Pages

May 12, 2013

பெரிய சூரியன் பிளஸ் சிறிய சந்திரன் = கங்கண சூரிய கிரகணம்

ஓரளவு  அதிசயமான  சூரிய கிரகணம் மே 10 ஆம் தேதி நிகழ்ந்தது. இது ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் மட்டுமே தெரிந்தது. இந்த வகை சூரிய கிரகணத்துக்கு கங்கண சூரிய கிரகணம் என்பது பெயர். கங்கணம் என்றால் வளையல். அந்த வகையில் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படாமல் சூரியனின் நடுப்பகுதி மட்டும் மறைக்கப்பட்டடு சூரியன் வளையல் போன்று  ஒளி வளையமாகத் தென்படும்.
கங்கண சூரிய கிரகணம். ஒளி வளையம்  தான் சூரியன். அதன் நடுவே கருப்பு வட்டமாக உள்ளது தான் சந்திரன்
கங்கண சூரிய கிரகணத்தின் போது சூரியன் எவ்விதமாகக் காட்சி அளிக்கும் என்பதை மேலேயும் கீழேயும்  உள்ள ப்டங்கள் காட்டுகின்றன.
கங்கண சூரிய கிரகணம் இன்னொரு காட்சி.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக சந்திரன் வந்து நிற்கும் போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. பூமியைச் சுற்றி வருகின்ற சந்திரன்  எப்போதாவது தான் இப்படி நேர் குறுக்கே வருகிறது.சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வாக இருப்பதால் சந்திரன் பெரும்பாலான சமயன்களில் சூரியனை மறைப்பது கிடையாது.
சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்பட்டுள்ளது.
இது அறைகுறை (பார்சுவ) சூரிய கிரகணமாகும்
சந்திரன் இப்படி நேர் குறுக்காக வந்து நிற்கும் போது நிகழ்கின்ற சூரிய கிரகணம் மூன்று வகையாக இருக்கலாம். ஒன்று சூரிய ஒளி வட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் சந்திரன் மறைக்கலாம். இது பார்சுவ ( அறைகுறை) சூரிய கிரக்ணமாகும்.
பூரண சூரிய கிரகணம்
இரண்டாவதாக சந்திரனின் விளிம்பும் சூரியனின் விளிம்பும் மிகக் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பொருந்தி பூரண சூரிய கிரகணம் ஏற்படலாம்.  மூன்றாவது வகைதான் கங்கண சூரிய கிரகணம்.

கங்கண சூரிய கிரகணம் ஏற்படுவது ஏன்? சின்ன சூரியன், பெரிய சூரியன் மற்றும் சின்ன சந்திரன் பெரிய சந்திரன் தான் காரணம்.
இடது புறம்: ’சின்ன’ சூரியன் 152 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது..
வலது புறம்.’ பெரிய’  சூரியன் 147 மிலியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
சூரியன் ஆண்டில் 365 நாட்களும் ஒரே சைஸில் இருப்பதாகப் பலரும் கருதுவர். அது அப்படி அல்ல.  சூரியன் சில சமயம் சற்று பெரிய ஒளி வட்டமாக இருக்கும். வேறு சில சமயங்களில் சூரியன் சற்று “இளைத்து” காணப்படும். இது பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் பொருத்தது.

சூரியன் அதிகத் தொலைவில் இருந்தால் சற்றே சிறுத்துக் காணப்படும்.சற்று அருகில் இருந்தால் சற்று பெரிதாகக் காணப்படும் ( மேலே படம் காண்க)

சந்திரனும் அப்படித்தான்.பூமியிலிருந்து அமைந்துள்ள தூரத்தைப் பொருத்து சந்திரன்  சில சமயங்களில் பெரிதாக்வும் வேறு சமயங்களில் சற்று சிறியதாகவும் காணப்படும். நாம் கூர்ந்து கவனித்தாலும் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.
இடது புறம் ‘சின்ன ‘: சந்திரன் 4 லட்சத்து 5 ஆயிரம்  கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
வலது புறம்: ‘பெரிய’  சந்திரன் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது.
சூரியனின் சைஸ் பெரியதாக இருக்கிற சமயம் பார்த்து சந்திரன் சற்றே தொலைவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான சமயத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டால் பெரிய சூரியனுக்கு நடுவே சின்ன சந்திரன் அமைவதாகி விடும். அப்போது தான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்கிற்து.


அசப்பில் பார்த்தால் வானில் சூரியனும் பௌர்ணமி நிலவும் ஒரே சைஸில் இருப்பது போலத் தோன்றும். உண்மையில் சந்திரன் பூமியை விட்ச் சிறிது. சூரியனை விட மிக மிகச் சிறியது.

ஆனால் பூரண சூரிய கிரகணத்தின் போது சூரியனை சந்திரன் விளிம்போடு விளிம்பு பொருந்துகிற வகையில் மறைக்கிறது.இதற்குக் காரணம் உண்டு.பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைப் போல 400 மடங்கு தூரத்தில் சூரியன் உள்ளது. தவிர, சூரியனின் குறுக்களவானது சந்திரனின் குறுக்களவைப் போல  400 மடங்கு உள்ளது. இது தற்செயல் பொருத்தமே. ஆகவே தான் பூரண சூரிய கிரகணத்தின் போது ச்ந்திரன் விளிம்புடன் விளிம்பு பொருந்தும் வகையில் சூரியனை மறைத்து நிற்கிறது.


4 comments:

  1. படங்களுடன் விரிவான விளக்கம்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. நல்ல தெளிவான விளக்கம் . நன்றி அய்யா

    ReplyDelete
  3. தகவலுக்கு மிக நன்றி

    S.சுதாகர்

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete