ஏப்ரல் மாதக் கடைசியில் தொடங்கி மே மாதக் கடைசி வரை சனி கிரகத்தை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
சனி கிரகமானது இப்போது சூரியனுக்கு நேர் எதிரே உள்ளது.ஆகவே தான் சூரியன் அஸ்தமிக்கும் போது கிழக்கு வானில் சனி கிரகம் உதிக்கிறது. இதையே வேறு விதமாகச் சொன்னால் சூரியன் - பூமி - சனி ஆகிய மூன்றும் அந்த வரிசையில் நேர்கோட்டில் அமைந்துள்ளன. இது ஒன்றும் அதிசயமானது அல்ல.
ஏப்ரல் 28 ஆம் தேதி சூரியன், பூமி, சனி ஆகியவை நேர்கோட்டில் இருக்கும் |
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 3 ஆம் தேதி பூமி நடுவே அமைய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தன.2012 ஆம் ஆண்டில் இது ஏப்ரல் 15 ஆம் தேதி நிகழ்ந்தது இந்த ஆண்டில் ஏப்ரல் 28 ஆம் தேதி நிகழ்கிறது. அடுத்த ஆண்டில் மே 10 ஆம் தேதி நிகழும்.
டெலஸ்கோப் மூலம் பார்த்தால் சனி இப்போது இவ்விதம் தெரியும் |
சனி கிரகத்துக்கு அற்புதமான வளையங்கள் உண்டு.ஆனால் குறைந்தது சிறிய டெலஸ்கோப் மூலம் பார்த்தால் தான் சனி கிரகத்தின் வளையங்கள் தெரியும்
வாயேஜர் 2 விண்கலம் 1980 ஆம் ஆண்டில் எடுத்து அனுப்பிய படம் |
சனி கிரகத்தைக் காணும் போது உங்கள் பார்வை சனி கிரகத்தின் மீது படுகின்ற அதே நேரத்தில் சனியின் பார்வை உங்கள் மீது பட்டு கெட்டது நடந்து விடுமோ என்று அஞ்சத் தேவையில்லை. நீங்கள் சனி கிரகத்தைப் பார்க்காமல் இருந்தாலும் சரி, சனியில் பார்வை பூமியில் உள்ள 710 கோடி மக்கள் மீதும் எப்போதும் விழுந்து கொண்டிருந்து தான் இருக்கிறது.
சனி கிரகம் வானில் இப்போது துலா ராசியில் உள்ளது.காண்க: சனிப் பெயர்ச்சி என்பது என்ன?
7 comments:
தகவலுக்கு நன்றி ஐயா, ஒரே வாரத்தில் உங்களிடமிருந்து மூன்று பதிவுகள் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சனி நேரே எங்களை பார்த்தாலும் எங்களுக்கு கவலை இல்லை
நன்றி
S.சுதாகர்
சனி கிரகம் போல் இல்லாமல் நீங்கள் தொடர்ந்து அறிவியல் செய்திகள் தர வேண்டும். :)
ஐயா, எனக்கு 2 சந்தேகங்கள்,
1. சூரியன், பூமி, சனி ஒரே நேர்கோடு என்றால் சரியான நேர்கோடா அல்லது ஏதேனும் டிகிரி வித்தியாசம் உண்டா?
2. நேர்கோடு என்றால் பூமியின் நிழல் சனியில் விழ வாய்ப்பு உண்டா?
சனி கிரகத்தை காணும் வகையிலான சிறப்பான Telescope எங்கு கிடைக்கும்?
நன்றி,
மாணிக்கராஜ்.
மாணிக்கராஜ்
சூரியன் - பூமி - சனி ஆகிய மூன்றும் நேர் கோட்டில் இருக்கும். ஒரு சில டிகிரி வித்தியாசம் இருக்கலாம். என்னால் இது பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலாது.
பூமியின் நிழல் ( கூம்பு வடிவில்) ஒரு கோடி கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கலாம். ஆனால் சனி கிரகம் சுமா 132 கோடி தொலைவில் உள்ளது. ஆகவே பூமியின் நிழல் சனி கிரகம் மீது விழ சிறிதும் வாய்ப்பில்லை
டெலஸ்கோப் சமாச்சாரம் எனக்குத் தெரியாது.கூகுள் searchல் தேடிப் பாருங்கள்
ஐயா வணக்கம்
ஐயா ஒரு சிறிய ஐயம கிழக்கு திசையில் அல்லாமல் இரவு 11 மணிக்கு மேல் தெற்கு திசையில் மிகவும் பிரகாசமாக ஒரு நட்சத்திரம்? தெரிகிறதே அது என்ன வேறு ஏதேனும் நட்சத்திரமா அல்லது கிரகமா இல்லை அதுதான் சனி கிரகமா தாங்கள் குறிப்பிட்டதுபோல் கிழக்கு திசையில் அல்லாமல் திசை மாறி தெரிவதால் சிறிது ஐயம.
மேலே தாங்கள் (கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 3 ஆம் தேதி பூமி நடுவே அமைய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தன.2012 ஆம் ஆண்டில் இது ஏப்ரல் 15 ஆம் தேதி நிகழ்ந்தது) என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதிலே 2022 என்பதில் சிறிய பிழை உள்ளது என்று நினைக்கிறேன் ஐயா
இவ்வாரத்தில் மூன்று பதிவுகள் மிக்க நன்றி
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
நீங்கள் கூறுகின்ற குறிப்புகளை வைத்துச் சொல்வதானால் அது அகஸ்திய(Canopus ) நட்சத்திரமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தென் வானில் மிகச் பிரகாசமாகத் தெரியக்கூடிய நட்சத்திரம் அகஸ்திய நட்சத்திரமாகும்
நீங்கள் குறிப்பிட்டபடி 2022 என்று இருப்பது பிழைதான். அது திருத்தப்பட்டு விட்டது.
வணக்கம் ஐயா
தங்கள் பதிலுக்கு நன்றி. மேலும் ஒரு கேள்வி பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவரும் தூரம் எவ்வளவு இருக்கும் ஐயா
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
சூரியனை பூமி ஒரு தடவை சுற்றி வந்தால் அது மொத்தம் 94 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதாக ஆகிறது.
செவ்வாய், வியாழன் சனி போன்ற கிரகங்களைப் பொருத்த வரையில் இது இன்னும் அதிகமாக இருக்கும்.
Post a Comment