Oct 8, 2013

மிதக்கும் அணு மின்சார நிலையம்

Share Subscribe
ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை.  சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும்.  விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள்   அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.

மகாராஷ்டிர மானிலத்தில் ஜைதாப்பூரில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள அணுமின் நிலையம் பற்றி  ஒரு சமயம் ஆங்கில டிவி செய்தி சேனல் ஒன்று இப்படி பீதி கிளப்பும் தலைப்புடன் செய்தி வெளியிட்டது. (தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது).

ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை.  ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக  நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.
ரஷிய மிதக்கும் அணுமின் நிலையத்தின் மாடல்
image: SevMashZevod
கப்பல்களில் அணு உலை இடம் பெறுவது என்பது புதிது அல்ல. பனிக்கட்டியால் மூடப்பட்ட கடல் பகுதிகளில் பனிக்கட்டியை உடைத்து கப்பல்கள் செல்வதற்கு வழி அமைக்க ரஷியா ஏற்கெனவே விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை பனிக்கட்டி உடைப்பான் கப்பல்கள் ( icebreakers) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணுசக்தியால் இயங்குவை. அதாவது இவற்றில் அணு உலைகள் உண்டு.  இக் கப்பல்கள் இயங்க இந்த அணு உலைகள் உதவுகின்றன்

இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.

ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது.  பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் வியக்க வைக்கிறது ஐயா... நன்றி...

ABUBAKKAR K M said...

வணக்கம்.
””மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.
ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது. பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.”””
பதிவில் கூறப்பட்டுள்ள செய்திகள் மிகவும் வியப்பூட்டுவதாகவும் , ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன.
மிகச்சரியான நேரத்தில் , மிகச்சரியான பதிவு.
கே.எம்.அபுபக்கர்.

பொன்.முத்துக்குமார் said...

"(தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது)"

தமிழ் டி.வி சேனல்களின் விற்பனை சரக்கே வேறு. :)

Subbaraman said...

Hello Sir, What is the environmental impact of this?

என்.ராமதுரை / N.Ramadurai said...

சுப்பராமன்
மிதக்கும் அணு மின் நிலையங்கள் சுற்றுச்சூழல் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சிறப்பான்வை என்றும் சொல்ல முடியாது. அவை பயங்கரவாதிகளால் தாக்கப்படுகிற ஆபத்து உள்ளது. ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அணு உலைகள் நீரில் மூழ்கி கடலில் அந்த வட்டாரத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். இப்படியான சில பாஅதக அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.இந்த மாதிரி விஷயங்களில் பாதகங்களை விட சாதகங்கள் அதிகம் உள்ளதா என்பதே கருத்தில் கொள்ளப்பாடுகிறது

Anonymous said...

In today's world with heightened threat of terrorism, only those countries who can afford to spend millions on safeguarding such installations should think of this...this is definitely not for a soft state like India...

Post a Comment