“ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான்
.
ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம்.
சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.
சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள்ளவை அமெரிக்க நகரங்கள். நகரங்களின் வெளிச்சத்தைக் கவனியுங்கள் படம் நாஸா |
நிலவற்ற நாளன்று இரவு 9 மணி வாக்கில் உங்கள் வட்டாரத்தில் நான்கு மாடிக் கட்டடம் இருந்தால் மொட்டை மாடிக்குச் சென்று பெரு நகரின் மையப் பகுதி அமைந்த இடத்தை நோக்கிப் பாருங்கள். மையப் பகுதிக்கு மேலே இருக்கின்ற வானம் சிவந்த நிறத்தில் காணப்படும்.
இன்னொரு வழி இருக்கிறது. நீங்கள் இரவு நேர ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி அல்லது மதுரைக்குச் செல்கிறீர்கள். ரயில் அந்த நகரை நெருங்க இருக்கும் நேரத்தில் அதாவது காலை 4 அல்லது 5 மணி வாக்கில் ரயிலின் ஜன்னல் வழியே (ரயில் பெட்டிக்குள் விளக்கு எரியக்கூடாது) நகரம இருக்கின்ற திசையை நோக்குங்கள்
அதே விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவும் ஒளிர ஆரம்பித்துள்ளது. ப்டம் நாஸா |
அமெரிக்க வானவியல் நிபுணர் ஜான் இ போர்ட்டில் (John E Bortle) நிலவற்ற இரவு வானை ஒன்பது வகைகளாகப் பிரித்திருக்கிறார். இப் பட்டியலில் கிராமப்புற வானம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரு நகர மையப் பகுதிக்கு மேலே உள்ள வானம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. முதல் இரு இடங்களும் கிராமத்துக்கு வெளியே கும்மிருட்டாக இருக்கக்கூடிய இடங்களுக்கு மேலே இருக்கின்ற வானம் ஆகும்.இவை வானத்து நட்சத்திரங்கள் நன்கு தெரியக்கூடிய இடங்களாகும்.
ஜான் போர்ட்டில் வானத்தின் நிற்த்தை வகை பிரித்ததுடன் நில்லாமல் எந்த வகையான வானத்தில் எவற்றையெல்லாம் காணலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய உதயமல்ல. அமெரிக்காவில் ஓர் வான் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அருகே உள்ள நகரங்களிலிருந்து வானில் கிளம்பும் ஒளியே தான் |
வானம் ஏன் இப்படி வெளிச்சம் போடுகிறது? பெரு நகரத்து வானம் ஏன் வண்ணத்தைப் பூசி நிற்கிற்து? நகரங்களில் எண்ணற்ற வாகனங்கள். இவை பெரும் புழுதியைக் கிளப்புகின்றன. வாகனங்களிலிருந்து ஏராளமான அளவுக்குப் புகை. இவை தவிர,இயற்கையாகக் கிளம்புகின்ற நுண்ணிய துகள்கள். இவை எல்லாம் சேர்ந்து வானில் மிதக்கின்றன்
அமெரிக்காவில் ஒரு பெரிய நகரிலிருந்து இரவு நேரத்தில் வெளிப்படும் ஒளியால் வானமே சிவந்து காணப்படுகிறது. |
இவை அனைத்தின் ஒளி மேலே செல்கிறது. வானில் உள்ள நுண்ணிய தூசு மீது இந்த ஒளி படும் போது ஒளி சிதறடிக்கப்படுகிறது. பெரு நகரை வானத்து ஒளி இவ்விதமாகப் போர்த்துக் கொள்கிறது. இதனால் இயற்கையான வானம் நம் கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டு வானம் சிவந்து விடுகிறது..
இரவு வானில் தெரியும் நட்சத்திரங்கள். பெரிய ந்கரங்களிலிருந்து இவற்றைக் காண்பது கடினமே. |
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் .உங்களைச் சுற்றி எந்த விளக்கும் தெரியக்கூடாது. அந்த கும்மிருட்டில் உங்களுடன் எடுத்துச் சென்ற மடக்கு சேர்களைப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும். இருட்டுக்கு உங்கள் கண்கள் நன்கு பழகிக் கொண்ட பின்னர் வானை அண்ணாந்து பார்க்க வேண்டும்.
