அணுக்களை உடைக்கப்போவது அணு மின் நிலைய விஞ்ஞானிகள் அல்லது எஞ்சினியர்கள் அல்ல. அவர்கள் தொடக்கி வைத்த பின்னர் அணு உலையில் அணுக்கள் தாமாகவே இந்த உடைப்பு வேலையை மேற்கொள்ளும்.இது ஓயாது நடைபெறும். விஞ்ஞானிகள் இதைத் தொடர் அணுப்பிளப்பு (Nuclear Chain Reaction) என்று கூறுவர்.அணு சக்தி மூலமான மின்சார உற்பத்திக்கு இதுவே அடிப்படை.
கூடங்குளம் அணு மின்சார நிலையம் |
தங்க அணு, தாமிர அணு, இரும்பு அணு என எவ்வளவோ வகையான அணுக்கள் உள்ளன. அவற்றை இப்படிப் பிளக்க முடியுமா? அவற்றின் மூலம் மின்சார உற்பத்தி சாத்தியமா?
நிச்சயம் இல்லை.பொதுவில் இதற்கு யுரேனிய அணுக்கள் மட்டுமே லாயக்கு.ஆகவே தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. உலகில் உள்ள மற்ற எல்லா அணுமின் நிலையங்களிலும் தான்.
யுரேனியம் விஷயத்திலும் ஒரு பிரச்சினை உள்ளது. எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் யுரேனியம்- 235 என்ற வகை அணுக்கள் உள்ளன. அவை தான் தொடர்ந்து பிளவுபடக்கூடியவை. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் 0.71 சத விகித அளவுக்கே உள்ளன. அதாவது மிக அற்ப அளவில் தான் உள்ளன. ஆனாலும் அது போதும். எனினும் கூடங்குளத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் இந்த வகை அணுக்கள் சத விகித அளவில் கூடுதலாக்வே இருக்கும்.
யுரேனியம்-235 அணுக்கள் எப்படி தாமாக பிளவுப்டுகின்றன? எந்த அணுவிலும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என மூன்று வகைத் துகள்கள் இருப்பது நமக்குத் தெரியும். இவற்றில் நியூட்ரான் என்பது. துப்பாக்கித் தோட்டா மாதிரி. யுரேனியம்-235 அணு ஒன்றை ஒரு நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடைந்து போய்விடும். அதை அப்படி உடைப்பதற்கு . நியூட்ரான் எங்கிருந்து வரும்? அதே போன்ற இன்னொரு யுரேனியம் அணுவிலிருந்து வரும்.
தொடர் அணுப் பிளப்பு |
யுரேனியம்-235 அணுவை ஒரு நியூட்ரான் மெதுவாகத் தாக்கினால் இப்படித் தான் நிகழ்கிறது. யுரேனியம்-235 அணு உடைந்து பல்வேறு வகை அணுக்களாக மாறுகிறது. அப்போது ஒவ்வோர் அணுவிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் தோன்றுகின்றன.
அந்த ஒவ்வொன்றும் மேலும் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க வல்லவை. அப்போது மேலும் நியூட்ரான்கள் தோன்றும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நொடியில் எண்ணற்ற யுரேனியம்- 235 அணுக்கள் பிளவு படும். எனினும் நமது தேவை அனைத்தும் ஒரே கணத்தில் பிளவு பட வேண்டும் என்பது அல்ல.
நாம் மேலே கூறிய ஆப்பிள் கூடை உதாரணத்தில் இலந்தைப் பழம் தான் நியூட்ரான். இலந்தைப் பழம் தாக்கிய பிறகு தோன்றும் திராட்சைப் பழங்களையும் அத்திப் பழங்களையும் சேர்த்து எடை போடுங்கள். அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிள் ஒன்றின் எடைக்கு சமமாக இருக்க வேண்டும். ஆனால் அவற்றின் மொத்த எடை உடைபட்ட ஆப்பிளின் எடையை விடக் குறைவாகவே இருக்கும்..காணாமல் போன எடையானது ஆற்றலாக மாறிவிடுகிறது. அணுசக்தியின் ரகசியமே இது தான்.
பொருளானது அப்படியே ஆற்றலாக மாறும் போது மிகுந்த ஆற்றல் தோன்றும் என்று ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார். அதைத் தான் அவர் சுருக்கமாக E = mc2
என்று கூறினார். யுரேனியம்-235 அணு உடையும் போது இவ்விதமாகப் பொருளானது ஆற்றலாக மாறுகிறது. அணுவே சிறியது. நியூட்ரான் அதையும் விடச் சிறியது. அதையும் விட சிறிய துணுக்கு தான் ஆற்றலாக மாறுகிறது.
ஆனால் தொடர்ந்து எண்ணற்ற யுரேனியம்-235 அணுக்கள் பிளவு படும் போது மொத்தத்தில் நிறைய ஆற்றல் தோன்றும். யுரேனியம்-235 அணுக்கள் மட்டுமே அடங்கிய ஒரு கிராம் யுரேனியத்தில் கோடானு கோடி அணுக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது நிறையவே ஆற்றல் உறபத்தியாகும். ( 26 என்று எழுதி விட்டு 19 பூஜ்யங்களைப் போடுங்கள்.ஒரு கிராமில் அவ்வளவு யுரேனியம்-235 அணுக்கள் இருக்கும்)
ஐம்பது காசு எனபது பெரிய பணம் அல்ல. பிச்சைக்காரருக்கு ஐம்பது காசு போட்டால் உங்களைக் கேவலமாகவே கருதுவார். ஆனால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே சமயத்தில் ஒருவரிடம் தலா ஐம்பது காசு கொடுத்தால் அது பெரும் தொகையாகி விடும். அப்படியாகத்தான் கோடானுகோடி அணுக்கள் உடைபடும் போது பிரும்மாண்டமான ஆற்றல் வெளிப்படுகிறது.
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் அடங்கிய யுரேனியத்தில் அனைத்து அணுக்களும் யுரேனியம்- 235 அணுக்களாக இராது. சுமார் 4 சதவிகித அணுக்கள் இவ்விதமாக இருக்கும்.
சாதாரண யுரேனியக் கட்டியில் 0.71 சதவிகித அணுக்களே யுரேனியம்- 235 அணுக்களாக இருக்கும் என்று கூறினோம். பெரும் செலவு பிடிக்கிற, மிக சங்க்டமான, மிக நுட்பமான முறைகள் மூலம் விசேஷ ஆலைகளில் இதை 4 சதவிகித அளவுக்கு உயர்த்த முடியும். இதை செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம் (Enriched Uranium) என்று கூறுவர்.(காண்க. செறிவேற்றப்பட்ட யுரேனிய்ம்)
செறிவேற்ற்பபட்ட யுரேனியத்தை அணு உலைக்குள் அப்படியே கட்டி கட்டியாக வைப்பது கிடையாது. பொதுவில் அணு உலைக்குள் வைக்க வேண்டிய் யுரேனியத்தை சந்தன வில்லைகள் போல வில்லைகளாக்குவர். பின்னர் சுமார் 3 மீட்டர் நீளமுள்ள் குழல்களில் அவற்றை நிரப்புவர். ஒரு குழலில் சுமார் 350 வில்லைகள் இருக்கலாம்.
எரிபொருள் தண்டுகள் |
இக்குழல்களை இப்படி அடுக்கி வைத்ததைத் தொடர்ந்து நியூட்ரான்கள் யுரேனியம்-235 அணுக்களைத் தாக்க ஆரம்பிக்கும். அப்படி இல்லை எனில் விஞ்ஞானிகளே . நியூட்ரான்களை வெளிப்படுத்தும் பொருளை சிறிது நேரம் வைத்து விட்டு தொடர் அணுப்பிளப்பைத் தொடக்கி வைப்பர். ஓர் அணு உலை முதன் முதலாக, தொடர் அணுப்பிளப்பு நிலையை எட்டுவதை கிரிடிகாலிடி (Criticality) என்று குறிப்பிடுவர். எரிபொருள் தண்டுகளை அடுக்கி வைத்து முடித்த பின்னர் இக்கட்டம் எட்டப்படும்.
தொடர் அணுப்பிளப்பு ஆரம்பித்த உடனேயே வெப்பம் வெளிப்பட ஆரம்பிக்கும். இதை அப்படியே விட்டால் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து விடும். ஆகவே அந்த வெப்பத்தை வாங்கிக் கொள்வதற்காகத்தான் எரிபொருள் தண்டுகளைச் சுற்றிலும் தண்ணீர் இருக்கிறது..
வீடுகளில் காஸ் அடுப்பில் எவர்சில்வர் பாத்திரத்தை . வைத்தால் அதில் தண்ணீர் இருக்கும்..அப்படியின்றி வெறும் பாத்திரத்தை வைத்து விட்டு மற்தியாக அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்? பாத்திரம் பயங்கரமாகச் சூடேறி த்க தக என்று அனல் பிழம்பாகக் காட்சி அளிக்கும். அப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அடுப்பில் த்ண்ணீருடன் தான் பாத்திரத்தை வைப்பார்கள்.
