கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் இந்தியாவின் GSat -10 செயறகைக்கோள் ஏரியான் (Ariane) ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுவதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தென் அமெரிக்காவில் பிரான்ஸுக்கு சொந்தமான கூரு தீவில் உள்ள ராக்கெட் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரெஞ்சு செயறகைக்கோள் ( எடை சுமார் 700 கிலோ) ஸ்ரீஹ்ரிகோட்டாவுக்கு வருவானேன்? இந்திய செயற்கைக்கோள் கூருவில் உள்ள ராக்கெட் தளத்துக்குச் செல்வானேன்? இரண்டுக்குமே காரணங்கள் உண்டு.
இந்தியாவின் PSLV ராக்கெட் |
ஏரியான்- 5 மூலம் ஒரு செயற்கைக்கோளைச் செலுத்த காசு ஜாஸ்தி. அது மட்டுமல்ல. உலகின் பல்வேறு நாடுகளும் ( இந்தியா உட்பட) ஏரியான் மூலம் தங்களது செயறகைக்கோள்களை செலுத்த முன்கூட்டி இடம் பதிவு செய்து கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். தவிர, இப்போதெல்லாம் சிறிய செயற்கைக்கோள்களை செலுத்த ஏரியான் முன்வருவதில்லை. அவர்கள் இப்போது பெரிய கை.
இத்துடன் ஒப்பிட்டால் இந்தியாவின் PSLV ராக்கெட் மூலம் உயரே செலுத்த காசு குறைவு. காத்திருக்க வேண்டாம். தவிர தொடர்ந்து 21 தடவை வெற்றி கண்டுள்ள PSLV நம்பகமான ராக்கெட். இதனால் தான் பிரான்ஸ் இந்திய விண்வெளி அமைப்பை நாடியது. பிரான்ஸ் எதிர்பார்த்தது போலவே ஸ்பாட் -6 வெற்றிகரமாக உயரே செலுத்தப்பட்டது.
சரி, இந்தியாவில் ராக்கெட் தளம் (ஸ்ரீஹரிகோட்டா) உள்ளது. இந்தியாவிடம் PSLV ராக்கெட்டும் உள்ளது. அப்படி இருக்க, ஜிசாட்- 10 செயற்கைக்கோள் எதற்கு ஏரியான் -5 மூலம் செலுத்தப்பட கூரூ ராக்கெட் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.?
ஏரியான் -5 ராக்கெட் |
இந்த விஷயத்தில் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் கவனிக்க வேண்டும். தகுந்த ராக்கெட்டுகளை உருவாக்கி அதன் பின்னரே அவற்றில் வைத்து செலுத்துவதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்குவது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றவில்லை. அது புத்திசாலித்தனமான முடிவு.
அதாவது ராக்கெட் துறையில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னரே வகை வகையான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் வேகமாக முன்னேறினோம்.அவற்றைச் செலுத்த நம்மிடம் ராக்கெட் இருக்கிறதா என்பது பற்றி நாம் கவலைப்படவில்லை. நம்மிடம் ராக்கெட இல்லாவிட்டால் என்ன? வெளி நாடுகளுக்கு கொண்டு சென்று அவற்றின் மூலம் செலுத்தலாமே?. இதுவே ஆரம்பத்தில் இந்தியாவின் உத்தியாக் இருந்தது.
இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆர்யபட்டா ( எடை 360 கிலோ) 1975 ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு ரஷிய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. இப்படி இந்தியாவின் பல செயற்கைக்கோள்கள் வெளி நாட்டின் ராக்கெட் மூலம் உய்ரே செலுத்தப்பட்டன. அக்கால கட்டத்தில் நாம் ராக்கெட் தயாரிப்புக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டிருந்தோம்.
நாம் ஒரு வழியாக SLV என்னும் சிறிய ராக்கெட்டை உருவாக்குவதில் 1980 களின் தொடக்கத்தில் வெற்றி கண்டோம். அதில் வைத்துச் செலுத்தப்பட்ட ரோகிணி செயற்கைகோளின் எடை வெறும் 30 கிலோ. SLV ராக்கெட்டைத் தொடர்ந்து PSLV ராக்கெட் உருவாக்கப்பட்டது.
இப்படியாக நாம் தொடர்ந்து மேலும் மேலும் எடைமிக்க அத்துடன் மிக நுட்பமான செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் நல்ல முன்னேற்றம் கண்டோம். ஆனால் ராக்கெட் துறையில் முன்னேறுவது ஆமை வேகத்தில் இருந்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை உருவாக்குவதில் நமக்கு ஏற்பட்ட சிக்கல்கள் ஒரு முக்கிய காரணம்..
நாம் ஆரம்பத்திலிருந்து இரண்டு வகையான செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஈடுபட்டோம். சுமார் 800 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் ( பெரும்பாலும் வடக்கு தெற்காக) சுற்றுவதற்கான செயற்கைக்கோள்களை உருவாக்கி அவற்றை PSLV ராக்கெட் மூலம் வெற்றிகரமாகச் செலுத்தி வந்துள்ளோம்.
இவை அனைத்தும் 800 கிலோ அல்லது ஒரு டன் எடை கொண்டவை. இவற்றில் பெரும்பாலானவை வானிலிருந்து படம் பிடிப்பவை. இத்துறையில் நாம் இப்போது அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை வகிப்பதாகக் கூறலாம். செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தில் இந்தியா அந்த அளவுக்கு முன்னேறியுள்ளது.
பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும் இந்தியாவின் ரைசாட் - 1 செயற்கைக்கோள் |
அண்மையில் இந்திய விண்வெளி அமைப்பு (ISRO) தனது 100 வது மிஷன் தொடர்பாக விழா கொண்டாடியது என்றாலும் எடை மிக்க செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான திறன் மிக்க ராக்கெட்டை நாம் இனிமேல் தான் உருவாக்க வேண்டியுள்ளது. அது தான் உண்மை நிலை. ஆகவே தான் ஜிசாட்-10 செயற்கைக்கோளை கூரூவுக்குக் கொண்ட செல்ல நேரிட்டது.
இந்தியாவின் ஜிசாட் -10 செயற்கைக்கோள் |
ஏரியான் 5 ராக்கெட் பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள ஐரோப்பிய விண்வெளி அமைப்பு உருவாக்கியதாகும். இந்த விண்வெளி அமைப்பின் ராக்கெட் தளம் கூரூ தீவில் அமைந்துள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதியன்று ஏரியான் 5 ராக்கெட்டானது ஜிசாட் -10 ( 3400 கிலோ) அஸ்ட்ராப் 2 F ( 6000 கிலோ ) ஆகிய இரண்டையும் ஒரே மூச்சில் விண்ணில் செலுத்த உள்ளது.
காரணங்களை அறிந்து கொண்டேன்...
ReplyDeleteசில தகவல்கள் பெருமைப்பட வேண்டும்...
நன்றி ஐயா...
Thanks for the post.
ReplyDeleteIt seems building advanced version satellites is much easier than building high capacity Rockets.
Hope India will build such rockets in near future.
ReplyDeleteசொந்தமாக சாட்டிலைட் வைத்துள்ள நாடுகள் மொத்தம் எத்தனை இருக்கும்?
அவ்வாறு சொந்தமாக சாட்டிலைட் இல்லாத நாடுகள் வானிலை, ரேடியோ/ டீ வி ஒலி/ ஒளி பரப்புகள் போன்ற சேவைகளை எவ்வாறு பெறுகின்றனர்?
Saravana
ReplyDeleteஅப்படியும் சொல்லிவிட முடியாது. வானிலிருந்து மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் தொழில் நுட்பத்தில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. இந்தியாவின் சில செயற்கைக்கோள்கள் ஒரு மீட்டர் நீளத்துக்கும் குறைவான் பொருட்களையும் ( less than one meter resolution) உயரே இருந்து படம் எடுக்கவல்லவை.இப்படியான செயற்கைக்கோள்களை உருவாக்குவது எளிதானதல்ல.Risat Risat 2 ஆகியவை மேகங்களையும் ஊடுருவிப் படம் எடுக்கவல்லவை.
