பூமியின் ஆதிக்க எல்லை இத்தோடு சரி என்று கோடு கிழிக்க முடியாது என்றாலும் விண்வெளி வீரர் ஒருவர் விண்கலம் மூலம் பூமியிலிருந்து கிளம்பி சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் சென்று விட்ட பிறகு பூமியின் பிடியிலிருந்து கிட்டத்தட்ட விடுபட்டவராகி பூமிக்கு குட்பை சொல்லிவிடலாம்.
பூமி உட்பட பல கிரகங்களை உள்ளடக்கிய சூரிய மண்டலத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கு குட்பை சொல்ல கிட்டத்தட்ட இது தான் எல்லை என்று குத்துமதிப்பாகச் சொல்ல முடியும்.. அது எவ்வளவு தூரம்?
சூரியனிலிருந்து ’சூரியக் காற்று ’துகள்கள் ஓயாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன |
இவை துகள்களே என்றாலும் நிபுணர்கள் இவற்றுக்குப் பொருத்தமில்லாமல் ‘சூரியக் காற்று’(Solar Wind) என்று பெயர் வைத்து விட்டார்கள். நாமும் சூரியக் காற்று என்றே குறிப்பிடுவோம்.
இந்த சூரியக் காற்று சூரியனிலிருந்து கிளம்பி நாலா புறங்களிலும் சென்று கொண்டே இருக்கிறது. சூரியனைச் சுற்றுகின்ற பூமி, செவ்வாய், வியாழன் சனி என எல்லாக் கிரகங்களையும் தாண்டிச் சென்று கொண்டே இருக்கிறது.. (உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இத் துகள்கள் நம்மைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது.)
சூரிய மண்டலத்தின் எல்லையிலுள்ள புளூட்டோ கிரகத்தையும் தாண்டி இத்துகள்கள் சென்று கொண்டிருக்கின்றன.தடுப்ப்தற்கு எதுவும் இன்றி இவை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கின்றன. எனினும் பல நூறு கோடி கிலோ மீட்டரைக் கடந்த பிறகு மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு விடுகின்றன. அந்த நிலையில் அவை இட்து புறமும் வலது புறமும் பிரிந்து செல்ல ஆரம்பிக்கின்றன.
வாயேஜர் 1 கருவியில் பதிவான சூரியக் காற்றுத் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்துள்ளதைக் காட்டும் வரிவடிவப் படம் |
வாயேஜர் 1 கருவியில் பதிவான நட்சத்திர மண்டல துகள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு |
வாயேஜர் 1 விண்கலம் |
வாயேஜரின் முக்கிய பணி முடிவடைந்து விட்ட போதிலும் அது இடைவிடாது விண்வெளி நிலைமைகள் பற்றித் தகவல் அனுப்பி வருகிற்து.. சூரியக் காற்றின் துகள்கள் பற்றியும் அது தெரிவித்து வருகிறது. எனவே எவ்வளவு துகள்கள் வாயேஜரின் கருவியில் பதிவாகின்றன என்ற தகவல் நாஸாவின் தலைமைக் கேந்திரத்துக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது
வாயேஜரிலிருந்து கடந்த செப்டம்பரில் கிடைத்த தகவலகளை ஆராய்ந்த போது சூரியக் காற்றின் துகள்களின் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்து விட்டது தெரிய வந்தது. அதே நேரத்தில் அண்டவெளியிலிருந்து சூரிய மண்டலத்தைத் தாக்கும் ஆற்றல் மிக்க துகள்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.
இதிலிருந்து தான் வாயேஜர் சூரிய மண்டல எல்லையை எட்டி விட்டதாகத் தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப் பகுதி அமைந்துள்ள தூரம் சூரியனிலிருந்து சுமார் 1840 கோடி கிலோ மீட்டர் ஆகும். இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைப் போல 122 மடங்கு.
சூரிய மண்டலத்தின் எல்லை அவ்வளவு தொலைவில் உள்ளதாகச் சொல்லலாம். அங்கிருந்து பார்த்தால் பூமி முதலான கிரகங்கள் தெரியாது. சூரியன் பிரகாசமான ஒளி புள்ளியாக அதாவது நட்சத்திரமாகத் தெரியும். (சூரியன் ஒரு நட்சத்திரமே)
சூரிய மண்டலத்துக்கு குட்பை சொல்லி விட்டு வெளியேறும் வாயேஜர் 1 எங்கே செல்லும்? அண்டவெளி என்பது எல்லையற்ற வெளி. ஒபியுகஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நட்சத்திர மண்டலத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கும். இந்த நட்சத்திர மண்டலம் விருச்சிக ராசிக்கு அருகே உள்ளது. வாயேஜர் 1 எந்த நட்சத்திரத்தையும் நெருங்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வாயேஜரில் வைக்கப்பட்டுள்ள CD |
ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) வாயேஜர் விண்கலத்தைக் கைப்பற்ற நேர்ந்தால் பூமி பற்றியும் மனித இனம் பற்றியும் தெரிவிக்கும் நோக்கில் தான் இந்த CD வைக்கப்பட்டுள்ளது. அப்படி அன்னிய கிரகவாசிகள் இருக்க நேரிட்டு அவர்களின் கையில் இது கிடைப்பதற்கு அனேகமாக வாய்ப்பே இல்லை என்று பிரபல விஞ்ஞானி கார்ல் சாகன் கூறியுள்ளார்.
வாயேஜர் விண்கலங்கள், பயனீர் விண்கலங்கள் சென்று கொண்டிருக்கும் பாதைகள் |
13 comments:
சூரியமண்டலத்தை தாண்டிய பிறகும் வாயேஜர் 1 உடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருக்கிறதா?
நன்றி
சுதாகர்
விளக்கமான தகவல்கள்... அறிந்து கொண்டேன் ஐயா... நன்றி...
சுதாகர்
வாயேஜர்1 விண்கலம் சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறிய பிறகும் பூமியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கும்.கருவிகள் இயங்க மின்சாரம் தேவை
வாயேஜரில் மூன்று அணுசக்தி பாட்டரிகள் (RTG) உள்ளன. இவை தான் மின்சாரத்தை அளித்து வருகின்றன. இவை ஏற்கெனவே 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.இந்த பாட்டரிகள் 2025 ஆம் ஆண்டு வரை தாங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நன்றி
எளிமையான நடையில் ,விளக்கமாக எழுதி உள்ளீர்கள் ஐயா.....மிக்க நன்றி...
எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம்..அதை பற்றி எழுத முடியுமா..
நாம் இருக்கும் பூமியில் ,கடல் உள்ளது.....சுனாமி போன்ற மிக பெரிய அலைகள் உருவானாலும் ,ஏன் ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்கு வெளியே செல்ல முடியவில்லை..புவி ஈர்ப்பு சக்தி மட்டும் தான் காரணமா...அல்லது மற்ற காரணங்கள் உண்டா
pangusanthaieLearn
பசிபிக் கடலின் ஆழம் 10 கிலோ மீட்டர் வரைக்கும் உள்ளது. நம்மைப் பொருத்த வரையில் கடல்கள் பிரும்மாண்டமானவையாக உள்ளன. ஆனால் பூமியின் சைஸுடன் ஒப்பிட்டால் கடல்கள் என்பவை நீரில் முக்கி எடுக்கப்பட்ட ஒரு சொம்பின் வெளிப்புறத்தில் மிக மெலிதாகப் படர்ந்துள்ள அல்லது ஒட்டிக்கொண்டுள்ள தண்ணீருக்குச் சமமே.
தவிர, பூமியின் ஈர்ப்பு சக்தி அனைத்தையும் ஈர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது.
பூமி தனது அச்சில் சுழல்கிறது.பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 1600 கிலோ மீட்டர். அந்த வேகத்தில் கடல் நீர் அனைத்தும் வீசி எறியப்படவில்லை
பூமியானது அந்தரத்தில் உள்ளது.விண்வெளியில் மேல் கீழ் என்பதெல்லாம் கிடையாது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.
பௌர்ணமி நிலா நம் தலைக்கு மேலே தெரியலாம். ஆனால் சந்திரன் பூமியைப் பக்கவாட்டில் சுற்றி வருகிறது.மேல், கீழ் என்ற நினைப்பிலிருந்து விடுபடுவது சற்று சிரமமே
ஐயா, நாம் பூமியின் மேற்பரப்பில் இருக்கிறோம் என்றால் கீழே துளையிட்டு கொண்டே சென்றால் பூமியின் அடுத்த பகுதியை அடைய முடியுமா ?... இது ஒரு எளிமையான கேள்விதான்....சற்று விளக்கம் வேண்டும் ஐயா .....