அணு மின்சார நிலையத்தின் செயல்பாட்டை விளக்கும் வரைபடம் |
கடுமையாகச் சூடேறிய தண்ணீர் வேறு பகுதிக்கு குழாய் மூலம் செல்லும். அணு உலையிலிருந்து வருவதால் அது ஆபத்தான கதிரியக்கம் கொண்டதாக இருக்கும். ஆகவே அத் தண்ணீரானது வேறு பகுதியில் வேறு குழாயின் ஊடே செல்லும். அப்போது வேறு குழாயில் அடங்கிய தண்ணீர் சூடேறிப் பின்னர் ஆவியாகி டர்பைன்களை இயக்கும்.கதிரியக்கம் கொண்ட தண்ணீர் வேறு குழாயில் உள்ள தண்ணீருடன் கலக்காமல் மறுபடி அணு உலைக்கே திரும்பிவிடும்.
எரிபொருள் தண்டுகளைச் சுற்றியுள்ள தண்ணீர் இருவகைப் பணிகளைப் புரிகிறது. இத்தண்ணீர் எரிபொருள் தண்டுகளின் வெப்பத்தை வாங்கிக் கொள்கிறது.அந்த அள்வில் அது எரிபொருள் தண்டுகள் அளவுக்கு மீறி சூடேறி விடாதபடி தடுக்கிறது. அதே சமயத்தில் யுரேனியம்=235 அணுக்கள் பிளவு படும் போது வெளிப்படும் நியூட்ரான்களின் வேகத்தை அத்தண்ணீர் குறைக்கிறது.ஏனெனில் மெதுவாகச் செல்கின்ற நியூட்ரான்கள் தான் பிற யுரேனியம் அணுக்களை நன்கு தாக்கும்.
நியூட்ரான்கள் விஷய்த்தில் ஜாக்கிரதை தேவை. காஸ் அடுப்பில் காஸ் கட்டுப்பட்ட அளவில் சிலிண்டரிலிருந்து வெளியே வருவதால் சமையல் சாத்தியமாகிறது. காஸ் சிலிண்டரில் உள்ள காஸ் அனைத்தும் ஒரே சமயத்தில் தீப்பிடித்தால் ஆபத்து தான்.அது மாதிரி ஏற்படாமல் அணு உலையில் நியூட்ரான்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தி வைத்தாக வேண்டும்.
யுரேனிய அணு |
நியூட்ரான்களை நேசிக்கும் தனிமங்கள் . உண்டு. காட்மியம், ஹாப்னியம், போரான் ஆகியவை நியூட்ரான்களை விழுங்குபவை. ஆகவே இவற்றால் ஆன தண்டுகளை அணு உலைக்குள் தொங்க விட்டிருப்பார்கள். இரவில் டியூப் லைட் அருகே வருகின்ற பூச்சிகளை விழுங்கும் பல்லி போல இத்தண்டுகள் கூடுதல் நியூட்ரான்களை விழுங்கிக் கொண்டிருக்கும்.இவற்றுக்குக் கட்டுப்பாட்டு தண்டுகள் (Control Rods) என்று பெயர்
கட்டுப்பாட்டு தண்டுகளை அணு உலைக்குள் மேலும் ஆழமாக இறக்கினால் நிறைய நியூட்ரான்கள் விழுங்கப்படும். மேலே அதிகம் இழுத்தால் நியூட்ரான்கள் விழுங்கப்படுவது குறையும்.ஆகவே இத்தண்டுகளை அணு உலைக்குள் தகுந்தபடி இற்க்குவர் அல்லது மேலே தூக்குவர்.இதன் மூலம் தொடர் அணுப்பிளப்பு நிர்ணய அளவில் நடைபெறும்.
தொடர் அணுப்பிளப்பை நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதாவது அணு உலை செயல்படாமல் நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அத்தனை கட்டுப்பாட்டு தண்டுகளையும் உள்ளே இறக்கினால் போதும். அணு உலை செயல்படுவது நின்று விடும். எரிபொருள் தண்டுகளில் பலவற்றை அவ்வப்போது வெளியே எடுத்து விட்டு புதிதாக எரிபொருள் தண்டுகளை உள்ளே இறக்குவர். அப்படிப்பட்ட சமயங்களில் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த வேண்டி வரும்.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யுரேனியம்-235 அணுக்கள் எவ்வளவு சதவிகிதம் இருக்கும் என்பதை மேலே குறிப்பிட்டோம். அத்துடன் ஒப்பிட்டால் இயற்கை யுரேனியத்தில் 99.27 சதவிகித அளவுக்கு யுரேனியம்-238 என்ற வேறு வகை அணுக்களும் இருக்கும்.
