ஸ்மைல் பிளீஸ்’
உலகிலேயே அது தான் மிகப் பெரிய குரூப் போட்டோவாக இருக்க வேண்டும்.
நாஸா விஞ்ஞானிகள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி உலகில் பல்வேறு நாடுகளிலும் பல நகரங்களில் ஜூலை 19 ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் வெளியே வந்து திறந்தவெளியில் ஒன்று கூடி நின்று குரூப் போட்டோவுக்காக புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டனர்.
பல லட்சம் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் இவ்விதம் திறந்த வெளியில் கூடி நின்று கொண்டு வானத்தைப் பார்த்தபடிசிறிது நேரம் அசையாமல் நின்ற்னா.
அது ஏன் வானத்தை அண்ணாந்து பார்க்க வேண்டும்.?
ஏனெனில் படம் பிடிக்கிற கேமிரா சுமார் 144 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனி கிரகத்துக்கு அருகே காசினி என்னும் பெயர் கொண்ட விண்கலத்தில் தான் இருந்தது.
காசினி விண்கலத்தின் கேமிராவில் இந்த பல லட்சம் மக்களின் முகம் விழுந்திருக்குமா? உள்ளபடி நாஸா விஞ்ஞானிகள் செய்த ஏற்பாட்டின்படி அந்த விண்கலம் பூமியைத் தான் படம் பிடித்தது. அவ்விதம் எடுக்கப்பட்ட படத்தில் பூமியே வெறும் புள்ளியாகத்தான் தெரிகிறது. பூமியின் கண்டங்கள் கடல்கள் எதுவுமே தெரியவில்லை.
அப்படியானால் உலகின் பல பகுதிகளிலும் பல லட்சம் மக்கள் கூடி நின்று போஸ் கொடுத்தது ஏன்?
பல கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பூமியைப் படம் பிடிக்கச் செய்வது என்பது மிகக் கடினமான அபூர்வமான பணியாகும். ஆகவே தான் காசினி எடுக்கும் போட்டோவில் தங்கள் முகம் விழாது என்பது தெரிந்தும் பல லட்சம் மக்கள் நாஸாவின் அப்பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
காசினி விண்கலத்தில் உள்ள கேமிரா ஜூலை 19 ஆம் தேதி பூமியைப் படம் எடுத்தது.அது எடுத்த படங்களை நிபுணர்கள் சீராக்கும் பணி முடிய சில நாட்கள் ஆகின.அதன் பிறகு இப்போது தான் அப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன
மேலே உள்ள படத்தில் சனி கிரக உருண்டையின் ஒரு பகுதி தெரிகிறது. சனி கிரகத்தின் வளையங்களும் தெரிகின்றன். படத்தின் கீழ்ப் பகுதியில் சிறிய அம்புக்குறிக்கு மேலே சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி.
பூமியின் கண்டங்கள், கடல்கள், நீண்ட மலைத் தொடர்கள், நாஸா கேட்டுக் கொண்டதால் திறந்த வெளியில் நின்று குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பல லட்சம் பேர் என எல்லாமே இந்த சிறிய புள்ளியில் அடக்கம்.
மேலே உள்ள படத்தைக் கூர்ந்து கவனித்தால் இரண்டு புள்ளிகள் தெரியும். இடது புறத்தில் உள்ளது பூமி. வலது புறத்தில் மங்கலாக இருப்பது சந்திரன். இதுவும் காசினி எடுத்த ப்டமே.
நாஸா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இத்தாலிய விண்வெளி அமைப்பு ஆகியன சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் காசினி என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை சனி கிரகத்தை நோக்கிச் செலுத்தின. இந்த விண்கலம் 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை நெருங்கி ஆராயத் தொடங்கியது.படங்களை எடுத்து அனுப்பியது. காசினியில் உள்ள கேமிரா இது வரை பல ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது. சனி கிரகம், அக்கிரகத்தைச் சுற்றுகின்ற 62 சந்திரன்கள் ஆகியவற்றின் விதவிதமான படங்கள் முதலியன அவற்றில் அடங்கும்.
