Pages

Jan 7, 2013

அண்டார்டிகாவில் பாதாள் ஏரியில் நுண்ணுயிர்கள்

அண்டார்டிகா தென் துருவத்தில் அமைந்த பெரிய கண்டம். கெட்டியான தார் ரோடு போல எங்கு பார்த்தாலும் கெட்டியான உறை பனி.இந்த உறை பனி காரணமாக எங்கு பார்த்தாலும் உறைபனியின்   வெண்மை செடி கொடி கிடையாது.ஆங்காங்குள்ள ஆராய்ச்சிக் குழுவினர் தவிர, வேறு யாரும் அங்கு  நிரந்தரமாக வசிப்பது கிடையாது.

அண்டார்டிகா பல நூறு மீட்டர் ஆழத்துக்கு உறைபனியால் மூடப்பட்டிருந்தாலும் கெட்டியான உறை பனிக்கட்டிக்கு அடியில் பல ஏரிகள் உள்ளன என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்ப்ட்ட விஷயம் மொத்தம் 387 பாதாள ஏரிகள் உள்ளன.

லேக் விடா பகுதி 
சில ஏரிகள் மிக ஆழத்தில் உள்ளன. லேக் வோஸ்டாக், லேக் எல்ஸ்வர்த் ஆகிய பாதாள ஏரிகள் இப்படிப்பட்டவை. லேக் வில்லான்ஸ் என்னும் ஏரியும் ஓரளவு ஆழத்தில் உள்ளதே. ஆனால் லேக் விடா எனப்படும் ஏரி மிகக்  குறைந்த ஆழத்தில் உள்ளதாகும். ஆகவே வழக்கமான முறையில் தரையில் துரப்பணமிட்டு அந்த பாதாள ஏரியின் நீரை எடுப்பதில் பெரிய பிரச்சினை இருக்கவில்லை

 லேக் விடா  பகுதி மற்ற இடங்களைப் போலவே உறைபனிக்கட்டியால் ஆனதே. அங்கு 60 அடி ஆழத்துக்கு அடியில் ஏரி உள்ளது. அந்த பாதாள ஏரியில் உள்ள தண்ணீரானது மைனஸ் 13 டிகிரி அளவுக்குக் கடும் குளிர்ச்சியானது. பாதாள ஏரி என்பதால் சுத்தமாக வெளிச்சம் கிடையாது. கும்மிருட்டு..அத்துடன் ஏரி நீர் கடும் உப்புக் கரிப்பதாகும்.
லேக் விடா பாதாள ஏரில் நீரில் காணப்பட்ட நுண்ணுயிர்கள்
பொதுவில் கடல் நீரானது சுமார் 3. 5 சதவிகித அளவுக்கு உப்பு அடங்கியது. ஆனால் மேற்படி பாதாள ஏரியின் நீர் 20 சதவிகித அளவுக்கு உப்பு அடங்கியது.இப்படியான பாதகமான சூழ்னிலைகளில் அந்த பாதாள ஏரியில் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது வியப்பளிப்பதாகும். அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள பாலைவன ஆராய்ச்சிக் கழகத்தின் நிபுணர்கள் இந்த கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் அமெரிக்க அறிவியல் தேசிய அகாடமியின் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஏரியானது 2800 ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்கட்டிக்கு அடியில் புதையுண்டு போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.இந்த பாதாள ஏரியில் 32 வகையான நுண்ணுயிர்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் கிடையாது. சூரிய ஒளியும் கிடையாது. ஆனாலும் பாதாள ஏரியில் உள்ள நுண்ணுயிர்கள் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி உயிர் வாழ்கின்றன என்று கருதப்படுகிறது. வழக்கமான முறைகளுக்குப் பதில் முற்றிலும் மாறுபட்ட சூழ் நிலைகளில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது என்பது பூமியில் புதிது அல்ல.

