கீழே உள்ள படத்தில் இடது புற மேல் மூலையில் இருப்பது தான் திருவாதிரை நட்சத்திரம். ஆங்கிலத்தில் இது Betelguese என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 643 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ( ஓர் ஒளியாண்டு தொலைவு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர்.) அந்த அளவில் சுமார் 643 ஆண்டுகளுக்கு முன்னர் திருவாதிரையிலிருந்து கிளம்பிய ஒளியைத் தான் நாம் இன்று காண்கிறோம். நாம் பாரக்கின்ற நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் அங்கு இருக்கிற்தா என்று சொல்ல முடியாது.
திருவாதிரை நட்சத்திரம் சற்று சிவந்த நிறத்தில் காணப்படும். ஆகவே நீங்கள் அதை கவனிக்காமல் இருக்க முடியாது. வானவியல் நிபுணர்கள் திருவாதிரை நட்சத்திரத்துக்கு பெரிய செம்பூதம் (Super Redgiant) என்று பெயரிட்டுள்ளனர்.
நட்சத்திரங்களுக்கு பிறப்பு, வளர்ச்சி, முதுமை என்றெல்லாம் பல கட்டங்கள் உண்டு. திருவாதிரை இப்போது தனது வளர்ச்சிக் கட்டத்தில் மிகவும் உப்பி பூதாகார வடிவைப் பெற்றுள்ளது. அதனால் தான் அதற்கு செம்பூதம் என்று பெயர்.
இவ்விதம் வடிவில் பெருத்துள்ளதால் அதன் வெளிப்புறம் சிவந்த நிறத்தைப் பெற்றுள்ளது. உண்மையில் திருவாதிரை மிக மிகப் பெரியது.திருவாதிரை நட்சத்திரத்துக்குள் 160 கோடி சூரியன்களைப் போட்டு அடைக்கலாம். அந்த அளவுக்கு அது பெரியது.
காலை 5 மணிவாக்கில் கிழக்கு வானம் இவ்விதமாகக் காட்சி அளிக்கும். இப்படத்தின் இடது புற மேல் மூலையில் இருப்பது திருவாதிரை. கீழே காணப்படுவது சிரியஸ் நட்சத்திரம். படம்:Stellarium |
திருவாதிரை நட்சத்திரம் என்றாவது ஒரு நாள் வெடித்து விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திருவாதிரை நட்சத்திரத்தின் வயது சூரியனின் வயதை விடக் குறைவு தான். ஆனால் நட்சத்திரங்களைப் பொருத்த வரையில் மிக பிரும்மாண்டமான நட்சத்திரத்தின் ஆயுள் குறைவு.
படத்தில் கீழ்ப்புறத்தில் உள்ள சிரியஸ் (Sirius) நட்சத்திரம் வானில் நாம் காணும் நட்சத்திரங்களிலேயே மிகப் பிரகாசமானது. சம்ஸ்கிருதத்தில் இதற்கு லுப்தகம் என்று பெயர். இது சுமார் 9 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
சிரியஸ் நட்சத்திரத்தை விடப் பெரிய நட்சத்திரங்கள் பல உள்ளன. ஒப்பு நோக்குகையில் அது அண்மையில் இருப்பதால் மற்ற நட்சத்திரங்களை விடப் பிரகாசமாகத் தெரிகிறது.
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி
ReplyDeleteநிச்சயம் பார்த்துவிடுவோம்
வாழ்த்துக்களுடன்.....