Pages

Aug 25, 2014

சந்திரனின் மறுபுறம் எப்படி இருக்கும்?

வலைப்பதிவு வாசகர் ஒருவர் சந்திரனின் மறுபுறம் எப்படி இருக்கும் என்று கேட்டிருந்தார். உண்மையில் சந்திரனின் மறுபுறம் வித்தியாசமாகத்தான் உள்ளதாகப் படங்கள் காட்டுகின்றன.

பூமி தனது அச்சில் சுழல்கிறது. பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அதை ஒரு நாள் என்கிறோம்.  சந்திரனும் தனது அச்சில் சுழல்கிறது. ஆனால் சந்திரனில் பகல் என்பது சுமார் 14 நாள். இரவு என்பது சுமார் 14 நாள். பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச் சுழல்கிறது.

சந்திரன் தனது அச்சில் சுழன்றாலும் எப்போதும் சந்திரனின் ஒரு புறத்தைத் தான் நாம் காண்கிறோம். சந்திரனின் மறுபுறத்தைக் காண முடிவதில்லை.

 வீட்டில் குளோப் இருந்தால் அல்லது ஏதாவது உருண்டையான பொருள் இருந்தால் அதை லேசாக சுழலும்படி செய்யுங்கள். அது ஒரு தடவை சுற்றி முடிக்கும் போது அந்த உருண்டையின் எல்லாப் புறங்களையும் நம்மால் பார்த்து விட முடியும்.
சந்திரன் தனது அச்சில் சுழலும் விதம் 1. முதல் நிலை பௌர்ணமி 2 . கால் சுற்று. 3 .அரை சுற்று. அமாவாசை. 4. முக்கால் சுற்று. மறுபடி சந்திரன் முதல் நிலைக்கு  வந்து சேரும் போது   தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடித்து பழையபடி அதே முகத்தை பூமிக்குக் காட்டுகிறது. (படம்:NR)
ஆனால் சந்திரன்  தனது அச்சில் சுழன்றாலும் அதன் ஒரு புறத்தைத் தான் நம்மால் காண முடிகிற்து. இதற்கு  பூமி தான் காரணம்.

 சந்திரனை விட பூமி வடிவில் பெரியது. ஆகவே பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் விளைவாக பூமியானது சந்திரன் தனது அச்சில் வேகமாக சுழல முடியாதபடி தடுத்து வருகிறது.

 ஒரு கார் நான்கு அடிக்கு ஒரு தடவை பிரேக் போட்டபடி சென்றால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியில் சந்திரன் பிரேக் போட்டபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த நிலையில் சந்திரன் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க 27.322 நாட்கள் ஆகின்றன. சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கும் அதே போல 27.322 நாட்கள் ஆகின்றன. ஆகவே சந்திரன் எப்போதும் தனது ஒரு புறத்தை மட்டும் காட்டுவதாகிறது.

சோவியத் யூனியன் 1959 ஆம் ஆண்டில் செலுத்திய லூனா-3  விண்கலம் சந்திரனை சுற்றிய போது சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பியது. சந்திரனை சுற்றிய முதல் விண்கலம்  அதுவேயாகும். அதன் பின்னர் சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறுபுற்த்தைப் படம் எடுத்தனர்.அமெரிக்காவின் வேறு விண்கலங்களும் சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பின.

 நம்மால் காண முடியாத
சந்திரனின் மறுபுறம்
சந்திரன் வழக்கமாகக்
காட்டும் முகம்
சந்திரனின் மறுபுறம் உண்மையில் வித்தியாசமாகத்தான் உள்ளது. இடது புறத்தில் உள்ள படத்தைக் கவனித்தால் கருமையான திட்டுகள் அதிகம் காணப்படும். வலது புறம் உள்ள படத்தில் அதாவது சந்திரனின் மறுபுறத்தில் கருமைத் திட்டுகள் அனேகமாக இல்லை.

கருமைத் திட்டுப் பகுதிகள் ஓரளவில் சமதரைகள். சந்திரனில் வட்ட வடிவப் பள்ளங்கள் நிறையவே உள்ளன. இவை ஏதோ ஒரு காலத்தில் விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்டவை. சந்திரனின் முன்புறத்தை விட சந்திரனின் பின் புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.

சந்திரனின் மறுபுறத்தில் விண்வெளியை ஆராய்வதற்கென பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை நிறுவினால் அது சிறப்பாக செயல்படும் என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பூமியில் உள்ள பல எலக்ட்ரானிக் கருவிகள் வெளிப்படுத்தும் சிக்னல்களின்  இடையூறு அதற்கு இராது என்று அவர்கள் கூறுகின்றனர்.

சந்திரன் பூமிக்குத்தான் தனது மறுபுறத்தைக் காட்டுவதில்லையே தவிர, சூரியனுக்கு தனது இரு புறங்களையும் காட்டுகிறது. அமாவாசையன்று சந்திரனின் ( நாம் காணாத ) மறுபுறம்  சூரியனை நோக்கியபடி அமைந்திருக்கும்.