//ஒரு வேளை அன்னிய கிரகவாசிகள் ( அப்படி யாரேனும் இருந்தால் ) //
இது பற்றி உங்களது கருத்து என்ன? அன்னிய கிரகவாசிகள் இருப்பதற்க்கு சாத்தியம் உள்ளதா? விளக்குங்களேன் பிளீஸ்
ஒரு வாசகன்
நமது பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் உள்ளன( சூரியன் ஒரு நட்சத்திரமெ) அவற்றில் நமது சூரியன் போன்ற நட்சத்திரத்துக்கு பூமி போன்ற கிரகம் இருக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
அப்படியான பூமி ஒன்றில் மனிதன் போன்று உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே அப்படியான கிரக்த்தில் உள்ள மனிதன் எப்படி இருப்பான்? தெரியாது.
பூமியில் உள்ள மனிதன் ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்து பச்சை மாமிசத்தை தின்று ஜீவித்தான்
வேற்றுலக ம்னிதன் அப்படியான கட்டத்தில் இருப்பானா? அல்லது 21 ஆம் நூற்றாண்டு ம்னிதனை விட் முன்னேறியவனாக இருப்பானா? தெரியாது.
வேற்றுலக வாசிகள் இருக்கிறார்களா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த் முயற்சியில் எப்போது வெற்றி கிட்டும் என்று சொல்ல முடியாது.
நமது பிரபஞ்சத்தில் மனிதன் வேறு எங்குமே இல்லை என்று கருத முடியாது. எங்கோ நம்மைப் போன்றவர்கள் நிச்சயம் இருக்க வேண்டும். அதில் ஐயமில்லை.
once the battery is over for voyager1, will this return to earth?
Nandhini
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி வாயேஜர் 1 விண்கலம் சூரிய மண்டலத்திலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லும்.அது இயற்கை விதிகளின் படி இவ்விதம் செல்கிறது. சூரியனை பூமி சுற்றி வருவதற்கு பூமியில் எஞ்சின் எதுவும் இல்லை. அது மாதிரியில் எஞ்சின் எதுவும் தேவையின்றி அது தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ஆகவே அதன் இயக்கத்துக்கும் அணுசக்தி பாட்டரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாட்டரி தீர்ந்து போனால் அந்த விண்கலத்தால் சிக்னல்களை அனுப்ப இயலாது. இந்த அணுசக்தி பாட்டரிகள் முற்றிலும் தீர்ந்து போகாது. அவற்றில் தோன்றும் மின்சாரம் பூமிக்குத் தகவல் அனுப்புகின்ற அளவுக்கு சக்தி கொண்டதாக இராது. பாடடரிகள் தீர்ந்து போவதாக வைத்துக் கொண்டாலும் அது தொடர்ந்து விண்வெளியில் சென்று கொண்டிருக்கும்
நன்றி. ஒரு சந்தேகம். 1840 கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து பூமிக்கு சிக்னல் எவ்வாறு அனுப்ப முடிகிறது? காற்று இல்லாமல் அந்த சிக்னல் எவ்வாறு பூமியை வந்தடைகிறது? அது என்ன தொழில்நுட்பம்? தயவு செய்து கொஞ்சம் விளக்க முடியுமா?
விஜய்
இவ்விதம் சிக்னல்கள் வந்து சேருவதற்கு காற்று மண்டலம் தேவையில்லி. ஒலி செல்வதற்கு மட்டுமே காற்று மண்டலம் தேவை.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனுக்குச் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமியில் உள்ள தலைமைக் கட்டுபாட்டுக் கேந்திரத்துடன் எளிதில் பேச் முடிந்தது.இந்த சிக்னல்கள் மின்காந்த அலைவரிசையைச் சேர்ந்தவை. ஒளி எப்படி காற்று இல்லாத இடம் வழியே செல்லுமோ அதே விதமாக இந்த சிக்னல்கல் காற்று இல்லாத வழியே செல்லக்கூடியவை
Post a Comment