கூடங்குளம் அணு உலையின் எரிபொருள் தண்டுகளில் மொத்தத்தில் 4 சதவிகித அணுக்கள் யுரேனியம்- 235 அணுக்களாக இருக்க மீதி அணுக்களில் பெரும்பாலானவை யுரேனியம்-238 அணுக்களாக இருக்கும்.
ஆனால் யுரேனியம்-238 அணு ஒன்றை நியூட்ரான் தாக்கினால் அந்த அணு உடையாது. அது அந்த நியூட்ரானை விழுங்கி ஏப்பம் விடும். அப்படி விழுங்கிய பின்னர் அது புளூட்டோனியம்-239 என்ற அணுவாக மாறிவிடும். அது நல்லது தான். ஏனெனில் புளூட்டோனியம் அணுவானது யுரேனியம்- 235 அணு போலவே நியூட்ரான்களால் பிளவு படத்தக்கது.
ஆகவே அணு உலை ஒன்றில் தொடர்ந்து அணுபிளப்பு ஏற்படும் போது யுரேனியம்-235 அணுக்களும் உடையும். புதிதாகத் தோன்றும் புளூட்டோனியம்- 239 அணுக்களும் உடையும்.அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு புளூட்டோனியம்-239 பிளவு மூலம் கிடைக்கிறது.
இதுவரை நாம் யுரேனியம் அணுக்களுக்கும், அத்துடன் புளூட்டோனியத்துக்கும் நம்பர் கொடுத்து வந்தோம். அந்த நம்பரானது ஒரு வீட்டில் ஆண் பெண் மொத்தம் எவ்வளவு பேர் என வாசற் கதவில் எழுதி வைப்பது போன்றதாகும்.
எந்த ஓர் அணுவாக இருந்தாலும் அதன் மையக் கருவில் (Nucleus) புரோட்டான்களும் நியூட்ரான்களும் சேர்ந்து இருக்கும். யுரேனியக் கட்டி ஒன்றில் இருக்கக்கூடிய கோடானு கோடி யுரேனிய அணுக்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சரியாக 92 புரோட்டான்கள் இருக்கும். அப்ப்டி 92 புரோட்டான் இருப்பதால் தான் அது யுரேனியம் அணுவாக உள்ளது.
ஆனால் யுரேனியம் அணு ஒன்றின் மையக் கருவில் 143 நியூட்ரான்கள் இருக்கலாம். வேறு யுரேனிய அணுவில் 146 நியூட்ரான்கள் இருக்கலாம். 143 நியூட்ரான்கள் இருந்தால் அத்துடன் 92 ஐயும் சேர்த்துக் கூட்டி யுரேனியம்-235 என்று சொல்வார்கள். 146 நியூட்ரான்கள் இருந்தால் 92 புரோட்டான்களையும் சேர்த்து அது யுரேனியம்-238
அதே போலவே புளூட்டோனியம் அணுவின் 94 புரோட்டான்களையும் 145 நியூட்ரான்களையும் சேர்த்தால் அது புளூட்டோனியம்-239. யுரேனியம் போல புளூட்டோனியமும் ஓர் உலோகமே.
கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணு உலையானது VVER- 1000 மாடல் என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காலும் மற்றும் பிற நாடுகளிலும் இதே மாதிரியான அணு உலைகள் PWR மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.
இந்தியாவில் தாராப்பூர் நீங்கலாக மற்ற இடங்களில் செயல்படும் அணுமின் நிலையங்களின் அணு உலைகள் PHWR மாடல் என்று குறிப்பிடப்படுகின்றன.
கல்பாக்கத்தில் உள்ள அணுமின்சார நிலையத்தின் அணு உலைகளும் இதே மாடல்களே.
