ஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.
மங்கள்யான் விண்கலம் |
அடுத்தபடியாக டிசம்பர் முதல் தேதியன்று மங்கள்யான் பூமியைச் சுற்றுவதற்கு மாறாக செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். அப்போது அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அதி வேகப் பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிக் கிளம்பும். இத்துடன் ஒப்பிட்டால் மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் பூமியிலிருந்து உயரே கிளம்பிய போது அதன் அதிக பட்ச வேகம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விண்கலம் ( அதைச் சுமந்து செல்கின்ற ராக்கெட்) பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வேறு ஒரு கிரகத்தை நோக்கிச் செல்வதானால் அது மேலே குறிப்பிட்டபடி மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாக வேண்டும்,
அவ்வளவு வேகத்தில் ஒரு விண்கலத்தை செலுத்துவதற்கான சக்திமிக்க ராக்கெட் இந்தியாவிடம் இப்போது கிடையாது. ஆகவே தான் பூமியைப் பல தடவை சுற்றிவிட்டுப் பிறகு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டியபின் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும்படி செய்யும் ஏற்பாட்டை இந்திய விண்வெளி அமைப்பு ( இஸ்ரோ) பின்பற்றுகிறது.
மங்கள்யான் ஒவ்வொரு தடவையும் பூமியைச் சுற்றி வந்த போது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக மங்கள்யானின் வேகம் அதிகரித்தது. இது நம்மிடம் சக்திமிக்க ராக்கெட் இல்லாமல் போன குறையைப் பூர்த்தி செய்தது. அதாவது மங்கள்யானின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டே அது பூமியைப் பல தடவை சுற்றும்படி செய்தனர்.
மங்கள்யான் விண்கலத்தின் உயரம் எவ்விதம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது என்பதை இப்படம் காட்டுகிறது. |
நாம் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் நுட்பமான, திறன் மிக்க செயற்கைக்கோள்கள்களையும் விண்கலங்களையும் தயாரிப்பதில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டோம். ஆனால் ராக்கெட் தயாரிப்பில் அந்த அளவுக்கு முன்னேறவில்லை.
இந்தியா இப்போது சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியில் இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆகவே தான் குறைந்த திறன் கொண்ட பி.எஸ்.எல்.வி என்னும் சிறிய ராக்கெட்டைப் ப்யன்படுத்தி மங்கள்யானை உயரே செலுத்தியது.
இந்த விஷயத்தில் இரண்டு விதமாக வாதிக்கலாம்.சக்திமிக்க பெரிய ராக்கெட்டுகளை உருவாக்கும் வரையில் காத்திருக்கலாமே?.வெறும் 15 கிலோ எடை கொண்ட ஆராய்ச்சிக் கருவிகளை சுமந்து செல்கிற மங்கள்யானை இப்போது அனுப்புவானேன்? செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புவதில் சீனாவை மிஞ்சிவிட்டோம் என்ற பெருமைக்காக இவ்வளவு அவசரமா என்று கேட்கலாம்.
மங்கள்யானின் வைக்கப்பட்டுள்ள கலர் கேமரா பூமியைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதே கேமரா பின்னர் செவ்வாயைப் படம் எடுத்து எனுப்பும் |
.இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.
இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே தான் டிசம்பர் முதல் தேதியன்று நள்ளிரவு மங்கள்யான் செவ்வாயை நோக்கிப் பாய இருக்கிறது. மங்கள்யான் விண்கலத்திலேயே இதற்கான எஞ்சின் உள்ளது.அது சில நிமிஷ நேரம் இயக்கப்படும். அப்போது விண்கலம் தேவையான வேகத்தைப் பெறும்.அந்த எஞ்சின் வெற்றிகரமாகச் செயல்படுவதானது அக்னிப் பரீட்சையாக இருக்கும்.
