சென்னைக்கு வடக்கே
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும்
செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது
மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக்
கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.
இப்புதிய விண்வெளிக்
கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க
வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
. .
ராக்கெட்டுகளைச்
செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க
முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக
இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும்.
குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது.
அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.
அது ஏன் கிழக்குக்
கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை
நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு
அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில்
விழுவது தான் நல்லது.
வேறு சில சமயங்களில்
ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட் திசை திரும்பி
கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக்
கேந்திர அதிகாரிகள் ராக்கெட் கடல் பகுதிக்கு
மேலாக இருக்கும் போதே அதை நடுவானில் அழிப்பர்.
இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி
அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர் 25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை
மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.
விண்வெளிக் கேந்திரத்தை
கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம்
உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும்
இது இலவசமாகக் கிடைப்பதாகும்.
பூமியானது பம்பரம்
போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு.
பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது
அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93 மணி நேரம் பிடிக்கிறது.. பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின்
நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.
ஆனால் பூமியின்
நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு
அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு 1569 கிலோ
மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம்
இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற
இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.
உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள்
ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா
முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத
வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில்
உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.
ஐரோப்பிய விண்வெளி
அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக்
கரை ஓரமாக பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில்
5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ
மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம்
மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு
கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.
ஆகவே பூமியின்
நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச்
செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக்
கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா
விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும்
ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக்
கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு
1651 கிலோ மீட்டர்.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில்
விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற
அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின்
முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.
குலசேகரப்பட்டினத்தில்
மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள்
மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த
முடிவதில்லை.
அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய
விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச்
செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.
குலசேகரப்பட்டினத்திலிருந்து
இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது.
அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும்.
இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது.
இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.
டிவி ஒளிபரப்பு,
வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு என பல்வேறு
பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில்
இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி
உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர்
அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து
விடும்.
எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும்
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான்
ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.
இந்த வகை செயற்கைக்கோள்களையும்
இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி
ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த
வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்
3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில்
ராக்கெட் தளம் உள்ளது.
இந்த வகை ராக்கெட்டுகளையும்
குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு
நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.
ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில்
திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம்
8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின்
நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.
ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து
மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம்
எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி
வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து
விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே
என்று இஸ்ரோ கருதலாம்
. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க
செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை
உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.
தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித் தருவது என்பது
உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார்
நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப்
பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.
உலகில் இந்தியா உட்பட
விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச்
செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு
வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம்
என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொடர்பு
செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு
ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம்
குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில்
கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.
தவிர,
பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும்
திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில்
எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு
ஆகும் செலவு வீண் போகாது.
குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது. படம் மற்றும் கூடுதல் தகவல்களுடன் இங்கு வெளியிடப்படுகிறது
31 comments:
நல்ல தகவல்கள் ஐயா! செயற்கைக் கோள்களின் பயன்கள் இன்னும் சரியாக உணரப்படவில்லை. பலரும் இந்த செலவு தேவைதானா என்றே புரியாமல் கேட்கிறார்கள். சிறப்பான விளக்கங்கள் நன்றி
நல்ல உபயோகமுள்ள பதிவு நன்றி அய்யா குலசேகரபட்டினம் இல்லா விட்டால் இந்தியாவில் வேறு எங்கு அமைப்பார்கள் விபரம் உண்டா?
Salahudeen
ஸ்ரீஹ்ரிகோட்டாவுக்கு சற்று மேலே அமைக்கலாம். அதற்கு வடக்கே அமைத்தால் வீண் செலவு தான்.எப்படியும் கிழக்கு கடற்கரை ஓரமாகத் தான் அமைத்தாக வேண்டும்
அய்யா வணக்கம்.