கரு நீல வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்கள் போல வானத்து நட்சத்திரங்கள் அற்புதமாகக் காட்சி அளிக்கும். சற்றே வெளிறிய நிறத்தில் அகன்ற பட்டையாக ஆகாய கங்கை (Milky Way Galaxy) தெரியும். உயரே தெரிகின்ற அக்காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும்.
உங்கள் கண்ணில் படுகின்ற ஒரு நட்சத்திரம் சூரியனை விடப் ப்ல மடங்கு பெரியதாக, உங்கள் பூமியை விட பல ஆயிரம் மடங்கு பெரியதாக இருக்கலாம். மங்கலாகத் தெரிகின்ற சிறிய திட்டுகள் கோடானு கோடி நட்சத்திரங்களைக் கொண்ட அண்டமாக இருக்கலாம்.
நீங்கள் தலைக்கு மேலே காண்பது வானம் தான். ஆனால் அதுவே விண்வெளி. அதுவே அண்டவெளி. அதுவே எல்லையற்ற பிரபஞ்ச வெளி.
திரை உலகில் ஜொலிக்கும் உங்கள் அபிமான நட்சத்திரங்களை எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சினிமாத் திரையில், டிவி திரையில் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. இயற்கையில் தெரியும் வானத்து நட்சத்திரங்களை --வானம் அளிக்கும் அற்புதக் காட்சியை ஒரு தடவையாவ்து பார்த்து விட்டு உங்கள் அனுபவத்தை எனக்கு எழுதுங்கள்
11 comments:
என் சிறு வயதில் திண்டுக்கல் நகரில் வானில் நிறைய நட்சத்திரங்களைப் பார்க்க முடியும். அதிலும் மின்சாரம் போய்விட்டால் (பவர் கட்) கேட்கவே வேண்டாம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும். பால்வீதி (ஆகாய கங்கை, மில்கி வே) மிக நன்றாகப் பார்க்க முடியும்! இந்தக் காலத்துக் குழந்தைகள் எத்தனே பேர் பால்வீதியைப் பார்த்திருப்பார்கள்?!
சரவணன்
அறிஞராக மட்டுமின்றி ரசிகராகவும் உணர்ந்து எழுதிருக்கிறீர்கள்.
எனது சிறு வயதில் கரெண்ட் இல்லாத போது கிராமத்து வீட்டின் முற்றத்தில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தைக் கடல் போலவும் நட்சத்திரங்களை மீன்களாகவும் கற்பனை செய்து கொண்டு நிறைய ரசித்திருக்கிறேன். இப்போது எனக்குத்தான் ரசனை குறைந்து விட்டதோ என்று நினைத்தேன், நகரத்தின் வானம் தான் காரணம் என்றறிந்து ஆறுதல் அடைந்தேன்.
Poornam
1960 களில் நான் பிரும்மச்சாரியாக இருந்த நாட்களில் மாடியில் நான் தங்கியிருந்த அறையையொட்டி இருந்த திறந்த வெளியில் இருந்தபடி வானை ஆராய்வதுண்டு.கடந்த சுமார் 50 ஆண்டுகளில் சென்னை வானம் மிகவும் மோசமாகி விட்டது. இந்த் விஷயத்தில் சென்னையில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் சென்னை வானம் அதற்கான வாய்ப்பை அளிப்பதாக இல்லை என்பது வருந்தத்தக்கதே
வணக்கம் ஐயா.
நல்ல ரசனையான பதிவு. சிறுவயதில் விடுமுறையில் கிராமத்திற்குச் செல்லும்போது அங்கு பெரும்பாலும் வெட்டவெளியில் தான் உறங்குவோம் அப்போது வானில் தெரியும் நட்சத்திரங்களை வைத்து பலவகை வடிவங்களை கற்பனையில் உருவாக்கி நண்பர்களுக்கும் அதே வடிவம் தெரிகிறதா என்று சுவராஸ்யமான விளையாட்டு விளையாடியது தங்கள் பதிவின் மூலம் மீண்டும் நினைவிற்கு வருகிறது. அப்போது நிறைய முறை வானிலிருந்து சிறு எரிகற்கள் விழுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.
வெங்கடேஷ்.
திரு இராமதுரை அவர்களுக்கு வணக்கம்.
நான் உங்கள் கட்டுரைகளை கடந்த சில காலமாக படித்து வருகிறேன். மிகப்பல தெரியாத பயனுள்ள விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
இக்கட்டுரையை படித்த பின்னர் என்னுடைய பதின் வயதுகளில் மொட்டை மாடியில் இரவில் தூங்கும் பொது வானை ஆராய்ந்ததை நினைவுக்கு வருகிறது. ஆகாயம் ஒரு அற்புதம்.. அதில் மூழ்கினால் அவ்வளவு எளிதில் வெளிவர மனது ஒப்புக்கொள்ளாது.
