Pages

Sep 18, 2012

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம். உற்றுப்பார்த்தால் சூரியனின் இடது புறத்தில் சிறிய பகுதி சற்றே மறைக்கப்பட்டுள்ளதைக் காண்லாம்,  (Credit: NASA/JPL-Caltech/Malin Space Science Systems )
பூமியில் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழ்வது. அது பெரிய அதிசயம் இல்லைதான். ஆனால் செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம் என்பது விசேஷமானது.

சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே சந்திரன் வந்து நிற்குமானால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதாவது சூரியனை சந்திரன் மறைக்கிறது. அமாவாசை நாட்களில் தான் சந்திரன் இவ்விதம் பூமிக்கும் சூரியனுக்கும்  நடுவே வந்து நிற்கும். ஆனால்  பூமியை சந்திரன் சுற்றுகின்ற  பாதை மேலாக அல்லது கீழாக் அமையும் போது அது சூரியனை மறைப்பதில்லை. அதனால் தான் எல்லா அமாவாசைகளிலும் சூரிய கிரகணம் நிகழ்வதில்லை.

போபாஸ்
செவ்வாய் கிரகத்துக்கு ஒன்றல்ல, இரண்டு சந்திரன்கள் உண்டு.ஒன்றின் பெயர் டைமோஸ், மற்றொன்றின் பெயர் போபாஸ். இரண்டுமே ‘சுண்டைக்காய்கள்’ என்று சொல்லுமளவுக்குச் சிறியவை. போபாஸ் குறுக்களவு 11 கிலோ மீட்டர். இது செவ்வாயிலிருந்து சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தபடி செவ்வாயை மேற்கிலிருந்து கிழக்காகச்  சுற்றுகிறது.

டைமாஸ் மேலும் சிறியது. குறுக்களவு 6 கிலோ மீட்டர். சுமார் 23 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தபடி செவ்வாயை கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது
டைமாஸ்
செவ்வாய் கிரகத்தின் இரு சந்திரன்களும்   ஒழுங்கற்ற உருவம் கொண்டவை. கிட்டட்தட்ட உருளைக்கிழங்கு போன்ற வடிவைக் கொண்டவை.  இப்போது போபாஸ் குறுக்கே வந்ததால் சூரிய கிரகணம் ஏற்பட்டது. டைமாஸ் சிறியது என்பதாலும் தொலைவில் இருப்பதாலும் அது குறுக்கே வந்தால் கிரகணம் போன்ற விளைவு ஏற்படுவதில்லை.

ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கிய கியூரியாசிடி ஆய்வுக் கலம்  மேற்படி சூரிய கிரகணப் ப்டத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கியூரியாசிடியில் உள்ள் கேமிராக்கள் பொதுவில்  வானை நோக்க வேண்டிய அவசியமே கிடையாது.

ஆனால் செவ்வாயில் சூரிய கிரகணம் ஏற்படப் போகிறது என்பதை முன்கூட்டி அறிந்த நாஸா விஞ்ஞானிகள் கியூரியாசிடியின் கேமிராக்களை  வானில் குறிப்பிட்ட இடத்தை நோக்கித் திருப்பி படம் எடுக்கும்படி செய்தனர் என்பது தான் பெரிய சாதனை.

3 comments:

  1. அறியாத தகவல்... மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  2. புதிய தகவல்sir, நன்றி..

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete