Pages

Dec 21, 2013

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு?

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து இந்தியாவின் செயற்கைக்கோள்களும் ஆளில்லா விண்கலங்களும் செலுத்தப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டு ராக்கெட் செலுத்து மேடைகள் உள்ளன மூன்றாவது மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே வேறு ஓர் இடத்தில் புதிதாக ஒரு விண்வெளிக் கேந்திரம் ஒன்றை அமைக்கத் திட்டம் உள்ளது.

இப்புதிய விண்வெளிக் கேந்திரத்தைத் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றனர்
.  .
ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான விண்வெளிக் கேந்திரத்தை அமைக்க முதலில் இரு முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். முதலாவதாக அது கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும். இரண்டாவதாக அது கூடியவரை பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) அருகே இருக்க வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த இரு தகுதிகளையும் பூர்த்தி செய்கிறது. அது கடலோரமாக அமைந்துள்ளது. அது 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் (Latitude) அதாவது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைந்துள்ளது.

அது ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக இருக்க வேண்டும்? பொதுவில் பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு திசை நோக்கித் தான் செலுத்தப்படுகின்ற்ன. உயரே கிளம்பும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக அது வெடிக்கக்கூடும் அவ்வித நிலைமையில் ராக்கெட்டின் பகுதிகள் கடலில் விழுவது தான் நல்லது.

வேறு சில சமயங்களில் ஏதோ கோளாறு காரணமாக  ராக்கெட் திசை திரும்பி கரையை நோக்கி அதாவது விண்வெளிக் கேந்திரத்தை நோக்கிப் பாயலாம். இவ்வித நிலையில் விண்வெளிக் கேந்திர அதிகாரிகள் ராக்கெட்  கடல் பகுதிக்கு மேலாக இருக்கும் போதே அதை  நடுவானில் அழிப்பர்.

இதற்கான பொத்தானை அமுக்குவதற்கென்றே தனி அதிகாரி இருப்பார். உதாரணமாக 2010 ஆம் ஆண்டு டிசமபர்  25 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  உயரே செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் திசை மாறிய போது இவ்விதமாக நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளிக் கேந்திரத்தை கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது வழக்கம். இப்படி அமைப்பதால் ஆதாயம் உண்டு. அதாவது பூமி தனது அச்சில் சுழல்வதன் பலனாக ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் இது இலவசமாகக் கிடைப்பதாகும்.

பூமியானது பம்பரம் போல மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி சுழல்கிறது. எனவே பூமிக்கு சுழற்சி வேகம் உண்டு. பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு   23.93 மணி நேரம் பிடிக்கிறது..  பூமியின் சுற்றளவை 23.93 ஆல் வகுத்தால் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1674 கிலோ மீட்டர்.

ஆனால் பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே செல்லச் செல்ல இந்த வேகம் குறையும். உதாரணமாக 20 டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழற்சி வேகம் மணிக்கு  1569 கிலோ மீட்டராகத் தான் இருக்கும். ஆகவே 20 டிகிரி அட்சரேகையில் ஒரு விண்வெளிக் கேந்திரம் இருந்தால் அங்கிருந்து செலுத்தப்படுகிற ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற இலவச வேகம் மேலே சொன்ன அளவுக்குக் குறைவாகத் தான் இருக்கும்.

உலகில் செயற்கைக்கோள்கள்/விண்கலங்கள் ஆகியவற்றை செலுத்தும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்தியா, சீனா முதலான நாடுகளை எடுத்துக் கொண்டால் ரஷியாவின் விண்வெளிக் கேந்திரங்கள் தவிர்க்க முடியாத வகையில் உள் நாட்டில் தான் உள்ளன. சீனாவின் சில விண்வெளிக் கேந்திரங்கள் உள் நாட்டில் உள்ளன. தவிர அவை பூமியின் நடுக் கோட்டிலிருந்து வடக்கே மிகவும் தள்ளி அமைந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் விண்வெளிக் கேந்திரம் பிரெஞ்சு குயானாவில் அட்லாண்டிக் கடலின் கிழக்குக் கரை ஓரமாக  பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்துள்ளது. அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால் 1662 கிலோ மீட்டர் வேகம் கூடுதலாகக் கிடைக்கும். அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரம் மிகவும் தள்ளி 28 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும் இலவச வேகம் குறைவுதான்.

