Aug 27, 2014

எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்யும் விண்கலம்

Share Subscribe
 நாஸா அனுப்பிய ஒரு விண்கலம் எட்டு ஆண்டுகளாகப் பயணம் செய்து கொண்டிருக்கிறது. 2006  ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த விண்கலம் போகிறது, போகிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் ஆமை வேகத்தில் செல்லவில்லை. மணிக்கு சுமார் 65 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது

அது இன்னும் சுமார் ஓர் ஆண்டு பயணம் செய்தாக வேண்டும். அது போய்ச் சேர வேண்டிய இடம் புளூட்டோ.  புளூட்டோ சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது.
 நியூஹொரைசன்ஸ் விண்கலம் நெப்டியூனின் சுற்றுப்பாதையை
கடந்துள்ளதை இப்படம் காட்டுகிறது.
ஆளில்லா விண்கலமான நியூஹொரைசன்ஸ் இப்போது நெப்டியூன் என்னும் கிரகத்தின் சுற்றுப்பாதையைக் கடந்து சென்றுள்ளது. அந்த அளவில் அது 440 கோடி கிலோ மீட்டர்  தூரத்தைக் கடந்து சென்றுள்ளது.  இன்னும் சுமார் 37 கோடி கிலோ மீட்டர்  பயணத்துக்குப் பிறகு நியூஹொரைசன்ஸ் அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி  புளூட்டோவை சென்றடையும்.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில்
புளூட்டோதான் மிகச் சிறியது.
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்துக் கொண்டால் ஒன்பது கிரகங்கள் உள்ளன. நாஸா முன்னர் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை  நெருங்கிச் சென்று படங்களைப் பிடித்து அனுப்பின. அந்த கிரகங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் பாக்கியாக இருந்தது.  சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புளூட்டோ தான் மிகச் சிறியது.

அண்மைக் காலம் வரை புளூட்டோ ஒரு கிரகமாகக் கருதப்பட்டது. இப்போது அது குட்டிக் கிரகம் என ”பதவி இறக்கம்” செய்யப்பட்டுள்ளது.

சக்திமிக்க டெலஸ்கோப் மூலம் பார்த்தாலும் புளூட்டோ பற்றி விரிவாக அறிந்து கொள்ள இயலவில்லை. ஆகவே புளூட்டோ பற்றி நியூஹொரைசன்ஸ் தெரிவிக்கக்கூடிய தகவல்களை அறிய விஞ்ஞானிகள் மிக ஆவலாக இருக்கின்றனர்.

நியூஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள பெரும்பாலான கருவிகள் இப்போது “ உறக்க நிலையில்” வைக்கப்பட்டுள்ளன. அதாவது அவை செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புளூட்டோவை நெருங்கும் சமயத்தில்  அவை செயல்படுத்தப்படும்.

விண்கலத்தில் உள்ள கருவிகள் செயல்படுவதற்கு மின்சாரம் தேவை. இதைக் கருத்தில் கொண்டு அணுசக்தி பாட்டரி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டரியில் புளூட்டோனியம்-238 என்னும் அணுசக்திப் பொருள் 10 கிலோ அளவுக்கு  உள்ளது. ( புளூட்டோனியம் கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கு புளூட்டோவின் பெயர் அதற்கு வைக்கப்பட்டது)

நியூஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்த பின்னர் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். புளூட்டோவுக்கும் மிக அப்பால் வால் நட்சத்திரங்கள் அடங்கிய குய்பெர் வட்டாரத்துக்கும் அந்த விண்கலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் வியாழன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பயனீர்-1 பயனீர்-2, வாயேஜர் -1, வாயேஜர் -2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் கோடானு கோடி கிலோமீட்ட்ர் தொலைவைத் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. 

14 comments:

Jeychandran said...

1) round-trip time, 8 மணி நேரம் என்று படத்தில் உள்ளதே, அதனால் விண்கலம் இப்போது எங்கே இருக்க வேண்டும் என்பது 8 மணி நேரத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்குமா? இதனால் தரை இறங்கும்போது சிக்கல் வராதா? இவ்வளவு ஆண்டுகள் தானியங்கியாய் (ஆட்டோ-பைலட்)65000km வேகத்தில் பறந்திருந்தாலும் துல்லியமான முடிவுகளை எடுக்க இயலுமா?
2) விடுபடுதிசைவேகம் மற்றும் தரையிறங்கும் நேரம் தவிர பெரும்பாலும் சிறிதளவு சக்தியுடனே விண்கலம் இயங்கிடலாம் தானே? எனவே வழக்கமான திட/திரவ எரிபொருட்கள்+சோலார் பேனல்களும் தவிர்த்து அணு எரிபொருள் உபயோகிப்பதன் அவசியம் என்ன?
3) அணுக்கழிவுகளை பாதுகாப்பாக விண்ணில் வெளியேற்றுதல் சாத்தியமா?

சீலன் said...

தகவலுக்கு நன்றி..

என்.ராமதுரை / N.Ramadurai said...

Jeychandran
round-trip time என்பது தகவல் தொடர்பு சம்பந்தப்பட்டது. அமெரிக்காவில் உள்ள் கண்ட்ரோல் செண்டரிலிருந்து ஆணை பிறப்பித்தால் சிக்னல்கள் (ஒளி வேகத்தில்) புளூட்டோவுக்குப் போய்ச் சேர 4 மணி நேரம் ஆகும். பதில் வருவதாக வைத்துக் கொண்டால் மேலும் 4 மணி நேரம். இது தான் round trip time.எட்டுமணி நேர கணக்கு.
பெரும்பாலான விண்கலங்களில் விண்கலத்தின் கம்ப்யூட்டர்களிலேயே முன்கூட்டி ஆணைகளைப் பதிவு செய்து விடுவர்.
நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவில் தரை இறங்கப் போவதில்லை. புளூட்டோவை அருகாமையில் க்டந்து செல்லும்.
2.பூமியின் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் புளூட்டோ இயற்கை சக்திகளின் அடிப்படையில் பறந்து சென்று கொண்டிருக்கிறது. எரிபொருள் தேவையில்லை. பாதையில் திருத்தம் செய்வதற்கு மட்டுமே எரிபொருள் தேவை.
வியாழன் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதென்றாலே சோலார் பேனல் லாயக்கில்லை. வியாழன் இருக்கின்ற தூரத்திலிருந்து பார்த்தால் சூரியன் பட்டாணி சைஸ் ஒளிப்புள்ளியாகத்தான் தெரியும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க இயலாது.
விண்கலத்தில் பல கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. ஆகவே தான் அணுசக்தி பாட்டரி. இவையும் கூட சுமார் 30 அல்லது 40 ஆண்டுகள் நன்கு செயல்படும் (அரை ஆயுளைப் பொருத்து).
3.அணுசக்தி பாட்டரிகளை கழித்துக் கட்டும் பிரச்சினை இல்லை. 500 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் மனுஷன் யாரும் இல்லை. அவ்வித பாட்டரிகளிலிருந்து வெளிப்படுகிற கதிர்வீச்சு அளவு 40 அல்லது 50 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் குறைவாக இருக்கும். தவிர, விண்வெளி என்பதே ஆபத்தான -- அணுசக்தி பாட்டரி வெளியிடக்கூடிய கதிர்வீச்சை விட-- கதிர்வீச்சு நிறைந்தது.
ராமதுரை

Jeychandran said...

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்!

Anonymous said...

Sir...
" முன்னர் வியாழன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பயனீர்-1 பயனீர்-2, வாயேஜர் -1, வாயேஜர் -2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் கோடானு கோடி கிலோமீட்ட்ர் தொலைவைத் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. "....means they have already crossed PLUTO?
-Saran, Tirupur.

என்.ராமதுரை / N.Ramadurai said...

அந்த நான்கு விண்கலங்களும் என்றோ புளூட்டோவைத் தாண்டிச் சென்று விட்டன. அவற்றில் வாயேஜர் - 1 விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டே வெளியேறி அண்டவெளியில் சென்று கொண்டிருக்கிறது. இப்போது அது பூமியிலிருந்து சுமார் 1925 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அது நாஸாவினால் 1977 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டதாகும். என்றாவது பூமி அழிந்தாலும் கூட மனிதனின் படைப்பின் அடையாளமாக அது அண்டவெளியில் சென்று கொண்டிருக்கும்.

Ganesh said...

Sir...
" முன்னர் வியாழன் கிரகத்துக்கும் அப்பால் இருக்கும் கிரகங்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட பயனீர்-1 பயனீர்-2, வாயேஜர் -1, வாயேஜர் -2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் கோடானு கோடி கிலோமீட்ட்ர் தொலைவைத் தாண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. ".

இன்னும் அந்த விண்கலங்களிலிருந்து தகவல்கள் கிடைகின்றனவா?

இல்லையெனில் எப்படி அவை இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன என்பது உறுதி படுத்த படுகிறது?

என்.ராமதுரை / N.Ramadurai said...