ஸ்ரீஹரிஹோட்டா" திட்டத்திற்கே நில ஆர்ஜிதம் வெகு அதிகம் தேவைப்பட்டது- குறிப்பாக தமிழகம்ாந்திர எல்லைப்பகுதியில் பரவலான இடம் கையகப்பதுத்தப்பட்டது. அந்த அளவு இடம் குலசேகரப்பட்டிணத்தை சுற்றி கிடைக்கபெருமா?
<> K M ABUBAKKAR
KALLIDAIKURICHI 627416
Thanks for your reports,it will useful for the science students.
அருமையான தகவல்கள்..
நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
So useful...Thank you so much
மாலத்தீவில் வைத்து அனுப்பினால் இன்னும் எரிபொருளை சிக்கனம் செய்யலாம். பாதுகாப்பை கட்டுரையாளர் மறந்து விட்டார்.. தும்பா ஏவுதளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஸ்ரீஹரிஹோட்டா எதற்கு சென்றார்கள் ? ராக்கேட் மேலெழும்பும் பொது கிழக்கே செல்லும் ,அதை கட்டுபடுத்த முடியாது , மேலெழும் பொது எரிந்த வற்றை போகும் வழியில் விட்டு செல்லும் ... குலசேகரத்தில் இருந்து அனுப்பினால் இலங்கையில் விழும் , இந்தியாவில் விளுந்தாலே சமாளிக்க முடியாது .
நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்தமான் நிகோபார் தீவுகளில் அமைத்தால் இன்னும் நல்லது என நினைக்கிறேன்.
சரவணன்
sir, can you write this article in english so that others can understand the value of kulasekarapattinam.
Nice Post Wish you all the best by http://wintvindia.com/
தங்களது வலைப்பூவை சில மாதங்களாக பின்தொடர்ந்து வருகிறேன். தங்களின் கட்டுரைகளுக்கு மிக்க நன்றி. 'கேந்திரம்' என்ற சொல்லுக்கு பதிலாக 'நிலையம் / மண்டலம்' ஆகிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுகிறேன்.
Aarthi Raghuram
கட்டுரையில் இடம் பெற்றுள்ள படத்தை இன்னொரு முறைப் பாருங்கள். நீல நிற்த்தில் உள்ள கோடுகள் குலசேகரப்பட்டினத்திலிருந்து கிளம்பும் ராக்கெட்டுகளின் பாதையைக் குறிப்பிடுபவை. ஆகவே உயரே சென்ற ராக்கெட் தீப்பற்றி வெடித்தாலும் அதன் பகுதிகள் இலங்கை மீது விழுகின்ற வாய்ப்புக்கே இடமில்லை
"தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை."
ஐயா,
ஏன் தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கவேண்டும் ? கொஞ்சம் விளக்கவும்.
நடராஜன்
ஓமலூர் .
Natarajan
இப்போதெல்லாம் பல வீடுகளின் மாடிகளில் டிவி ஆண்டெனா இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இப்படியான ஆண்டெனா ஒன்று சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளிலிருந்து சிக்னல்களைப் பெறுகிறது,
அந்த் ஆண்டெனா சிறிது நகர்ந்தாலும் சிக்னல்கிடைக்காது. அதே போல் மேலே இருக்கிற செயற்கைக்கோள் சற்று இடம் மாறினாலும் சிக்னல் கிடைக்காது.
வீட்டு மாடியில் உள்ள ஆண்டெனா சிறிது கூட அசையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
ஆனால்செயறகைக்கோள் அந்த உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதை எப்படி “ நிலையாக” இருக்கும்படி செய்வது?
அதற்கு வழி இருக்கிறது. பூமி தன்னைத் தான் ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கு ஆகும் நேரமும் அந்த தகவல் தொடர்பு செய்ற்கைகோள் பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் நேரமும்( 23.94 மணி நேரம்) வினாடி சுத்தமாக ஒரே அளவில் உள்ளது.. தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே 35786 கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றுமானால் அந்த செயற்கைக்கோள் மிகச் சரியாக 23.94 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும். இதன் பலனாக அது வானில் ஒரே இடத்தில் “ நிலையாக” இருப்பது போன்ற நிலைமை ஏற்படும். ஆகவே நம்மைப் பொருத்த வரையில் அது வானில் நகராமல் இருப்பதாக ஆகிவிடும்.
