இப்படியான இருதயம் பொருத்தப்பட்டவரான மிஷேல் கிரிபிலாஸ் என்னும் 57 வயதான பெண்மணி பிறவியிலேயே இருதயக் கோளாறு கொண்டவர். “இப்போது 10 வயது குறைந்து விட்டது போல உணருகிறேன்” என்று அவர் சொன்னார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு மாற்று இருதய ஆபரேஷன் நடந்தது.
ஆபரேஷனுக்குப் பிறகு அவர் தினமும் 3 கிலோ மீட்டர் நடக்கிறார். 100 முதல் 120 படி ஏறுகிறார்.
இடதுபுறம் சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர் குமுத் திதாள். வலதுபுறம் புது இருதயம் பெற்ற மிஷேல் கிரிபிலாஸ். |
சாலை விபத்து போன்றவற்றில் தலையில் அடிபட்டு சாகின்றவர்களின் இருதயம் எடுக்கப்பட்டு பிறருக்குப் பொருத்தப்படுவது உண்டு. இருதயத் துடிப்புடன் உள்ள இருதயம் அப்படியே எடுக்கப்பட்டு உடனுக்குடன் ஒரு நோயாளிக்குப் பொருத்தப்படும். இது வழக்கமாக நடப்பது தான்.
ஆனால் ஒருவர் செத்துப் போய் இருபது நிமிஷங்கள் ஆன பிறகு அதை எடுத்து ஒரு மெஷினில் வைத்து செயல்பட வைத்துப் பிறகு ஒரு நோயாளிக்குப் பயன்படுத்துவது உலகில் இப்போது தான் முதல் தடவையாக நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள செயிண்ட் வின்செண்ட் ஆஸ்பத்திரி நிபுணர்கள் தான் இதை சாதித்துள்ளனர். இது ஏதோ திடீரென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.
இருதயப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இருதயம் |
இந்த ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி “ இருதயப் பெட்டி” என்னும் யந்திரத்தை உருவாக்கியுள்ளனர். இறந்து போனவரிடமிருந்து எடுக்கப்பட்ட செயலற்ற இருதயம் இப்பெட்டியில் வைக்கப்படுகிறது.
இப்பெட்டியில் இருக்கும் போது தகுந்த வெப்பம் அளிக்கப்படுகிறது. இருதயம் மறுபடி துடிக்கும்படி செய்யப்படுகிறது. நிபுணர்கள் உருவாக்கிய விசேஷ திரவம் ஊசி மூலம் இருதயத்துக்குள் செலுத்தப்படுகிறது. இத் திரவம் இந்த இருதயம் செயல்படாது இருந்த நிமிஷங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை அகற்றுகிறது. சுமார் நான்கு மணி நேரம் இருதயம் இந்தப் பெட்டிக்குள்ளாக இருந்தபடி செயல்படுகிறது. அதன் பின்னரே தேவையான நோயாளிக்குப் பொருத்தப்படுகிறது.
சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கியுள்ள முறையின் மூலம் இதுவரை மூன்று பேர் புது இருதயம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்னும் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை.
செத்துப்போனவரின் உடலிலிருந்து எவ்வளவு நேரத்துக்குள்ளாக இருதயத்தை வெளியே எடுக்க வேண்டும் என்பது இன்னும் தெரியவரவில்லை. 30 நிமிஷத்துக்குப் பிறகும் எடுக்க முடியும் என்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
வெளியே எடுக்கப்படும் இருதயத்தைப் பாதுகாப்பதில் வருகிற ஆண்டுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்று டாக்டர் குமுத் திதாள் கூறினார். நேபாளத்தைச் சேர்ந்த அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்.
சிட்னி ஆஸ்பத்திரி டாக்டர்கள் உருவாக்கிய முறையை உலகில் வேறிடங்களிலும் பயன்படுத்துகிற நிலைமை உருவானால் ஏராளமான நோயாளிகள் பயன்பெறும் நிலைமை உருவாகும்.
2 comments:
சார், ஃபிரான்ஸ் நாட்டில் செயற்கை இருத்தமே தயாரித்து, அதைப் பொருத்திக்கொண்ட நபர் சுமார் 70 நாட்கள் உயிர் வாழ்ந்தார். அதை வேறு யாருக்காவது பொருத்தினார்களா? வேறு முன்னேற்றம் உள்ளதா? தவிர இருதயம் என்பது ஒரு பம்ப்தானே. அதைச் செயற்கையாகச் செய்வதில் இவ்வளவு சிக்கல் இருப்பது ஏன்?
அடுத்து, முடிந்தால் 'பயானிக் ஐ' பற்றியும் எழுதுங்களேன்.
சரவணன்
இனி, வரும் காலங்களில் மனிதனுக்கு மரணம் என்பது இல்லையா ?
Post a Comment