Pages

Dec 25, 2012

வியாழன் கிரகத்தைப் பார்க்க ஆசையா?

பலருக்கும் வானில் கிரகங்களைப் பார்க்கத்தான் ஆசை. ஆனால் தாங்கள்  பார்க்க விரும்பும் கிரகம் வானில் குறிப்பாக  எந்த இடத்தில்   எப்போது தெரியும் என்ற விவரத்தை அறிவதில் தான் பிரச்சினை. வியாழன் கிரகம் வானில் ரிஷப ராசியில் உள்ளது என்று சொன்னால் புரியாது.

இப்படியான பிரச்சினை எதுவும் இன்றி நீங்கள் டிசமபர் 25 ஆம் தேதி மாலை வியாழன் கிரகத்தைக் காணலாம். சூரியன் அஸ்தமித்த பிறகு கிழக்கு திசையில் நோக்கினால் சந்திரன் தெரியும். சந்திரனுக்கு சற்று அருகே மேற்புறத்தில் தெரிவது தான் வியாழன் கிரகம். சந்திரனுக்குக் கீழ்ப்புறத்தில் தெனபடுவது ஒரு நட்சத்திரமாகும்.
டிசம்பர் 25 ஆம் தேதி அஸ்தமித்ததும் கிழக்கு வானில் வியாழனும் சந்திரனும்
இவ்விதமாகத் தெரியும்   
இவை நம் பார்வையில் அருகருகே இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன. நீங்கள் ஒரு சவுக்குத் தோப்பில் நின்றால் எந்த மரம் அருகே உள்ளது, எது தொலைவில் உள்ளது என்று எளிதில் அறிய முடியும். விண்வெளியில் அது சாத்தியமில்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. வியாழன் கிரகத்தைப் பிரும்மாண்டமான பானையாகக் கற்பனை செய்து கொண்டால் அதன் உள்ளே 1400 பூமியைப் போட்டு அடைக்கலாம. வியாழன் அவ்வளவு பெரியது.
பூமியை விட வியாழன் மிக மிகப் பெரியது . படம் நாஸா 
வானில் நீங்கள் பார்க்கும் போது சந்திரன் பெரியதாகவும் வியாழன் சிறிய ஒளிப்புள்ளியாகவும் தெரிகிறது. சந்திரன் அன்றைய தினம் பூமியிலிருந்து 4 லட்சத்து 6 ஆயிரம் கிலோ மீட்ட்ர் தொலைவில் இருக்கும். அருகில் இருப்பதால் வடிவில் பெரிதாகத் தெரிகிற்து..ஆனாலும் பௌர்ணமியன்று தெரியக்கூடிய  அளவுக்கு இராது. .( 28 ஆம் தேதி தான் பௌர்ணமி)

அன்றையத் தேதியில் வியாழன் கிரகம் பூமியிலிருந்து 60 கோடியே 90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆகவே தான் அது பிரும்மாண்டமான கிரகமாக இருந்தாலும் வடிவில் சிறிய ஒளிப்புள்ளியாகத் தெரிகிறது,

மேலே உள்ள படத்தில் சந்திரனுக்கு அடியில் சிறிய நட்சத்திரம் உள்ளதைக் காணலாம். அது தான் ரோகிணி ( Aldebaran ) நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் சூரியனை விடப் பெரியது.  ரோகிணி நட்சத்திரம்  பூமியிலிருந்து சுமார் 65 ஒளியாண்டு தொலைவில் உள்ளது ( ஓர் ஒளியாண்டு என்பது சுமார் 9 லட்சம் கோடி கிலோ மீட்டர். அதை 65 ஆல் பெருக்கினால் வருகிற தொகையே ரோகிணி நட்சத்திரம் இருக்கின்ற தூரம்.).
சந்திரன், வியாழன், ரோகிணி ஆகிய மூன்றும் அருகருகே இருப்பது போலத் தோன்றினாலும் இந்த மூன்றும் வெவ்வேறு தொலைவில் உள்ளன Pic. Not to Scale
 வானில் நீங்கள் வியாழன் கிரகத்தைக் காணும் போது அதற்கு மேலே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் உள்ளதைப் பார்க்கலாம்.. உற்று நோக்கினால் இது தென்படும். இந்த நட்சத்திரக் கூட்டம் பூமியிலிருந்து சுமார் 440 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.இந்த நட்சத்திரக்கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளதாகச் சொல்வார்கள். ஏழாவது நட்சத்திரத்தையும் காண முடியும்.உண்மையில்  இந்த  நட்சத்திரக் கூட்டத்தில் பல நூறு நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.

 நீங்கள்  புதன்கிழமை மாலை பார்த்தாலும் வியாழன் வானில் அதே இடத்தில் இருக்கும். ஆனால் சந்திரன் இடம் மாறி விடும். பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் தொடர்ந்து இடம் மாறிக் கொண்டே இருக்கும்.

வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகின்றன.ஆகவே   வானவியலின்படி வியாழன் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறும். வியாழன் இப்போது ரிஷப ராசியில் உள்ளது. அடுத்து அது வானவியலின்படி  மிதுன ராசிக்கு மாறும்.அதாவது வானில் அது இடம் மாறும். அதையே ஜோசியர்கள்   குருப் பெயர்ச்சி என்கிறார்கள்.. ஆனால் ரோகிணி நட்சத்திரம் இடம் மாறாது. அதே போலவே கார்த்திகை நட்சத்திரக் கூட்டமும் இடம் பெயராது.  நட்சத்திரங்கள் இடம் மாறுவது கிடையாது. ரோகிணி என்றும் ரிஷப ராசியிலேயே இருந்து வரும்.