மங்கள்யான் அந்த அக்னிப் பரீட்சையில் ஜெயித்து விட்டால் அது உறுதியாக செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்து விடும் என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு மங்கள்யான் பல சிறிய பரீட்சைகளிலும் வென்றாக வேண்டும்.
விண்வெளி என்பது காரிருள் நிறைந்தது. பகல் இரவு என்பது கிடையாது. நிரந்தர இருள் தான். ஆனால் சூரியனும் தெரியும்.அதே நேரத்தில் எங்கு திரும்பினாலும் நட்சத்திரங்களும் தெரியும்.” செவ்வாய்க்குச் செல்லும் வழி “ என போர்டு எல்லாம் விண்வெளியில் கிடையாது. இந்த நட்சத்திரங்கள் தான் வழிகாட்டிகள்.
மங்கள்யான் விண்கலத்தில் நட்சத்திர ஒளி உணர்வுக் கருவி (Star Sensor) உண்டு. கனோபஸ் ( அகத்திய நட்சத்திரம்) உட்பட குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ஒளி இக் கருவிக்குள் எப்போதும் வந்து விழும்படி ஏற்பாடு இருக்கும்.மங்கள்யான் தனது பாதையிலிருந்து விலகாமல் இருக்க இக்கருவி உதவுகிறது.இதை மங்களயானின் லகான் என்றும் சொல்லலாம். இது மாதிரியில் மங்கள்யானில் பல கருவிகள் உண்டு.
மங்கள்யான் டிசம்பர் முதல் தேதியன்று செவ்வாயை நோக்கிக் கிளம்பும் போது வானில் செவ்வாய் கிரகம் ஓரிடத்தில் இருக்கும்.(கீழே படம் காண்க) ஆனால் மங்கள்யான் அந்த இடத்தை நோக்கிச் செல்லாமல் வேறு இடத்தை நோக்கிக் கிளம்பும். இதற்குக் காரணம் உண்டு. சூரியனை சுற்றி வருகிற செவ்வாய் கிரகம் தனது பாதையில் மணிக்கு சுமார் 86 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் ( வினாடிக்கு 24 கிலோ மீட்டர்) சென்று கொண்டிருக்கிறது.
விண்கலம் ஓர் அலாதியான வாகனம். ஆளில்லாப் படகு ஒன்றை ஆற்றில் தள்ளி விட்டால் படகு மிதந்து போய்க் கொண்டே இருக்கும். விண்கலம் அப்படிப்பட்டதே. பூமியின் பிடியிலிருந்து மங்கள்யான் விடுபட்ட பின் இயற்கை சக்திகளின்படி தொடர்ந்து அது பறந்து கொண்டிருக்கும்.
சூரிய்னை பூமி சுற்றுகிறது. அதற்கான வகையில் பூமியில் எஞ்சின் எதுவும் கிடையாது. பூமியானது இயற்கை சக்திகளின்படி சூரியனை சுற்றி வருகிற்து. எல்லா கிரகங்களும் இப்படித்தான் சூரியனை சுற்றுகின்றன. மங்கள்யான் விண்வெளிக்குச் சென்ற பின் அது இயற்கை சக்திகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்து ராக்கெட் அல்லது எஞ்சின் உதவியின்றி பறக்க ஆரம்பிக்கிற்து.
ஆனால் மங்கள்யானை அப்படியே விட்டுவிட்டால் அது சூரியனை சுற்றத் தொடங்கும். பல லட்சம் ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் அது செவ்வாய்க்குச் செல்ல வேண்டிய வாகனம். ஆகவே சூரியனை சுற்ற விடாமல் செவ்வாயை நோக்கிச் செல்லும்படி செய்ய வேண்டும்.
இதற்கென மங்கள்யானின் எல்லாப் புறங்களிலும் தீபாவளி ராக்கெட் சைஸில் சிறிய ராக்கெட்டுகள பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை ராக்கெட் என்று வருணிப்பதில்லை. உந்திகள் (Thrusters ) என்று வருணீக்கிறார்கள். இவற்றைத் தக்கபடி சில வினாடிகள் இயக்குவதன் மூலம் மங்கள்யான் செல்லும் பாதையில் சிறு திருத்தங்கள் செய்ய முடியும்.