ஆகவே பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலிருந்து ராக்கெட்டைச் செலுத்தினால் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும் என்பதால் ரஷிய, அமெரிக்க தனியார் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில் மிதக்கும் மேடையிலிருந்து ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகின்றன 
  
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுக்கு பூமியின் சுழற்சியால் கிடைக்கிற கூடுதல் வேகம் 1625  கிலோ மீட்டர். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்து அங்கிருந்து ராக்கெட் செலுத்தினால் கிடைக்கிற கூடுதல் வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
 .
படம்: நன்றி- Mahendragiri LPSC Staff Assn Report
ஆகவே குலசேகரப்பட்டினத்தில் விண்வெளிக் கேந்திரம் அமைத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வழக்கமாகச் செலுத்தப்படுகிற அதே ராக்கெட்டில் குறைவான எரிபொருளை நிரப்பினால் போதும். அந்த அளவில் ராக்கெட்டின் முகப்பில் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த முடியும்.

குலசேகரப்பட்டினத்தில் மேலும் ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் மூலம் வடக்கு-தெற்காக செலுத்தப்படுகின்ற துருவ செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடிவதில்லை.

அப்படிச் செலுத்தினால் அது இலங்கை மீதாகச் செல்வதாக இருக்கும். இந்திய விண்வெளித் துறையினர் இதைத் தவிர்க்க விரும்புகின்றனர். ஆகவே ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கிளம்பியதும் சிறிது தூரம் கிழக்கு நோக்கிச் சென்று விட்டுப் பிறகு தெற்கு நோக்கிச் செல்கின்றது. இதனால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது.

குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த துருவ செய்ற்கைக்கோள்களைச் செலுத்தினால் இலங்கை மீது பறக்கின்ற பிரச்சினையே இராது. அந்த செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச் செலுத்த முடியும். இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும். இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி துருவ செயற்கைக்கோள்களைச் செலுத்தி வருகிறது. இந்த வகை செயற்கைக்கோள்களை நிரந்தரமாக குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு, வானிலை தகவல், ரேடியோ ஒலிபரப்பு  என பல்வேறு பணிகளுக்காக பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் இந்தியா 13 செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன. பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார் நிறுவனங்களின் தகவல் தொடரபு, மணியார்டர் அனுப்புதல் என வேறு பல ;பணிகளையும் இவை செய்து வருகின்றன. இவை இன்றேல் நாடே ஸ்தம்பித்து விடும்.

 எடை மிக்க இந்த செயற்கைக்கோள்களை இந்தியா தயாரித்தாலும் அனேகமாக இவை அனைத்தும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கூரூ விண்வெளிக் கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு ஏரியான் ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டவை.

இந்த வகை செயற்கைக்கோள்களையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்த ஜி.எஸ்.எல்..வி  ராக்கெட் உருவாக்கப்பட்டு அவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட் முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற மேலும் சக்தி மிக்க ராக்கெட் உருவாக்கப்படுகிறது. இவற்றுக்கென ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம் உள்ளது.

இந்த வகை ராக்கெட்டுகளையும் குலசேகரப்பட்டினத்திலிருந்து செலுத்த இயலும். இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும் இவை பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க வேண்டியவை.

ஸ்ரீஹரிகோட்டா 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருப்பதால் இவை குறிப்பிட்ட கோணத்தில் திரும்பி அதன் பிறகே பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே வந்து சேரும்.. குலசேகரப்பட்டினம் 8 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளது. அதாவது ஸ்ரீஹரிகோட்டாவுடன் ஒப்பிட்டால் இது பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ளது.