கடல்களில் சில இடங்களில் நல்ல ஆழத்தில் Black Smokers  எனப்படும் கூம்பு வடிவ வென்னீர் ஊற்று உள்ள இடங்களில் பல நூறு டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடான நீர் வெளிப்படுகிறது. அவற்றின் அருகே அதாவது கடும் வெப்பம் நிலவும் சூழலில் நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.

இதற்கு நேர் மாறான சூழ் நிலைகளில் லேக் விடா பகுதியில்  நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது சனி, வியாழன் போன்ற கிரகங்களின் சந்திரன்களில் கிட்டத்தட்ட இம்மாதிரியான  சூழ் நிலைகளில் நுண்ணுயிர்கள் ஒரு வேளை இருக்கலாம் எனபதைக் காட்டுவதாகச் சொல்லலாம்.

லேக் எல்ஸ்வர்த் பகுதியில் அமைந்த முகாம்கள்
இதற்கிடையே   அண்டார்டிகாவில் சுமார் மூன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் பல லட்சம் ஆண்டுகளாகப் புதையுண்டு கிடக்கும் எல்ஸ்வர்த் ஏரியின் நீரை எடுத்து ஆராய பிரிட்டிஷ் ஆராய்ச்சிக் குழுவினர் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் 2012 டிசம்பர் மாத மத்தியில் மேற்கொணடனர்.டிசம்பர் மாதம் என்பது அண்டார்டிகா பகுதியில் ”கோடைக்காலம்”  ஆகும். ஆனாலும் குளிர் நிலைமை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.

ஹோஸ் பைப் மூலம் மிகுந்த வேகத்தில் வென்னீரைப் பீச்சி உறைபனிக்கட்டியில் துளையிட்டு பாதாள ஏரியிலிருந்து தண்ணீர் சாம்பிளை எடுப்பது என்பது திட்டமாகும். 90 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொண்ட வென்னீரைத் தொடரந்து தயாரிக்கின்ற யந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால்  பிரிட்டிஷ் திட்டம் டிசம்பர் மாதக்   கடைசி வாக்கில் பாதியில் நின்று விட்டது.   மீண்டும் இங்கு முயற்சி மேற்கொள்ள சில ஆண்டுகள் ஆகலாம் என்று கருதப்படுகிறது
லேக் வோஸ்டாக் பாதாள ஏரி மேலே அமைந்த ரஷ்ய முகாம்
எனினும் ரஷிய நிபுணர்கள் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் அண்டார்டிகாவில்  லேக் வோஸ்டாக் என்னும் பாதாள ஏரியிலிருந்து நீரை எடுத்து ஆராய்வதில் வெற்றி கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. லேக் வோஸ்டாக் அண்டார்டிகாவில் உள்ள பாதாள ஏரிகளிலேயே மிகப் பெரியது. மேற்பரப்பிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்த அந்த ஏரியின் நீளம் சுமார் 250 கிலோ மீட்டர். அகலம் சுமார் 50 கிலோ மீட்டர்.

ரஷியர்கள் வென்னீரைப் பயன்படுத்தும் உத்தியைக் கையாளவில்லை. பனிக்கட்டித் தரையில் வழக்கமான முறையில் துரப்பணமிடும் உத்தியைக் கையாண்டனர். ஆனால் அவர்கள் 20 ஆண்டுக் காலம் பாடுபட வேண்டியிருந்தது.  எது எப்படியோ லேக் வோஸ்டாக் நீரை வெளியே எடுப்பதில் ரஷியர்கள்  நிகழ்த்திய சாதனை மகத்தானதே.

லேக் வோஸ்டாக் ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மிக சுத்தமாக இருப்பதாகத் தெரிய வந்தது.அந்த நீரில் நுண்ணுயிர்கள் எதுவும் இல்லை என்பதாகப் பூர்வாங்கத் தகவல்கள் காட்டின.
லேக் வில்லான்ஸ் பாதாள ஏரியை ஆராய அண்டார்டிகாவில்
வந்து இறன்கும் அமெரிக்கக் குழுவினர் 
இதற்கிடையே அமெரிக்க நிபுணர்கள் லேக் வில்லான்ஸ் என்னும் பாதாள ஏரியிலிருந்து நீர் சாம்பிள்களை எடுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த பாதாள ஏரியானது சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பாதாள ஏரியுடன் பாதாள ஆறுகளும் இணைந்துள்ளன . அந்த வகையில் அது அலாதியானது.

