மங்கள்யானைப் பொருத்த வரையில் அடுத்த முக்கிய நடவடிக்கை அதன் வேகத்தைக் குறைப்பதாகும். அப்படி வேகத்தைக் குறைத்தால் தான் அந்த விண்கலம் செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பிக்கும். மங்கள்யான் இப்போது மணிக்கு சுமார் 80,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது மணிக்கு சுமார் 6,000 கிலோ மீட்டராகக் குறைக்கப்பட்டாக வேண்டும்.
விண்கலத்தில் உள்ள பிரதான எஞ்சின் சுமார் 300 நாட்கள் செயல்படாமல் இருந்ததாகும். மங்கள்யான் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாயை நெருங்கிய பின்னர் இங்கிருந்து ஆணை பிறப்பித்தால் அந்த ஆணையின் சிக்னல்கள் போய்ச் சேரவே சுமார் 10 நிமிஷம் ஆகும். எனவே சில நாட்கள் முன்கூட்டியே ஆணை பிறப்பிக்கப்படும். அது கம்ப்யூட்டரில் பதிவாகி உரிய நேரத்தில் எஞ்சினை இயக்க கம்ப்யூட்டரே ஆணை பிறப்பிக்கும்.
எஞ்சினுடன் இணைந்த டாங்கிகள் ஒன்றில் திரவ எரிபொருளும் மற்றொன்றில் ஆக்சிஜன் அடங்கிய பொருளும் இருக்கும். பிசகு ஏற்பட்டு எஞ்சின் இயங்காமல் போவதற்கு சிறிது கூட வாய்ப்பில்லை என்று இஸ்ரோ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மங்கள்யான் வளைந்த பாதையில் சென்றுள்ளதைக் கவனிக்கவும். MOI என்பது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான் சிக்குவதைக் குறிப்பதாகும்.( படம்:ISRO) |
ஆனால் அதற்குப் பிறகு இது விஷயத்தில்தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல. 2008 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதில் வெற்றி கண்ட இஸ்ரோவுக்கு இதில் அனுபவம் உள்ளது. சந்திரனை நெருங்கிய பின்னர் சந்திரயானின் வேகத்தை நன்கு குறைத்ததன் பலனாகவே சந்திரயான் விண்கலம் சந்திரனின் பிடியில் சிக்கியது.
ஆகவே மங்கள்யானை செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்வதில் பிரச்சினை இராது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்புவதற்கு இடம் இருக்கிறது.
அடிப்பிரச்சினை இது தான். நெடுஞ்சாலையில் கார் அல்லது லாரி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள கட்டிட வாசலில் வண்டி போய் நிற்க வேண்டும்.
சற்று தொலைவிலிருந்தே ஓரம் கட்ட ஆரம்பித்து வண்டியின் வேகத்தைக் குறைத்தால் தான் கட்டிட வாசலில் வண்டியை கொண்டு போய் நிறுத்த முடியும். ஆனால் வண்டியின் வேகத்தைக் குறைக்காமலே இருந்தால் வண்டி தொடர்ந்து நெடுஞ்சாலையில் தான் போய்க் கொண்டிருக்கும். செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவது என்பது கிட்டத்தட்ட இது மாதிரி தான்.
ஆனால் செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கும் வகையில் விண்கலத்தை ஓரம் கட்ட அவ்வப்போது சிறிய பீச்சு கருவிகளை இயக்கினர். விண்கலத்தின் பாதையை சிறிதளவுக்கு மாற்றுவதற்கு இந்த பீச்சு கருவிகளே போதும். இப்போது மங்கள்யான் மிக நன்றாகவே செவ்வாயின் சுற்றுப்பாதையை நெருங்கி விட்டது.
மங்கள்யான் செவ்வாயை எவ்விதம் சுற்றி வரும் என்பதை இப்படம் விளக்குகிறது. ( படம்: நாஸா) |
ஒரு விண்கலம் செவ்வாயை எட்டிய பின் செவ்வாயில் தரை இறங்குவது என்பது மேலும் சிக்கலான விஷயமாகும். மங்கள்யானை செவ்வாயின் தரையில் இறக்கும் திட்டம் எதுவும் கிடையாது.
8 comments:
thanks for share this info
சார், எனக்கு ஒரு சந்தேகம். சந்திரனின் பொருளின் எடை பூமியில் உள்ளதை போல 6 ஒரு மடங்கு என்கிறார்கள். பூமியில் 60 கிலோ மனிதன் சந்திரன் 10 கிலோ (பூமியில் 10 கிலோ எடை கொண்ட பையன் தரையில் சாதாரணமாக நடக்கும் போது) என்றால் ஏன் ஒரு மாதிரி குதித்து குதித்து (மிதந்த மாதிரி)நடங்கிறார்கள்?
Anonymous
அமெரிக்க விண்வெளி வீரர்கள் குதித்து குதித்து நடந்ததற்கு பல காரணங்கள் உண்டு. சந்திரனில் ஈர்ப்பு சக்தி குறைவு. இரண்டாவதாக அவர்கள் அணிந்திருந்த உடையின் எடை. சந்திரனின் தரை. எனவே அவர்களால் உறுதியாகக் காலுன்றி நடக்க இயலவில்லை. சந்திரனில் இவ்விதமாகத் தான் இருக்கும் என்று ஊகித்து அதன்படி அவர்களுக்கு முன்கூட்டிப் பயிற்சி அளிக்கப்பட்டது.
Iya Vega kuraippuku oru example sonnenga parunga athu super iya!
மங்கல்யான் பற்றிய updates ரொம்ப interesting ஆ இருக்கு .thank you சார்.
மிகவும் நன்றி சார்
தமிழ் பதிவுலகின் முக்கியமான பதிவு உங்களது. தொடருங்கள்.
பாண்டியன்
Thank You Sir.
Post a Comment