Poornam
ReplyDeleteஎனது வலைபதிவில் குறிப்பிட்டபடி குறைந்த உயரத்தில் பறக்கின்ற செயற்கைக்கோள்கள் முதல் வகை.இவற்றில் தொலையுணர்வு செயற்கைக்கோள்களும் (Remote sensing satellites) அடங்கும்.
டிவி ஒளிபரப்பு,தகவல் தொடர்பு பணிகளுக்காக 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற செயற்கைக்கோள்கள் இரண்டாம் வகை.
டிவி ஒளிபரப்பு தகவல் தொடர்பு போன்ற பணிகளுக்கான செயற்கைக்கோள்களைப் பொருத்தவரையில் பெரும்பாலான நாடுகளிடம் இவற்றைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பம் கிடையாது.சர்வதேச அமைப்பு (Intelsat) இந்த வகை நாடுகளுக்கென இவற்றைத் தயாரித்து ஏரியான் போன்ற ராக்கெட்டுகள் மூலம் இவற்றைச் செலுத்துகிறது. நாடுகள் உரிய கட்டணம் செலுத்தி இந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
விரல் விட்டு எண்ணக்கூடிய சில நாடுகள் சொந்தமாக இவற்றைத் தயாரித்து ஏரியான் போன்ற ராக்கெட் மூலம் உயரே செலுத்தச் செய்கின்றன.
வானிலிருந்து படம் எடுப்பது போன்ற தொலையுணர்வு செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ள நாடுகளின் எண்ணிக்கை அரை டஜனுக்கு மேல் இல்லை.உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான தொலையுணர்வு செயற்கைக்கோள்களை ( சுமார் 12) பெற்றுள்ள ஒரே நாடு இந்தியாவாகும்.
அத்துடன் பலவகையான செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ள் நாலைந்து நாடுகளில் இந்தியா ஒன்று.
வானிலிருந்து எடுக்கும் படங்களை விற்பது பணம் பண்ணுகின்ற தொழில்.இந்தியா இவ்விதப் படங்களை விற்பனை செய்கிறது. ஆனால் மிகத்துல்லியமான படங்களை அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகள் விற்பனை செய்வது கிடையாது.இப்படங்கள் வேவுப் பணிக்கும் உதவும் என்பதே காரணம்.உலகில் எங்காவது வட்டாரப் போர் மூண்டால் அப்போது ஆள் பார்த்து தான் விற்பார்கள்,சில சமயங்களில் அவ்வித சந்தர்ப்பங்களில் பட விற்பனை நிறுத்தப்படும்.அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்கள் மிகத் துல்லியமானவை.
பல்வேறு காரியங்களுக்காக சொந்தமாக செயறகைக்கோள்களைப் பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா,இந்தியா,ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஒரு சில நாடுகள், ஜப்பான், சீனா ஆகியவை அடங்கும்
நல்ல தகவல் சார்,
ReplyDeleteநாம் சொந்தமாக செல், டிவி, இண்டெர்னெட் போன்ற தகவல் கடத்தும் தொழில்நுற்பத்துக்கு செயற்கைகோள் வைத்து இருக்கிறொமா?
Nagarajan Tamilselvan
ReplyDeleteநாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் செல் போன் தொடர்புகளுக்கு செயற்கைக்கோள் தேவையில்லை. ஆனால் செயறகைக்கோள்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விசேஷ செல் போன்கள் இருக்க்வும் செய்கின்றன.இண்டர்னெட் சமாச்சாரமும் அப்படித்தான்.
ஆனால் டிவி ஒளிபரப்புகளைப் பொருத்த வரையில் முழுக்க முழுக்க செயறகைக்கோள்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.
ஐயா தெளிவான விளக்கங்கள் ...
ReplyDeleteமிக்க நன்றி .