காசினி பூமியைப் படம் பிடித்து அனுப்புவது இது முதல் தடவை அல்ல. 2006 ஆம் ஆண்டில் காசினி எடுத்து அனுப்பிய படத்தை மேலே காணலாம். படத்தில் வலது ஓரமாக உற்றுப் பார்த்தால் மிகச் சிறிய புள்ளியாகத் தெரிவது தான் பூமி. ஆனால் அப்போது யாரும் வானை நோக்கி நின்று குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவில்லை.
ஆனால் இந்தத் தடவை நாஸாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டாக்டர் கரோலின் போர்க்கோ ஐடியா பண்ணி வானவியல் சமாச்சாரத்தில் மக்களின் ஈடுபாட்டை வளர்க்கக் கருதி பல லட்சம் மக்கள் ஆங்காங்கு திரண்டு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி செய்தார்.
கண்ணுக்கே தெரியாத காசினி விண்கலம் வானில் இருப்பதாகக் கருதப்பட்ட இடத்தை நோக்கி கையை ஆட்டி போஸ் கொடுக்கும் அமெரிக்க மக்கள் |
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரண்டு நின்ற கூட்டம் |
சனி கிரகத்தையும் தாண்டி சூரிய மண்டலத்தின் எல்லையிலிருந்து அதாவது 1450 கோடி கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தால் பூமி சுத்தமாகத் தெரியாது. சூரியனோ மங்கலான ஒரு நட்ச்த்திரமாகத் தெரியும்.( சூரியன் ஒரு நட்சத்திரமே).
இதையே வேறு விதமாகக் காண்போம். நிலவற்ற இரவில் வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் நமக்கு சிறிய சிறிய ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றன. இந்த நட்சத்திரங்களில் பலவற்றுக்குப் பூமி போன்ற கிரகங்கள் இருக்கலாம். பெரிய டெலஸ்கோப் கொண்டு பார்த்தாலும் அந்த கிரகங்கள் தெரிவதில்லை.
விண்வெளி என்பது பிரும்மாண்டமானது. விஸ்தாரமானது. நீங்கள் 2000 கோடி கிலோ மீட்டர் தொலைவில் ஒரு விண்கலத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்தத் திசையில் நோக்கினாலும் எண்ணற்ற ஒளிப்புள்ளிகள் தெரியும்.விண்வெளியானது எல்லையற்றது. பகல் இரவு என்பது கிடையாது. ,நிரந்தமான காரிருள் கப்பியது. வாட்டும் கடும் குளிர் நிலவுவது. உயிரற்றது.
மாறாக, ஒளியும் வெப்பமும் உயிர் வாழ்க்கைக்கு அத்தியாவசிய்மானவை. ஆகவே தான் நாம் “ ஆண்டவனே, இருளை அகற்றி ஒளியை அளிப்பாயாக ” என்று பிரார்த்திக்கிறோம்.
7 comments:
Nice and very informative
வியக்க வைக்கும் தகவல்கள்... மனதில் இருட்டு அகலட்டும்... நன்றி ஐயா...
வணக்கம் ஐயா
சுஜாதா ஒருவர் தான் தமிழில் அறிவியலும், வானியலும் எழுதுவார் என்றிருந்தேன், இன்றுதான் தங்கள் வானியல் அறிவை கண்டு மலைத்தேன்.
வெள்ளியின் உதயம் பற்றி தேடும்போது தங்கள் பிளாக் கிடைக்கப்பெற்றேன்.. நன்றி...
வியாழன் விழுந்து வெள்ளி எழுவது எப்போது? அந்த நிகழ்வை பற்றி கூறுங்களேன்..
தியாகராஜன்.தானவயல்.
please clarify, Will it take 27 years to reach Saturn from earth ??
"நாஸா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இத்தாலிய விண்வெளி அமைப்பு ஆகியன சேர்ந்து 1977 ஆம் ஆண்டில் காசினி என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை சனி கிரகத்தை நோக்கிச் செலுத்தின. இந்த விண்கலம் 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை நெருங்கி ஆராயத் தொடங்கியது
Post a Comment