May 10, 2013

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசையா? நீங்களும் விண்ணப்பிக்கலாம்

Share Subscribe
செவ்வாய் கிரகத்துக்கு எங்கள் செலவில் உங்களை அனுப்பி வைக்கிறோம்..  விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் டச்சு நிறுவனம் ஒன்று அறிவித்தது.

ஆனால் இதில் ஒரு முக்கிய நிபந்தனை உண்டு.. அதாவது செவ்வாய்க்கு செல்கிறவர்க்ள்  திருப்பி பூமிக்கு அழைத்து வரப்படமாட்டார்கள்.அதற்கு எந்த ஏற்பாடும் கிடையாது.உத்தரவாதமும் கிடையாது.
செவ்வாய்க்குச் செல்பவர்கள் இவ்விதக் குடில்களில் தான் தங்கியிருக்க வேண்டும்
செவ்வாய்க்குப் போனால்  கடைசி வரை அங்கேயே இருக்க  வேண்டியது தான் என்று தெரிந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கடந்த சில நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறு தொகையைக் கட்டி தங்களது பெயரைப்  பதிவு செய்து கொண்டுள்ளனர்.வருகிற நாட்களில் இவர்களது எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கலாம்.

மார்ஸ் ஒன் எனப்படும் இந்த நிறுவனத்துக்கும் விண்வெளித் துறைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.லாப நோக்கு இல்லாத நிறுவனம் என்று தங்களை அறிவித்துக் கொண்டுள்ள அந்த நிறுவனம் தங்கள் கையிலிருந்து ஒரு பைசா செலவிடப் போவதில்லை.

செவ்வாய்க்கு முதல் குழு 2023 ஆண்டில் அனுப்பப்படும் என்று கூறும் அந்த நிறுவனம் இதற்கு மொத்தம்  30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதையும்  குறிப்பாக டிவி விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் திரட்டப்படும் என்றும் அது கூறுகிறது.

முதல் குழு செவ்வாய்க்குச் செல்வதற்கு முன்னரே செவ்வாயில் இவர்கள் தங்குவதற்கான குடில்கள் ஆளில்லா விண்கலங்கள் மூலம் செவ்வாய்க்கு அனுப்ப்ப்பட்டு தானியங்கி முறையில் நிர்மாணிக்கப்படும்.
செவ்வாய் கிரகத்தில் ஆறு, குளம் எதுவும் கிடையாது. மரம், செடி, கொடி புல் பூண்டு கிடையாது
இக்குடில்களில் தங்குவதற்கான இடமும் காய்கறி பயிரிடுவதற்கான ப்குதியும் உடற் ப்யிற்சிக்கான பகுதியும் இருக்கும். இதில் தங்குபவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளையும் பேட்டிகளையும் ஒளிபரப்ப இக்குடில்களில் டிவி காமிராக்கள் இருக்கும்.

முதல் குழுவில் நான்கு பேர் இருப்பார்கள். இவர்களில் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். விண்ணப்பிக்கிறவர்கள் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் எந்த நிலைமையையும் சமாளிக்கும் மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குழு சென்ற இரண்டு ஆண்டுகளில் அடுத்த குழு அனுப்பப்படும். இவ்விதம் ஆறு குழுக்கள் அனுப்பப்படுவர். எனவே மொத்தம் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு ஏழு ஆண்டுக்காலம் பயிற்சி அளிக்கப்படும்.

 விண்ணப்பித்த அனைவரையும் பரிசீலித்து இந்த 24  பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.. இதற்கென அந்தந்த நாடுகளில் உள்ள குழுக்கள் இதற்கான போட்டியை நடத்தும்.இவை டிவியில் காட்டப்படும்.இந்த நிகழ்ச்சியை தங்கள் டிவியில் காட்ட விரும்பும் டிவி நிறுவனம் ஏலத்தின் மூலம் பணம் செலுத்தி இதற்கான உரிமையைப் பெறும்.. நிகழ்ச்சியின் இடையே விளம்பரங்கள் இடம் பெறும்.

