செவ்வாய் கிரகத்தில் முன்னர் தரை இறங்கிய அமெரிக்க விண்கலங்கள் .வைக்கிங்-1 வைக்கிங் 2 1975) ஸ்பிரிட் (2003), ஆப்பர்சூனிடி (2003), பீனிக்ஸ் (2007) |
அமெரிக்காவின் பாத்பைண்டர் விண்கலம் இப்படி காற்று பைகளில் வைக்கப்பட்டதாகத் தரை இறங்கியது. ஆனால் அதன் எடை சுமார் 260 கிலோ. |
வானில் கிளம்புவதுடன் ஒப்பிட்டால் தரை இறங்குவது தான் எப்போதும் பிரச்சினை நிறைந்தது.இது விமானங்களுக்கும் பொருந்தும். விமான விபத்துகளில் பெரும்பாலானவை விமானம் தரை இற்ங்கும் போது தான் நிகழ்கின்றன.
கியூரியாசிடி எவ்விதம்தரை இறங்கும் என்பதை விவரிக்கும் படம் |
செவ்வாயை நெருங்கி விட்ட கட்டத்தில் விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 21 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். இந்த வேகம் மிகவும் குறைக்கப்பட்டாக வேண்டும். தரையைத் தொடுகின்ற நேரத்தில் வேகம் மணிக்கு 3 கிலோ மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லாவிடில் விண்கலம் தரையில் மோதி நொறுங்கி விடும்.
காற்று மண்டலம் வழியே வேகமாகக் கீழ் நோக்கி இறங்குகையில் விண்கலத்தின் வெளிப்பகுதி கடுமையாகச் சூடேறும்.. நீங்கள் ஒரு கத்தியை பாறை மீது அழுத்திக் கீறினால் தீப்பொறிகள் கிளம்பும். அது மாதிரியில் காற்றைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கும் போது கடும் வெப்பம் தோன்றும். விண்கலம் இறங்கும் போது அதன் வெளிப்புறத்தைத் தாக்கும் வெப்பம் 1600 டிகிரி செண்டிகிரேட் அளவுக்கு இருக்கலாம். வெளிப்புறப் பகுதியானது தீப் பிழம்பாகக் காட்சி அளிக்கும்.
இப்படியான வெப்பம் விண்கலத்தையே அழித்து விடும். ஆகவே தான் முத்துச் சிப்பி வடிவிலான் பெரிய பேழைக்குள் விண்கலம் வைக்கப்பட்டிருக்கும். ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிய பிறகு விண்கலத்தை மூடியுள்ள வெப்பத் தடுப்புக் கேடயம் தனியே பிரிந்து விழுந்து விடும்.
பிறகு ஒரு கட்டத்தில் விண்கலத்துடன் இணைந்த பிரும்மாண்டமான பாரசூட் விரிந்து கொள்ளும். பாரசூட் விண்கலம் கீழே இறங்கும் வேகத்தைப் பெரிதும் குறைக்கும்.
விண்கலம் மெல்லத் த்ரை இறங்குவதானால் வேகம் மேலும் குறைக்கப்பட வேண்டும்.கியூரியாசிடி விஷயத்தில் இதற்கென தனி உத்திமுதல் தடவையாகப் பின்பற்றப்படுகிறது. அதாவது பாரசூட்டிலிருந்து விண்கலம் பிரிந்ததும் . நான்கு கால்களைக் கொண்ட கிரேன் ஒன்றிலிருந்து விண்கலம் தொங்க ஆரம்பிக்கும். ஸ்கைகிரேன் எனப்படும் இந்த கிரேனின் கால் பகுதியிலிருந்து நெருப்பு கீழ் நோக்கிப் பீச்சிடும். அதாவது இது ராக்கெட்டிலிருந்து நெருப்பு பீச்சிடுவது போல இருக்கும்.
ஸ்கைகிரேன் செயல்படும் விதத்தை விளக்கும் படம் |
செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி விண்கலத்தை கீழ் நோக்கி இழுக்க ராக்கெட் விண்கலத்தை மேல் நோக்கித் தள்ள முறபடும். இந்த இரு விளைவுகளின் பலனாக கியூரியாசிடி கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைக்கப்பட்டு அது மெல்லத் தரை இறங்கும். சந்திரனில் இறங்க இந்த வித உத்தி தான் கையாளப்பட்டது.
கியூரியாசிடி என்பது உண்மையில் ஆறு சக்கர வாகனம். இந்த சக்கரங்களில் எதுவும் சேதமடையாமல் ஆறு கால்களும் ஒரே சமயத்தில் தரையில் பதியும் வகையில் அது தரை இறங்கியாக வேண்டும். அப்படியின்றி அது பக்கவாட்டில் சாய்ந்தப்டி இறங்க நேரிட்டால் அதை நிமிர்த்த வழியே இராது.
கியூரியாசிடி கீழே நோக்கி ஆரம்பித்ததிலிருந்து அது த்ரையைத் தொடுவதற்கு ஆகும் நேரம் ஏழு நிமிஷங்களே. இந்த ஏழு நிமிஷத்தில் எது வேண்டுமானாலும் நேரலாம் எனபதால் இதை “ ஏழு நிமிஷ பயங்கரம்” என்று வருணிக்கிறார்கள். ஏழு நிமிஷ சஸ்பென்ஸ் என்றும் கூறலாம்.
கியூரியாசிடி. இது ஒரு கார் சைஸ் இருக்கும் |
கடைசி கட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டு அமெரிக்காவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டுக் கேந்திரத்திலிருந்து தகுந்த் ஆணை பிறப்பித்து பிரச்சினையை சரி செய்வதற்கும் வாய்ப்பு கிடையாது.
ஏனெனில் செவ்வாயிலிருந்து அனுப்பப்படும் சிக்னல் பூமிக்கு வந்து சேருவதற்கு 14 நிமிஷங்கள் ஆகும். பூமியிலிருந்து ஏதேனும் ஆணை பிறப்பித்தால் அது செவ்வாய்க்குப் போய்ச் சேர மேலும் 14. நிமிஷங்கள் ஆகும். இந்த சிக்னல்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் செல்பவை தான்.
ஆனால் செவ்வாய் கிரகம் சுமார் 27 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் அங்கிருந்து சிக்னல் கிடைக்கவும் இங்கிருந்து அனுப்பும் ஆணை செவ்வாய்க்குப் போய்ச் சேரவும் இவ்விதம் காலதாமதம் ஆகும். இது தவிர்க்க முடியாத் ஒன்று.
வருகிற ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதன் அனுப்பப்படும் போது இதே பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருக்கும். செவ்வாயில் இறங்கும் கட்டத்தில் விண்வெளி வீரர் ‘பாரசூட் விரியலே என்ன பண்றது” என்று கேட்டால் அவரது அவசர செய்தி பூமிக்கு வந்து சேருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.
முன்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய போது இப்படியான பிரச்சினை ஏற்படவில்லை.ஏனெனில் பூமியிலிருந்து சந்திரன் அதிக பட்சம் 4 லட்சம் கிலோ மீட்டரில் உள்ளதாகும். பூமியிலிருந்து சந்திரனுக்கு சிக்னல் போய்ச் சேருவதற்கு ஆகும் நேரம் ஒன்றரை வினாடியே. ஆகவே தகவல் தொடர்பில் பிரச்சினை இருக்கவில்லை.
செவவாயிலிருந்து கியூரியாசிடி அனுப்பும் சிக்னல்களைப் பெறுவதில் வேறு பிரச்சினையும் உண்டு. செவ்வாய் கிரகம் தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு பூமி போலவே சுமார் 24 ம்ணி நேரம் ஆகிறது.
ஆகவே கியூரியாசிடி சுமார் 12 மணி நேரம் பூமியைப் பார்த்தபடி இருக்கும். மீதி 12 மணி நேரம் அது செவ்வாய் கிரகத்தின் மறுபுற்த்தில் இருக்கும். கியூரியாசிடி செவ்வாயின் மறுபுறத்தில் இருக்கும் போது அது அனுப்பும் சிக்னல்கள் பூமிக்கு கிடைக்காது. சிக்னல்கள் நேர் கோட்டில் செல்பவை.
எனினும் இதனால் பிரச்சினை இல்லை. அமெரிக்க நாஸா 2001 ஆம் ஆண்டில் அனுப்பிய மார்ஸ் ஒடிசி என்னும் விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இது கியூரியாசிடி அனுப்பும் சிக்னல்களைப் பெற்று பூமிக்கு அனுப்பும். மார்ஸ் ஒடிசி விண்கலத்தில் க்டந்த ஜூன் தொடக்கத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டு அது நாஸா விஞ்ஞானிகளுக்குப் பெரும் கவலையை உண்டாக்கியது.
செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் மார்ச் ஒடிசி விண்கலம் |
1969 முதல் 1972 வரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனுக்குச் சென்று வந்தனர். அந்த 6 தடவைகளிலும் இறங்கு கலம் பிரச்சினையின்றி சந்திரனில் இறங்கியது. சந்திரனில் காற்று மண்டலம் கிடையாது.இது ஒரு வகையில் சௌகரியமாகப் போய் விட்டது. காற்று மண்டலம் இருந்தால் தான் கீழே இறங்குகின்ற விண்கலம் சூடேறுகின்ற பிரச்சினை ஏற்படும்.
சந்திரனுடன் ஒப்பிட்டால் செவ்வாயில் காற்று மண்டலம் உள்ளது. ஆனால் அக்காற்று மண்டலம் பூமியில் உள்ளதைப் போன்று அடர்த்தியாக இல்லை. செவ்வாயின் காற்று மண்டல அடர்த்தி பூமியில் உள்ளதில் நூறில் ஒரு பங்கு தான் உள்ளது. ஆகவே தான் கியூரியாசிடி தரை இறங்க ஸ்கைகிரேன் தேவைப்படுகிறது.
பூமியில் காற்று மண்டலம் அடர்த்தியாக் இருப்பதால் சௌகரியம உள்ளது. பூமிக்கு மேலே சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தப்டி பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சில மாதங்களுக்கு ஒரு முறை ரஷிய சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் கீழே அனுப்பப்படுகின்றனர்.
இவர்கள் பூமிக்குத் திரும்புகையில் மூன்று விண்வெளி வீரர்கள் அடங்கிய இறங்குகலத்தின் அடிப்புறப் பகுதி காற்று மண்டலம் காரணமாகப். பயங்கரமாகச் சூடேறுகிறது. ஆகவே இதன் வெளிப்புறத்தில் வெப்பக் காப்புக் கேடயம் உள்ளது.
சோயுஸ் பாரசூட் மூலம் கீழே இறங்குகிறது |
செவவாய் கிரகத்தில் காற்று மண்டல அடர்த்தி குறைவு என்ற காரணத்தால் பாரசூட் வேகமாக இறங்க முற்படுகிறது. ஆகவே பாரசூட்டு மட்டும் போதாது. ஸ்கைகிரேன் போன்ற ஏற்பாட்டின் மூலம் வேகத்தை மேலும் குறைக்க வேண்டியுள்ளது
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி மேலும் கீழும் நடமாடி தானியங்கி முறையில் பல ஆராய்ச்சிகளை நடத்த இருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா மனிதனை அனுப்பும் திட்டம் கியூரியாசிடி நடத்தும் ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பொருத்ததாக இருக்கும். ஆகவே கியூரியாசிடி பத்திரமாகத் தரை இறங்குவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
(காண்க: செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிடி என்ன செய்யும்?)
(என்னுடைய இக் கட்டுரை தினமணி இதழில ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியாகியது. அது இந்த வலைப் பதிவில் பிரசுரிக்கப்படுகிறது. நன்றி : தினமணி)
Update: கியூரியாசிடி ஆய்வுக்கலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்திய நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு செவ்வாயில் வெற்றிகரமாகத் தரை இறங்கி படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
ஆஹ்ஹா என்னவெல்லாம் நடக்குது உலகத்தில் இங்க நம்ம நாட்டில் சாமியாருங்க செய்யுற அதியங்கள் பெரிசா தெரியுது .ஆனா எல்லாமே போலி .அமெரிக்க காரர்கள் செய்வது மட்டும் தான் உண்மை சுயநல வாதிகள் வாழும் நாடல்லவா .
ReplyDeleteஅருமையான பதிவு... /// தினமணிக்கு அல்ல உங்களுக்கு////
ReplyDeleteஒரு சந்தேகம், இது போன்று அடுத்த கோள்களில் இறங்கும் விண்கலன்கள் எப்படி மறுபடியும் அங்கிருந்து கிளம்பும். பூமியிலிருந்து செலுத்தும்போது கவுண்டவுன் என்று ஆரம்பித்து பல சோதனைகள் செய்து, ராக்கெட் வெடித்து கிளம்புகின்றது. அது போன்ற செட்டப் ஏதும் அங்கு இருக்காது? பின் எப்படி? அதே முறையில் பூமியிலிருந்து செலுத்த முடியாதா? என்ன வேறுபாடு
ReplyDeleteஅறியாத தகவல்...
ReplyDeleteஏன் ? என்கிற கேள்வி எழாமல் விளக்கமாக சொல்லி உள்ளீர்கள் ஐயா.. நன்றி...
renga
ReplyDeleteமனிதன் இதுவரை சந்திரன் ஒன்றுக்குத் தான் சென்று வந்திருக்கிறான். சந்திரனுக்குச் செல்லும் போது ஏகப்பட்ட மூட்டையைத் தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. இது ஒரு பிரச்சினை. இரண்டாவதாக சந்திரனை விட பூமி பெரியது. ஈர்ப்பு சக்தி அதிகம்.
சந்திரனில் போய் இறங்கிய பின் சுமந்து வர வேண்டியது ஒன்றுமில்லை. சந்திர்னில் சேகரிக்கும் கற்களைத் தவிர, சந்திரனிலிருந்து இருவர் மேலே கிளம்பினால் போதும். அதற்கு இறங்கு கலத்திலேயே ராக்கெட்டுககான எரிபொருள் இருந்தது. அந்த ராக்கெட் செயல்பட்டு இருவரும் மேலே வந்ததும் பிரதான் கலத்துடன் சேர்ந்து கொண்டனர்.சந்திரப் பயணம் சுலபமாக இருந்ததற்கு சந்திரன் அதிக தூரம் இல்லை ( 4 லட்சம் கி.மீ)
செவவாய்க்குச் செல்வதானால் ஏகப்பட்ட பிரச்சினை உண்டு. அங்கிருந்து கிளம்ப நீங்கள் சொன்ன மாதிரி கவுண்ட் டவுன் ஏற்பாடெல்லாம் தேவை.செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது என்றாலும் 1 மிகத் தொலைவில் உள்ளது 2 அது சந்திரனை விடப் பெரியது.
மனிதன் செவ்வாய்க்குச் செல்வது என்பது எளிதன்று. போக 8 மாதம் வர 8 மாதம். சோறு தண்ணீர் காற்று என எல்லாமே வேண்டும். எல்லாத்தையும் சுமக்கணும் அல்லது தக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கு சோறு, தண்ணீர் சுமந்து செல்லத்தான் வேணுமா? உணவு, தண்ணீருக்கு பதில் விண்வெளி வீரர்களுக்கென்று விசேஷ மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக எங்கோ படித்த ஞாபகம்.
ReplyDeleteஅது வெற்றிகரமாக இல்லையா?
Poornam
ReplyDeleteஉணவுக்குப் பதில் மாத்திரைகளை சாப்பிட்டு உயிர் வாழ முடியாது. அது சாத்தியமானல் உலகில் மனைவிமார்கள் அனைவரும் சமையல் செய்யாமல் மாத்திரைகளை வாங்கி வேளா வேளைக்கு அளித்து விடுவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கின்ற ஆறு விண்வெளி வீரர்களுக்கு அவரவருக்குப் பிடித்தமான உணவு அளிக்கப்படுகிறது. இவை முன்கூட்டித் தயாரிக்கப்பட்டு அவ்வப்போது உயரே அனுப்பப்படுகிறது. சூடு செய்து சாப்பிட வேண்டும். அவ்வளவுதான். தண்ணீருக்கு மாற்றாக மாத்திரை கிடையாது.விண்வெளியில் பணியாற்றுபவர்களுக்கு அல்லது விண்கலத்தில் நீண்ட பயணம் மேற்கொள்வ்வோருக்கு சத்தான பிடித்தமான உணவு இல்லை என்றால் பணியாற்ற இயலாது.
தவிர், வழக்கமான உணவுக்குப் பதில் மாத்திரைகளை விழுங்க முற்பட்டால் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் நலம் கெட்டுவிடும்.
பயனுள்ள தகவல் sir,
ReplyDeleteஎனினும் செவ்வாய்க்கு மனிதன் போவது சாதியம் குறைவுதானெ sir. . 8 ஆண்டுகள் மனிதன் பயணம் செய்வது சாத்தியமற்ற விஷயம் தானே sir
Nagarajan Tamilselvan
ReplyDeleteபூமியிலிருந்து மனிதன் விண்கலம் மூலம் செவ்வாய்க்குப் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும்.எட்டு ஆண்டுகள் அல்ல.எனினும் அங்கு போய்ச் சேர்ந்த மறு வாரமே அங்கிருந்து கிளம்ப முடியாது. பூமியும் செவ்வாயும் வாய்ப்பாக அமைந்துள்ள காலத்தில் மட்டுமே அங்கிருந்து கிளம்ப முடியும்.அதற்கு சில மாதம் ஆவதாக வைத்துக் கொண்டால் செவ்வாய்க்குப் போய் விட்டுத் திரும்புவதற்கு 24 அல்ல து 26 மாதங்கள் ஆகலாம்.
மழைக்காக யாகம் நடத்தும் தலைவர்களை பார்த்தீர்களா?
ReplyDeleteஇவர்களைபற்றி என்ன சொல்ல?
அறிவியல் இவ்வளவு வளர்ந்த காலத்தில்!
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1208/06/1120806037_1.htm