ஆகவே தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பூமியை சுற்றவும் செய்கிறது. அதே சமயத்தில் “ நிலையாக “ இருப்பது போலவும் இருக்கிறது
சிக்னல்கள் நேர்கோட்டில் செல்பவவை.ஆகவே தகவல் தொடர்பு செயறகைகோளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இது உதவுகிறது. இவ்வித செயற்கைக்கோள்களால் தான் உங்களால் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது.
எனினும் இவ்வித செயற்கைக்கோள்கள் டிவி நிகழ்ச்சிகளுக்காக மட்டும் அல்லாமல் பல முக்கிய பணிகளுக்கும் உதவியாக உள்ளன
நல்ல கட்டுரை. நன்றி அய்யா!
ஏன் காவல் கிணறினைப் பயன்படுத்த முடியாது? PSLV ராக்கெட்டின் இரண்டு திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் பகுதிகள் இங்கு தானே தயார் ஆகின்றன. GSLV யின் முக்கியமான பகுதிகளும் இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன. அப்படி பார்க்கும் பொது காவல் கிணறு தானே சரியான இடமாக இருக்க முடியும்?
உங்களைப் போன்றவர்கள் பள்ளிக்கூடங்களில் நடக்கும் அறிவியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். இந்த அளவுக்கு எளிமையாக எழுதி நான் படித்ததே இல்லை.
Also the Rocket testing, assembly and integration works for all our rockets been carried out in "Liquid Propulsion Systems Centre" at Mahendragiri, Tamilnadu, which is only 70kms away from K.Pattinam compared to Sri hari kota 770kms.
So its opt to set a launch pad in K.Pattinam.
மிக எளிமையான எளிதில் புரிந்து கொள்ளும்படி உங்கள் கட்டுரை அமைந்தது. நன்றி!
revmuthal.com
sahana
காவல்கிணறு கடலோரமாக அமைந்திருக்கிறதா என்று அறிய முயன்றேன். தகவல்கிடைக்கவில்லை.அது மட்டும் கடலோரமாக இருக்குமானால் நிச்சயம் அது பொருத்தமான இடமே.
Hari Shankar
Your perfectly correct. That would save lot of money.
senthil
தமிழ் மூலம் அறிவியலைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டது. எல்லோரும் ஆங்கிலத்திலேயே எழுதிக் கொண்டிருந்தால் யார் தான் தமிழில் எழுதுவது.தமிழில் எதையும் கூற முடியும் என்பதில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு.அந்த அளவில் தான் தமிழில் எழுதத் தொடங்கினேன்
Useful info
ஆங்கிலத்தில் எழுதினாலும் புரிந்து கொள்ள முடியும் ஆனால் சில நுட்பமான விசயங்களை விளங்கிக் கொள்ள அந்த துறையில் இருக்கவேண்டும். தமிழில் எழுதுவதால், எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் முக்கியமாக ஐயா அவர்கள் சொல்லும் சில உதாரணங்கள், புரிதலை மிகவும் எளிமைப்படுத்துகிறது. தொடர்ந்து தமிழில் எழுதுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
S.சுதாகர்
Nice to know... Thank you very much....
கட்டுரை மிகவும் அருமை..
Thank U
இந்த இரு தகுதிகளை தாண்டி மக்கள் அதிகம் வசிக்காத இடம் தானே தேவை ?
ஏன் என்றால் கன்னியாகுமரி (யின் கிழக்கு பகுதி ) தகுதியான இடம் தானே ?
Informative post. Thanks for sharing.
ஐயா உங்களுடைய கட்டுரைபடி இன்று குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் இன்று பாரத பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்!
Post a Comment