செவ்வாய்க்குச் செல்லவிருப்பவர்களைப் பேட்டி காணும் உரிமை, அவர்களது குடும்பத்தைப் பேட்டி காண்பதற்கான உரிமை, இந்த நால்வரையும் சுமந்து கொண்டு ராக்கெட் உயரே கிளம்புவதை டிவியில் காட்டுவதற்கான உரிமை, இந்த நால்வரின் ஏழு மாதகாலப் பயணத்தின் போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் பற்றி பேட்டி காண்பதற்கான உரிமை, செவவாயில் இறங்குவதைக் காட்டுவதற்கான உரிமை என பல உரிமைகளும் ஏலம் விடப்படலாம்..
தனியார் நிறுவனம் உருவாக்கி வரும்    பால்கன் ஹெவி ராக்கெட். செவ்வாய்க்கான விண்கலம் இதன் மூலம் செலுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகள் டிவியில் காட்டப்படும் போது இடையிடையே விளம்ப்ரங்கள் இடம் பெறலாம். நால்வரும் அடங்கிய விண்கலம் கீழே இறங்கப் போகும் கட்டத்தில் “ இந்த நால்வரும் தங்களுடன் எடுத்துச் செல்லும் போஷாக்குப் பானம் எங்களுடையது தான்” என்று விளம்பரம் வரலாம். அந்த பானத்தின் பாட்டில் மீதுள்ள லேபிள் குளோசப்பாகக் காட்டப்படலாம்.

இவர்கள் நால்வரும் செவ்வாயின் த்ரையில் பத்திரமாக இறங்கினார்களா என்ற கவலையில் நாம்  அனைவரும் டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது   “ செவ்வாயில் முதல் மனிதன் காலடி வைத்த போது அணிந்திருந்த ஷூ எங்கள் கம்பெனி தயாரிப்பே” என்று அலறும் விளம்பரம் தோன்றலாம்.

இவ்விதமாக டி.ஆர்.பி ரேடிங்குகளுக்காக அலையும் டிவி சேனல்கள்,தங்களது விளம்பரங்களை பிரபல சேன்ல்களில் வெளியிட விரும்புகிற பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையே இந்த செவ்வாய்ப் பயணத்தில் முன்னிற்கும்.

செவ்வாய்க்கு நாலவரை அனுப்புத் திட்டமிட்டுள்ள மார்ஸ் ஒன் நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்புவதற்கான ராக்கெட், தொட்ர்பான தொழில் நுட்பம, நீண்ட தூரப் பயணத்தை சமாளிப்பதற்கான தொழில் நுட்பம், செவ்வாயில் இறங்குவதற்கான தொழில் நுட்பம் என எல்லாமே கிடைக்கிற நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
சந்திரனின் தரையிலிருந்து கிளம்பிய சிறிய விண்கலம் மேலே சந்திரனை ச்ற்றுக் கொண்டிருக்கும் தாய்க் கலத்துடன் சேருவதற்காக வந்து கொண்டிருக்கிறது.சந்திரன் வடிவில் சிறியது என்பதால் இந்த அள்விலான சிறிய விண்கலம் போதுமானதாக இருந்ததூ.தொலைவில் அடிவானத்தில் தெரிவது பூமி. இது சந்திரனுக்குச் சென்ற் அப்போலோ விண்வெளி வீரர்கள் எடுத்த படம். 
செவ்வாய்க்கு அனுப்புகிறவர்களை பூமிக்குத் திரும்ப வழி வகை செய்யாமல் விடுவது தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரானது அல்லவா என்று கேட்டதற்கு மார்ஸ் ஒன் திட்ட நிர்வாகி பதிலளிக்கையில் செவ்வாயிலிருந்து பூமிக்குத் திரும்புவதற்கான் தொழில் நுட்பம் இன்னும் உருவாகவில்லையே என்று பதிலளித்தார்

டச்சு நிறுவனத்தின் செவ்வாய்ப் பயணத் திட்டம் பற்றி சிலர் கருத்து தெரிவிக்கையில்  இது டிவியில் வழக்கமாக இடம் பெறுகின்ற ரியாலிடி ஷோ போன்றtதே என்று கூறினர்.

தனியார் நிறுவனம் ஒன்று செவ்வாய்க்கு ஆளை அனுப்புகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதற்குக்  காரணம் உண்டு

 அமெரிக்க நாஸா அமைப்புக்கு அமெரிக்க அரசு பணம் ஒதுக்குவ்தை எப்போதோ குறைத்து விட்டது.  மனிதனை விண்வெளிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் உயரத்துக்கு அழைத்துச் செல்ல இப்போது பல தனியார் நிறுவனங்கள் சொந்தமாக ராக்கெட்டை வடிவமைத்துள்ளன.விண்வெளித் தளங்களையும் பெற்றுள்ளன.

 இந்த விஷயத்தில் முன்னேறிய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையே கூட்டு ஏற்பாடுகளும் உருவாகியுள்ளன. ரஷியா முன்னர சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் விண்வெளித் துறைக்குப் பணம் வாரி வழங்கப்பட்டது.இப்போது அப்படி இல்லை.

ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய விண்வெளி அமைப்பினாலும் பெரும் பணம் ஒதுக்க இயலாது.

1960 களில் அமெரிக்க நாஸா அமைப்பு  சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது விண்வெளி வீரர்கள் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பும் அம்சத்தில் மிக முக்கிய கவனம் செலுத்தியது.சோவியத் யூனியனும் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில்   அதே அளவுக்கு கவனம் செலுத்தியது.

அம்ரிக்கா, ஐரோப்பா, ரஷியா, ஜப்பான் போனற நாடுகளின் விண்வெளி அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து செவ்வாய்க்கு மனிதனை அனுப்பலாமே என்று கேட்கலாம். மார்ஸ் ஒன் டச்சுக் கம்பெனி கூறியது போல ஒரு வழிப் பயணமாக செவ்வாய்க்கு நால்வரை அனுப்புவத்ற்கே 30 ஆயிரம் கோடி ஆகலாம்.

 அங்கிருந்து பூமிக்குத் திரும்புவதற்கு ஆகக்கூடிய செலவையும் சேர்த்தால் 60 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகலாம். மேற்குறிப்பிட்ட நாடுகள் தனியாக அல்லது கூட்டாக இந்த அளவுக்குப் பணம் செலவிடும் நிலையில் இல்லை. இவர்கள் இந்த வகையில் செலவிடும் எந்தத் தொகையும் மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் வந்தாக வேண்டும்.

 வேறு எவ்வளவோ வகைகளில் மக்களின் மேம்பாட்டுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் உள்ள நிலையில் அமெரிகாவோ ரஷியாவோ செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதை முக்கியமான ஒன்றாகக் கருத வாய்ப்பில்லை.

 தவிரவும் மனிதன் செவ்வாய்க்குச் சென்று நடத்தக்கூடிய பல ஆய்வுகளை ஆளில்லா விண்கலம் மூலமே சாதிக்கின்ற நிலைமை உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிய தானியங்கி ஆராய்ச்சிக்கூடத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது. கியூரியாசிடி எனப்படும் அந்த விண்கலம் 2012 ஆகஸ்டில் செவ்வாயில் இறங்கி அங்கு கல்லையும் மண்ணையும் அள்ளிப் பொடியாக்கிப் பரிசோதிப்பது போன்ற நுட்பமான பரிசோதனைகளை நடத்தி வருகிறது.


பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் விஷயம் வேறு.தங்களது  உற்பத்திப் பொருட்களின் விற்பனை பெருகும் என்றால் விளம்பரத்துக்கு நிறைய செலவு செய்வர். டிவி சேனல்களைப் பொருத்த வரையில் அப்படியான தனியார் நிறுவனங்களிடமிருந்து நிறைய விளம்பரங்களைப் பெற்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதே நோக்கம்.

மனிதன் செவ்வாயில் போய் இறங்கினால் பல பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அங்குள்ள காற்றில் ம்னிதன் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் தகுந்த அளவில் இல்லை. நிலையான அளவில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. கடும் குளிர் நிலவுகிறது. திடீரென புழுதி புயல் கிளம்பும். செவ்வாய் கிரகம் முழுவதையும் கப்பிக் கொள்ளும் அந்த புழுதிப் புயல் தொடர்ந்து பல மாத காலம் நீடிக்கும்.

வானிலிருந்து ஆபத்தான கதிர்கள் தாக்கும்.தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பயிர் சாகுபடிக்கான வாய்ப்பு குறைவு.சோத்து மூட்டை கட்டிச் செல்வது போல சில நாட்களுக்குத் தாங்குகிற வகையில் கையோடு கொஞ்சம் எடுத்துச் செல்லலாம். அவ்வளவு தான்.

பூமியிலிருந்து தொடர்ந்து கண்டெய்னர் போன்ற ஆளில்லாத விண்கலங்கள் மூலம் உணவையும் தண்ணீரையும் அனுப்பலாம். இது நிச்சயமான ஏற்பாடாக இருக்க் முடியாது.


ஆனால் ஒன்று. செவ்வாய்க்கு ஒரு வழிப் பயண்மாகச் சிலரை அல்லது பலரை அனுப்ப மார்ஸ் ஒன் டச்சு நிறுவனத்தின் திட்டம் பற்றி இதுவரை விஞ்ஞானிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.

