’அன்று வந்ததும் இதே நிலா, இன்று வந்ததும் அதே நிலா” என கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான பாடல் ஒன்று உண்டு. அது “பெரிய இடத்துப் பெண் “ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்.
கவிஞர் முழு நிலவை மனதில் கொண்டு தான் அப்படிப் பாடினார்.. பிறைச் சந்திரனை அல்ல. பிறைச் சந்திரன் அதுவும் நான்காம் பிறைச் சந்திரன் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியாகத் தெரிவதில்லை..உலகில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தெரியும். அது எப்படி?
நான் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் அறிவியல் எழுத்தாளர் என்ற முறையில் அமெரிக்கா சென்றிருந்த போது மின்னியாபோலிஸ் நகரில் அமெரிக்க நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்து. அது முடிந்து வெளியே வந்தபோது தற்செயலாக இரவு வானில் நான்காம் பிறை நிலவைக் கண்டேன். வியப்பூட்டும் வகையில் அந்த நிலவு வேறு விதமாக இருந்தது.அதைப் பார்த்த போது ‘ இன்று கண்டது வேறு நிலா’ என்று பாட வேண்டும் போலத் தோன்றியது.
|
மின்னியாபொலிஸ் நகரில் பிறைச் சந்திரன்.
படம்:டேவ் பீட்டர்ஸ் |
காரணம் இது தான். சென்னையில் நான் வீட்டின் பால்கனியிலிருந்து எவ்வளவோ தடவை நான்காம் பிறை நிலவை பார்த்திருக்கிறேன்.( எப்போதும் நான்காம் பிறை தான் கண்ணில் படும்.) அது தண்ணீரில் மிதக்கிற படகு போல காட்சி அளிக்கும். ஆனால் அன்று அமெரிக்காவில் பார்த்த நான்காம் பிறை நிலவு அனேகமாக செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.ஆங்கில எழுத்து D மாதிரியில் இருந்தது.
|
தென் கோளார்த்தத்தில் மிகவும் தெற்கே தள்ளி 50 டிகிரி தெற்கு அட்ச ரேகையில் இருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்
|
|
வட கோளார்த்தத்தில் 50 டிகிரி வட அட்ச ரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்
|
|
33 டிகிரி தெற்கு அட்சரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன |
|
சென்னை நகரில் பிறைச் ச்ந்திரன் இப்படித்தான் தெரியும்
|
|
50 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன்
மேலே உள்ள படங்களை நீங்கள் கவனித்தால் அமாவாசைக்குப் பிற்கு ,மேற்கு வானில் காணப்படும் பிறைச் சந்திரன் பூமியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தென்படும் என்பதை அறியலாம். இதற்குக் காரணம் உண்டு
அடுக்கு மாடிக் கட்ட்டம் ஒன்றின் நுழைவு வாயிலில் உருண்டை வடிவிலான டோம் லைட்டுகள் இருக்கின்றன.வெளிச்சம் மேலே போகவேண்டாம் என்று கருதி அந்த விளக்குகளின் மேற்பாதியில் கருப்பு பெயிண்ட அடித்திருக்கிறார்கள். இரவு வேளையில் இந்த டோம் லைட்டுகளை தரையில் இருந்து பார்த்தால் ஒரு விதமாக்த் தெரியும். இரண்டாவது மாடியிலிருந்து பார்த்தால் வேறு விதமாகவும் ஐந்தாவது மாடியிலிருந்து பார்த்தால் இன்னொரு விதமாகவும் தெரியும். பிறைச் சந்திரன் தெரிவதும் இது மாதிரித் தான்.
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளி சந்திரன் விழுவதன் விளைவாகவே அது வளர் பிறைச் சந்திரனாக--பௌர்ணமியாக--, தேய் பிறைச் சந்திர்னாக நமக்கு காட்சி அளிக்கிறது.
பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே வளர் பிறைச் சந்திரன் ஒரு விதமாகத் தெரியும்.மேலும் மேலும் வடக்கே போகும் போது-- உதாரணமாக சுமார் 50 டிகிரி வடக்கு அட்சரேகையிலிருந்து பார்த்தால் செங்குத்தாக நிற்பது போலக் காட்சி அளிக்கும். அத்துடன் அது ஆங்கில எழுத்தான D போன்று தென்படும்.
பூமியின் நடுக்கோட்டிலிருந்து தெற்கே போகப் போக அது நேர் மாறாக -- ஆங்கில எழுத்தான C வடிவில் தெரியும். எல்லாமே அதே பிறைச் சந்திரன் தான் என்றாலும் நாம் பூமியில் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்து அது விதவிதமாகத் தெரிகிறது.
