Nov 3, 2012

சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி

Share Subscribe
 நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது  நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும்

குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.

எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை   நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தால் தண்ணீர் மிகுந்த அளவுக்கு சூடேறும்.

அந்த சூடான தண்ணீரை மேலே கொண்டு வந்து அதிலிருந்து நீராவியைப் பிரித்து டர்பைன்களுக்கு அனுப்பலாம்.  நீராவியானது டர்பைன்களைச் சுழலச் செய்யும். அப்போது அவற்றுடன் இணைந்த ஜெனரேட்டர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ( அனல் மின் நிலையங்களில் இப்படித்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஆனால் நீரை சூடேற்றி  நீராவியைப் பெற நிலக்கரி எரிக்கப்படுகிறது.)

ஆரிகன் மாகாணத்தில் அமையும் புவி வெப்ப மின் நிலைய செயல்பாட்டை விளக்கும் படம் 
அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் அவிந்த எரிமலை அருகே இப்போது நிலத்தடிப் பாறைகளின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சார உறபத்திக்கென ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முன்னோடித் திட்டம் என வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க அரசின் ஆதரவு உள்ளது.

இங்கு நிலத்தடிப் பாறைகளின் வெப்பம் சுமார் 300 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலை கக்கி 1300 ஆண்டுகள் ஆகின்றன.

இங்குள்ள பாறைகள் நீர் ஊடுருவாதவை. ஆகவே முதலில் அப்பாறைகளில் இயற்கையாக உள்ள வெடிப்புகளைப் பயன்படுத்தி பாறைகளூக்குள்ளே ஏராளமான நுண்ணிய பாதைகளை ஏற்படுத்துவர். இதற்கு விசேஷ முறைகள் உள்ளன்.

இவ்விதம் நுண்ணிய பாதைகளை ஏற்படுத்திய பின்னர் மேலிருந்து உள்ளே சாதாரணத் த்ண்ணீரைச் செலுத்தும் போது அத்தண்ணீர் 2.7 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள சூடான பாறைகளின் ஊடே சென்று சூடான நீராக மாறும். அத்தண்ணீர் மேலே மின் நிலையத்துக்கு கொண்டுவரப்படும். இவ்வித மின் நிலையமானது புவி வெப்ப  மின் நிலையம் (Geo-thermal power station) என்று குறிப்பிடப்படுகிறது.

உலகில் ஏற்கெனவே இந்த மாதிரியான மின் நிலையங்கள் பல உள்ளன. ஆனால் அவை நிலத்துக்கு அடியில் இயற்கையாக உள்ள வெப்ப நீரை எடுத்துப் பயன்படுத்துபவை. நியூசீலந்து, ஐஸ்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வித மின் நிலையங்கள் உள்ளன. ஐஸ்லாந்தின் மொத்த மின் உற்பத்தியில் 30 சதவிகிதம் இவ்வித மின் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது. ஐஸ்லாந்தில் நிறைய எரிமலைகளும் வென்னீர் ஊற்றுகளும் உள்ளன.

அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் நிறுவப்பட உள்ள புவி வெப்ப  மின் நிலையமானது இவற்றிலிருந்து வேறுபட்டது. புதுமையானது. சாதாரண நீர் உள்ளே செலுத்தப்பட்டு சூடான பாறைகள் மூலம்  வெப்ப நீராக மாற்றப்படுகிறது. இது இங்கு அவிந்த எரிமலை அருகே நிறுவப்பட்டாலும் உலகில் எந்த இடத்திலும் இவ்வித மின் நிலையத்தை அமைக்க முடியும் இத்திட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

4 comments:

srinivasansubramanian said...

மின்சாரம் தயாரிக்க எவ்வளவோவழிகள் நம் இந்தியாவில் இருக்க அரசுகள் தூங்கி வழிவதை பார்க்க கவலையாக இருக்கிறது.

Sudhakar Shanmugam said...

நன்றி, ஒரு சிறு சந்தேகம். தொடர்ந்து நிலத்தடி பாறைகள் குளிர்விக்கப்பட்டால் (எரிமலைகள் இல்லாத சாதாரண இடங்களில்) இயற்கைசமநிலை பாதிக்கப்படாதா?

S.சுதாகர்

என்.ராமதுரை / N.Ramadurai said...

Sudhakar Shanmugam
மேல் மட்ட நிலத்தின் ஸ்திர நிலை அங்குள்ள நிலைமைகளைப் பொறுத்து பாதிக்கப்படுகின்ற வாய்ப்பு ஓரளவு உள்ளது. நியூசீலந்தில் ஓரிடத்தில் நிலம் உள்ளே இறங்கியது. சுவிட்சர்லாந்தில் ஓரிடத்தில் தொடர்ந்து நில நடுக்கம் ஏற்படவே அங்கு மேற்கொள்ளப்பட்ட திட்டமே கைவிடப்பட்டது. இவையெல்லாம் வழக்கமான புவி வெப்ப மின் நிலையங்கள் விஷய்த்தில் ஏற்பட்டன. ஆரிகன் மாகாணத் திட்டம் வேறு வகையிலானது. அங்கு பாதிப்புகள் ஏற்படுமே என்பது எதிர்காலத்தில் தான் தெரிய வரும்.

Sudhakar Shanmugam said...

விளக்கத்திற்கு நன்றி

S.சுதாகர்

Post a Comment