PWR மாடல்களில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படும்.சாதாரண நீரானது வெப்பவாங்கியாகவும் நியூட்ரான்களின் வேகத் தணிப்பனாகவும் பயன்படுத்தப்படும்
PWHR மாடல்களில் இயற்கை யுரேனியம் பயன்படுத்தப்படும். சாதாரண நீருக்குப் பதில் கன நீர் பயன்படுத்தப்படும்.(காண்க பச்ச்த் தண்ணீரும் லகு நீரும்)
கூடங்குளம் அணுமின் நிலையம் தனிச் சிறப்பு கொண்டதாகும்.இனி இதுவே இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக விளங்கும். இப்போதைக்கு கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு யூனிட்டுகள் நிறுவப்படுகின்றன.
முதல் யூனிட் விரைவில் இயங்க இருக்கிறது.இரண்டாவது யூனிட் சில மாதங்களில் செயல்பட ஆரம்பிக்கும். இவை அல்லாமல் மேலும் இரு யூனிட்டுகளை அமைக்க அண்மையில் உடனபாடு கையெழுத்தாகியுள்ளது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி இங்கு மொத்தம் 6 யூனிட்டுகள் அமைக்கப்படுமானால் மொத்தம் 6680 மெகாவாட் மின்சாரம் இங்கு உறபத்தியாகும்.
இத்துடன் ஒப்பிட்டால் உலகிலேயே மிகப் பெரிய அணுமின் நிலையம் ஜப்பானில் உள்ளது. காஷிவாசாகி-கரிவா என்னும் அந்த அணுமின் நிலையத்தில் உள்ள ஏழு யூனிட்டுகள் மொத்தம் சுமார் 8000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
21 comments:
Excellent Sir. Very Informative. How do we destroy the outcome of this process? Can you please provide some light on this?
anonymous
உங்கள் கேள்வி தெளிவாக இல்லை.எரிந்து தீர்ந்து போன எரிபொருள் தண்டுகள் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்களா என்பது விளங்கவில்லை.விளக்கமாகக் கேட்டால் பதில் அளிக்க இயலும்
கூடங்குளத்தில் அணு உடைப்பு - என்ற தலைப்பில் திரு என்.ராமதுரை அவர்களின் அருமையான பதிவு. ஆழ்ந்து படித்துப் பாருங்கள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி சார் திரு என்.ராமதுரை.
Dear Sir
Thanks for the detailed informaton.
One request. Considering the current protest that is going on against Koodankulam Project, Pl highlight on the waste disposal of atomic power plants.
Mainly, pl give a broad view on the safety aspects of Koodankulam Project and the waste disposal.
Normal water is being diverted to this Koodankulam Project. Will it not affect the routine requirement of agriculture / drinking needs of the people?
உதாரணங்களுடன் மூலம் விளக்கங்கள் கூறியது, எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது... நன்றி ஐயா...
அணு உலை செயல் படும் விதம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
அப்படியே கூடங் குளம் பாதுகாப்பை பற்றியும் நடுநிலையுடன் தகவல் தந்தால் நன்றாயிருக்கும் .
Nagarajan
அணுமின்சார நிலையங்கள் என பன்மையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தியாவில் ஏற்கெனவே பல அணுமின் நிலையங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளிலும் அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் எரிந்து தீர்ந்த எரிபொருள் தண்டுகளை எவ்விதம் கையாள வேண்டும் என்பது குறித்து விரிவான பாதுகாப்புகள் உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையம் தான் உலகிலேயே இந்தியாவிலேயே முதல் அணுமின் நிலையம் போன்ற தோற்ற்ம் உண்டாக்கப்பட்டுள்ளதால் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள்.மற்ற அணுமின் நிலையங்களில் உள்ளதைப் போலவே பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
விவசாயத்துக்குரிய தண்ணீர் கூடங்குளம் திட்டத்துக்கு திருபப்படுவதாகக் கூறியிருக்கிறீர்கள். இது தவறான பிரச்சாரத்தால் ஏற்பட்ட ஊகம். அணுமின் நிலையங்களுக்கு நிறையத் தண்ணீர் தேவை. ஆகவே கடல் நீரை நல்ல நீராக மாற்றி அதைப் பயன்படுத்துகிறார்கள். உலகில் பல இடங்களில் அணுமின் நிலையங்கள் கடல் ஓரமாக உள்ளதற்கு அதுவும் ஒரு காரணம்.