மேலும் விளக்கமாகச் சொல்லலாம். சந்திரன் பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றும் போது அமாவாசையன்று சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் ( நேர் குறுக்காக அல்ல) அமைகிறது. அப்போது சந்திரனின் மறுபுறத்தில் சூரிய ஒளி படும். சந்திரனின் முதுகுப் புறத்தில் ஒளி படாது. ஆகவே அது நமக்கு அமாவாசை சந்திரனாக அமைகிறது. பிறகு சந்திரன் தனது பாதையில் வழக்கம் போல நகர ஆரம்பிக்கிறது. சந்திரனின் ஒரு பாதியில் சூரிய ஒளி விழுந்தாலும் அவ்விதம் ஒளி விழும் பகுதியில் சிறு பகுதி --அதாவது சந்திரனின் விளிம்பு மட்டும் நமக்குத் தெரிகிறது. அதுவே பிறைச் சந்திரனாக நமக்குத் தென்படுகிறது.
அந்த பிறைச் சந்திரனை நாம் பூமியில் எங்கிருந்து வேண்டுமானாலும் காண இயலும். நாம் எங்கிருந்து காண்கிறோம் என்பதைப் பொருத்து அது வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது.
மேலே உள்ள படத்தைக் கவனிக்கவும் ( இது நான் வரைந்தது. சுமாராகத் தான் இருக்கும். பொறுத்தருள்க ) இப்படத்தில் A என்பது பூயியில் 50 அல்லது 60 டிகிரி வடக்கு அட்சரேகைகளில் உள்ள இடங்களாகும். அவர்கள் பிறைச் சந்திர்னை மேலிருந்து காண்பவர்கள்.. ஆகவே அவர்களுக்கு பிறைச் சந்திரன் ஆங்கில D வடிவில் தெரியும். B என்பது பூமியின் நடுக்கோட்டுப் பகுதியாகும். நடுக்கோட்டுக்கு அருகே உள்ள அட்சரேகைகளில் உள்ளவர்களுக்கு பிறைச் சந்திரன் படகு போன்று காட்சி அளிக்கும். A முதல் B வரையிலான அட்சரேகைகளில் உள்ளவர்களுக்கு இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் சாய்வான D வடிவில் தெரியும்
படத்தில் C என்ப்து தென் துருவத்துக்கு அருகே 50 அல்லது 60 டிகிரி தெற்கு அட்சரேகைகளில் உள்ள இடங்களாகும். அங்கு உள்ளவர்களுக்கு பிறைச் சந்திரன் ஆங்கில C வடிவில் தெரியும். B முதல் C வரையில உள்ள அட்சரேகைகளில் இருப்பவர்களுக்கு சாய்வான C வடிவில் தெரியும்.
மேலே காணும் வரை படத்தைக் கீழ்க்கண்ட மாதிரியிலும் வரையலாம். இப்படத்தில் A என்பது 50 டிகிரி வடக்கு அட்சரேகைப் பகுதி. அங்கிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன் D மாதிரியாகத் தான் தெரியும். B என்பது பூமியின் நடுக்கோட்டுப் பகுதி. அங்கு பிறைச் சந்திரன் படகு வடிவில் தெரியும். C என்பது 50 டிகிரி தெற்கு அட்சரேகைப் பகுதி. அங்கிருந்து பார்த்தால் பிறைச் சந்திரன் C வடிவில் தெரியும்.இது ஏன் என்பது படத்தப் பார்த்தாலே புரியும்.
ஆக, பிறைச் சந்திரன் ஒன்று தான். வெவ்வேறு இடங்களிலிருந்து பார்ப்பதால் வெவ்வேறு வடிவில் தெரிகிறது.
|
18 comments:
விளக்கங்கள் அருமை... நன்றி...
ரசிக்க வைக்கும் படங்கள்...
அருமையான விளக்கங்கள்.
நன்றி ஐயா.
ஐயா , தங்களுடைய பதிவுகள் பாக்யா இதழில் வெளிவருகிறது
sir, I was gazing the moon on saturday (6th oct, 2012) and it was looking pale red from its usual white color. I was assuming that it might be due to some other particles in the atmosphere. Or, is there any special reason for it?
sreenivasan
சந்திரனின் (பிரதிபலிக்கப்பட்ட) ஒளி காற்று மண்டலம் வழியே வருகையில் ஒளிச் சிதறல்க்கு உள்ளாகிறது.அதன் காரணமாகவே அது வெளிறிய சிவப்பாக அல்லது வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் தென்படுகிறது. காற்று மண்டலத்தில் நுண்ணிய நீர்த்துணுக்குகள்,கண்ணுக்குத் தெரியாத தூசு முதலியன உள்ள்ன.
சந்திரன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது வெளிறிய வெண்மை நிறத்தில் காணப்படும். அடிவானத்துக்கு மேலே இருக்கும் போது அது காற்று மண்டலத்தை அதிக தூரம் கடக்க வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக ஒளிச் சிதறல் அதிகமாகவே இருக்கலாம்.
இந்த அம்சங்கள் அனைத்தும் சூரியனுக்கும் பொருந்தும்
thank you sir
thank you sir for clearing my doubts..boomikum suriyankum naduvil nilavu varukindra pothu athan muthugu paguthiyai(suriya oli padatha paguthi)naam parpathal namaku nilave theriyamal irukirathu..athai amavaasai engirom..en santhegangal ungalin thagavalkalal theerkindrathu..nandri ayya...pournami andru suriyan santhiran boomi entha nilayil irukum endru kura kettukolkiren ayya
pollaa vinayen
பௌர்ணமியன்று சூரியன் - பூமி -- சந்திரன் ஆகிய மூன்றும் இந்த மாதிரி ஒரே வரிசையில் இருக்கும்.அப்போது சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுவதுமாக விழும், சூரியன் அஸ்தமிக்க கிழக்கே சந்திரன் உதிக்க நமக்கு முழு நிலவு தெரிகிறது.அதாவது சூரியனுக்கு நேர் எதிரே சந்திரன் இருப்பதால் பௌர்ணமி நிகழ்கிறது.உங்கள் முதுகுப் புறம் ஒரு பெட்ரோமாக்ஸ் லைட் தொங்குகிறது. நடுவே நீங்கள் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் எதிரே ஒருவர் நிற்கிறார். அவர் முகத்தில் பெட்ரோமாக்ச் லைட் வெளிச்சம் நன்றாக விழுகிறது. பௌர்ணமியன்று சந்திரன் இவ்விதமாகத் தான் அமைந்திருக்கிறது
thank you very much sir..a small doubt sir..petromoss light miga periyathaga irukirathu(suriyan),naduvil irukum nan(boomi),siriyathaga enaku aduthu irukum nabar(santhiran). santhiran boomiku uyarathil allathu keel irukuma allathu ner kotil suriyan,boomi,santhiran endra padi amayuma ?
pollaa vinayen
சூரியந்-பூமி-- சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் கிட்டத்தட்ட ஒரே சம தளத்தில் இருக்கும்.O-- 0--o இந்த மாதிரியில் இருக்கும்
sir suriyanin oli santhiran meethu evaru padum...boomi naduvil ullathe
pollaa veneayan
சூரியனை விட பூமி பெரியதாக இருந்தால் தான் நீங்கள் சொல்கின்ற பிரச்சினை வரும்
aamam sir..suriyan miga periyathu..ipothu purinthu kolla mudikindrathu...mika nandri ayya
"ஒரே சம தளத்தில் இருக்கும்.O-- 0--o இந்த மாதிரியில் இருக்கும் ".
Sir, If i am not wrong it should be Lunar eclipse right? pls clear doubt sir...
pollaa vinayen
இல்லை. பௌர்ணமியாக இருக்கும். சூரியன் --பூமி--சந்திரன் ஆகிய மூன்றும் இந்த வரிசையில் இருந்தால் பௌர்ணமி. சூரியன் --சந்திரன் -- பூமி என்ற வ்ரிசையில் இருந்தால் அது அமாவாசை.
நான் படித்து அறிவு பெற்ற சில வலைபதிவுகளில் இதுவும் ஒன்று நனறி
sir, i have seen this video recenty which is link attached below. would you please explain more about barycenter of our earth moon orbit? Thank you very much...
http://www.youtube.com/watch?v=uGBANgbRkws
Anonymous
தாங்கள் குறிப்பிட்டுள்ள யூடியூப்பை நானும் பார்த்தேன். அதில் படத்துடன் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.பூமி சந்திரன் ஆகிய இரண்டும் ஒரு பொது மையத்தைச் சுற்றுபவையாக உள்ளன.சந்திரன் மட்டும் வடிவில் மேலும் சிறியதாக ( அதன் பலனாக நிறை( Mass) குறைவாகவும் அத்துடன் மேலும் தொலைவிலும் அமைந்திருந்தால் பொது மையமானது பூமியின் மையத்துக்கு மேலும் அருகில் அமைந்திருக்கும்.
அப்படியின்றி பூமி சந்திரன் இரண்டுமே சம நிறை கொண்டவையாக இருந்திருக்குமேயானால் அப்போது பொது மையம் இந்த இரண்டிலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும்.
Post a Comment