அமெரிக்காவுக்கும்  சோவியத் யூனியனுக்கும்  இடையே  கடும்  விரோதம் நிலவிய  காலத்தில்  சந்திரனின்  மறுபுறத்தில்  ரகசியமாக  அணுகுண்டுகளை  வெடித்து  சோதனை  நடத்துவது  பற்றி   அமெரிக்காவில் சிந்திக்கப்பட்டது .  பூமியில்  அணுகுண்டு வெடித்து  சோதனை  நடத்தினால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற காரணத்தால் இவ்விதம் சிந்திக்கப்பட்டது . ஆனால் நல்ல வேளையாக அந்த எண்ணம்  கைவிடப்பட்டது.

11 comments:

  1. பூமி சூரியனை எவ்வாறு சுற்றுகிறது? clockwise or anticlockwise

    ReplyDelete
  2. Ramesh Paramasivam
    சூரியனை பூமி எந்தவிதமாக சுற்றுகிறது என்று கேட்டால் பூமி anticlockwise பாணியில் சூரியனை சுற்றுகிறது.
    எந்த சக்தியால் பூமி சூரியனை சுற்றுகிறது என்பது கேள்வியானால் சூரிய மண்டலம் உருவானபோது பெற்ற வேகம் காரணமாக பூமி தொடர்ந்து சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தைக் குறைக்க அல்லது தடுக்க எதுவும் இல்லை என்பதால் சுற்றிக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. சந்திரனின் மறுபக்கம் ஏன் நமக்கு தொிவதில்லை?

    ReplyDelete
  4. chandru
    இது தொடர்பான கட்டுரையில் நான் வரைந்துள்ள drawing ஐ மறுபடி கூர்ந்து கவனிக்கவும்.பௌர்ணமியன்று நாம் அதே புறத்தைத் தான் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காண்கிறோம். பௌர்ணமி முடிந்து அமாவாசை வரும்போது சந்திரன் தனது அச்சில் பாதி சுற்றி முடிக்கிறது (படம் பார்க்கவும்). அமாவாசையிலிருந்து பௌர்ணமி வருவதற்குள் தனது அச்சில் மீதிப் பாதியை சுற்றி முடிக்கிறது. ஆகவே சந்திரனின் அதே புறம் வந்து நிற்கிறது.

    ReplyDelete
  5. அப்படியானால் அமாவாசை அன்று காண்பது சந்திரனின் மறுபக்கம் அல்லவா?

    ReplyDelete
  6. Leslie Samuel
    இக்கட்டுரையில் நான் வரைந்துள்ள drawing ஐ மறுபடி கவனிக்கவும். படத்தில் சந்திரன் என்பதற்கு கீழ் 1 என்பது பௌர்ணமியன்று சந்திரன் உள்ள நிலை. சந்திரனில் அம்பு குறி இருப்பதைக் கவனிக்கவும். சந்திரன் தனது எந்தப் புறத்தைக் காட்டுகிறது என்று தெளிவாக்கவே அம்புக் குறி இடப்பட்டுள்ளது. படத்தில் 3 என்பது சந்திரன் அமாவாசையன்று எங்கிருக்கும் என்பதைக் காட்டுவதாகும். அம்புக்குறி பூமியைப் பார்த்து உள்ளதைக் கவனிக்கவும்.பௌர்ணமியன்று காட்டிய அதே முகத்தைத் தான் சந்திரன் அமாவாசையன்றும் நமக்குக் காட்டுகிறது.ஆகவே அமாவாசையிலும் கூட சந்திரன் தனது மறுபுறத்தைக் காட்டுவதில்லை.

    ReplyDelete
  7. மிகவும் நல்ல பதிவு,
    சந்திரன், பூமி, சூரியன் இவற்றின் சுழற்சியை மிகவும் எளிமையாகவும், நிதானமாக காட்டும் தெளிவான 3D video, அல்லது WEB Link ஏதாவது இருந்தால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  8. மிகவும் நல்ல பதிவு,
    சந்திரன், பூமி, சூரியன் இவற்றின் சுழற்சியை மிகவும் எளிமையாகவும், நிதானமாக காட்டும் தெளிவான 3D video, அல்லது WEB Link ஏதாவது இருந்தால் உதவியாக இருக்கும்

    ReplyDelete
  9. சந்திரன் தோன்றி எத்தனை வருடங்கள் ஆகின்றன????

    ReplyDelete
  10. சந்திரனில்.
    வாழ்வாதாரத்தை உருவாக்குவோம்.
    வளமாய் வாழ வைப்போம்.
    நன்றி,
    வணக்கம்

    ReplyDelete
  11. நிலவு தனது ஈர்ப்பு விசையை நிறுத்தி விட்டால் பூமியில் என்ன நடக்கும்

    ReplyDelete