சீனி சுப்பிரமணியன்
உலகில் 400 க்கும் அதிகமான அணுமின் நிலையங்கள் உள்ளன.இவை அனைத்தும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிறுவபட்டவையே. எந்த ஓர் ஆலையும் ஏனோதானோ என்று நிறுவப்படுவதில்லை. அதுவும் அண்மின் நிலையம் போன்ற விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அணுமின் நிலையம் போன்றவை அனுபவம் மிக்க எஞ்சினியர்கள், மற்றும் விஞ்ஞானிகளால் நிறுவப்படுபவை.அவர்களை சந்தேகிக்க முற்பட்டால் ரயில் பாதைத் திட்டம், அணைத் திட்டம் என எல்லாவற்றையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டியது தான். உலகெங்கிலும் இப்படியான அணுமின் நிலையங்களை அமைக்கின்ற எஞ்சினியர்கள் மீதும் விஞ்ஞானிகள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகவே நான் “ நடுநிலையாக” இருந்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களை விட நான் கெட்டிக்காரன் இல்லை
“அதுவும் அணுமின் நிலையம் போன்ற விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அணுமின் நிலையம் போன்றவை அனுபவம் மிக்க எஞ்சினியர்கள், மற்றும் விஞ்ஞானிகளால் நிறுவப்படுபவை.அவர்களை சந்தேகிக்க முற்பட்டால் ரயில் பாதைத் திட்டம், அணைத் திட்டம் என எல்லாவற்றையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டியது தான். ”
இது ஒப்புக்கொள்ள இயலாத வாதம். என்னதான் கூடுதல் கவனம் செலுத்தினாலும் பிழைக்கான வாய்ப்புகள் இதுபோன்ற அபாயகரமான பெருந்தொழில் கட்டுமான அமைப்புக்களின் உள்ளார்ந்த பண்புகளுள் ஒன்று. இல்லாவிட்டால் போபால், மூன்று மைல் தீவு, செர்நோபில், ஃப்யூகஷிமா போன்ற விபத்துக்கள் ஏன் நிகழவேண்டும் ? அவையும் (ஆலையும் அணு உலைகளும்) நிபுணத்துவும் மிகுந்தவர்கள் வடிவமைத்து கட்டி எழுப்பியவைதானே.
அதுசரி, கூடங்குளம் அணு மின் நிலையம் ஆரம்பத்திலிருந்தே தன் முழு உற்பத்தித்திறனுடன் இயங்குமா ? இல்லையெனில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2000 மெ.வாட் திறனில் (1000 X இரண்டு அணுஉலைகள்) எவ்வளவு உற்பத்தியாகும் ? இந்த கேள்வியை கேட்பதன் காரணம், இன்னும் இந்தியாவில் எந்த அணு உலையும் இதுவரை முழு உற்பத்தித்திறனை எட்டியதே இல்லை என்றும், கல்பாக்க அணு உலையே கூட நிறுவப்பட்ட இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் 50 சதத்தைவிட சற்றே கூடுதலான அளவு உற்பத்தித்திறனை எட்டியுள்ளது என்று சமீபத்தில் படித்தேன்.
பொன் முத்துகுமார்
ரயில் எஞ்சின், விமான்ம், கப்பல் பெரிய அணைகள் ஆகியவையும் சிறந்த எஞ்சினியர்க்ளால் கட்டப்படுபவையே, ஆனால் கடந்த கால ரயில் விபத்துகள், விமான விபத்துகள், கப்பல் விபத்துகள், அணை உடைப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு இவற்றில் ஏறமாட்டேன், அணை இருக்கின்ற ஊருக்கே போக மாட்டேன் என்று சொல்பவரை ஒன்றும் செய்ய முடியாது. உலகில் நூற்றுக்கு நூறு பாதுகாப்பான சமாச்சாரம் எதுவுமே இல்லை. நம்பிக்கை என்பது மனது சம்பந்தப்பட்ட விஷய்ம். ஒருவர் மனதில் வலுக்கட்டாயமாக நம்பிக்கையைத் திணிக்க முடியாது.
அடுத்த் கேள்வியைப் பொருத்த வரையில் அனல் மின்சார நிலையங்களும் சரி, எப்போதும் எல்லா நாளிலும் முழு உற்பத்தித் திறனில் செயல்படுவதாகச் சொல்ல முடியாது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் அது பொருந்தும்.
குறைவான செலவில் பாதுகாப்பான மாற்று மின்சக்தியை உருவாக்க வாய்ப்பு இருக்கும் போது அதிக செலவு மற்றும் பாதுகாப்பற்ற அணுமின்சாரம் தேவையா?
எது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறீர்கள்?
