திரம் அப்படி ஒன்றும் வடிவில் பெரியது அல்ல. அதன் குறுக்களவு சுமார் 800 மீட்டர். ஆனால் அதைச் சுற்றி அமைந்த வாயுப் மூட்டம் மிகப் பெரியது. அதன் வால் என்பது அதை விடவும் பெரியது என்பதுடன் மிக நீண்டது.
Update: வால் நட்சத்திரம் செவ்வாயைக் கடந்து சென்ற பின்னர் இந்தியாவின் மங்கள்யான், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் மார்ஸ் எக்ஸ்பிரஸ், அமெரிக்க நாஸாவின் மூன்று விண்கலங்கள் ஆகியவை எந்த பாதிப்புக்கும் உட்படாமல் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் பற்றி இவை சேகரித்த தகவல்கள் சில நாட்களுக்குப் பிறகு தெரிய வரும்.
இந்த ஆபத்தில் இருந்து நம் மங்கள்யான் தப்பிக்க வேண்டும்.நம் வின்வெளி ஆய்வு சாதனை தொடரவேண்டும்.
ReplyDeleteGood
ReplyDelete