லேக் வில்லான்ஸ் பாதாள ஏரியை எட்டுவதற்கு அமெரிக்க நிபுணர்கள்,   எல்ஸ்வர்த் ஏரி விஷயத்தில்பிரிட்டிஷ் நிபுணர்கள்  கையாண்டது போலவே வென்னீரைப் பயன்படுத்த இருக்கின்றனர்.  அமெரிக்கர் இந்த விஷயத்தில் வெற்றி பெறுவரா என்பது  இப்போது கேள்விக்குறியாக உள்ளது        ( காண்க: பாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி )

(குறிப்பு:  இந்த வலைப் பதிவுக்கு Link  கொடுக்க என்னால் அனுமதிக்கப்பட்டுள்ள ஓரிரு இணைய தளங்கள், வலைப் பதிவுகள் தவிர, வேறு எவரும் கண்டிப்பாக இந்த வலைப்பதிவில் வெளியாகும் கட்டுரைகளை அப்படியே காப்பியடித்து அல்லது அவற்றின் ஒரு பகுதியைத் தங்களது இணைய தள்த்தில்  அல்லது வலைப் பதிவில் போடலாகாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள்)

9 comments:

  1. 1)அண்டார்ட்டிகாவில் கண்டறியப்பட்டுள்ள நுண்ணுயிர்கள் உலகில் வேறு எங்கும் இல்லாதவையா? எனில் அவற்றுக்குப் பேர் வைக்கப்பட்டு விட்டதா?
    2)அண்டார்டிகா ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை ஏதவாது சாதித்துள்ளதா?
    3)அண்டார்டிகாவின் நிலப்பகுதியில் உலக நாடுகளுக்கு சம உரிமை உள்ளதா? அல்லது வல்லரசுகள் அங்கும் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் நிகழ்த்தியுள்ளனவா?
    4)அங்கு ஏரி தோன்றியது எப்படி?
    5)கண்டங்கள் நகரும் முன்பு அண்டார்டிகா வேறெங்கு இருந்தது என்பது குறித்து யூகங்கள் உண்டா?

    ReplyDelete
  2. ஆர்வமூட்டும் விஞ்ஞானத் தகவல்க​ளை, நிகழ்வுக​ளை எளிய தமிழில் அ​னைவருக்கும் புரியும் விதத்தில் அரு​மையாக எழுதுகிறீர்கள். நான் ​தொடர்ந்து உங்கள் கட்டு​ரைக​ளை தினமணியில் படித்துக் ​கொண்டிருந்​தேன். சமீபத்தில்தான் தங்களு​டைய இந்த வ​லைப்பூ​வை அறிந்து ​கொண்டு ​தொடர்கி​றேன். நாங்களும் புரிந்து ​கொள்ளும் விதத்தில் ​தொடர்ந்து எழுதி ​வெளியிடுவதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. poornam
    லேக் விடா பாதாள ஏரியில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர்கள் உலகில் வேறு எங்கும் இல்லாதவையா என்பது பற்றித் தெரியவில்லை. அவற்றுக்குப் பெயர் வைக்கப்பட்டு விட்டன.
    அண்டார்டிகாவில் இந்தியா பெரிய அளவில் ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
    அண்டார்டிகா குறித்த சர்வதேச உடன்பாட்டின்படி அக் கண்டம் யாருக்கும் சொந்தமானது அல்ல. எந்த நாடும் அங்கு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்துக் கொள்ளலாம்.
    வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் இல்லை என்றாலும் அவற்றிடம் நிறையப் பணம் உள்ளது என்பதால் பெரிய ஆராய்ச்சித் திட்டங்களை அந்த நாடுகள் மேற்கொள்கின்றன.
    அண்டார்டிகாவில் பாதாள ஏரிகள் தோன்றியதற்குப் பல காரணங்கள் உள்ளன. நிலத்துக்குள்ளிருந்து தொடர்ந்து மேல் நோக்கி வெப்பம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வெப்பம் அண்டார்டிகா நிலப்பரப்புக்கு அடியில் உள்ள உறைபனியை உருக்கி ஏரியாக மாறச் செய்கிறது என்பது அப்படியான கொள்கைகளில் ஒன்றாகும்.
    மேலே பல நூறு மீட்டர் ஆழத்துக்கு உள்ள பனிக்கட்டிகளின் அழுத்த்ம் காரணமாக் அடிப்புற பனிக்கட்டிகளின் உறை நிலை மாறி விடுவதாகவும் கூறப்படுகிறது.
    அண்டார்டிகா ஒரு சமயம் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியிலும் இருந்துள்ளது. பின்னர் தான் தென் துருவத்துக்கு நகர்ந்தது.
    ] அண்டார்டிகாவில் உறைந்த பனிக்கட்டிக்கு அடியில் நிலக்கரிப் படிவுகள் உள்ளன என்பது அக்கண்டம் முன்னர ஏதோ ஒரு காலத்தில் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.அதாவது அண்டார்டிகா ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்ட கண்டமாக இருந்தது என்று கருதப்படுகிறது.