Ganesh
இந்த நான்கு விண்கலங்களிலும் RTG எனப்படும் அணுசக்திக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்விதக் கருவியில் புளூட்டோனியம்-238 அணுசக்திப் பொருள் அடங்கியிருந்தது. அதுவே விண்கலங்கள் செயல்படுவதற்கான மின்சாரத்தை அளித்து வந்தது. இக்கருவியின் மின் உற்பத்தித் திறன் நாளடைவில் குறையக்கூடியதாகும். 1972 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட பயனீர் 10 விண்கலத்திலிருந்து 2003 ஆம் ஆண்டில் கடைசி சிக்னல் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டில் அதனுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. பயனீர் 10 இப்போது சுமார் 1500 கோடி கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ளது. பயனீர் -11 கதையும் அதேதான்
வாயேஜர் 1 வாயேஜர் 2 கலங்கள் இன்னமும் சிக்னல்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. அவையும் மிக மிக அப்பால் உள்ளன.உதாரணமாக வாயேஜர் - 1 கடந்த ஆண்டு நிலவரப்படி 1800 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தது.
( என்னுடைய முந்தைய பதிலில் பயனீர் 1 பயனீர் 2 என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அவை பயனீர் 10 பயனீர் 11 என்று இருக்க வேண்டும்)

I am Swa said...

வாயேஜெர் அண்ட வெளியில் பறந்து கொண்டிருப்பதால்
அதற்கு மோதல் போன்ற சேதங்கள் ஏற்படாதா
ஒரு வேலை அது வேற்றுகிரக உயிர்கள் இருந்து அவர்கள் கண்டால் அது ஆபத்தாக முடியாதா ஐயா

என்.ராமதுரை / N.Ramadurai said...

Swa
விண்வெளி என்பது மிக விஸ்தாரமானது. அது சென்று கொண்டிருக்கும் பாதையில் கிரகங்கள் எதுவும் இல்லை. மிஞ்சிப் போனால் அண்டவெளி தூசு வாயேஜர் விண்கலத்தின் கருவிகள் மீது படியலாம்.
வேற்றுக் கிரகம் இருக்குமானால் அது பல லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் தான் இருக்க முடியும். அப்படி ஒரு வேளை அது வேற்றுலகவாசியின் கையில் சிக்கினால் நல்லது தான். வாயேஜரில் பூமி மற்றும் மனிதர்கள் பற்றிய விவரம் அடங்கிய CD வைக்கப்பட்டுள்ளது. வேற்றுலகவாசிகள் அதில் அடங்கிய தகவல்களை அறிந்து கொண்டு பூமியுடன் தொடர்பு கொள்ள முற்பட்டால் வரவேற்கத்தக்கது தான். CD வைக்கப்பட்டுள்ளதன் நோக்கமே அது தான்.

I am Swa said...

sir i placed order in nhm.com for 3 books of urs but some books are out of stock of urs

என்.ராமதுரை / N.Ramadurai said...

Swa
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுகிறேன். ஆவன செய்யும்படி அவர்களிடம் கூறுகிறேன்.

Unknown said...

வணக்கம்
நியூஹொரைசன்ஸ் 440 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்றுள்ளது, பூமியில் இருந்து எப்படி விண்கலத்தை இயக்குகிறார்கள், 440 கோடி கிலோ மீட்டர் என்றால் எப்படி இயக்க முடியும் என்ன தொழில்நுட்பம் தயவு செய்து வவிளக்கும்.

என்.ராமதுரை / N.Ramadurai said...

Mano haran
கார், விமானம் ஆகியவை பயணம் செய்ய எரிபொருள் தேவை. ஆனால் ஒரு விண்கலம் விண்வெளியில் செல்வதற்கு எரிபொருள் தேவையில்லை.ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட வேகம் காரணமாக அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். பாதையில் சிறு மாறுதல்களைச் செய்வதற்கு மட்டும் எரிபொருள் தேவை. விண்கலத்திலேயே இதற்கான மிகச் சிறிய ராக்கெட்டுகள் இருக்கும். இவ்ற்றை சில வினாடி இயக்கினாலேயே போதும். இந்த சிறிய ராக்கெட்டுகளை இயக்க பூமியிலிருந்து சிக்னல் மூலம் ஆணை பிறப்பிப்பார்கள்.
பூமியுடன் விண்கலம் சிக்னல் வடிவில் தொடர்பு கொள்ள மின்சாரம் தேவை. இதற்கென விண்கலத்தில் அணுசக்தி பாட்டரிகள் இருக்கும். பூமியிலிருந்து விஞ்ஞானிகள் அனுப்பும் சிக்னல்கள் 440 கோடி கிலோ மீட்டர் என்ன, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் கூடச் செல்லும்.
விண்கலத்தின் பாதை முன்கூட்டி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு நிறைய கணக்குகள் போடவேண்டும். பல விஷயங்களையும் திட்டமிட வேண்டும். இதற்கே சில ஆண்டுகள் பிடிக்கும். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு தான் விண்கலம் செலுத்தப்படுகிறது.

Post a Comment