Sep 16, 2012

புது முகம் மிஸ்டர் லசூலா

Share Subscribe

சலூனில் மெஷின் கட்டிங் செய்து கொண்டது போல தலையிலும் கன்னங்களிலும்  சீரான முடி. நெற்றி என்பதே இல்லை.வாய் மனித வாய் போலவே உள்ளது. எடுப்பான மூக்கு. அகன்ற விழிகள்.. சொல்லப் போனால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு உள்ளது போன்ற கண்கள் (அவரது பெயரைச் சொன்னால் அடிக்க வருவார்). அகன்ற தாடையில் வெண்ணிற்த் தாடி. இது அபூர்வ வகையைச் சேர்ந்த ஒரு  குரங்கு.

ஆப்பிரிககாவில் காங்கோ நாட்டில் உள்ள  காடுகளில் இப்படி ஒரு குரங்கு உள்ளது என்பது உள்ளூர்வாசிகளுக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆனால் அறிவியலாளர்களுக்கு இது புது முகம். லசூலா ( Lesula)  என்பது இந்த வகைக் குரங்கின் பெயர். Cercopithecus lomamiensis  என்பது இதற்கு இடப்பட்டுள்ள அறிவியல் பெயர்.

 பல நாடுகளைச் சேர்ந்த குழுவினர்  காங்கோவின் காடுகளில்  ஆறு ஆண்டுக் காலம் பாடுபட்டு ஆராய்ச்சி நடத்தி இது புது வகையான குரங்கு இனம் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த வகைக் குரங்கு ஆப்பிரிக்காவின் மையப் பகுதியில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு எனப்படும் நாட்டின் அடர்ந்த காடுகளில் வாழ்கிற்து. இது பழங்கள் காய் ஆகியவற்றை உண்டு வாழ்வதாகும். இந்த இனக் குரங்கில் ஆண் குரங்கின் எடை சுமார் 7 கிலோ அளவில் தான் உள்ளது. இந்த வகைக் குரங்கின் ஒரு விசேஷம் இதன் முதுக்குப் புறம் நல்ல நீல நிறத்தில் உள்ளது என்பதாகும்.

காங்கோ காடுகளில் ஆராய்ச்சி நடத்துபவரும் அமெரிக்காவில் ஒகையோ நகரில் அமைந்த வ்னவிலங்கு ஆராய்ச்சிக் கட்டளையின் அறிவியல் டைரக்டருமான் ஜான் ஹார்ட் 2007 ஆம் ஆண்டில் முதன் முதலில் இக் குரங்கைக் கண்ட போது வியப்பில் ஆழ்ந்தார்.இது புது இனமாக இருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. லசூலாவின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு ஆராய்ச்சி நடத்தப்ப்ட்டது. மேலும் பல ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
லசூலாவின் இன்னொரு தோற்றம். படம் நன்றி E.Emetshu PLOs one. 
எல்லா வகைகளிலும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே சில நாட்களுக்கு முன்னர் லுசூலா பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கோவில் இந்த இனக் குரங்குகள் வாழும் பகுதியில் காட்டு விலங்குகளைக் கொன்று அவற்றின் இறைச்சியை விற்கும் பழக்கம் உண்டு.

லுசூலா இனக் குரங்குகள் உலகில் வேறு பகுதியில் காணப்படுவதில்லை. ஆகவே காங்கோ காடுகளில் இந்த இனக் குரங்குகள் அழிந்து விடாமல் தடுக்க வட்டார மக்களின் ஒத்துழைப்புடன் ஒரு திட்டத்தை மேற்கொள்ள நிபுணர்கள் உத்தேசித்துள்ளனர். 

அமெரிக்க யேல் பல்கழகத்துடன் இணைந்த இயற்கை வரலாற்று மியூசியத்தைச் சேர்ந்த நிபுணர்கள் தான் முன்னின்று லசூலா பற்றிய ஆராய்ச்சியை நடத்தினர். அவர்களின் இக்கண்டுபிடிப்பு பற்றிய விவரம் PLOs One இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

5 comments:

Unknown said...

Sir,
இன்னும் மனிதன் கண்டுபிடிக்காத உயிர்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது..

பலவற்றை அழித்த பிறகு சிலவற்றையாவது காப்பாற்ற முயல்வது ஆறுதலாக உள்ளது..

Salahudeen said...

லசூலா பேரே கலக்கலா இருக்கு பெரும்பாலான புதிய குரகிணங்கள் ஆப்ரிக்க கண்ட நிலபகுதியிலையே கண்டுபிடிக்க படுகின்றன 2003 ஆம் ஆண்டில் கிபுஞ்சி என்ற புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது இதற்க்கு அறிவியல் ரீதியாக ஏதாவது காரணாம் உண்டா ஐயா நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

Salahudeen
லசூலா கண்டுபிடிக்கப்பட்ட காங்கோ நாடு பூமியின் நடுக்க்கோட்டு (Equator) பகுதியில் அமைந்துள்ளது. நல்ல மழை.அடர்ந்த காடுகள். நாகரிக மனிதன் தடம் பதிக்காத இடங்க்ள் பூமியில் உண்டென்றால் அது இந்த ஆப்பிரிகக் காடுகளாகத் தான் இருக்க முடியும்.ஆக்வே தான் புதிய இனக் குரங்குகள் இங்கு கண்டுபிடிக்கப்படுகின்றன.
லசூலா வாழும் இடம் மிக அடர்ந்த காட்டுப் பகுதி. சூரிய ஒளி கீழே விழாத அளவுக்கு நெடிதுயர்ந்த மரங்கள்.அனேகமாக இருள சூழ்ந்த இடம். கீழே ஒரே சதுப்பு நிலம்.லசூலா மரக் கிளைகளிலும் த்ரையிலும் நடமாடுவதாகும்.இந்த இனக் குரங்கு வாழும் இடம் இரு நதிகளுக்கு இடையே அமைந்ததாகும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த இனக் குரங்குகள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும்...

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அரிய தகவல்.
நன்றி ஐயா.

Post a Comment