    ReplyDelete
  4. புவி வெப்ப நிலை உயர்வால் அண்டார்டிகாவில் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது?

    நன்றி

    சுதாகர்

    ReplyDelete
  5. Sudhakar Shanmugam
    புவியின் சராசரி வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. இப் பின்னணியில் வட துருவத்தில் ஆர்ட்டிக் கடல் வட்டாரத்தில் உறைந்த பனிக்கட்டிப் பாளங்களின் அளவு குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.இது கவலையூட்டும் அளவில் உள்ளது.
    கவலைப்பட வேண்டிய வேறு விஷயம் உள்ளது. ஆர்ட்டிக் கடல் பகுதியில் கடலடி நிலத்துக்கு அடியில் எண்ணெய் (குரூட்) ம்ற்றும் எரிவாயு ஊற்றுகள் உள்ளன. முன்பு இக்கடல் பகுதி எட்ட முடியாத அளவில் இருந்தது. பனிக்கட்டிப் பாளங்கள் குறைந்து வரும் நிலையில் இப்பகுதிக்கு எளிதில் செல்ல முடியும். ஆகவே பன்னாட்டு நிறுவனங்கள், குறிப்பாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் இப்பகுதி மீது கவனத்தைத் திருப்பி உள்ளன.இங்கு எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிகள் மும்முரமடைந்தால் இக்கடல் பகுதியே நாசமாகி விடலாம்.
    [ஆர்ட்டிக் க்டல் பகுதியுடன் ஒப்பிட்டால் அண்டார்டிகாவில் பனிப்பாளங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது புதிராக உள்ளது

    ReplyDelete
  6. பதில்களுக்கு நன்றி

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி ஐயா,

    சுதாகர்

    ReplyDelete
  8. ஐயா பனிப்பாறைகள் உருகும் பட்சத்தில் கடல் மட்டம் உயர்வது தவிர்க்க முடியாதது...இருப்பினும்..இவ்வுயர்வால் அதிகம் பதிக்கப்படும் நாடுகள் எவை?எவ்வளவு காலமாகும்? இதை தடுக்க ஆய்வாளர்கள் என்ன முயற்சி எடுத்து இருக்கிறார்கள்...?

    ReplyDelete
  9. ஐயா பனிப்பாறைகள் உருகும் பட்சத்தில் கடல் மட்டம் உயர்வது தவிர்க்க முடியாதது...இருப்பினும்..இவ்வுயர்வால் அதிகம் பதிக்கப்படும் நாடுகள் எவை?எவ்வளவு காலமாகும்? இதை தடுக்க ஆய்வாளர்கள் என்ன முயற்சி எடுத்து இருக்கிறார்கள்...?

    ReplyDelete