ஆகவே இங்கு புதிய விண்வெளிக் கேந்திரத்தை அமைத்து மேற்படி ராக்கெட்டுகளைச் செலுத்தினால் அவை திரும்ப வேண்டிய கோணம் குறையும். இதன் மூலம் எரிபொருள் செலவு குறையும். ஆகவே அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை செலுத்துவதற்கென்றே ஸ்ரீஹரிகோட்டாவில் அவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு மறுபடி குலசேகரப்பட்டினத்திலும் மறுபடி அதே வசதிகளைச் செய்வது வீண் செலவாக இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்

. ஆனால் ஒன்று. இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள் மூலம் எடைமிக்க செயற்கைக்கோள்களை செலுத்த ஆரம்பித்தால் பல நாடுகளும் தங்களது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உய்ரே செலுத்த இந்தியா பக்கம் திரும்பலாம்.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தித்  தருவது என்பது உலகில் இப்போது பெரும் பணம் கொழிக்கும் வியாபாரமாகும். உள்ளபடி ( இந்தியா உட்பட) உலகின் பல நாடுகளும் தனியார் நிறுவனங்களும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட்டை நாடுகின்றன. முன்கூட்டிப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் சொல்லலாம்.

உலகில் இந்தியா உட்பட விரல் விட்டு எண்ணும் அளவிலான நாடுகளும் தனியார் நிறுவனங்களும் தான் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுக் காலத்தில் புதிதாக மொத்தம் சுமார் 1150 செயற்கைக்கோள்கள் செலுத்தப்படலாம் என்று யூரோகன்சல்ட் என்னும் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏரியான் மூலம் அல்லது பிற நாடுகளின் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிட்டால் இந்தியாவிலிருந்து செலுத்துவதற்கு ஆகும் செலவு நிச்சயம் குறைவு. ஆகவே வருகிற ஆண்டுகளில் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை செலுத்தும் மார்க்கெட்டில் கணிசமான பகுதியை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

தவிர, பிற நாடுகள் கேட்டுக் கொண்டால் அவற்றுக்கென நவீன செயற்கைக்க்கோள்களைத் தயாரித்து அளிக்கும் திறனும் இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே குலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் செலுத்தும் வசதிகளை செய்வதற்கு ஆகும் செலவு வீண் போகாது.

 குறிப்பு: இக்கட்டுரை தினமணி டிசம்பர் 20 ஆம் தேதி இதழில் வெளியாகியது. படம் மற்றும் கூடுதல் தகவல்களுடன் இங்கு வெளியிடப்படுகிறது

Dec 13, 2013

வியாழனுக்குப் பாதி தூரம் சென்று விட்டு பூமி நோக்கித் திரும்பிய விண்கலம்

அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி  வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது.  ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது

இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத் தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். அது ஏன்?

 ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது  மணிக்கு  சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது.
ஜூனோ விண்கலம். அதன் பின்னால் வியாழன் கிரகம்.  இது ஓவியர் வரைந்த படம்
ஆனால் அந்த விண்கலத்துக்கு அளிக்கப்பட்ட வேகம் போதாது. தவிர அந்த விண்கலம் வியாழனை நோக்கிச் செல்கையில் அது சூரியன் உள்ள திசைக்கு நேர் எதிரே செல்வதாகியது.. ஆகவே போகப் போக அதன் வேகம் குறையும். ஆகவே அதனால் வியாழன் கிரகத்துக்குப் போய்ச் சேர முடியாது

எனினும் வியாழனுக்குப் போய்ச் சேரும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும். அந்த விண்கலம் பாதி வழியில் திரும்பி பூமியை ஒரு வட்டமடித்துச் சென்றால் அதன் வேகம் அதிகரிக்கும். ஆகவே தான் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்தை உயரே அனுப்பும் போதே அது பூமியை  வட்டமடித்துச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்

அதாவது ஜூனோ பூமியை வட்டமடிக்கும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக அந்த விண்கலத்தின் வேகம் இயல்பாக அதிகரிக்கும்.