செவ்வாயில் போய் இறங்குகிறவர்கள் நிச்சயம் சில நாட்களில் அல்லது பல நாட்களில் செத்து விடுவர்  என்ற நிலையில் அவ்விதமான திட்டத்தை விஞ்ஞானிகள்  ஆதரிக்க மாட்டார்கள். இதை வேறு கோணத்திலிருந்தும் பார்த்தாக வேண்டும்.

செவவாய்க்கு செல்கிறவர்கள் அங்கு மடிந்த நிலையில் அவர்களது சடலம் முறையாக அடக்கம் செய்யப்படாத் நிலையில் சடலங்கள் அழுகி அதன் விளைவாக செவ்வாயில் கிருமித் தொற்று ஏற்படலாம். உகந்த சூழ்னிலை இருக்குமானால் இக்கிருமிகள் பல்கிப் பெருகலாம்.

செவ்வாய் கிரகத்தில் இப்போது உள்ள நிலைமைகளை கெடுக்கின்ற செயலை உலக நாடுகள் அனுமதிக்காது. எந்த நாட்டுக்கும் இதற்கு உரிமை கிடையாது. நிச்சயம் டச்சு நிறுவனம் போன்ற  தனியார் துறைக்கு அந்த உரிமை கிடையாது.

பல்வேறு நாடுகளும் நிபுணர்களும் எழுப்பக்க்கூடிய ஆட்சேபங்களின் விளைவாக டச்சு நிறுவனத்தின் திட்டம் தடை செய்யப்படுவதற்குள் அது விண்ணப்பக் கட்டண வகையில் கணிசமான பணைத்தை சம்பாதித்து விடும்.இப்போதே நிறைய வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

கடைசியாக ஒரு விஷயம். அமெரிக்கா சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவில்லையா? செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதில் அப்படி என்ன பிரச்சினை என்று கேட்கலாம். பூமியிலிருந்து சந்திரன் கிட்டத்தட்ட ஒரே தூரத்தில் ( சுமார் நான்கு லட்சம் கிலோ மீட்டர்) உள்ளது.எனவே சந்திரனுக்கு மூன்று நாளில் போய்ச் சேர்ந்து விடலாம். ரஷியாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று 36 மணி நேரத்தில் சந்திரனை அடைந்தது.

செவ்வாய் கிரகமோ பூமியிலிருந்து குறைந்தது 20 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆகவே குறைந்தது 7 மாதகாலம் விண்கலத்தில் பயணம் செய்தாக வேண்டும்.

தவிர, சந்திரன் சிறியது. அதன் ஈர்ப்பு சக்தியும் அந்த அளவுக்குக் குறைவு. ஆகவே சந்திரனில்  இறங்குவதற்கும் அங்கிருந்து மேலே கிளம்புவதற்கும் சிறிய கலமே போதுமானதாக இருந்தது
.
சந்திரனுடன் ஒப்பிட்டால் செவ்வாய் வடிவில் பெரியது. ஆகவே அதன்   ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் காரணமாக செவ்வாயில் இறங்குவதில் பிரச்சினை உண்டு. பூமிக்குத் திரும்புவதற்காக செவ்வாயின் நிலப்பரப்பிலிருந்து மேலே கிள்மபுவது இதை விடப் பெரிய பிரச்சினை. செவ்வாயிலிருந்து மேலே  கிளம்புவதற்கு சற்றே பெரிய ராக்கெட் தேவை..

செவ்வாயில்முதலில் போய் இறங்குகிற ரஷிய அல்லது அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து தனி ஏற்பாடாக ஆளில்லா விண்கலங்கள் மூலம் அனுப்பப்படுகின்ற பொருட்களைக் கொண்டு அந்த ராக்கெட்டை உருவாக்க் முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும்.

இதற்கு நம்பகமான ஏற்பாடு உருவாக்கப்பட்டால் தான்  செவ்வாய்ப் பயணம் சாத்தியமாகும்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்ற போது சந்திரனிலிருந்து மேலே கிளம்புவதற்கான சிறிய மற்றும் எளிய வாகனத்தையும் கூடவே எடுத்துச் சென்ற்னர்.

செவ்வாய்க்கு அனுப்பப்படுகிற தாய்  ராக்கெட்டுடன் அங்கிருந்து திரும்புவதற்கான ராக்கெட்டையும் சேர்த்து அனுப்ப வழியில்லை.எடை மிக அதிகமாக இருக்கும் என்பதால் தாய் ராக்கெட் மேலே கிளம்பாது. ஒரு வேளை புதிய தொழில் நுட்பம் அல்லது புது வகை எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால் இது சாத்தியமாகலாம். இவ்வளவு காலமாக மனிதன் செவ்வாய்க்கு அனுப்பப்படாததற்கு இதுவே காரணம்.

