Pages

Nov 12, 2012

சலிப்புத் தட்டாத அதிசயம்

பூரண சூரிய கிரகணம் நம்மை பிரமிக்க வைக்கிற இயற்கை அதிசயம். சில நிமிஷங்கள் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

வருகிற 14 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம்  நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியில் தெரியும். வட கோடியில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற நகரம் மிக வாய்ப்பான இடம் என்பதால் பூரண சூரிய கிரகணத்தைக் காண ஏராளமான பேர் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர்.
சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைத்து நிற்கிறது. மறைக்கப்பட்ட சூரியனைச் சுற்றி ஒளிர்வது தான் சூரிய ஜோதி.(corona)
சூரியன் உதயமாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் சூரியன் சுமார் 2 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படும். அந்த நேரத்தில் சூரியனை ஆராயவும் விரிவாகப் படங்களை எடுக்கவும் உலகின் பல ப்குதிகளிலிருந்து விஞ்ஞானிகள் ஏற்கெனவே கெய்ர்ன்ஸ் நகருக்கு வந்து சேர்ந்து விட்டனர்.

சர்வதேச வானவியல் சங்கத்தில் சூரிய கிரகண ஆராய்ச்சிக்கென தனி பிரிவு உள்ளது. அதன் தலைவரான ஜே பாசாஷோப் சூரிய கிரகண நிபுணர். எங்காவது சூரிய கிரகணம் என்றால் இவர் உடனே கிளம்பி விடுவார். இதுவரை அவர் 55 சூரிய கிரகணங்களை ஆராய்ந்துள்ளார். இப்போதைய சூரிய கிரகணத்தை ஆராய அவர் விசேஷக் கருவிகளுடன் முகாம் போட்டுள்ளார்.சூரிய கிரகணத்தை இப்படி விழுந்து விழுந்து ஆராய்வானேன்?
1988 ஆம் ஆண்டு பூரண் சூரிய கிரகணம். சூரிய ஜோதி வேறு விதமாக உள்ளதைக் கவனிக்கவும்.
சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி (செண்டிகிரேட்) தான். எனினும் சூரியனைச் சுற்றி அமைந்த சூரிய ஜோதி (Corona)  ஒரு மிலியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது. இது ஏன் என்பதை அறிவதற்காகத் தான் சூரிய கிரகணத்தின் போது ஆராய்ச்சி நடத்துகின்றனர். சூரிய ஜோதி இவ்வளவு வெப்பம் கொண்டதாக இருப்பதற்கான காரணம் இன்னும் முற்றிலுமாகக் கண்டறியப்படவில்லை.
1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம். சூரிய ஜோதியை கவனிக்கவும் 
தவிர, சூரிய ஜோதி எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. சூரியனில் கரும் புள்ளிகள் (Sunspots) அதிகமாக இருக்கும் காலத்தில் சூரிய ஜோதி சூரியனின் எல்லாப் புறங்களிலும் காணப்படுகிறது. சில சமயங்களில் இடது புறத்திலும் வலது புறத்திலும் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே தான் ஒவ்வொரு பூரண சூரிய கிரகணத்தின் போதும் எடுக்கப்படுகின்ற படங்கள் வெவ்வேறு விதமாக உள்ளன.

இந்த சூரிய ஜோதி பிரும்மாண்டமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து இது பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் வியாபித்து நிற்கிறது. இது சூரியனின் வளி மண்டலம் போன்றது.

சூரியன் தினமும் தலை காட்டுகிறது. தினமும் சூரிய ஜோதி தெரியாதா?    சூரிய கிரகணத்தின் போது மட்டும் என்ன புதிதாகத் தெரியப் போகிறது.என்று கேட்கலாம்.
இது  2006 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பூரண சூரிய கிரகணம்
சூரியனின் பிரகாசம் காரணமாக சூரிய ஜோதியை மற்ற நாட்களில்  காண முடியாது. சூரியனின் ஒளித் தட்டை முற்றிலுமாக மறைத்தால் தான் சூரியனைச் சுற்றியுள்ள சூரிய ஜோதி தென்படும். ஆகவே பூமியிலிருந்து சூரியனை ஆராய்கின்ற பல டெலஸ்கோப்புகளில் சூரிய ஒளித்தட்டை மறைக்கின்ற தகடு ஒன்றைப் பொருத்திக் கொண்டு சூரிய ஜோதியை ஆராய்கின்றனர்.
சோஹோ விண்கலம் சூரிய ஒளித் தட்டை மறைத்த்படி எடுத்த படம்
சூரியனை விரிவாக ஆராய விண்ணில் சோஹோ (SOHO) என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலமும் ஸ்டீரியோ என்னும் பெயர் கொண்ட இரு விண்கலங்களும் உள்ளன. சூரிய ஒளித் தட்டை மறைக்க இவற்றில் விசேஷ ஏற்பாடு உள்ளது. ஆகவே இவை சூரிய ஜோதியை அவ்வப்போது படம் எடுத்து அனுப்புகின்றன. ஆனால் சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு இவை எல்லாம் செயற்கை ஏற்பாடுகளே/

சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு மிகச் சிறந்த இயற்கை ஏற்பாடு உள்ளது. அது தான் பூரண சூரிய கிரகணம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்காக வந்து நிற்கிற சந்திரன் சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைத்து விடுகிறது.
சோஹோ விண்கலம்
இவ்விதம் சூரியன் மறைக்கப்படுகிற நேரம் சில நிமிஷங்களே. அந்த சில நிமிஷ வாய்ப்புக்காகத்தான் விஞ்ஞானிகள் எங்கெல்லாம் பூரண் சூரிய கிர்கணம் தெரியுமோ அந்த இடங்களுக்கு ஓடுகின்றனர்.

சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைக்கின்ற நேரம் இயற்கையின் விதிகளின்படி    ஒரு போதும் ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க் முடியாது. ஆஸ்திரேலியாவில் 14 ஆம் தேதி நிகழும் பூரண சூரிய கிரகண்த்தின் போது சூரியன் இரண்டு நிமிஷமே மறைக்கப்படும். அந்த இரண்டு நிமிஷ நேரத்தில் சூரிய ஜோதியை பல்வேறு கருவிகளைப் பய்னப்டுத்தி ஆராய்வர். புகைப்படங்களையும் எடுப்பர்.

இதில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ப்ல மாத காலம் திட்டமிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து ஓரிடத்துக்குச் சென்று திறந்த வெளியில் சூரியனை நோக்கி  எல்லாக் கருவிகளையும் ஆயத்தம் செய்து வானை நோக்கி சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த கண நேரத்துக்காகக் காத்திருக்கும் போது எங்கிருந்தோ வருகின்ற மேகங்கள் சூரியனை மறைத்து விடும்.  அத்தனை முயற்சியும் வீண். இவ்விதம் நிகழ்ந்து நொந்து போன விஞ்ஞானிகள் பலர் உண்டு.

அப்படி ஏற்படாமல் இருக்க ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள  விஞ்ஞானிகளுக்கு நமது வாழ்த்துகள்.


12 comments:

  1. தகவலுக்கு நன்றி ஐயா

    சுதாகர்

    ReplyDelete
  2. விளக்கமாக எழுதி உளீர்கள் .நன்றி

    ReplyDelete
  3. அருமையான படங்கள்... தகவல்கள்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா,
    தகவல்களுக்கு மிக்க நன்றி.
    1960களில் ”சயின்ஸ் டைஜஸ்ட்” என்ற ஆங்கில விஞ்ஞான மாதாந்திர பத்திரிக்கையில்
    ஐஸக் ஆஸிமோவ்-வின் பக்கம் என்றே ஒரு பகுதி உண்டு. அதைப்போன்றே , கடினமான பொருள் பற்றி மிகவும் எளிமையக,புரியும்படியாக தங்களின் கட்டுரையும் உள்ளது.தங்களது பணி தொடர மிகவும் விழைகின்றேன்.
    >> கோ.மீ.அபுபக்கர்,
    கல்லிடைக்குறிச்சி

    ReplyDelete
  5. ABUBAKKAR K M
    ஐசக் அசிமோவ் மாபெரும் எழுத்தாளர். என்னால் அவரை நெருங்க முடியாது. தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அய்யா தர்பொழுது நான் விடுமுறையில் இந்தியா வந்து உள்ளேன் தங்களின் அணு என்ற புத்தகம் படித்தேன் தெளிவாக,விளககமாக எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள். அது போன்று இந்த பிளாக்கில் எழுதும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் எல்லோரும் படித்து பயனைடவார்கள்

    ReplyDelete
  7. Salahudeen
    அது நல்ல யோசனை தான.

    ReplyDelete
  8. விரிவான அருமையான தகவல்களுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. Please explain why the solar eclipse cannot extend more than 7 minutes 31 seconds..

    ReplyDelete
  10. Nandhini
    சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக உள்ளது.அதனால் தான் அது எப்போதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே அமைகிறது. இதன் விளைவாக பூரண சூரிய கிரகணம் நிகழ்கிறது.
    சந்திரன் எப்போதும் போல தன சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதே போல பூமியும் தனது சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது போதாதென பூமி தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. இப்படியான காரணங்களால் தான் பூரண சூரிய கிரகணம் (எந்த ஓர் இடத்திலும்) ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க முடியாது என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
    தவிர, அதிக நேரம் ( ஆறு அல்லது ஏழு நிமிஷம்) நீடிக்கின்ற பூரண சூரிய கிரகணம் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் நிகழ்வதாகவே இருக்கும்.
    எனினும் அதே 1973 ஆம் ஆண்டில் நிபுணர்கள் அதி வேகமாகச் செல்கின்ற கன்கார்ட் விமானத்தில் ஏறிக் கொண்டு பூமியில் பூரண சூரிய கிரகணம் தெரியக்கூடிய அதே பாதை மீதாகப் பறந்து சென்றனர். ஆகவே அவர்களால் தொடர்ந்து 73 நிமிஷம் பூரண சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  11. "சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி" ... இத எப்படி கண்டு பிடிச்சாங்க சார் ..?

    ReplyDelete
  12. Arulraj V
    சூரியன் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து ( சூரியனும் ஒரு நட்சத்திரமே) வருகின்ற ஒளியை வைத்துத் தான் கண்டுபிடித்தார்கள். அவற்றின் ஒளியைப் பகுத்து ஆராய்வதற்கான கருவிகள் மூலம் பல விஷயங்களை அறிய முடியும்.
    சூரியனின் உட்புற வெப்பத்தப் பொருத்தவரை அது இயற்பியல் சமாச்சாரம்.எந்த வெப்பத்தில் எவ்விதமான அணுச்சேர்க்கை (Nuclear Fusion) நிகழும் என்பதற்குக் கணக்குகள் உள்ளன.அதை வைத்து ஒரு நட்சத்திரத்தின் உட்புற் வெப்பத்தைக் கணக்கிடலாம்

    ReplyDelete