.இப்படி ஒரு கிரகத்தின் உதவி கொண்டு விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு கிராவிடி அசிஸ்ட்  ( Gravity Assist)  என்று பெயர். தமிழில் இதை கிரக உதவி என்று குறிப்பிடலாம்

நாஸா விஞ்ஞானிகள்  திட்டமிட்டபடி ஜூனோ  2012 செப்டம்பர் வாக்கில் பூமியை நோக்கித் திரும்பியது. வட்ட வடிவப் பாதையில் பூமியை  நோக்கி வந்த ஜூனோ விண்கலம் 2013 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பூமியை சுற்றி விட்டு மறுபடி வியாழனை நோக்கிக் கிளம்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக ஜூனோ விண்கலம் கூடுதலாக மணிக்கு  26,280 கிலோ மீட்டர் வேகம் பெற்றது.   இதன் பின்னர் ஜூனோ கூடுதல் வேகத்துடன் வியாழன் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இப்படியான ஏற்பாடு செய்யாமல் விட்டிருந்தால் ஜூனோ வியாழனுக்குச் செல்லாமல் சூரியனைச் சுற்ற ஆரம்பித்திருக்கும். சரி, ஜுனோ விண்கலத்தை செலுத்திய போதே அதை வியாழனை நோக்கிச் செல்வதற்கான வேகத்தை அளித்திருக்கலாமே என்று கேட்கலாம்.
ஜூனோ விண்கலம் பின்பற்றிய பாதையை விளக்கும் படம். மூன்றாவது
வட்டத்தில் நீல நிறத்தில் இருப்பது பூமி.
அப்படிச் செய்வதென்றால்  கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டிருக்கும். அட்லஸ் -5 ராக்கெட்டுக்குப் பதில் மேலும் அதிக சக்தி கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்த வேண்டி நேர்ந்திருக்கும். இதனால் செல்வு அதிகரித்திருக்கும். நாஸா செல்வை மிச்சப்படுத்தும் நோக்கில் தான் பூமியின் உதவியை நாடும் ஏற்பாட்டைப் பின்ப்ற்றிய்து. இதன் மூலம் நாஸாவுக்குப் பல கோடி டாலர் பணம் மிச்சமாகியது. இப்போதெல்லாம் நாஸா தனது திட்டங்களில் செலவைக் குறைக்கும் போக்கைக் காட்டி வருகிறது.

ஜூனோ வியாழனை நோக்கிப் பாதி வழி சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதால் அதிக செல்வு ஏற்பட்டிராதா என்று கேட்கலாம். சுமார் 40 ஆயிரக் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ஜூனோ விண்கலத்துக்கு எரிபொருள் செலவு கிடையாது. அதன் பிறகு அந்த விண்கலம் ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்வெளியில் இயல்பாக மிதந்து சென்று கொண்டிருக்கும்.

பூமியை நோக்கித் திரும்பும்படி செய்த போது மட்டும் ஜூனோ விண்கலத்தில் இருந்த எஞ்சின் சிறிது நேரம் செயல்பட்டது. .இத்துடன் ஒப்பிட்டால் எரிபொருள் செலவு இல்லாமலேயே ஜூனோ பூமியின் உதவியால் கூடுதல் வேகம் பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படிச் செய்வதால் ஜூனோ வியாழனுக்குப் போய்ச் சேருவதற்கு அதிக நாள்  ஆகமே என்றும் கேட்கலாம். வியாழனுக்கு ஜூனோ இந்தத் தேதிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற அவசரம் ஏதுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உள்ளபடி ஜூனோ 2016 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் வியாழனுக்குப் போய்ச் சேரும்.

இதற்கு முன்னரும் பல விண்கலங்கள் வியாழன் கிரகத்தை ஆராய்ந்துள்ளன. ஜூனோ முந்தைய விண்கலங்கள் போல் இல்லாமல் வியாழனை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றும். வியாழனின் ஈர்ப்பு வரம்பு,  காந்த மண்டலம் ஆகியவற்றை ஆராயும்.

பூமியை விட 1300 மடங்கு பெரியதான வியாழன் கிரகம் பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டை. மாம்பழத்துக்கு நடுவே கொட்டை இருப்பது போல அந்த பனி உருண்டையின் நடுவே பாறை உள்ளதா  என்பது பற்றியும் வியாழன் எப்படி உருவானது என்பது பற்றியும் ஜூனோ ஆராயும்

(செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப இந்தியா Gravity Assist உத்தியைக் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது)