பொதுவில் கூறுவதானால் அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுக்கப்படுமானால் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஐரோப்பாவில் தென் பகுதியில் அமைந்த ஸ்பெயின் நாட்டில் லார்கா (Lorca) என்னுடத்தில் 2011 மே மாதம் 12 ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்.130 பேர் காயமடைந்தனர்.20 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த பூக்மபம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்தனர்
நிலத்துக்கு அடியிலிருந்து அளவுக்கு மீறி தண்ணீர் எடுத்ததே அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன்ர். அந்த இடம் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடம்.
விஞ்ஞானிகள் விசேஷ ராடார் பொருத்தப்ப்ட்ட செயற்கைக்கோள்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை விரிவாக ஆராய்ந்தனர். பூகம்பம் நிகழ்ந்த போது நிலத்தடிப் பாறைகள் எவ்விதம் எங்கு நோக்கி நகர்ந்தன என்பது இந்த ஆய்வுகளில் தெரிய வந்தது.. இப்படி நிலத்தடிப் பாறைகள் நகர்ந்த இடம் தான் அளவுக்கு மீறி நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட இடங்களாகும்.
இந்த ஆய்வுகள் மனித நடவடிக்கைகளால் நில நடுக்கம், பூகம்பம் போன்ற விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் காட்டுவதாக உள்ளன என்று கனடாவில் உள்ள மேற்கு அண்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பாபியோ கொன்சால்ஸ் கூறியுள்ளார். அவரது தலைமையில் தான் இந்த ஆய்வுகள் நடைபெற்றன.
லார்கா நகருக்கு அருகே நிலத்தடியில் இயற்கையில் நிறையவே நீர் இருந்து வந்துள்ளது. பாசனத்துக்காக இஷடத்துக்கு நீர் எடுக்கப்பட்டு வந்துள்ளதால் கடந்த 50 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் 250 மீட்டர் இறங்கி விட்டது. இவ்வித நிலையில் அதன் அருகே நிலத்துக்கு அடியில் பாறை விரிசல் இருந்த இடத்தில் பாறைகள் உட்தளர்ந்து கீழே இறங்கின.. இதுவே பூகம்பத்துக்கு வழி வகுத்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ரிக்டர் அளவில் 5.1 என்பது கடும் பூகம்பம் அல்ல. ஆனால் நிலத்துக்கு அடியில் பாறைகளின் சரிவு மூன்று கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்பதால் தான் பூகம்பத்தின் விளைவு கடுமையாகியது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.
1 comment:
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
Post a Comment