Oct 24, 2014

சந்திரனுக்கு கிளம்பிய சீன விண்கலம்: 9 நாளில் பூமிக்குத் திரும்பும்

Share Subscribe
சீனா தனது சக்திமிக்க ராக்கெட் மூலம் சந்திரனை நோக்கி ஒரு விண்கலத்தைச் செலுத்தியுள்ளது. இந்த ஆளில்லாத விண்கலம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று உயரே கிளம்பியது.

இந்த விண்கலம் சந்திரனை அடைந்து சந்திரனை  வட்டமடித்து விட்டு பூமியை நோக்கித் திரும்பும். பின்னர் அதன் ஓரு பகுதி சீனாவில் குறிப்பிட்ட இடத்தில் வந்து இறங்கும்.

சந்திரனுக்குப் போய் அங்கு எதுவும் செய்யாமல் பூமிக்குத் திரும்புவானேன் என்று கேட்கலாம். உண்மையில் இந்த விண்கலம் பரிசோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திரனை நோக்கி சீனாவின் விண்கலம்
 உயரே கிளம்புகிறது. Credit: Xinhua 
சந்திரனில் போய் இறங்கி அங்கிருந்து மண்ணையும் கல்லையும் அள்ளிக் கொண்டு வரும் வகையில் சீனா 2017 ஆம் ஆண்டில் ஒரு நவீன விண்கலத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஒத்திகையாகவே இப்போதைய  விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த  விண்கலத்தின் பெயர் சாங்யி - 5 T1 (Chang'e) என்பதாகும்.

மேலும் விளக்கமாகக் கூறுவதானால் சந்திரனுக்கு அனுப்பப்படுகின்ற விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்புவதை உறுதிப்படுத்திக் கொள்வதே இப்போதைய திட்டத்தின் நோக்கமாகும்,

சந்திரனில் இறங்குகின்ற விண்கலத்தை அங்கிருந்து  மறுபடி மேலே கிளம்பும்படி செய்வதில் உள்ள பிரச்சினையை விட சந்திரனிலிருந்து அதி வேகத்தில் பூமிக்குத் திரும்புகின்ற ஆளில்லா விண்கலத்தை பத்திரமாகக் கீழே இறங்குபடி செய்வதில் தான் பிரச்சினை அதிகம்.

சந்திரனை சுற்றி விட்டு
பூமிக்குத் திரும்ப இருக்கும் விண்கலப் பகுதி
Credit: China Space.com
இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்த பின்னணியில் சீனா தனது விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியுள்ளது. எனினும்  எங்களாலும் சாதிக்க முடியும் என்ற தோரணையில் சீனா இந்த விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியுள்ளதாகக் கூற முடியாது.

ஏனெனில் சீனா கடந்த 2007 ஆம் ஆண்டில் சாங்யி - 1 விண்கலத்தையும் 2010 ஆம் ஆண்டில் சாங்யி -2 விண்கலத்தையும் சந்திரனுக்கு அனுப்பியது. பின்னர் 2013ஆம் ஆண்டில் சீனா அனுப்பிய சாங்யி -3 விண்கலம் சந்திரனின் தரையில் இறங்கி நடமாடியது.

சந்திரனுக்கு ரஷியா 1970 ஆம் ஆண்டில் அனுப்பிய
ஆளில்லா லுனா -16 விண்கலம்
ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) 1970  ஆம் ஆண்டில் அனுப்பிய ஆளில்லா லூனா -16 விண்கலம் சந்திரனில் இறங்கி கல்லையும் மண்ணையும்  எடுத்து வந்து சாதனை புரிந்தது. ரஷியாவின்  லூனா -20 விண்கலம் 1972 ஆம் ஆண்டிலும் லூனா -24 விண்கலம் 1976 ஆம் ஆண்டிலும் இதே சாதனையைப் புரிந்தன.

அமெரிக்கா 1969 முதல் 1972 வரை ஆறு தடவை சந்திரனுக்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்பி சந்திரனிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வரச் செய்தது.

4 comments:

Anonymous said...

ஐயா வணக்கம்

விண்வெளி தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத அக்கால கட்டத்திலேயே ரஷியாவும் , அமெரிக்காவும் போட்டி போட்டுக்கொண்டு சந்திரனுக்கு விண்கலங்களையும் மனிதர்களையும் அனுப்பிக் கொண்டிருந்தன ஆனால் இப்போது விண்வெளி தொழில்நுட்பம் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு முன்னேறி இருக்கும் இக்கால கட்டத்தில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆகியும் ரஷியாவும் , அமெரிக்காவும் சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பவில்லையே ஏன், இதற்கு ஏதேனும் குறிப்பிடும்படியான காரணம் இருக்கிறதா

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
உலகில் யார் பெரியவன் என்ற ரீதியில் அப்போது ரஷியா(சோவியத் யூனியன்) இடையே போட்டா போட்டி இருந்தது. ரஷியா அடுத்தடுத்து விண்வெளியில் சாதனைகளை நிகழ்த்தி வந்தது. அப்பின்னணியில் தான் அமெரிக்க அதிபர் கென்னடி சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிக் காட்டுவோம் என்று சபதம் செய்தார். அமெரிக்கா அந்த சபதத்தை நிறைவேற்றிக் காட்டியது.
ஆகவே அந்த போட்டா போட்டியில் அறிவியல் நோக்கு என பெரிதாக எதுவும் இல்லை.
சந்திரனுக்கு ஆளை அனுப்புவது என்பது பெரும் செலவு பிடிக்கிற சமாச்சாரம். மனிதன் செய்யக்கூடியதை ஆளில்லா விண்கலங்களே செய்ய முடியும் என்பதால் மனிதனை அனுப்புவதற்கான அவசியமும் இல்லை.
கவுரப் பிரச்சினைஎன்றால் ஒரு நாடு செலவைப் பார்க்காது.இப்போது இந்தியா-சீனா இடையே அப்படி ஒரு போட்டா போட்டி இருக்கிறது. ஆகவே தான் மங்கள்யானை அனுப்பினோம்.

Anonymous said...

Good

நாடோடிப் பையன் said...

Such rocket launches also have several military applications. For example, ICBM (Inter Continental Ballistic Missiles) are nothing but rocket launchers with bombs as their payload. The launching exercises for satellites can also be used for space based warfare.

Post a Comment