மங்கள்யான் செவ்வாய்க்க்குப் போய்ச் சேர 300 நாட்கள் ஆகும். இதற்குக் காரணம் உண்டு. முதலாவதாக செவ்வாய் கிரகம் இப்போது பூமியிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறது. ஆகவே மங்கள்யான் பல கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும். இரண்டாவதாக மங்கள்யான் வளைந்த பாதையில் செல்வதால் பயண தூரம் அதிகம்.
மங்கள்யான் செவ்வாய்க்கு சென்று கொண்டிருக்கையில் சிக்னல்கள் வடிவில் அதனுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டாக வேண்டும். இதில் ஒரு பிரச்சினை உண்டு. சிக்னல்கள் என்னதான் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் சென்றாலும் பூமியிலிருந்து சிக்னல்கள் மங்கள்யானுக்குப் போய்ச் சேர மங்கள்யான் இருக்கின்ற தூரத்தைப் பொருத்து 6 நிமிஷம் முதல் 20 நிமிஷம் வரை ஆகலாம்
ஆகவே குறிப்பிட்ட சமயத்தில் மங்கள்யான் எவ்வளவு தொலைவில் இருக்கும் எனபதைக் கணக்கிட்டு அதற்கேற்றபடி முன்கூட்டியே மங்கள்யானுக்கு ஆணைகளைப் பிறப்பித்தாக வேண்டும். சில நிமிஷ தாமதம் ஏற்பட்டாலும் அது பிரச்சினையாகிவிடும். இவ்விதப் பிரச்சினை ஏற்ப்டாமல் இருக்க மங்கள்யானில் உள்ள கம்ப்யூட்டர்களே தக்க சமயங்களில் அந்த விண்கலத்தில் உள்ள கருவிகளுக்கு தகுந்த ஆணைகளைப் பிறப்பிக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ள்து.
செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் மங்கள்யான் அக்கிரகத்தை எவ்விதம் நீள் வட்டப்பாதையில் சுற்றும் என்பதை இப்படம் ( வலது மூலை) காட்டுகிறது |
இல்லாவிடில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைக் கடந்து சென்று விடும். மங்கள்யானில் மிச்சமிருக்கின்ற எரிபொருளைப் பயன்படுத்தி அதன் வேகத்தைக் குறைப்பார்கள். அத்ன் பிறகு மங்கள்யான் செவ்வாயின் பிடியில் சிக்கி அந்த கிரகத்தை சுற்றி வர ஆரம்பிக்கும்.
இப்படியாக மங்கள்யான் திட்டத்தில் 1.மங்கள்யானை உயரே செலுத்தும் கட்டம். 2. பூமியைச் சுற்றச் செய்யும் கட்டம். 3.செவ்வாய் நோக்கி செலுத்தும் கட்டம். 4 செவ்வாயை நோக்கி சுமார் 300 நாட்கள் பயணம் செய்யும் கட்டம். 5 செவ்வாயின் பிடியில் சிக்கும்படி செய்யும் க்ட்டம். 6. இறுதியாக செவ்வாயை சுற்ற ஆரம்பிக்கும் கட்டம் என ஆறு கட்டங்கள் உள்ளன.
இப்போது முதல் இரு கட்டங்களில் வெற்றி காணப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமும் ஐந்தாவது கட்டமும் தான் மிக முக்கியமானவை. இவற்றில் வெற்றி கிட்டலாம், கிட்டாமலும் போகலாம். ஆனால் ஒன்று. மங்கள்யான் திட்டம் தோற்றாலும் சரி, இத்திட்டம் மூலம் நாம் உருவாக்கிய தொழில் நுட்பம், உருவாக்கிய உத்திகள், பெற்ற அனுபவம் ஆகியவை என்றைக்கும் வீண் போகாது.
( குறிப்பு: வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேரிட்டதன் விளைவாகக் கடந்த சுமார் ஒரு மாதமாகக் கட்டுரைகளை அளிக்க இயலாமல் போய் விட்டது )
27 comments:
அய்யா, நுட்பமான விசயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
ஒரு குறுக்கு சந்தேகம்.... இடது பக்கம் slingshot செய்யாமல் வலது பக்கம் slingshot செய்து செவ்வாயை எதிராக அனுக முடியாதா?
தங்கள் உடல் நலம் முன்னேறி நிறைய இது போல் அறிவியல் செய்திகளை தர வேண்டும்.
Thanks,
Manickaraj
மாணிக்கராஜ்
நீங்கள் இந்த விஷயம் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எதிர்ப்புறமாகச் செய்தால் ஏற்கெனவே இருக்கின்ற வேகம் குறையும்.வேகத்தைக் குறைக்கவே அந்த முறை பின்பற்றப்படுகிறது.
புதன் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மெசஞ்சர் விண்கலத்தின் வேகம் இப்படியாகத் தான் குறைக்கப்பட்டது
அய்யா,
எதிர் மறை கருத்துக்களை தவிர்த்திருக்கலாம்.
உதாரணத்திற்கு,
//கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியது.//
//அவ்வளவ்தான்// இந்த சொற்பதததுகான தேவை என்ன? ஏன் நாம் எங்களை குறை கூற வேண்டும்?.
Successful or unsuccessful does not matter. Encourage the scientists. Please do not down-grade our self.
என் தாழ்மையான கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்..
மிக்க நன்றி ஐயா. எளிதில் விளங்கும்படி உள்ளது உங்களது எழுத்து நடை
drogba
மங்கள்யான் திட்டத்தை மட்டப்படுத்துவதாக நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டீர்கள்.
மங்கள்யானை சுமந்து சென்ற ராக்கெட் வெற்றிகரமாக உயரே சென்று விட்ட உடனேயே அது செவ்வாயை நோக்கிச் செல்வது போல பல பத்திரிகைகளும் கருதிக் கொண்டன் என்பதை சுட்டிக்காட்டவே அவ்விதம் எழுதப்பட்டது.பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தொடர்ந்து வெற்றி காண்பது அது 24 வது தடவையாகும்.
அடுத்து வரும் நாட்களில் மங்கள்யான் திட்டமிட்டபடி செயல்பட்டு பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதே கட்டுரையின் நோக்கம்
மங்கல்யான் ஒரு polar satellite launch vehicle மூலம் அனுப்பப்பட்டதே , இது எவ்வாறு செவ்வாயை அடையும் என்று சிலபல சந்தேகங்களோடு இருந்தேன். பத்திரிகை மற்றும் இணையம் மூலம் சில தகவல்கள் கிடைத்தாலும் தங்களது கட்டுரை போல தெள்ளத் தெளிவாக விளக்கம் கிடைக்கவில்லை. மிகவும் பயனுள்ள தகவல்கள். ஒரு அரசியல்வாதி தனது ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சொற்ப அளவே இந்த திட்டத்திற்கு செலவாகியுள்ளது என்பதும் நாமெல்லாம் வியக்க வேண்டிய ஒரு விஷயம்.
அய்யா , வணக்கம்.
“” செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை அனுப்ப இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உகந்த வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 2016 ஜனவரி வரை காத்திருக்க வேண்டும்.””
இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் ....என்பது எதன் அடிப்படையில் என தயவுசெய்து விளக்கவும் .
உடல்நலம் பூரண குணமடைய வாழ்த்துக்கள்.
<><> கே.எம்.அபுபக்கர் ,
கல்லிடைக்குறிச்சி 627416
ராஜேஷ் குமார்
polar satellite launching vehicle என்று பெயர் வைத்ததே சரியல்ல. இது வெறும் ராக்கெட். சுமார் ஒன்றரை டன் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஆரம்ப ஆண்டுகளில் வடக்கிலிருந்து தெற்காக பூமியை சுற்றும் தொலையுணர்வு செயறகைக்கோள்களை இது செலுத்தி வந்தது. இந்த ராக்கெட்டை மேற்கிலிருந்து கிழக்காகவும் செலுத்த முடியும். அப்படி பலத்டவை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் சந்திரனுக்கு சந்திரயான் செலுத்தப்பட்டது.
ஆரம்ப காலத்தில் அர்த்தமில்லாமல் பெயர் வைத்த காரணத்தால் தான் பலருக்கும் குழப்பம்.
நாஸா விஞ்ஞானிகள் ஒவ்வொரு வகை ராக்கெட்டுக்கும் கவர்ச்சியான பெயரை வைத்துள்ளனர். இஸ்ரோ ஆரமபத்தில் ‘வருணா’ ‘இந்திரன்’ என்று பெயர் வைத்திருந்தால் குழப்பம் இல்லாமல் போயிருக்கும்
அபுபக்கர்
பூமி சூரியனை சுற்றுகிறது. செவ்வாய் கிரகமும் தனிப் பாதையில் சூரியனை சுற்றுகிறது.பூமியானது அதிக வேகத்தில் சூரியனை சுற்றுவதால் அது ஒரு கட்டத்தில் செவ்வாயை கடந்து செல்லும்.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இரு கிரகங்களும் நெருங்கி இருக்கும். அப்போது இரண்டுக்கும் இடையே தூரம் குறைவாக இருக்கும். அக் கடடத்தில் ஒரு விண்கலத்தைச் செலுத்தினால் அந்த விண்கலம் வளைந்த பாதையில் செவ்வாயை துரத்திச் சென்று போய்ச் சேரும். இப்படியான சமயத்தில் விண்கலத்தைச் செலுத்தினால் அதிக எரிபொருள் தேவைப்படாது. ஆகவே தான் வாய்ப்பான கால கட்டம் என்று குறிப்பிடுகின்றனர்.
தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
அய்யா உங்கள் பகிர்தலுக்கு நன்றி, இது அறிவியல் பற்றிய ஆர்வத்தை மேலும் பெருக்குகிறது!!
விளக்கத்திற்கு நன்றி , அய்யா.
<> கே.எம்.அபுபக்கர்
Thank You Sir
மிகத்தெளிவான கட்டுரை, நன்றி ஐயா!
S.சுதாகர்
புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கியதற்கு நன்றி !
த.ம +1
Thanks Sir. As usual, good explanation. Take care.
ஐய்யா, நீங்கள் மாணிக்கராஜ்க்கு அளித்த பதில் எனக்கு புரியவில்லை. இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் ஏன் செல்லக்கூடாது என்று புரியும்படி விளக்குங்கள்
Dear Sir,
Excellent article.
Simple explanation for hard science steps.
Really enjoyed.Thanks for giving such wonderful blog about Mangalyan.
My hearty wishes for your good health and many more happy blogs.
Thanks
Arul
அய்யா உங்களின் நடை மிக எளிதாக புரியும் படி இருக்கிறது .... அனைத்து நண்பர்களிடம் பகிர்ந்து வருகிறேன் ......
Anonymous
மாணிக்கராஜுக்கு அளித்த பதில் பற்றி விளக்கம் கேட்டிருக்கிறீர்கள்.
வியாழன் கிரகத்தைத் தாண்டி உள்ள ஒரு கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம்.அந்த விண்கலத்துக்கு மேலும் வேகம் அளித்தால் தான் அது செல்லும். அந்த் விண்கலம் அதிக வேகம் பெறுவதற்கு நாம் வியாழன் கிரகத்தையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதாவது நாம் அனுப்பும் விண்கலம் வியாழன் கிரகத்தை நெருங்க வேண்டும். வியாழன் பெரிய கிரகம் என்பதால் அது நமது விண்கலத்தை வேகமாக ஈர்க்கும். அப்போது நமது விண்கலம் வேகம் பெறும். அதே நேரத்தில் அது சற்று திசை மாறும்.