( என்னுடைய  இக்கட்டுரை தினமணி நாளிதழில் மே 10 ஆம் தேதி வெளியாகியது. அதே கட்டுரை இப்போது சில  கூடுதல் விளக்கங்களுடனும் படங்களுடனும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆக அதையும் கெடுக்க மனிதன் தயாராகி விட்டேன் என்றே தோன்றுகிறது...

Sudhakar Shanmugam said...

பதிவுக்கு நன்றி. இதுவரை ஒரு இந்தியர்கூட இத்திட்டத்தில் பதிவு செய்யவில்லையா?

S.சுதாகர்

Anonymous said...

வணக்கம் ஐயா

செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அதிலே மனிதன் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலைகள் ஏதாவது இருக்கலாம் என்றுதான் இன்றுவரை ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன அவ்வளவு தொலைவில் உள்ள செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்கிறபோது பூமிக்கு கொஞ்சம் பக்கத்தில் நான்கு லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனில் மனிதன் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலைகள் ஏன் அவ்வளவாக இல்லை ஐயா

வெங்கடேஷ்

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sudhakar Shanmugam
இந்தியர்கள் சிலரும் பதிவு செய்து கொண்டுள்ளதாகக் கேள்வி

என்.ராமதுரை / N.Ramadurai said...

வெங்கடேஷ்
நல்ல கேள்வி. முதலாவதாக சந்திரனில் காற்று மண்டலமே கிடையாது. வடிவில் சிறியது என்பதால் ஆரம்பத்தில் இருந்திருக்கக்கூடிய காற்று மண்டலத்தை அதனால் கெட்டியாகத் தன்னிடம் ஈர்த்து வைத்துக் கொள்ள இயலவில்லை. இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாயில் காற்று மண்டலம் உள்ளது. ஆனால் அந்தக் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் மிக அற்பம்.கார்பன் டையாக்சைட் தான் அதிகம்.
சந்திரன் தனது அச்சில் இயல்பாகச் சுழல முடியாதபடி பூமி தடுக்கிறது. ஆகவே சந்திரனில் பகல் 14 நாள் இரவு 14 நாள். ஆக்வே பகலில் வெயில் பொசுக்கி எடுத்துவிடும். இரவு வேளையில் குளிர் வாட்டி எடுத்து விடும்.இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாயில் கிரகத்தில் வெயில் அதிகமில்லை. குளிர் தான் அதிகம. செவ்வாயில் ஒரு நாள் என்பது பூமியில் உள்ளது போல 24 மணி நேரம். அங்கு மண்ணுக்கு அடியில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்படியான பல காரணங்களால் மனிதனால் செவ்வாயில் சமாளித்து வாழ இயலும். சந்திரனில் அது சாத்தியமில்லை.
மனிதன் சந்திரனுக்குச் சென்று வர முடியும் என்பது ஏற்கெனவே நிருபணமாகி விட்டது. மனிதன் செவ்வாய்க்குப் போக முடியும். திரும்பி வருவதற்கு வழி கண்டுபிடிக்க இன்னும் சில காலம் ஆகலாம்.

ABUBAKKAR K M said...


செவ்வாய்க்கு செல்கிறவர்க்ள் திருப்பி பூமிக்கு அழைத்து வரப்படமாட்டார்கள்.அதற்கு எந்த ஏற்பாடும் கிடையாது.உத்தரவாதமும் கிடையாது.
பல்வேறு நாடுகளும் நிபுணர்களும் எழுப்பக்கூடிய ஆட்சேபங்களின் விளைவாக டச்சு நிறுவனத்தின் திட்டம் தடை செய்யப்படுவதற்குள் அது விண்ணப்பக் கட்டண வகையில் கணிசமான பணைத்தை சம்பாதித்து விடும்.இப்போதே நிறைய வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

<><><>
ஐயா வணக்கம்.
மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பார்த்த பின்பும் செவ்வாய் பயணத்திற்கு முன்பதிவாம் ......
இதைப்பார்க்கும்போது திரு.வடிவேலு , ஒரு திரைப்படத்தில் சொன்ன வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
“இன்னுமாடா நம்மளை இந்த உலகம் நம்புகிறது? ........

கே.எம்.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி.
11 05 2013














Post a Comment