Dec 13, 2013

வியாழனுக்குப் பாதி தூரம் சென்று விட்டு பூமி நோக்கித் திரும்பிய விண்கலம்

Share Subscribe
அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி  வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது.  ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது

இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத் தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். அது ஏன்?

 ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது  மணிக்கு  சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது.
ஜூனோ விண்கலம். அதன் பின்னால் வியாழன் கிரகம்.  இது ஓவியர் வரைந்த படம்
ஆனால் அந்த விண்கலத்துக்கு அளிக்கப்பட்ட வேகம் போதாது. தவிர அந்த விண்கலம் வியாழனை நோக்கிச் செல்கையில் அது சூரியன் உள்ள திசைக்கு நேர் எதிரே செல்வதாகியது.. ஆகவே போகப் போக அதன் வேகம் குறையும். ஆகவே அதனால் வியாழன் கிரகத்துக்குப் போய்ச் சேர முடியாது

எனினும் வியாழனுக்குப் போய்ச் சேரும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும். அந்த விண்கலம் பாதி வழியில் திரும்பி பூமியை ஒரு வட்டமடித்துச் சென்றால் அதன் வேகம் அதிகரிக்கும். ஆகவே தான் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்தை உயரே அனுப்பும் போதே அது பூமியை  வட்டமடித்துச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்

அதாவது ஜூனோ பூமியை வட்டமடிக்கும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக அந்த விண்கலத்தின் வேகம் இயல்பாக அதிகரிக்கும்.

.இப்படி ஒரு கிரகத்தின் உதவி கொண்டு விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு கிராவிடி அசிஸ்ட்  ( Gravity Assist)  என்று பெயர். தமிழில் இதை கிரக உதவி என்று குறிப்பிடலாம்

நாஸா விஞ்ஞானிகள்  திட்டமிட்டபடி ஜூனோ  2012 செப்டம்பர் வாக்கில் பூமியை நோக்கித் திரும்பியது. வட்ட வடிவப் பாதையில் பூமியை  நோக்கி வந்த ஜூனோ விண்கலம் 2013 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பூமியை சுற்றி விட்டு மறுபடி வியாழனை நோக்கிக் கிளம்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக ஜூனோ விண்கலம் கூடுதலாக மணிக்கு  26,280 கிலோ மீட்டர் வேகம் பெற்றது.   இதன் பின்னர் ஜூனோ கூடுதல் வேகத்துடன் வியாழன் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இப்படியான ஏற்பாடு செய்யாமல் விட்டிருந்தால் ஜூனோ வியாழனுக்குச் செல்லாமல் சூரியனைச் சுற்ற ஆரம்பித்திருக்கும். சரி, ஜுனோ விண்கலத்தை செலுத்திய போதே அதை வியாழனை நோக்கிச் செல்வதற்கான வேகத்தை அளித்திருக்கலாமே என்று கேட்கலாம்.
ஜூனோ விண்கலம் பின்பற்றிய பாதையை விளக்கும் படம். மூன்றாவது
வட்டத்தில் நீல நிறத்தில் இருப்பது பூமி.
அப்படிச் செய்வதென்றால்  கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டிருக்கும். அட்லஸ் -5 ராக்கெட்டுக்குப் பதில் மேலும் அதிக சக்தி கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்த வேண்டி நேர்ந்திருக்கும். இதனால் செல்வு அதிகரித்திருக்கும். நாஸா செல்வை மிச்சப்படுத்தும் நோக்கில் தான் பூமியின் உதவியை நாடும் ஏற்பாட்டைப் பின்ப்ற்றிய்து. இதன் மூலம் நாஸாவுக்குப் பல கோடி டாலர் பணம் மிச்சமாகியது. இப்போதெல்லாம் நாஸா தனது திட்டங்களில் செலவைக் குறைக்கும் போக்கைக் காட்டி வருகிறது.

ஜூனோ வியாழனை நோக்கிப் பாதி வழி சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதால் அதிக செல்வு ஏற்பட்டிராதா என்று கேட்கலாம். சுமார் 40 ஆயிரக் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ஜூனோ விண்கலத்துக்கு எரிபொருள் செலவு கிடையாது. அதன் பிறகு அந்த விண்கலம் ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்வெளியில் இயல்பாக மிதந்து சென்று கொண்டிருக்கும்.

பூமியை நோக்கித் திரும்பும்படி செய்த போது மட்டும் ஜூனோ விண்கலத்தில் இருந்த எஞ்சின் சிறிது நேரம் செயல்பட்டது. .இத்துடன் ஒப்பிட்டால் எரிபொருள் செலவு இல்லாமலேயே ஜூனோ பூமியின் உதவியால் கூடுதல் வேகம் பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படிச் செய்வதால் ஜூனோ வியாழனுக்குப் போய்ச் சேருவதற்கு அதிக நாள்  ஆகமே என்றும் கேட்கலாம். வியாழனுக்கு ஜூனோ இந்தத் தேதிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற அவசரம் ஏதுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உள்ளபடி ஜூனோ 2016 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் வியாழனுக்குப் போய்ச் சேரும்.

இதற்கு முன்னரும் பல விண்கலங்கள் வியாழன் கிரகத்தை ஆராய்ந்துள்ளன. ஜூனோ முந்தைய விண்கலங்கள் போல் இல்லாமல் வியாழனை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றும். வியாழனின் ஈர்ப்பு வரம்பு,  காந்த மண்டலம் ஆகியவற்றை ஆராயும்.

பூமியை விட 1300 மடங்கு பெரியதான வியாழன் கிரகம் பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டை. மாம்பழத்துக்கு நடுவே கொட்டை இருப்பது போல அந்த பனி உருண்டையின் நடுவே பாறை உள்ளதா  என்பது பற்றியும் வியாழன் எப்படி உருவானது என்பது பற்றியும் ஜூனோ ஆராயும்

(செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப இந்தியா Gravity Assist உத்தியைக் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது)

17 comments:

Yaathoramani.blogspot.com said...

அறியாதன அறிந்தேன்
அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்
படத்துடன் எளிமையாகப் பதிவிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி

kavignar said...

good informations.

கவியாழி said...

அறிவியல் விளக்கத்திற்கு நன்றி.இதுபோன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரியும்படி செய்தமைக்கு மிக்க நன்றி

பட்டாளத்துகாரன் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

இன்றிலிருந்து உங்கள் வலைப்பதிவுகளை நான் feedlyயில் பின்தொடர்கிறேன்
நன்றி

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதமான பதிவு .ஒரு அறிவியல் ஆய்வு கட்டுரையை படித்த அனுபத்தை நிரப்புகிறது .

ABUBAKKAR K M said...

Dear sir,
Really very useful & wonderful information .
THANKS A LOT.
By the by , how is your health after optho operation ?
<><> k m abubakkar
kallidaikurichi - 627416

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல கட்டுரை ஐயா! பூமியின் ஈர்ப்பு விசையால் விண்கலத்தின் வேகம் எப்படி அதிகரிக்கும் என்பது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

Essex Siva said...

அய்யா, வணக்கம். தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகமில்லை. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துகள். Gavitity assist உத்தியைப் பயன்படுத்தி Apollo 13 கூட இந்த உத்தியை பயன்படுத்தி வெற்றிகரமாக (தப்பிப்பிழைத்து!) ஹூஸ்டனிற்கு திரும்பியது என்று நினைவு. Apollo 13 பற்றி எழுதியிருக்கிறீர்களா என்று அறிய ஆவல்!
நன்றி.

சிவா கிருஷ்ணமூர்த்தி

Essex Siva said...

அய்யா, வணக்கம். தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகமில்லை. தங்கள் பணிக்கு எனது வாழ்த்துகள். Gavitity assist உத்தியைப் பயன்படுத்தி Apollo 13 கூட இந்த உத்தியை பயன்படுத்தி வெற்றிகரமாக (தப்பிப்பிழைத்து!) ஹூஸ்டனிற்கு திரும்பியது என்று நினைவு. Apollo 13 பற்றி எழுதியிருக்கிறீர்களா என்று அறிய ஆவல்!
நன்றி.

சிவா கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

Dear Sir gravity assist we can trasnlate as "Eerupu udhavi" than Graha Udhavi. This is my humble suggestion.

Rajasekar

என்.ராமதுரை / N.Ramadurai said...

Anonymous
gravity Assist என்பதை ஈர்ப்பு உதவி என்று போடலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அது நல்ல யோசனை தான். விண்கலம் சூரிய மண்டலத்தில் இருக்கின்ற வரை அது சூரியனின் ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டதாகவே உள்ளது. ஆகவே வெறுமே ஈர்ப்பு உதவி என்பதற்குப் பதில் கிரக ஈர்ப்பு உதவி என்று போடுவது மேலும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவில் தங்களது கருத்தை வரவேற்கிறேன்.
வாசகர்கள் இது போன்று கருத்து தெரிவிக்கலாம். இதன் மூலம் சொல்லாக்கம் ஊக்கம் பெறும்.

பொன்.முத்துக்குமார் said...

தலைப்பைப் பார்த்தவுடன், ‘விண்கல முயற்சி தோல்வியோ’ என்று திகைத்துப்போய்விட்டேன். :)

வழக்கம்போல சிறப்பான கட்டுரை. நன்றிகள் திரு.ராமதுரை அவர்களே.

என்.ராமதுரை / N.Ramadurai said...

கிரி,
தற்போது செவ்வாயில் இருக்கின்ற கியூரியாசிடி நடமாடும் ஆராய்ச்சிக்கூடத்தில் உள்ள கருவிகளும் கியூரியாசிடி விண்கலமும் செயல்பட கியூரியாசிடியி வைக்கப்பட்டுள்ள புளூட்டோனியம் என்ற அணுசக்திப் பொருள் உதவுகிறது.
முன்னர் செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய சிறிய விண்கலங்கள் சோலார் செல் எனப்படும் சூரிய மின்பலகைகள் மூலம் மின்சாரத்தைப் பெற்று இயங்கின. ஆனால் கியூரியாசிடி பெரியது. சோலார் செல்கள் போதாது. ஆகவே அணுசக்திப் பொருள் அடங்கிய “பாட்டரி: பயன்படுத்தப்படுகிறது. மேற்கொண்டு அறிய காண்க:
http://www.ariviyal.in/2012/08/blog-post_18.html

Irai Kaathalan said...

Thank you so much...Valuable Information..

Unknown said...

Thanks for sharing this informations.

Vanmeeganathan said...

மிகவும் நன்றி! ஐயா!

Post a Comment