11 comments:

  1. ஆர்வத்தை அதிகப்படுத்தும் பதிவு

    நன்றி

    சுதாகர்

    ReplyDelete
  2. அருமையான காட்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. கிரகங்கள் ஒரே நேரத்தில் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய போதிலும் ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் வேகத்தில் இருக்கும் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன?

    ReplyDelete
  4. poornam
    கிரகங்களின் சுழற்சி வேகம் வித்தியாசப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.புதன் கிரகத்தில் பகல் என்பது 176 நாட்கள். அது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் சூரியனின் பயங்கர ஈர்ப்பு சக்தி புதன் கிரகத்தை மிக மெதுவாகச் சுழலச் செய்கிறது.
    சுக்கிரன்(வெள்ளி) கிரகத்தில் ஒரு நாள் என்பது 243 நாட்கள்.(பூமிக் கணக்குப்படி). தவிர மற்ற கிரகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கின்றன( எனவே கிழக்கில் சூரியன் உதிக்கிறது). சுக்கிரன் மட்டும் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. ஆகவே சுக்கிரனில் சூரியன் மேற்கே உதிக்கும். அது மட்டுமல்ல. சுக்கிரனில் ஒரு நாள் என்பது ஓர் ஆண்டை விட நீண்டது.
    .
    செவ்வாயில் ஒரு நாள் என்பது கிட்டத்தட்ட் பூமியில் உள்ள மாதிரியில் உள்ளது.
    வியாழனில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம். சனியில் 11 மணி நேரம். நெப்டியூனில் 16 மணி நேரம்.புளூட்டோவில் 6 மணி நேரம். ஆனால் புளூட்டோவிலிருந்து பார்த்தால் சூரியன் சற்றே பெரிய நட்சத்திரமாகத்தான் தெரியும். ஆகவே புளூட்டோவில பகல் இரவு என்பது கிடையாது
    சந்திரனை இயல்பாக சுற்ற விடாமல் பூமியின் ஈர்ப்பு சக்தி தடுக்கிறது. ஆகவே பூமியை சந்திரன் ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் சந்திரன் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் சமம் சுமார் 28 நாட்கள்

    ReplyDelete
  5. அருமையான காட்சிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. Hi sir,
    We can always see the same face of moon, (i.e whenever we see the moon, we can see the grandma or whatever) so as you mentioned above, Moon rotate along with it revolution is the reason? Is there any chance will it change after some 100 years? Can we see other face of moon?

    Thanks
    Venkat

    ReplyDelete
  7. தெளிவான விளக்கம். நன்றி.

    ReplyDelete
  8. Venkat
    நீங்கள் சொல்வது சரியே. ச்ந்திரன் பூமியைச் சுற்றுவதற்கு ஆகும் காலமும் அது தனது அச்சில் சுற்றுவதற்கு ஆகும் காலமும் சரிசமமாக உள்ளத் ஆக்வே தான் நாம் சந்திரனின் ஒரு முகத்தை மட்டுமே காண்கிறோம்.சந்திரனை முதன் முறையாகச் சுற்றிய சோவியத் --ரஷிய -- விண்கல்ம் சந்திரனின் மறுபுறத்தைப் படம் எடுத்து அனுப்பிய பிறகு தான் சந்திரனின் மறுபுறம் எப்படி உள்ளது என்பதை அறிந்தோம்.
    100 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மால் நேரடியாக சந்திரனின் மறுபுறத்தைக் காண இயலாது.
    சந்திரன் மெதுவாகப் பூமியிலிருந்து விலகி வருகிறது.பல மிலியன் ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறலாம். ஆனால் சந்திரன் வடிவில் சிறுத்து விடும் என்பதால் தெளிவாக எதுவும் தெரியாது.

    ReplyDelete
  9. வானியல் குறித்த அருமையான தகவல்கள். தாமதமாக படித்ததால் டிசம்பர் 25 அன்று வியாழனைப் பார்க்க முடியாமல் போய்விட்டது.

    ReplyDelete
  10. Coimbatore la ippo sutthama malai ye peiyamattenguthu enna karanam aiya.

    ReplyDelete
  11. Anonymous
    மழை, வானிலை முதலியவை பற்றி விஞ்ஞானிகளால் இப்போது ஓரளவுக்கே அறிந்து கொள்ள முடிந்துள்ளது. வானிலை பற்றிய அறிவியல் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது.
    இது ஒரு புறம் இருக்க, முற்றிலுமாக இது பற்றித் தெரியாமல் இருப்பதே நல்லதோ என்று தோன்றுகிறது. ஏனெனில் வானிலை அறிவியலில் முன்னேறிய நாடுகள் மேகங்களை வளைத்துப் போட்டு தங்கள் நாட்டில் மட்டும் மழை இருக்கும்படி செய்து கொண்டு விடலாம்.
    ஒரு நாட்டுக்குள்ளாகவே சிலர் மேகங்களைத் திரட்டி தங்கள் வட்டாரத்தில் நிறைய மழை பெய்யும்படி செய்து விடலாம். இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சில வல்லரசு நாடுகள் புயலைத் திருப்பி விடுவது பற்றியும் செயற்கைப் புயல் பற்றியும் ஆராய்ச்சி நடத்தினர். புயலை எதிரி நாட்டுக்கு எதிராக ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த இயலுமா என்பது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது. கடைசியில் புயலைக் கட்டுப்படுத்த இயலாது என்பது தெரிந்த்தும் அந்த ஆராய்ச்சி கைவிடப்பட்டது

    ReplyDelete