Sep 21, 2014

விண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள்

Share Subscribe
ஜெர்மனியில் ராக்கெட் நிபுணர் பான் ப்ரான் பிரபல வி-2 ராக்கெட்டை  உருவாக்கிய காலத்திலிருந்து கடந்த சுமார் 70 ஆண்டுகளில் எண்ணற்ற பிராணிகளும் பூச்சிகளும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை உயிருடன் பூமிக்கு மீட்கப்பட்டது என்பது அபூர்வமே.

ஆரம்ப காலத்தில் விண்வெளிப் பிராந்தியம் என்பது எப்படிப்பட்டது ? மனிதன் விண்வெளிக்குச் சென்றால் எதிர்ப்படக்கூடிய ஆபத்துகள் யாவை என்று அறிந்து கொள்ளும் நோக்கில் தான் இவை உயரே அனுப்பப்பட்டன.

ரஷிய விண்கலத்தில் சென்ற லைகா
விண்வெளிக்குச் சென்று மரித்த நாய்கள் பல உண்டு. பூமிக்கு உயிருடன் திரும்பிய நாய்களும் உண்டு. விண்வெளிக்குச் சென்ற நாய்களில் லைக்கா உலகெங்கிலும் பிரபலம் பெற்றது. 1957 ஆம் ஆண்டில் ரஷியாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் வைத்து உயரே செலுத்தப்பட்ட லைகாவின் படம் உலகில் பல பத்திரிகைகளில் வெளியாகியது.

இதன் பிறகு 1961 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரஷியாவின் யூரி ககாரின் வோஸ்டாக் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் அவரேயாவார்.

அமெரிக்காவும் சரி, நாய், குரங்கு போன்ற பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்து சோதனைகளை நடத்திய பின்னரே முதல் அமெரிக்கரை விண்வெளிக்கு அனுப்பியது.
அமெரிக்கா அனுப்பிய குரங்கு
பிரான்ஸ்  விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது கிடையாது என்றாலும் அது தனது ராக்கெட்டுகளில் பிராணிகளை விண்வெளிக்கு அனுப்பியது.

  விண்வெளிக்கு முதல் சீனரை அனுப்பியதற்கு முன்னர்  சீனாவும் இவ்விதமே பிராணிகளை அனுப்பிச் சோதனைகளை நடத்தியது.
தேனீக்கள். விண்வெளிக்கு அமெரிக்க அனுப்பியதற்கு முன்னர்
அடுத்து விண்வெளிக்கு நாய் அல்லது குரங்கை அனுப்பப்போகும் நாடு இந்தியாவாக இருக்கும். ஏனெனில் விண்வெளிக்கு இந்திய ராக்கெட் மூலம் விண்வெளி வீரரை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியா உருவாக்கப் போகும் விண்கலத்தில் முதலில் செல்வது  நாயாக இருக்கலாம்.அல்லது குரங்காகவும் இருக்கலாம்.

விண்வெளி நிலைமைகள் எவ்விதமானவை என்று அறியப்பட்ட பிறகும் வேறு  நோக்கிலான ஆராய்ச்சிக்காக அமெரிக்காவும் சரி, ரஷியாவும் சரி அவ்வப்போது எலிகளையும் பூச்சிகளையும் அனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.கடந்த பல ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல பிராணிகளையும் பூச்சிகளையும் வைத்து நீண்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜூலையில் ரஷியா பட்டுப்புழு முட்டைகள், பழ வண்டுகள், பல்லிகள் ஆகியவற்றைக் கொண்ட விண்கலத்தை உயரே செலுத்தியது. மொத்தம் ஐந்து பல்லிகளில்  நான்கு பெண் பல்லிகள். ஒரு ஆண் பல்லி.
ரஷியா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பிய  பல்லிகள்
விண்வெளியில் உள்ள எடையற்ற நிலையில் இனப்பெருக்கம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று கண்டறிவது இதன் நோக்கமாக இருந்தது. உடனே மேற்கத்திய ஏடுகள் இதற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் அளித்தன. சில மேற்கத்திய ஊடகங்கள் “விண்வெளி செல்லும் செக்ஸ் பல்லிகள்’ என்றும் தலைப்பிட்டன.

விண்வெளியில் செலுத்திய பின்னர்  ஒரு கட்டத்தில் அந்த விண்கலத்துடன் தொடர்பு அறுந்தது. பின்னர் மீண்டும் தொடர்பு சாத்தியமாகியது. இரண்டு மாதம் இருக்க வேண்டிய விண்கலம் 44 நாட்கள் இருந்து விட்டு செப்டம்பர் முதல் தேதி பூமிக்குத் திரும்பியது. பழ வண்டுகள் உயிரோடு இருந்த போதிலும் பல்லிகள் செத்துப் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பல்லிகள் மரித்தன என்ற செய்தியை மேற்கத்தியப் பத்திரிகைகள் ’செக்ஸ் பல்லிகள் மரித்தன ’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.

விண்வெளியிலான இனப் பெருக்க ஆராய்ச்சிக்கு ஒரு நோக்கம் உண்டு. மனிதன் பல மாத காலம் விண்வெளியில் நீண்ட பயணம் மேற்கொள்கின்ற கட்டம் ஏற்பட்டால் விண்கலத்துக்குள்ளாகவே கோழிகளை வளர்த்து, காய்கறிகளை பயிரிட்டு உணவுத் தேவையை ஓரளவேனும் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.

கடந்த காலத்தில் பலவகையான தானியங்கள் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவற்றை விசேஷ பாத்திகளில் வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

உலகில் எண்ணற்ற கால்நடைப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் நோக்கமே இனப் பெருக்கம் தான். இவற்றில் உள்ள காளைகளை  செக்ஸ் காளைகள் என்றோ செக்ஸ் கிடாக்கள் என்றோ யாரும் வருணிப்பதில்லை.

புலி, சிங்கம் என வன விலங்குகளுக்கான காப்பங்களும் உள்ளன. அவற்றின் இனம் அழிந்துவிடாமல் காப்பதே அதன் நோக்கம். இனப் பெருக்கம் என்பது கீழ்த்தரமான  நோக்கில் காணப்பட வேண்டிய ஒன்றல்ல.

2 comments:

Anonymous said...

ஐயா வணக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இத்தனை வருடங்களுக்கான ஆக்ஸிஜனை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் புவியீர்ப்பு விசையற்ற நிலையில் ஆக்ஸிஜன் விண்வெளி ஓடம முழுவதும் எவ்விதம் நிறைந்திருக்கும்

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தண்ணீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் யந்திரங்கள் உள்ளன. ( இரு பங்கு ஹைட்ரஜன் வாயுவும் ஒரு பங்கு ஆக்சிஜனும் சேர்ந்தது தான் தண்ணீர்). தவிர, ஆபத்துக்கு இருக்கட்டும் என்ற நோக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் அடங்கிய டாங்கிகளும் உள்ளன. அவ்வப்போது உணவு மருந்து முதலியவற்றை மேலே எடுத்துச் செல்லும் விண்கலத்திலும் ஆக்சிஜன் டாங்கிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆகவே பிரச்சினை இல்லை.

Post a Comment