அதாவது வருகிற ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஓர் அஸ்டிராய்ட் பூமியின் மீது உராயாத குறையாக பூமியை மிக அருகில் கடந்து செல்ல இருக்கிறது.பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க இந்த அஸ்டிராய்ட் நிச்ச்யம் பூமி மீது மோதாது என்று நாஸா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எனினும் ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்து செல்வது என்பது அபூர்வமே.அந்த வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டிராய்டும் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்தது கிடையாது என்று கூறப்படுகிறது
இது 6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓர் அஸ்டிராய்ட். பிப்ரவரியில் வருவது இதை விட மிகச் சிறியது. |
சொல்லப்போனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி இரண்டு அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்ல இருக்கின்றன ஒன்றின் பெயர் 1999 YK 15 என்பதாகும். சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அது பூமியை 2 கோடி கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
ஆனால் அதே தேதியில் 2012 DA 14 என்னும் பெயர் கொண்ட இன்னொரு அஸ்டிராய்டும் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது. அது தான் பீதி கிளப்பக்கூடியது. அதன் நீளம் 48 மீட்டர். . அந்த அஸ்டிராய்ட் பூமியைக் கடந்து செல்லும் போது ஒரு கட்டத்தில் பூமிக்கும் அஸ்டிராய்டுக்கும் இடையிலான தூரம் சுமார் 24 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். விண்வெளி அலகில் இது ‘ மிக அருகில்’ என்று சொல்லக்கூடியதாகும்.
அஸ்டிராய்ட் 2012 DA 14 பூமியைக் கடந்து செல்லும் பாதை பூமியைச் சுற்றியுள்ள வட்டம் செயற்கைக்கோள்கள் சுற்றும் பாதை |
ஒரு வேளை இது பூமியின் மீது மோதினால் என்ன ஆகும்? இதை மோதல் என்றே சொல்ல முடியாது. உண்மையில் இந்த அஸ்டிராய்ட் ஒரு போயிங் விமானத்தை விடச் சிறியது. ஆகவே இந்த அஸ்டிராய்ட் பூமியில் விழுந்தால் என்ன ஆகும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் வானில் பறக்கின்ற விமானம் கீழே விழுவதற்கும் அஸ்டிராய்ட் பூமியில் வந்து விழுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு, போயிங் விமானத்தின் எடை சில நூறு டன். ஆனால்.2012 DA 14 அஸ்டிராய்டின் எடை 1,30,000 டன். தவிர, அது பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து வரும்.
பூமியின் பெரும் பகுதி கடல்களே. ஆக்வே அது கடலில் விழலாம். தவறி நிலப் பகுதியில் விழுந்தால் அணுகுண்டு வீசப்பட்ட அளவுக்கு விளைவு ஏற்படும். ஒரு நகரம் அழிந்து போகலாம். அவ்வளவு தான். பூமி மொத்த்ததுக்கும் அழிகிற வாய்ப்புக்கே இடமில்லை.
அவ்வப்போது பூமி உள்ள வட்டாரத்தில் தலை காட்டுகின்ற அஸ்டிராய்டுகளை நாஸா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை 1353 அஸ்டிராய்டுகள் பற்றியும் அவை செல்லக்கூடிய பாதை பற்றியும் விரிவான த்கவலகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை நாள் தட்டுப்படாமல் இந்த ஆண்டு பிப்ரவரியில் தான் இந்த அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்பெயின் நாட்டில் உள்ள வான் ஆய்வுக்கூடம் இதனைக் கண்டுபிடித்த்தது.
இவ்வளவு நாள் இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததற்கு 2012 DA 14 அஸ்டிராய்ட் பூமியை ஒட்டியபடி இருந்து வந்துள்ளதே காரணம். பூமியைப் போலவே இந்த அஸ்டிராய்டும் சூரியனை சுற்றுகிறது.
பச்சை நிறத்தில் இருப்பது சூரியனை பூமி சுற்றும் பாதை மஞ்சள் நிறத்தில் இருப்பது 2012 DA 14 அஸ்டிராய்ட் சுற்றும் பாதை |
பன்னெடுங்காலமாக ஆண்டுக்கு இரு த்டவை பூமியைக் கடந்து செல்கின்ற ஓர் அஸ்டிராய்ட் இத்தனை நாள் கழித்து இப்போது பூமியில் வந்து விழுவதற்கு வாய்ப்பே கிடையாது தான். ஆகவே தான் இந்த அஸ்டிராய்டினால் ஆபத்து இல்லை என்று நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வருகிற பிப்ரவரியில் இது பூமியை ‘ மிக அருகில் ‘ கட்ந்து செல்லும் நாளன்று விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவில் மத்திய புளோரிடா பல்கலைக் கழகத்தில் கூடி அஸ்டிராய்ட் கடந்து செல்லும் காட்சியைக் காண்பர். இந்த அஸ்டிராய்டை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. சக்திமிக்க பைனாகுலர்ஸ் அல்லது டெலஸ்கோப் மூலம் காண முடியும்.
சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் ஆனால் அப்படி உருவாகாமல் போனதாகவும் கருதப்படுகிறது. அப்படி அங்கு ஒரு கிரகம் உருவாகாமல் போனதால் பல லட்சம் துண்டுகள் அந்த கிரகம் இருந்திருக்க வேண்டிய சுற்றுப்பாதையில் அமைந்தபடி சூரியனை சுற்றி வருகின்றன.. அவையே அஸ்டிராய்டுகள் ஆகும். அஸ்டிராய்டுகள் அமைந்த பாதையிலிருந்து விலகி எவ்வளவோ துண்டுகள் தனிப்பாதை அமைந்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இவற்றில் சில ஆயிரம் அஸ்டிராய்டுகள் பூமிக்கு அருகாமையில் வந்து செல்கின்றன.(காண்க: பூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்)http://www.ariviyal.in/2011/10/blog-post_23.html
13 comments:
//சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அது பூமியை சுமார் 2 கோடி கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
Is there some typo here?
Vemlatesam
தாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. 2013 பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இரண்டு அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்லும். ஒன்று 1999 YK 15.இது தான் 2 கோடி கிலோ மீட்டரில் பூமியைக் கடந்து செல்லும்,
மற்றொன்று 2012 DA 14 ஆகும். அது தான் பூமியை மிக அருகில் கடந்து செல்லும்.
Venkatesan
தாங்கள் வினா எழுப்பியதற்குப் பிறகு நான் கட்டுரையை ஒரு முறை படித்துப் பார்த்தேன். சற்றே குழம்ப்பம் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே ஓரிரு பாராக்களை மாற்றி எழுதியிருக்கிறேன். இப்போது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்
ஒரு வேளை பூமியின் வளி மண்டலத்திற்குள் இந்த அஸ்டிராய்ட் வரும் பட்சத்தில் ஏவுகணைகள் மூலம் இதை சிதறடிக்க செய்ய முடியாதா?
நன்றி
சுதாகர்
சுதாகர்
சிறிய அஸ்டிராய்டாக இருந்தால் வளி மண்டலத்தில் நுழைந்த பின் தானாக உடையும். நீங்கள் கூறியபடி ஓர் அஸ்டிராய்டை ஏவுகனை மூலம் தாக்கி அழிக்க இயலும். இது சாத்தியமானதே என ஒப்புக்கொள்ளப்பட்டுளது.இதற்கு தக்க ஏற்பாடு தேவை. அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் வளி மண்டலத்தில் எந்தக் கோணத்தில் நுழைகிறது என்பது போன்ற விஷயங்கள் கணக்கில் கொள்ள்ப்படும்.
மன்னிக்கவும். நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இப்போது தெளிவாக இருக்கிறது. நன்றி.
மிக்க நன்றி ஐயா,
சுதாகர்
அந்த அஸ்டிராய்ட் நம் பூமியில் மோதாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.தகவலுக்கு நன்றி ஐயா
அய்யா வணக்கம்.
பதிவுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.
பிப்.15-இல் பூமியை நெருங்கி வருவது ASTEROID என்று கூறியுள்ளீர்கள்.ASTEROID-க்கும் METEOR-க்கும் என்ன வேறுபாடு என்று விளக்கம் கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
சாமானியர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
K M அபுபக்கர் ,
கல்லிடைக்குறிச்சி 627416
ABUBAKKAR K M
சுமார் 19 மீட்டர் நீளமுள்ள அஸ்டிராய்ட் பூமியின் காற்று மண்டல்த்தில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். அது தீப்பற்றிக் கொண்டு ஒளி கீற்றாக கீழ் நோக்கி இற்ங்கும்.அது பல துண்டுகளாக உடையலாம். அவை ஓரிடத்தில் விழுந்த பிறகு பார்த்தால் கற்களாகக் கிடக்கும்.
இந்த மூன்று கட்டத்துக்கும் தனித்தனிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைவதற்கு முன்னர் அது அஸ்டிராய்ட். தீப்பற்றி கீழே இறங்கும் போது Meteor. கீழே விழுந்த பின்னர் Meteorites.மற்றபடி இந்த மூன்றும் ஒன்றே தான்.
ABUBAKKAR K M
ஒன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. விண்வெளியிலிருந்து ஓயாமல் தினமும் விண்வெளித் தூசியும் சிறு கற்களும் (கடுகு சைஸ் முதல் உருளைக் கிழங்கு சைஸ் வரை) பூமியில் விழுந்த வண்ணம் உள்ளன. இவை தீப்பற்றி ஒளிக் கீற்றாகக் கிழே இறங்குகின்றன.இவற்றில் பலவும் பொடியாகி காற்றோடு கலந்து விடும்.வானில் நாம் காணும் Meteor களில் பெரும்பாலானவை இவை தான். சற்றே பெரிய கற்கள் தான் பூமியில் வந்து விழுகின்றன.
வணக்கம் அய்யா.
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
>>> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி
kassali
எறிவதற்கு என்று எழுதியிருக்கிறீர்கள்.தீப்பற்றி எரிவது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் அனேகமாகக் காற்று கிடையாது.ஆகவே அது தீப்பற்றி எரிய வாய்ப்பு கிடையாது.சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிறது.காற்று மண்லத்தால் அதற்குப் பாதிப்பு எதுவும் இல்லை
Post a Comment