மேலும் இதுபோல் பல கட்டுரைகளை நீங்கள் எழுத வேண்டும்.
நடராஜன். ஓமலூர்.
Natarajan
தங்களது கருத்துகளுக்கு நன்றி. இளம் வயதில் இருக்கின்ற ஆர்வம் பின்னர் பல காரணங்களால் மங்கி விடுகிறது.ஆகாயம் ஓர் அற்புத்ம் என்று நீங்கள் கூறியுள்ள வார்த்தைகள் மிகவும் உண்மையானவை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆங்காங்கு சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இரவு வானை ரசிப்பதற்காகவே ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்குப் போய் கூடாரம் அடித்து ஓரிரு இரவுகளைக் கழிக்கின்றனர். இந்தியாவிலும் ஆர்வமிக்கவர்கள் இவ்விதக் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
ஐயா, ஒரு சிறு சந்தேகம் தாங்கள் பிரசுரித்துள்ள படம் 2 உண்மையானதுதானா? ஏன் என்றால் அந்த படத்தில் எங்குமே சூரிய ஒளி இருக்கவில்லையே? ஒரு வேலை அது உண்மை என்றால் அது எந்த நேரம் என்று தயவுசெய்து தெரிவிக்கவும் நன்றி. மற்ற படி தங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை..
fais faisal
உங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது.இது இணைக்கப்பட்ட படம் என்பது தெளிர்வு. பூமி முழுவதிலும் ஒரே சமயத்தில் இரவாக இருக்க முடியாது. இந்த்யாவில் இரவு என்றால் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் பகலாக இருக்கும். எனவே சர்வதேச விண்வெளி நிலையம் முதலில் ஆசியப் பிராந்தியத்தில் இரவாக உள்ள போது முதல் படத்தை எடுத்துள்ளது. பின்னர் அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இரவாக உள்ள படத்தைப் பின்னர் எடுத்துள்ளது. இந்த இரண்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளன்.பின்னர் வசதி கருதி இணைக்கப்பட்ட படம் Mercator projection க்கு மாற்றப்பட்டுள்ளது.இரவில் எடுக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை
ஐயா ,
இரவில் வானில் தெரியும் நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள புத்தகம் இருப்பாதாக ஒரு இதழில் படித்தேன் .அதைபற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
subash
ஆங்கிலத்தில் நிறையவே புத்தகங்கள் உள்ளன.பெரிய புத்தகக் கடைக்கு நீங்கள் சென்றால் உங்களுக்குப் பொருத்தமான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
தமிழில் தகுந்த புத்தகம் உள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
நட்சத்திரங்கள் பற்றி அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன. எவ்வளவு வகையான நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றின் பரிணாம வளர்ச்சி முதலியவை பற்றி அறிவது. இவற்றை வானத்து நட்சத்திரங்களைப் பார்க்காமலேயே அறிந்து கொண்டு விடலாம். இரண்டாவது சமாச்சாரம், இரவில் தொடர்ந்து வானில் உள்ள நட்சத்திரங்களைக் கவனித்து எது எந்த நட்சத்திரம், நட்சத்திர ராசி மண்டலம் ஆகியவற்றை அறிவது. ஆரம்ப கட்டத்தில் இதற்கு ஏற்கெனவே இது பற்றி ஓரளவு அறிந்த ஒரு Guide இன் உதவி தேவை. முதலில் ஓரையன் ராசி மண்டலத்தில் ஆரம்பித்து பின்னர் மற்ற நட்சத்திர மண்ட்லங்களை அறிந்து கொள்வது வழக்கம். Guide கிடைப்பரா என்று முய்ன்று பாருங்கள்
எல்லாவற்றையும் பிறர் உதவியின்றி அறிந்து கொள்வது என்பது மிகக் கடினம்
அய்யா .. உங்கள் பதிவுகள் மிக அருமையாய் உள்ளன
ஆயிரம் நன்றிகள் .. என்னதான் ஆங்கிலத்தில் பல்லாயிரம் புத்தகங்கள் இருந்தாலும் தமிழில் படிக்கும் அலாதியே சுவையானது
Post a Comment