TamilKudi
அணுமின்சாரம் எப்போதுமே இரண்டாம் ப்ட்சம் கூட அல்ல மூன்றாம் பட்சம் தான். அது சரி, நீங்கள் குறிப்பிட்ட அந்த குறைந்த செலவிலான பாதுகாப்பான மாற்று வழி என்பதை ஏன் தெளிவகக் குறிப்பிடவில்லை.
நீங்கள் எழுதுவாதால் நாங்களும் விஞ்ஞானி ஆகிறோம். வரவேற்கிறேன்.. தவறான கருத்துக்களை பரப்பி முழு தமிழகத்தையும் இருட்டில் உக்காரவைத்து குளிர்காயப்போகும் நல்லவர்கள் இதை படிக்கலாம். தெளிவான கட்டூரை இயற்பியலில் இலக்கண அறிவு தேவையில்லை இதை புரிந்துகொள்ள. தொடர்ந்து எழுதுங்கள். மிக்கநன்றி தக்கநேரத்தில் தரமான பதிவு
அணு உலையை எதிர்க்கிறேன். ஆனால் உங்கள் கட்டுரை விளக்கமாக அறிவுபூர்வமான தகவல்களுடன் எளிமையான நடையில் அமர்ந்திருக்கிறது. எதிர்ப்புகளையும் மீறி உலை இயக்கப்படப் போகும் நிலையில்- அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழலில்- என் போன்றவர்களுக்கு சிறிது நம்பிக்கை தருகிறது.
ஆனால் ஒரு கேள்வி: விபத்து எதுவும் நிகழாவிட்டாலும் அணு உலையின் அன்றாட செயல் பாடுகளாலேயே சுற்றுப் புற சூழல் பாதிக்கப் படும் என்கிறார்களே? கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அரசு அப்படியே அமுக்கி விட்டதென்று கூறுகிறார்கள். அதிகப்படியான விரல்களுடன் குழந்தைகள் பிறப்பதாகவும் கருச்சிதைவுகள் நேர்வதாகவும் கூட ஒரு கட்டுரையில் படித்தேன். இதற்கு உங்கள் பதில் என்ன? அனல் மின் நிலையம் உள்ள தூத்துக்குடியில் கூட வெப்ப நிலை அதிகரித்துள்ளதை மறுக்க முடியாதல்லவா? அது போன்ற பாதிப்பும் கதிரியக்கமும் அணு உலையின் சுற்றுப் புறங்களில் இருக்கும் என்ற வாதம் உண்மை என்றே தோன்றுகிறது. ஏற்கெனவே புவி வெப்பமயமாவது பற்றிய விவாதங்கள் நடக்கையில் அனல்/ அணு மின் நிலையங்கள் அவசியம் தானா? இது பற்றிய விளக்கம் தேவை.
poornam
என்னுடைய இக்கட்டுரை அறிவியல் சம்பந்தப்பட்டது. அணுமின் நிலையங்களால் ஆபத்து உண்டா?கல்பாக்கத்தில் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளனவா என்ற சர்ச்சைகளில் நான் ஈடுபட விரும்பவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் அரசியல்,மதம் ஓட்டுவங்கி அரசியல், வட்டார அரசியல் என என்னவெல்லாமோ புகுந்து விட்டன. இந்த நிலையில் நான் எது சொன்னாலும் அதற்கு ஏதாவ்து சாயம் பூசப்படும்.ஆகவே அவை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.என் கட்டுரையில் விளங்காத விஷயங்கள் இருந்தால் அது பற்றிக் கேட்கவும். பதில் அளிக்கிறேன்.
அன்புள்ள திரு.ராமதுரை,
நான் சொன்னது நம்பிக்கை தொடர்பானது அல்ல. "அணுமின் நிலையம் போன்றவை அனுபவம் மிக்க எஞ்சினியர்கள், மற்றும் விஞ்ஞானிகளால் நிறுவப்படுபவை" என்ற உங்களது கூற்றில் "ஆதலால் அதில் பிழையே நிகழாது" என்பது போன்ற அர்த்தம் தொக்கி நிற்பதால் அதை மட்டுமே சுட்டி காட்டினேன்.
"எப்போதும் எல்லா நாளிலும் முழு உற்பத்தித் திறனில் செயல்படுவதாகச் சொல்ல முடியாது" என்றால் சில நாட்களில் முழு உற்பத்தி திறனோடு இயங்கும் என்று பொருளா ? இன்னும் நமது அணு உலைகள் எதுவுமே முழு உற்பத்தித்திறனை எட்டியதே இல்லை என்றுதான் நான் கேள்விப்பட்டது. அது உண்மையா என்று தெரிந்துகொள்ளவே கேட்கிறேன்.