நமது விண்கலத்தின் வேகத்தை கணிசமாகக் குறைத்தால் தான் அது வியாழனின் பிடியில் சிக்கி அதை சுற்ற ஆரம்பிக்கும்.
நாம் அப்படிச் செய்யாததால் நமது விண்கலம் வியாழன் காரணமாக அதிக வேகம் பெற்று தொடர்ந்து செல்லும். ஆகவே அந்த வட்டாரத்தில் வியாழனுக்கு அப்பால் உள்ள யுரேனஸ் இருக்க நேர்ந்தால் நமது விண்கலம் யுரேனஸ் அருகே சென்று அதைப் படம் பிடித்து அனுப்பும். மற்றும் தகவல்களையும் அனுப்பும்.
வியாழன் மூலம் நமது விண்கலம் வேகம் பெறுவதைப் பார்த்தோம்.
ஒரு கிரகத்தைப் பயன்படுத்தி இவ்விதம் ஒரு விண்கலம் அதிக வஏகம் பெறும்படி செய்யலாம்.
ஒரு விண்கலத்தின் வேகத்தை குறைக்கவும் ஒரு கிரகத்தைப் பயன்படுத்தலாம்.
எல்லா கிரகங்களும் சூரியனை தத்தம் பாதையில் சுற்றுகின்றன.
ஒரு கிரகத்தைப் பின்புறமாகக் கடந்து சென்றால் ஒரு விண்கலம் வேகம் பெறும்.
ஒரு கிரகத்தை முன்புறமாகக் கடந்து சென்றால் விண்கலத்தின் வேகம் குறையும்.
இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
மங்கள்யான் பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டேன். சில சந்தேகங்கள் உள்ளன. மீண்டும் படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.
மிக எளிமையான விளக்கம், உண்மை நிலவரத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொன்னதற்கு நன்றி.
நமது பூமிக்கு உள்ள ஈர்ப்பு சக்தி போல் செவ்வாய்க்கும் உண்டா?
மிக எளிமையான விளக்கம், உண்மை நிலவரத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொன்னதற்கு நன்றி.
நமது பூமிக்கு உள்ள ஈர்ப்பு சக்தி போல் செவ்வாய்க்கும் உண்டா?
அருமையான விளக்கங்கள். எங்களது கேள்விகளுக்கும் எளிமையாக புரியும் படி விளக்கங்கள்.
எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் தங்களால் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டன.
நன்றி!
வேறென்ன சொல்ல.. உங்களது எழுத்துக்களை படிக்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்!
நன்றி!
Kumar
செவ்வாய்க்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆனால் பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் சிறியது. ஆனால் சந்திரனை விடப் பெரியது. செவ்வாயின் ஈர்ப்பு சக்தியானது பூமியின் ஈர்ப்பு சக்தியை விடக் குறைவு.
இதனால் செவ்வாய்க்கு இழப்பு அதிகம். ஈர்ப்பு சக்தி குறைவு என்பதால் அதனால் தனது காற்று மண்டலத்தை கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. காற்று மண்டலத்தை இழக்க ஆரம்பித்த போது காற்றழுத்தம் குறைந்தது. ஆகவே நீரானது நீர் வடிவில் இருக்க முடியாமல் போய்விட்டது. செவ்வாய் இன்னமும் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது
super.
அருமையான விளக்கங்கள். மிகத்தெளிவான கட்டுரை,
நன்றி! நன்றி! நன்றி!
அருமையான கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா..
தங்கள் உடல்நலன் பெற வாழ்த்துக்கிறேன்...
மென்மேலும் அறிவியல் கட்டுரைகளை கொடுக்க வேண்டுகிறேன்...
நன்றி...
தற்போது மங்கல்யான் நலைமை பற்றி எழுத வேண்டுகிறேன் .
Post a Comment