பொன் முத்துகுமார்
விமானம், ரயில், கப்பல்,அணைக்கட்டு என எதை எடுத்துக் கொண்டாலும் பிழை ஏற்பட நுற்றுக்கு நூறு வாய்ப்பே கிடையாது என்று யாருமே கூறமாட்டாகள். லண்டன், நியூயார்க், சென்னை என் ஏதோ ஒரு நகரிலிருந்து கிளம்பும் விமானம் நிச்சயம் பத்திரமாகச் போய்ச் சேரும் என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முன்வரமாட்டாகள்.ராக்கெட்டை செலுத்துவதில் சிறு பிழை இருந்தாலும் அது அதோகதி. ஆகவே ராக்கெட்டைச் செலுத்துவதில் எல்லாம் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதா என்று கடைசி வரை சோதிக்கிறார்கள்
அணு மின் நிலையம் அனல் மின் நிலையம் போன்றவற்றில் பல பிரிவுகள் உள்ளன என்பதை மறந்து விடலாகாது. அணு உலை ஓயாது செயல்படும். மற்ற பிரிவுகளில் தேய்மானம் பராமரிப்பு என பல பிரச்சினைகள் உண்டு. அணுமின் நிலையங்கள் சில நாளில் சில மணி நேரம் நூற்றுக்கு நூறு அளவில் உற்ப்த்தி செய்யலாம். அனல் மின் நிலையங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். அமெரிக்க அணுமின் நிலையங்களைப் பொருத்தவரை 2010 ஆம் ஆண்டில் அவை ச்ராசரியாக 92.1 சதவிகித அளவில் செயல்பட்டன. இந்தியா விஷய்த்தில் என்னிடம் தகவல் இல்லை.
எதை வைத்து அணுமின் நிலையங்களை நிராகரிக்கலாம் என்ற போக்கு சரியல்ல.
எரிவாயு கிடைத்தால் அதைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது தான் மிக்ச் சிறந்த ஏற்பாடு. அது இல்லையா. நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது சிலாக்கியம். இந்த இரண்டும் இல்லாத இடங்களில் வேறு வழியில்லை என்ற அடிப்படையில் அணுசக்தியை நாடலாம். காற்று மூலம் மின்சாரம் பெறலாமே ர்ன்பது மேடைப் பேச்சுக்கு நன்றாக இருக்கலா. ஆனால் ஒரு நாட்டின், மானிலத்தின் முழுத் தேவையை ஒரு போதும் காற்று மூலம் பூர்த்தி செய்ய முடியாது. காற்றை நம்ப முடியாது. சூரிய- சோலார்--மின்சாரம் என்பது அரசாங்கம் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற ஏற்பாடு. தனியார் கம்பெனிகளிடமிருந்து மானிய விலையில் எல்லா சாமான்களை வாங்கி உங்கள் வீட்டுக் கூரையில் மின்சாரம் தயாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சோலார் மின்சாரம். ஆனால் அந்த மின்சாரமும் இரவில் கிடைக்காது. சோலார் மின்சாரம் பணக்காரர்களுக்கு கட்டுபடியாகும். ஏழைகளுக்கு உதவாது.
அணுசக்தி மின்சாரம் தேவைதான என்பது குறித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் விவாதம் நடந்து வருகிறது. இது புதிய சமாச்சாரம் அல்ல
பொன் முத்துகுமார்
மேலே உள்ள எனது ப்திலில் கடைசி பாராவில் முத்ல் வரி “அணுசக்தி மின்சாரம் தேவைதானா?” என்று இருக்க வேண்டும்
kassali
இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.ஜைதாப்பூர் அணுமின் நிலையம் பிரெஞ்சு நிறுவன உதவியுடன் நிறுவப்பட உள்ளதாகும். ஜைதாப்பூரில் 9900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். உலகில் அதுவே மிகப் பெரிய அணுமின் நிலையமாக விளங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான் போராட்டமும் ஜைதாப்பூருக்கு உள்ள எதிர்ப்பும் வெவ்வேறானவை
அன்புள்ள திரு.ராமதுரை,
விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
All the inventions and discoveries of science contains two sides like coins. Every scientific thing is having merits and demerits. Cell phone is responsible for lot of crime related things. But no one is get rid of it. We have to cater ways to make it more safe instead of getting away with it.
Post a Comment